தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் நாயகனாகவும் அதிக கவனத்திற்குள்ளான வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை எனது தொடர் வெளிநாட்டு பயணங்களுக்கிடையே பார்த்தேன்.

கடந்த ஜூன் மாதம் ரெட்ஜெயன்ட் மூவிஸின் தயாரிப்பில், மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வடிவேலு ( மாமன்னன் ) பகத்பாஸில் ( ரத்தினவேல் ) உதயநிதி ஸ்டாலின் ( அதிவீரன் ) கீர்த்தி சுரேஷ் ( லீலா ) ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படம், தமிழ் சமூகத்தில் சமகாலத்தில் பரவலாகப்பேசப்படுகிறது. இத்திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்ற குரலும் எழுந்திருக்கிறது. எனினும் வசூலில் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இதன் கதை சமகாலத்திலும் பேசுபொருளாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம்.

ஏற்கனவே பரியேறும் பெருமாள், கர்ணன் முதலான திரைப்படங்களையும் சாதிப்பிரச்சினையை மையப்படுத்தி எடுத்திருக்கும் மாரி செல்வராஜ், மாமன்னன் திரைப்படம் மூலம் வடிவேலுவின் மற்றும் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காண்பித்துள்ளார்.

வழக்கத்தில் நடிகர் வடிவேலு திரையில் தோன்றியதுமே ரசிகர்கள் கலகலப்பாகிவிடுவார்கள். ஆனால், வடிவேலுவுக்கு இந்தத் திரைப்படத்தில் தரப்பட்டிருக்கும் பாத்திரம் சமூகம் குறித்து ஆழமாகப் பேசவைத்திருக்கிறது. சேலம் மாவட்டத்தின் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் திரைக்கதையை மாரி செல்வராஜ் அமைத்துள்ளார். மாமன்னன், ரத்தினவேல், அதிவீரன், லீலா ஆகிய நான்கு கதாபாத்திரங்களை சுற்றிச்சுழன்றுவரும் கதையில் மற்றும் முக்கிய பாத்திரங்களாக வருவது நாய்களும் பன்றிகளும்தான். வேட்டை நாய்களையும் ஓட்டப்பந்தய நாய்களையும் வில்லன் ரத்தினவேல் வளர்க்கிறார். பன்றிகளையும் பன்றிக்குட்டிகளையும் அதிவீரன் வளர்க்கிறார்.

பன்றிகளை மேய்த்து பராமரிக்கும் அதேசமயம் அடிமுறை சண்டைக்கலையை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுக்கும் அதிவீரனுக்கும் ( உதயநிதி ஸ்டாலின் ) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மேற்கல்வியை தொடரவிரும்பும் ஏழை மாணவர்களுக்காக பயிற்சி நிலையத்தை நடத்திவரும் லீலாவுக்கும் ( கீர்த்தி சுரேஷ் ) இடையில் அரும்பும் காதலையும் சித்திரிக்கும் இத்திரைப்படம், இந்த நாயகன் – நாயகிக்காக கனவுக்காதல் பாடல் காட்சிகளை புகுத்தாமல் தவிர்த்து, ரசிகர்களை காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் உறுப்பினராக சட்ட மன்ற உறுப்பினராக வரும் மாமன்னன் ( வடிவேலு ) ஆதிக்க சாதியைச்சேர்ந்த ரத்தினவேலுவின் ( பகத் பாஸில் ) முன்னிலையில் ஆசனத்தில் அமர்ந்துபேச முடியாத நிலையில் இருப்பதுதான் அவரது மகன் அதிவீரனுக்கு ( உதய நிதி ஸ்டாலின் ) வரும் தார்மீகக்கோபம்.

இரண்டு சாதி சமூகங்களிடையே சிக்கியது அதே சமூகங்களின் மக்கள் மாத்திரமல்ல, அவர்களால் வளர்க்கப்பட்ட பிராணிகளான நாய்களும் பன்றிகளும்தான். வழக்கமாக தமிழ் திரைப்படங்களின் எழுத்தோட்டத்தில் இந்த வரி இடம்பெறும். இத்திரைப்படத்தில் பறவைகள் – விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை. ஆனால், மாமன்னன் திரைப்படத்தை நெட்ஃபிலிக்ஸில் பார்த்தபோது அந்த வரியைக் காணவில்லை.

ஓட்டப்பந்தயத்தில் தோற்றுவிடும் நாயை உயிர்வாழவிடாமல் அடித்தே கொன்றுவிடுகிறார் ரத்தினவேல் ( பகத் பாஸில் ) அந்தக் காட்சி மிகவும் கோரமாக சித்திரிக்கப்படுகிறது. தணிக்கை சபை எவ்வாறு இக்காட்சிகளை அனுமதித்தது என்பது வியப்பானது! அதன் பின்னர் வெறிநாய்களை ஏவிவிட்டு பன்றிகளை கடித்துக்குதறிக் கொல்லும் காட்சியும் வருகிறது.

வீடுகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இக்காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்களை பார்க்க முடியுமா? சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேசவைப்பதுமே எழுத்தாளர்களினதும் கலைஞர்களினதும் முக்கிய கடமை.

சாதி அரசியல் தமிழ் சமூகத்தில் தொடர்ந்தும் பேசப்படுகிறது. அதே சமயத்தில் இந்தியாவில் சாதியின்பெயரால் இன்றும் அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. சட்டபூர்வமான படிவங்கள் - பத்திரங்களில் சாதி அடையாளம் பதிவுசெய்யப்படுகிறது.

சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் உறுப்பினர்களாகத்தான் மாமன்னனும் ரத்தினவேலுவும் இருக்கிறார்கள். ஆனால், அடிநிலை சமூகத்தைச் சேர்ந்த மாமன்னன், உயர் நிலை சமூகத்தைச்சேர்ந்த ரத்தினவேலுவின் முன்னால் அமர்ந்து சரி சமமாகப்பேச முடியாது. அந்த வேறுபாட்டை நீக்குவதற்காக வன்முறையே ஆயுதமாகிறது. நாய் வளர்க்கும் உயர்நிலை சமூகத்தைச்சேர்ந்த ரத்தினவேல், பன்றி வளர்க்கும் அடிநிலை சமூகத்தின் மீது வன்முறையையே பிரயோகிக்கின்றார். வன்முறையின் வழியில்தான் நீதி பிறக்கும் என்ற செய்தியையும் இத்திரைப்படத்தின் மூலம் சித்திரிக்கின்றார் மாரி செல்வராஜ்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழக சட்ட மன்ற உறுப்பினர் . கடந்த தேர்தலில் தனது தந்தை ஸ்டாலின் பெற்ற வாக்குகளைவிட அதிகம் வாக்குகள் பெற்றவர். தி. மு. க இளைஞர் அணி செயலாளரும் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இயங்கி வருபவர். தீவிரமாக அரசியலில் ஈடுபடவிருப்பதனால், அவரது இறுதித்திரைப்படமாக இந்த மாமன்னன் பேசப்படுகிறது.

அதே சமயம் தொடர்ந்தும் நகைச்சுவை நடிகராகவே தோன்றிவந்து புகழின் உச்சிக்குச்சென்று சமீப காலத்தில் சற்றுச் சரிவை சந்தித்த வடிவேலுவுக்கு மாமன்னன் திரைப்படம் மீண்டும் உச்சத்தை நிச்சயம் வழங்கும் என நம்பலாம். அவருக்கு மேலும் வாய்ப்புகளையும் பெற்றுத்தரலாம். குணச்சித்திர நடிகராகவும் அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். மாமன்னனில் அட்டகாசமான வில்லனாக வரும் பகத் பாஸிலுக்கு இத்திரைப்படம் திருப்பு முனையாகும். தமிழ் சினிமாவுக்கு மற்றும் ஒரு வித்தியாசமான வில்லன் கிடைத்துள்ளார்.

நீண்ட தொடர் பயணங்களுக்கிடையே மாமன்னன் திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும், இதில் நாய்களும், பன்றிகளும் கோரமான முறையில் சாகடிக்கப்படும் காட்சிகள் நெருடலாகவே தோன்றுகின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.