அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 -2023 ) ஏற்பாடு செய்துள்ள மாணவர் ஒன்றுகூடல் மற்றும் தகவல் அமர்வு – நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சிகள் இம்மாதம் 23 ஆம் திகதி முதல் ( 23-06-2023 ) மலையகம் மற்றும் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கம்பகா, அம்பாறை மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.

23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை , மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில்  கல்வி நிதியத்தின்  தொடர்பாளர் அமைப்பான தோட்டப்புற சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் திரு. அரியமுத்துவின் தலைமையில்  நானுஓயா நாவலர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ள மாணவர் சந்திப்பில், ஏற்கனவே கல்வி நிதியத்தின் உதவியினால் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரியாகி, முதலில் நுவரேலியா மாவட்ட பிரதிக்கல்விப்பணிப்பாளராகவும், தற்போது கொழும்பு பரீட்சைத்திணைக்களத்தில் உதவி ஆணையாளராகவும் பணியாற்றும் செல்வி பாமினி செல்லத்துரை, நுவரேலியா கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர்  திரு. டி.எம். பி. வசந்த அபயரத்தின, உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. எம். கணேஸ்ராஜ், கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. எஸ். கணேசன் ஆகியோர் கலந்துகொள்வர்.

கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களின் உரையும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவுடன் மதியவிருந்துபசாரமும்  இடம்பெறும்  நாவலர் வித்தியாலயத்தின் உயர் – மற்றும் ஆரம்பப்  பிரிவு மாணவர்களும், டெஸ்போர்ட், மெதடிஸ்ட்  பாடசாலை மாணவர்களும்  கல்வி நிதியத்தின் உதவியை பெற்றுவருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தில்
இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா மாவட்ட தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டர் அமைப்பின் தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில் வவுனியாவில்  இம்மாதம் 29 ஆம் திகதி ( 29-06-2023 ) வியாழக்கிழமை காலை 9-30 மணிக்கு வவுனியா  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மாணவர் ஒன்றுகூடல் ஆரம்பமாகும். மாவட்ட மேலதிக செயலாளர் செல்வி சபர்ஜா, செயலகத்தின் தன்னார்வத் தொண்டு பிரிவின் தொடர்பாளர் திரு. சுபாஸ்கரன், ஒருங்கிணைப்புச்செயலாளர் பிரியதர்ஷினி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்வர். உதவிபெறும் மாணவர்களும், அவர்களின் தாய்மார் மற்றும் பாதுகாவலர்களும் பங்குபற்றுவர்.

யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு
யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திரு. க. சுசீந்திரன் தலைமையில் யாழ். அரசாங்க அதிபர் பணிமனையின் செயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி ( 01-07-2023)  சனிக்கிழமை முற்பகல் 10-00 மணிக்கு யாழ். மாவட்டத்தில் கல்வி நிதியத்தின் உதவி பெறும்  மாணவர்களின் ஒன்றுகூடல் நடைபெறும்.

மறுநாள் ஜூலை மாதம் 02 ஆம் திகதி (02-07-2023 )  ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10-00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட  மாணவர்களின் ஒன்றுகூடல் புதுக்குடியிருப்பில்  கணினி பயிற்சி நிலையத்தில் நடைபெற ஏற்பாடகியுள்ளது.

அம்பாறை – கம்பகா மாவட்ட மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வுகளின் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்நிகழ்ச்சியின் செலவுகளை கல்வி நிதியத்தின் உறுப்பினர்களும்,  நலன் விரும்பிகளும் ஏற்றுள்ளனர்.

தகவல்: முருகபூபதி,  தலைவர் – இலங்கை மாணவர் கல்வி நிதியம்.

கல்வி நிதியத்தின் ஆவணக்காணொளி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.