அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 -2023 ) ஏற்பாடு செய்திருந்த  மாணவர் ஒன்றுகூடல் மற்றும் தகவல் அமர்வு – நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம்  23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில்  கல்வி நிதியத்தின்  தொடர்பாளர் அமைப்பான பெருந்தோட்ட  சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. அரியமுத்துவின் தலைமையில்  நானுஓயா நாவலர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  ஏற்கனவே கல்வி நிதியத்தின் உதவியினால் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரியாகி, முதலில் நுவரேலியா மாவட்ட உதவிக் கல்விப்பணிப்பாளராகவும், தற்போது கொழும்பு பரீட்சைத்திணைக்களத்தில் உதவி பரீட்சைகள் ஆணையாளராகவும் பணியாற்றும் செல்வி பாமினி செல்லத்துரை, உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. எம். கணேஸ்ராஜ், கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். கணேசன், மெதடிஸ் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் திரு. ஓம் பிரகாஷ், டெஸ்போர்ட் தமிழ் மகாவித்தியாலய அதிபர் திரு. சிவபாலசுந்தரம்  ஆகியோருடன், அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த கல்வி நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியும் மாணவர் தொடர்பாளர் நுவரேலியா குட்ஷெப்பர்ட் மகளிர் கல்லூரி ஆசிரியை செல்வி சாதினி ஜெயசீலனும்   கலந்துகொண்டனர்.

நாவலர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திரு. ராஜகோபாலின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. கல்வி நிதியத்தின் உதவி பெற்ற  மாணவர்களின் உரையும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

தேசிய மட்டத்தில் தனிநடனப்போட்டியில் வெற்றிபெற்ற கல்வி நிதியத்தின் உதவி பெறும்   மெதடிஸ்ட் பாடசாலை மாணவரான செல்வன் வர்ண விதுர்ஷனின் நடனமும் இடம்பெற்றது.  மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுடன் மதியவிருந்துபசாரமும்  நடைபெற்றது.

நாவலர் வித்தியாலயத்தின் உயர் – மற்றும் ஆரம்பப்  பிரிவு மாணவர்களும், டெஸ்போர்ட், மெதடிஸ்ட்  பாடசாலை மாணவர்களும்  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை பெற்றுவருகின்றனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.