அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிகளைப் பெறும் வடமாகாண மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும், தகவல் அமர்வும் அண்மையில் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றன.

வவுனியா பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதியும், யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் 01 ஆம் திகதியும் , முல்லைத்தீவில் 02 ஆம் திகதி விசுவமடுவில் திறன்விருத்தி கேட்போர் கூடத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வவுனியாவில் நீண்டகாலமாக இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின் ( Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD ) தலைவர் திரு. த. கணேஷ் தலைமையிலும், உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் முன்னிலையிலும் வவுனியா பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடந்தது.

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இயங்கும் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திரு. க. சுசீந்தி மாவட்ட உதவிச்செயலாளர் திருமதி கிருஷாந்தி கமலராஜன் முன்னிலையில் யாழ். அரச அதிபர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் 01 ஆம் திகதி நடந்தது.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முதலாவது தலைவரும், கணக்காய்வாளருமான திரு. ஏ.வி. முருகையா மற்றும் தற்போதைய தலைவர் திரு. லெ. முருகபூபதி மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் திருவாளர்கள் வீ. தனபாலசிங்கம், இ. பாரதி, ரவிவர்மா ஆகியோரும் உரையாற்றினர்

யாழ். சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் திட்ட முகாமையாளர் திரு. சி. இன்பரூபனின் வரவேற்புரையுடனும் அலுவலர் திரு. ந. பாஸ்கரனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மறுநாள் 02 ஆம் திகதி முல்லைத்தீவு - விசுவமடு திறன் விருத்தி மண்டபத்திலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களும் அவர்களின் தாய்மாரும் உரையாற்றினர். கல்வி நிதியத்தின் பணிகளை சித்திரிக்கும் ஆவணப்படக்காட்சியும் இடம்பெற்றது.

வவுனியாவிலும், முல்லைத்தீவிலும் போரினால் பெரிதும் பாதிப்புற்ற மேலும் சில மாணவர்களும் இந்த நிகழ்வின்போது இந்தத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இம்மாணவர்களுக்கான 2023 ஏப்ரில், மே. ஜூன், ஜூலை, ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களுக்கான நிதிக்கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.

அவுஸ்திரேலியா – கனடா அன்பர்கள் வழங்கிய நன்கொடைகளிலிருந்து மாணவர்களுக்கும் அவர்களின் தாய்மார்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு இந்நிகழ்வுகளின்போது மதியபோசன விருந்தும் வழங்கப்பட்டது.

தகவல் : லெ. முருகபூபதி
தலைவர் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் – அவுஸ்திரேலியா

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.