ஜூலை 17 அவரது 92 ஆவது பிறந்த தினம். அதையொட்டி வெளியாகும் கட்டுரை.

அவுஸ்திரேலியாவில் தமிழ் – கலை – இலக்கிய ஊடகத்துறையில் பெண்களின் வகிபாகம் என்ற கட்டுரையை நான் எழுதத் தொடங்கியபோது, இங்கு எம்மத்தியில் வாழும் மூத்தவர் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களும் முதலில் நினைவுக்கு

வந்தார்கள். அவருக்கு இம்மாதம் 17 ஆம் திகதி 92 வயது பிறக்கிறது என்ற செய்தியை சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான கானா. பிரபா தெரிவித்தார். அத்துடன் நில்லாமல், தாமதிக்காமல் இன்றைய தினம் ஞானம் இரத்தினம் அம்மையாரின் வாழ்வும் பணிகளும் குறித்துப் பேசுவதற்கு இணையவழி காணொளி அரங்கிற்கும் ஏற்பாடு செய்துவிட்டார். எமது சமூகத்திற்காக கலை, இலக்கிய, ஊடகத்துறையில் அயராமல் பாடுபட்ட ஆளுமைகளை வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கவேண்டும் என்ற அவரது தீராத ஆவல் முன்மாதிரியானது. அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் நான், சிட்னியில் வதியும் திருமதி ஞானம் இரத்தினம் அம்மையாரை அங்கு சென்ற சந்தர்ப்பங்களில் சில தடவைகள்தான் சந்தித்திருந்தாலும், இலங்கையில் அவர் தமது அன்புக்கணவர் மூத்த எழுத்தாளர் இசையறிஞர் இ. இரத்தினம் மற்றும் குடும்பத்தினருடன் வாழ்ந்த வெள்ளவத்தை இல்லத்தில் அடிக்கடி சந்தித்துள்ளேன்.

திருமதி ஞானம் இரத்தினம், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய வேளையில் அவரது அளப்பரிய சேவையை பாராட்டி இக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் நாயகமான (Chairman) திரு. நெவில் ஜெயவீரவும் பாராட்டியுள்ளார்.

இலங்கை வானொலி கல்விச்சேவைக்கும், அங்கிருந்து வெளியான வானொலி மஞ்சரி இதழுக்கும் பொறுப்பாசிரியராக செயல்பட்டிருக்கும் இவர், சிட்னிக்கு வந்த பின்னர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்: The Green Light. இலங்கையில் வானொலி ஒலிபரப்புக்கலை தொடர்பாக தமது பசுமையான நினைவுகளை அதில் பகிர்ந்துகொண்டவர். சிட்னியில் நடக்கும் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளிலும் உரையாற்றிவந்தவர். 90 வயது கடந்தபின்னரும் இவரது சுவாசத்தில் கலையும் இலக்கியமும் வானொலி ஊடகமும் நிரந்தரமாகியிருக்கிறது.

எழுத்தாளரும், ஈழத்தில் வெளியான குறிப்பிடத்தகுந்த திரைப்படமான பொன்மணியின் வசனகர்த்தாவுமான காவலூர் இராசதுரையை கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 07 ஆம் திகதி நாம் சிட்னியில் பாராட்டி விருது வழங்கி கௌரவித்தபோது, இலங்கை வானொலியில் அவருடன் பணியாற்றிய திருமதி ஞானம் அம்மையார் அந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து, உரையாற்றுகையில் அன்றிருந்த இலங்கை வானொலி கலையகத்தின் உறைபொருளையும் மறைபொருளையும் சிலாகித்துப்பேசியதை மறக்க இயலாது. அந்த நிகழ்வில் பேசியவர்கள் நின்றவாறு உரையாற்றினர். அம்மையார், அமர்ந்துகொண்டு பேசுவதே தனக்கு சுலபமானது எனச்சொல்லிவிட்டு, ஒரு வகுப்பறையில் கற்பிக்கும் ஆசிரியையின் பாங்கில் பல விடயங்களை சுவாரசியமாக பகிர்ந்துகொண்டார்.

1974 ஆம் ஆண்டின் பின்னர் கவிஞர் ஈழவாணன் அக்னி என்ற புதுக்கவிதை இதழை வெளியிட்டார். அது எமது நீர்கொழும்பூரில் சாந்தி அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அதில் இடம்பெறுவதற்காக ஆக்கங்கள் பெறுவதற்காக இரத்தினம் அவர்களை நேரில் சந்திப்பதற்கு ஈழவாணனுடன் இரத்தினம் – ஞானம் தம்பதியரை சந்திக்கச்செல்வேன். அம்மையார் எம்மை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பார்.

இரத்தினம் அவர்கள் இலங்கையில் நாட்டிய நாடகங்களுக்கு பிரதிகளும் எழுதிக்கொடுத்தவாறு அக்னி முதலான சிற்றிதழ்களில் மேலைத்தேய இலக்கிய வாதிகளின் படைப்புகளையும் மொழிபெயர்த்து வழங்கிக் கொண்டிருந்தார். இலங்கை வானொலி அக்காலப்பகுதியில் வானொலி மஞ்சரி என்ற இதழையும் வெளியிட்டது. அதன் ஆசிரியர் குழுவிலும் ஞானம் அம்மையார் அங்கம் வகித்து தரமான ஆக்கங்களை வெளிவரச்செய்தார். அப்போது நானும் எழுத்துலகம் பிரவேசம் செய்திருந்த காலப்பகுதி என்பதனால் எனது அபிமான இதழாகவும் குறிப்பிட்ட வானொலி மஞ்சரி திகழ்ந்தது. தலைநகரத்தில் நாடகக்கலைக்கு நேரடியாக பெண்கள் ஆர்வம் காண்பிக்காத அக்காலப்பகுதியில் ஆண்களே பெண்வேடம் தரித்தனர். பெற்றோரின் அனுமதி அதற்கு கிடைக்காமல் நாடக இயக்குநர்கள் – தயாரிப்பாளர்கள் சிரமப்பட்ட காலம். எனினும் வானொலி நாடகங்களில் பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இலங்கை வானொலியில் தினமும் நாடகங்கள், தொடர் நாடகங்கள் ஒலிபரப்பான பொற்காலம் அது. தொலைக்காட்சி அறிமுகமற்ற அக்காலப்பகுதியில் முஸ்லிம் நிகழ்ச்சி உட்பட வர்த்தக மற்றும் தேசிய ஒலிபரப்பிலும் அடிக்கடி நாடகங்கள் ஒலிபரப்பாகின. இந்தப்பின்னணிகளிலிருந்து ஞானம் அம்மையாரிடத்திலிருந்த சமூக ஆய்வினை அவர் தொகுத்து வெளியிட்ட அருமைக்கணவரின் நாட்டியம் நூலை எம்மால் அவதானிக்க முடிகிறது.

எஸ்.பொ. அவர்களின் சென்னை மித்ர வெளியீடாக வந்துள்ள இ. இரத்தினம் அவர்களின் நாட்டியம் நூலில் அம்மையார் இவ்வாறு எழுதுகிறார்:

“ இதில் இடம்பெறும் நாட்டியங்கள் பெரும்பாலும் 1960 களிலும் 1970 களிலும் எழுதப்பட்டன. ஏறத்தாழ எல்லா நாட்டியங்களும் வானொலி நிலையத்தாராலோ தனிப் பட்ட கலை நிறுவனங்களாலோ மேடையேற்றப்பட்டன. கலை நிகழ்ச்சி நடத்த
விரும்புவோர் அதிலே நாட்டியம் சேர்க்கும் ஆவலுடன் என் கணவரை அணுகி, நாட்டியங்களுக்குப் பிரதி எழுதித் தருமாறு கோரிக்கை வைத்ததின் விளைவாகவே இவை எழுதப்பட்டன. 1950 ஆண்டு முதல் இலங்கையிலே வானொலி நன் முறையில் விரிவடைந்து சிறந்து விளங்கியது. வாரந்தோறும் தரமான வானொலி நாடகங்கள் 'சானா’ எனப் புகழ் பெற்ற சண்முகநாதன் அவர்களால் தயாரித்து ஒலிபரப்பப் பட்டன. வானொலியின் இசைப்பிரிவினரால் பல இசைச் சித்திரங்கள், இசை நாடகங்கள் ஆகியன ஒலிபரப்பாகின. இவை யாவும் ஒலி வடிவாய் அமைந்து செவிக்கு இன்பமூட்டுவனவாகவே அமைந்தன. ஆயின், கட்புலனுக்கு விருந்தமைக்கும் வகையிலே மேடை ஏற்றப்பட்ட நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே அமைந்தன. தமிழில் வானொலி நாடகம் முன்னேறி வளர்ந்தது போல் மேடை நாடகம் வளரவில்லை. நாடக எழுத்தாளர் தயாரிப்பாளர் பலர் இருந்த போதிலும், மேடையில் நடிக்க முன்வரும் தமிழ் நடிகைகள் மிக அரிதே. சிங்களச் சமுதாயத்திலே போலல்லாது தமிழர் சமுதாயத்திலே பெண்களுக்கு மிகுந்த கட்டுப்பாடு இருந்தது. மேடையில் ஆண்களுடன் நடிக்க இளம்பெண்களைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. வானொலி நாடகத்திலே குரல் மட்டுமே கொடுப்பதால் அதற்குப் பெரிதும் தடை இருக்கவில்லை. காலப்போக்கிலே வானொலியின் வளர்ச்சியிலே ஆண்டுதோறும் தீபாவளி, நவராத்திரி முதலிய வைபவங் களை ஒட்டி மேடையில் நிகழ்ச்சிகளை நேயர்கள் கண்டுகளிக்க ஒரு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. இவ்விழாக்களிலே கர்நாடக இசை நிகழ்ச்சிகள், மெல்லிசை நிகழ்ச்சிகள் ஆகிய பல இடம் பெற்றன. ஆயின் நாடகத்திற்குப் பதிலாக நடன நாடகமான நாட்டிய நிகழ்ச் சிகள் இடம் பெறலாயின. மேடை நாடகத்திலே நடிக்கத் தமிழ்ப் பெண்கள் விரும்பவில்லை. ஆயின் பரதம் பயின்று நாட்டியங்களிலே ஆடுவதைத் தமிழ்ப் பெண்களும் அவர்கள் பெற்றோரும் வரவேற்றனர். அக்காலத்திலே தமிழ்நாடு சென்று பரதநாட்டியம் பயின்று வந்த பெண்மணிகள் பலர் நடனப் பாடசாலைகள் நிறுவி நடனம் கற்பித்து வந்தனர். இந்நடனப் பாடசாலைகளும் ஆண்டுதோறும் விழா நடத்த விரும்பின. பரதக்கலை பயிலும் பெண்மணிகளின் தொகையும் வளரத் தொடங்கியது. எனவே, வானொலி நிலையத்தாரும் தனிப் பட்ட கலை நிறுவனங்கள் பலவும் நடத்தும் கலை விழாக் களிலே பிரதான அம்சமாக நாட்டியங்கள் இடம் பெறத் தொடங்கின. எனது கணவர் இ. இரத்தினம் அவர்கள், சானா' தயாரித்த வானொலி நாடகங்கள் பலவற்றுக்கும் பிரதி எழுதிவந்தார். வானொலியின் இசைப் பிரிவினரின் அழைப்பில் பல இசைச் சித்திரங்களும், இசை நாடகங்களும் எழுதி வந்தார். இதனால் நாட்டியங்களுக்குப் பிரதி தேவைப்பட்ட போது, பலரும் அவரை அணுகினர். “

இவ்வாறு தமது கணவரின் கலை உலகப்பணிகளை அடுத்த தலைமுறைக்கு பதிவுசெய்து வைத்தவர் ஞானம் அம்மையார். மகாகவி பாரதியின் “ காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்த “ கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் ஞானம் அம்மையார்.

அவுஸ்திரேலியா – சிட்னிக்கு வந்த பின்னரும் அவர் எழுதினார். இங்கு வெளியாகும் தமிழ் முரசு வாராந்த இணைய இதழிலும் பல ஆக்கங்களை எழுதியவர்.

இலங்கையில் தொலைக்காட்சியின் வருகை 1979 ஏப்ரில் மாதம் ஆரம்பமானது. முதலில் அதனை சுயாதீன தொலைக்காட்சி சேவை என அழைத்தனர்.  (Independent Television Network - ITN) தொடக்கத்தில் தனியாருக்குச் சொந்தமான இச்சேவை பின்னர், 1982 ஆம் ஆண்டு முதல் ரூபவாஹினி என்ற பெயரைப்பெற்று, அரச தொலைக்காட்சியானது. அக்காலப்பகுதியில் அமைக்கப்பட்ட தேசிய தொலைக்காட்சித் திட்டமிடல் குழுவில் (National Television Planning Committee) இரண்டு பெண்கள் இடம்பெற்றனர். ஒருவர் திருமதி பொன்மணி குலசிங்கம், மற்றவர் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய இன்று 92 வயதை அடைந்திருக்கும் ஞானம் இரத்தினம் அம்மையார்.

எமது தமிழ் சமூகத்தில் கலை, இலக்கிய, வானொலி – தொலைக்காட்சி ஊடகத்துறையில் சீரிய பணிகளை முன்னெடுத்த ஞானம் அம்மையாருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். நேற்று நடந்த இணையவழி காணொளி அரங்கு அகில இலங்கை கம்பன் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், சிட்னியில் தமிழ் கல்வியாளருமான திரு. திருநந்தகுமார் தலைமையில் இடம் பெற்றது. இலங்கை வானொலி மற்றும் ரூபவாஹினி மூத்த ஊடகரும் கனடாவில் வதிபவருமான திரு. பி. விக்னேஸ்வரன், சிட்னியில் வதியும் எழுத்தாளர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா ஆகியோர் திருமதி ஞானம் இரத்தினம் அம்மையாரின் வாழ்வும் பணிகளும் குறித்து உரையாற்றினர். எழுத்தாளரும் வானொலி ஊடகருமான கானா. பிரபா இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.