ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள் பற்றிய விவாதமொன்று பதிவுகள் இணைய இதழில் 2005-2006 காலப்பகுதியில் நடந்தது. அதில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'காலம்'செல்வம்' , கவிஞர் செழியன் ஆகியோர் பங்கு பற்றினர். அதில் வெளியான கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:

1. ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள்- பரமார்த்த குருவும் சீடர்களும் கதை!  - என்.கே.மகாலிங்கம்  -
2. டொராண்டோ பத்திரிகைக் கட்டுரைகளுக்கான  எதிர்வினை! நன்னூலாரின் ‘ஓட்டைக் குடங்களும், எருமை மாடுகளும், பன்னாடைகளும்’ - என்.கே.மகாலிங்கம் -
3.  சீத்தலைச் சாத்தனாரின் சில மாணக்கர்கள்!   - என்.கே.மகாலிங்கம் -
4. ரொறொன்ரோ கல்விச்சபைத் தமிழ்பாட நூல்கள்! ‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்  வண் மொழி வாழியவே’- செல்வம் அருளானந்தம் ('காலம்' சஞ்சிகை ஆசிரியர்) -
5. ரொறொன்ரோ கல்விச்சபைத் தமிழ்பாட நூல்கள்! தமிழையும், தமிழ் தேசியத்தையும்  அழிப்பதற்கு திட்டமா? - செழியன் -
6. Report on Tamil Workbooks That were Intended to be Used for International Languages: Tamil Programme under TDSB!  - Flaws, Weaknesses, Errors, and Ideology in Them - - N.K.Mahalingam - (Tamil Language Instructor & Steward, CUPE 4400 Unit B)

இவை திஸ்கி எழுத்துருவில் வெளியாகியிருந்தன. இவற்றின் முக்கியத்துவம் கருதி  'பதிவுகளில் அன்று' பகுதியில் ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றன.

பதிவுகள், மார்கழி  2005 இதழ் 72
ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள்- பரமார்த்த குருவும் சீடர்களும் கதை!  - என்.கே.மகாலிங்கம்  -

தமிழ் மொழி கற்பிக்கும் தமிழ் (ஆரம்ப நிலை) ஆசிரியர்களுக்கு ரொறொன்ரோ கல்விச் சபை சமீபத்தில் தமிழில் அனுப்பப்பட்டுள்ள ஒரு சுற்றறிக்கை இப்படிச் சொல்கிறது: “பிள்ளைகள் தமிழ் மொழியைச் ‘சரியான’ முறையில் கற்க வேண்டும்... மொழித் திறனை ‘செம்மையான’ முறையில் பெற வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்ப் பயிற்சி நூல்களை ஆக்கியுள்ளோம்...இது ஒரு வரைவு (Draft) ஆகும்... இந்த நூல் பற்றிய தங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம். தமிழில் ‘தவறாக’ வழங்கி வரும் சில தமிழ்ச் சொற்களுக்குச் ‘சரியான’ தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி உள்ளோம். ‘தொடக்கத்தில் இருந்தே பிள்ளைகளுக்குச் சரியானதைக் கற்பிக்க வேண்டும். சரியான ‘தமிழ்ச் சொற்கள்’ அழிந்து போகாமல் ‘பாதுகாக்கப்படல்’ வேண்டும் என்ற ‘நோக்குடனேயே’ இவ்வாறு செய்துள்ளோம். தவறான ‘பழக்கத்தில்’ உள்ள சொற்களுக்கு மிகச் சரியான ‘வழக்குகளும்’ கீழே தரப்பட்டுள்ளன.”

என்று சொல் பட்டியல் ஒன்றையும் யாரோ அனுப்பியிருக்கிறார்கள். (மேலேயுள்ள இரட்டை மேற்கோட்குறிக்குள் உள்ள ஒற்றை மேற்கோள் குறிகள் என்னால் இடப்பட்டவை)

இச்சுற்றறிக்கை ரொறொன்ரோ கல்விச் சபையின் கடிதத் தாளில் அன்பான ஆசிரியர்களே! என்று விளித்து அனுப்பப்பட்டுள்ளது. அதை யார் அனுப்பினார்கள்? அவர்கள்  பெயரென்ன? தொலைபேசி இலக்கம் என்ன? என்ற தகவல்கள் கிடையாது. ஆனால். அதற்குள் தங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம் என்ற வாசகமும் உள்ளது. அப்படியானால் யாருக்கு எங்கள் கருத்துக்களை அனுப்புவது? பன் மொழிகளுக்கும் பொறுப்பான, ஆனால் தமிழ் தெரியாத ஒருவர் றொரொன்ரோ கல்விச் சபையில் இருக்கிறார். நிருவாக ஒழுங்கமைப்புக்குள் இது பொருத்தமாக இருப்பினும், அவருக்குள் ஒளிந்து கொண்டு தமிழ்ப் பயிற்சி நூல்கள் எழுதும் காரியமும் சிலர் தங்கள் கருத்தியலை அமுல் நடத்துதலும் நடக்கின்றன என்று நம்ப இடமிருக்கிறது,  

சரி சுற்றறிக்கைக்கு வருவோம். பழக்கத்தில் உள்ள (தவறான) வழக்கு, சரியான வழக்கு என்ற இரு தலைப்பில் 72 சொற்கள் கொண்ட ஒரு பட்டியலும் 12 சொற்கள் கொண்ட ஆங்கில-தமிழ் பட்டியலும் அனுப்பியுள்ளார்கள். ‘தவறான’ வழக்கு என்று சுட்டும் இவர்கள் சரியான ‘வழக்கு’ என்று எழுதுகிறார்கள். எங்கே அவை வழக்கில் உள்ளன? பொது மக்கள் மத்தியிலா? அல்லது சில தனித் தமிழ், தூய தமிழ், நவீன பண்டிதர்கள் ஆக்கிய தமிழிலா?

இவர் ‘தவறான’ என்று சொல்லும் தமிழ்ப் பதங்களுக்கு ‘சரியான’ என்று இவர்கள் தரும் பதங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம்: இங்கே தரப்படும் முதலாவது தொகுதிச் சொற்கள் தவறானவை என்று அவர்கள் குறிப்பிடுபவை. இரண்டாவது சரியானவை என்று குறிப்பிடப்படுபவை. அவர்கள் தவறான என்று சொன்ன அத்தனை சொற்களும் கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் காணப்படுகின்றன. (அங்கீகரிக்கப்பட்ட அகராதி ஒன்றில் ஒரு சொல் அச்சேறினால் அச்சொல் அறிஞர் குழாமால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தென்பதே கருத்து. உதாரணம் இங்கிலீஷ்; ஒக்ஸ்·போட் டிக்ஷநெறி.)

அதிபர்-முதல்வர், கதிரை-நாற்காலி, அலுமாரி-பெட்டகம், வம்சாவழி-மரபுவழி, மனிதன்-மாந்தன், சகோதரம்-உடன்பிறப்பு, அகதி-ஏதிலி, தினம்-நாள், நத்தார்-திருப்பிறப்பு, ஆல்பம் (இதை இலங்கைத் தமிழர்கள் அல்பம் என்றே உச்சரிப்பார்கள்)-செருகேடு, சமூகம்-குமுகம், சமுதாயம்-குமுதாயம், தபால்காரா;-அஞ்சலாளர், ஆம்புலன்ஸ் (இதையும் அம்புலன்ஸ் என்றே உச்சரிப்பர்) –பிணியாளர் ஊர்தி, தாதி-செவிலி, சைக்கிள்-ஈருருளி, பாண்-வெதும்பி, தானியம்-கூலம், பத்திரிகை-செய்தி இதழ், கோப்பை-குவளை, பாத்திரம்-கலம், பிளாத்திக்கு (இதுவென்ன சொல் என்று தலைமயிரைப் பிய்க்காதீர்கள். அது பிளாஸ்ரிக்.) –ஞெகிழம், பெற்றோல்-நிலநெய், பயம்-அச்சம், அவசர காலத் தொலைபேசி எண்-இடர்காலத் தொலைபெசி எண், அவசரகாலச் சேவை- சடுதிப்பணி, காண்டா மிருகம்-கல்யானை, சிங்கம்-அரிமா, மைல்-கல், நிமிடம்-மணித்துளி, உலோகம்-மாழை, கண்டம்-பெருநிலம், சமுத்திரம்-பெருநிலம், சுனாமி-பேரலை, பூகம்பம்-புவியதிர்வு, Band Music-இன்னியம்,

மேற் சொன்ன வார்த்தைகள் பூகோளத்தில் எந்தப் பகுதியில் எங்கே வழக்கிலுள்ளன? அவை எழுத்து மொழியா? பேச்சு மொழியா? கிளைமொழியா? செந்தமிழா? கொடுந்தமிழா? இழிசனர் வழக்கா? (செந்தமிழ் என்பது எழுத்துத் தமிழ். கொடுந்தமிழ், இழிசனர் வழக்கு, அழிவழக்கு என்று மக்களால் பேசப்பட்ட மொழி இழிவானது என்பதை ‘வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே’ என்கிறது சாத்திரம். தொல்காப்பியர், நாவலர் போன்றோரின் கருத்தையொட்டிப் பொது மக்களால் பேசப்பட்ட பேச்சு மொழியை ஏற்றுக் கொள்ளதாவர்களின் இலக்கணம் அது. (அ.சண்முகதாஸ்) அதையே இந்த பட்டியல் தந்தவர்களும், பொது மக்கள் பேசும் சொற்கள் தவறானவை என்றும் உயர்ந்தோர் என்ற அவர்கள் கூறும் சொற்கள்தான் சரியானவை என்றும் கருத்தும்பட எங்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். இது மேட்டிமைத்தனம்.

பொது மக்களின் வழக்கா? பழங்கால வழக்கா? இடைக்கால வழக்கா? தற்கால வழக்கா? எந்த அகராதியில், நிகண்டில் இவற்றைக் கண்டு பிடித்தார்கள்? இன்றைய வழக்கு தற்கால வழக்கு. இருபதாம் நூற்றாண்டு வழக்கு. அது பல்வேறு காரணங்களால் தனித்தன்மை வாய்ந்தது. அதற்குப் பல காரணங்கள் காட்டுவார்கள். (செ.வை.சண்முகம்)  

வாக்கிய அமைப்பில் பழைய கால மொழியிலிருந்து தற்காலத் தமிழ் வேறுபட்டிருப்பதையும், அது பேச்சுமொழியை ஒட்டி அமைந்திருப்பதையும், அதற்கு திரு.வி.க.வும் பாரதியாரும் பத்திரிகைகளில் எழுதிச் செய்த சேவையையும் சுட்டிக் காட்டியுள்ளார் மு.வரதராசன்- ‘நவீன இலக்கியத்தில் இலக்கிய தமிழும். பேச்சுத் தமிழும்’ என்ற கட்டுரையில். .

தமிழ், எழுத்து மொழி, பேச்சு மொழி என்ற பிரிவினையுடைய இருநிலை மொழி (diglossia). அதில் எழுத்து மொழிக்கே எமது இலக்கணிகள் இலக்கணம் எழுதி வைத்திருக்கிறார்கள். இப்பொழுது, ஹரொல்ட் ஷி·ப்மன் பேச்சு மொழிக்கும் இலக்கணம் (A Grammar Of Spoken Tamil) எழுதி வைத்துள்ளார். பலர் பேச்சு மொழியின் தாக்கங்களையும் அவை எழுத்து மொழியில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். இந்நிலையில் இடைச்சொல், உரிச்சொல் என்பவற்றை இங்குள்ள மாணவர்களுக்கு புகுத்தியது மட்டுமல்லாமல் சால, உறு, தவ, நனி, போன்ற நன்னூலார் காட்டிய எடுத்துக் காட்டுக்களையே திரும்பவும் சொல்வது கிளிப்பிள்ளை மனன இலக்கணம். அவற்றை இப்போது மிகைச் சொற்கள் என்ற வகைப்பாட்டுக்குள் நல்ல, சிறந்த போன்ற சொற்களாக அடக்கியுள்ளார்கள். தமிழ் இலக்கண அமைப்பிலே இடைச்சொல், உரிச்சொல் என்ற பாகுபாடுகள் தேவையா என்பதே பிரச்சினைக்குரியது. (சண்முகதாஸ், சண்முகம், கமில் சுவெலெபில்) சுவெலெபில் பெயர், வினை. அடை. மாறிலிகள் என்று பிரிக்கிறார் என்பது நோக்க வேண்டியது. இடைச் சொல் ஒலியன் உருபுகள். அவற்றை எப்படிச் சொல்லாக தொல்காப்பியர் எடுத்தார் என்பதையே அறிஞர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். உரிச்சொல்லை வினையடைக்குள்- அது பழைய இலக்கணத்தில் இல்லாதது- சேர்க்கலாம் என்கின்றனர்.  

அன்பான தமிழ் ஆசிரியர்களே என்று விளித்து அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையையும் பயிற்சி நூல்களையும் வாசித்தால் வேடிக்கையும், விநோதமும் நிறைந்து காணப்படுவது தெரியும். அதேவேளை, தார்மீகக் கோபம் தான் எங்களுக்கு வரும். இவற்றை எழுதியவர் அல்லது எழுதியவர்கள் ஒரு பழைய பாணி, தமிழ்க் கற்றுக்குட்டிகள். இவர்கள், நவீன அல்லது தற்காலத் தமிழ் தெரியாத, மொழியியல் தெரியாத, நூல்கள் எழுதாதவர்கள், எழுதத் தெரியாதவர்கள் என்பது இவற்றை வாசிப்பவர் அனைவருக்கும் உடனடியாகப் உரிந்து விடும். இவர்கள், சமூகம் ஒரே காலத்தில், ஒரே இடத்தில் தேங்கிப் போய் நிற்கிறது என்ற பிரமையில் வாழ்பவர்கள். பழையவை எல்லாம் பொன்னானவை என்ற கனவில் நிலத்தில் கால் பாவாமல் திரிகிறவர்கள்.  

‘இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான்
ஏடெழுதல் கேடு நல்கும்’

என்று பாரதிதாசன் கூறியதை ‘தற்கால இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான்’ என்று சேர்த்துச் சொல்லுதல் வேண்டும்

இப்பாட நூல்கள், வரைவு (Draft) என்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இவை விநியோகிக்கப்பட்டு விட்டன. ஏன்? அப்படியென்றால் அதை எழுதியவர் அல்லது எழுதியவர்களும் மேற்பார்வையாளர்களும் அவற்றை அங்கீகரித்து விட்டார்கள் என்பதல்லவா அர்த்தம்?

இவற்றைக் கொண்டு எமது தமிழ்ப் பயிற்சி நூல்கள் எழுதியவர்களின் புலமையையும், அறியாமையையுமே பார்க்க முடிகிறது. இவர்களின் பிரச்சினை பிறமொழிச் சொற்கள் தமிழில் கலக்கக் கூடாது என்ற இடைக்காலக் காள்கையுடையவர்களே.  (சேனாவரையர் போன்ற உரையாசிரியர்கள் பிறமொழிச் சொற்களை கடனாளக் கூடாது என்று சொல்வார்கள். அது புதிதல்ல. அதேவேளை, ‘தமிழ்ச் சமூகமும் பிறமொழியாளரின் ஆயிரக் கணக்கான கண்டுபிடிப்புக்களையும் பழக்க வழக்கங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை மறந்து விடக் கூடாது. ’(செ.வை.சண்முகம்) அப்படிக் கலந்திருந்தால் அவற்றைக் ‘களைய’ வேண்டும். அவற்றுக்கான புதிய ஆக்கங்கள் வேண்டும். அல்லது வழக்கில் இல்லாத சங்க காலச் சொற்களைத் (இடைக்கால அல்லது நவீன சொற்களை அல்ல) தேடி எடுத்துப் புதிப்பிக்க வேண்டும் என்பதே இப்பயிற்சி நூல்காரா¢ன் கட்சி.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, தமிழில் ஆயிரக் கணக்கான, திசைச் சொற்கள், வடசொற்கள், மேல்நாட்டுச் சொற்கள், பிறமொழிச் சொற்கள் வந்து சேர்ந்துள்ளனவே. கலந்துள்ளனவே? எவை தமிழ்ச் சொற்கள், எவை  தெலுங்கு, மலையாளம், மராட்டி, இந்துஸ்தான், மலாய், சீனம், சமஸ்கிருதம், பாளி, பிராகிருதம், உருது, கிரேக்கம், லத்தீன், அரபு, போர்த்துக்கீசியம், டச்சு, ஆங்கிலம், சிங்களம் என்பவை தெரிந்து அவற்றைக் களையக் கூடிய பன்மொழி வித்தகா;களா இவர்கள்? அப்படிக் களைந்தால் தமிழில் எத்தனை சொற்கள் மிஞ்சும்? அவற்றை வைத்துக் கொண்டு, புதிய அறிவைக் கொண்டு வந்து சேர்க்க முடியுமா? தனிய இலக்கியம், சமயம், தத்துவம், சித்த வைத்தியம் ஆகியவற்றுடன் மட்டும் நம் தமிழர்கள் வாழ்வு நவீன காலத்தில் பூரணப்பட்டு விடுமா? எமது நாட்டியம், சங்கீதம் கூட வடமொழியில் அல்லவா எழுதப்பட்டு இப்பொழுது தமிழில் வடசொற்கள், தெலுங்குச் சொற்களுடன் கலந்து பாடப்படுகின்றன, கற்கப்படுகின்றன. அவற்றைக் களைய இந்தப் பாமரர்களால் முடியுமா? அது தேவைதானா?

ரவீந்திர நாத் தாகூர் வங்காளத்தில் சாலித் பாஷா என்ற பேச்சு மொழியில் எழுதிய பிறகே சாது பாஷா (இலக்கிய மொழி) கைவிடப்பட்டு வங்காளிகளிடம் அது கவுரமான இடத்தை அடைகிறது. அதேபோல தமிழிலும் சுப்பிரமணிய பாரதியார் எளிய, வழக்கிலுள்ள தமிழில் வடமொழி எழுத்துக்களையும் சொற்களையும் கலந்து எழுதினாரே. அவற்றால், தமிழ் ‘பாதுகாப்புக் காவலர்கள்’ ‘கலாசாரக் காவலர்கள்’ தமிழ் அழிந்து விட்டது என்று கத்த முடியுமா? அவை தமிழை வளப்படுத்தவில்லையா?
 
தொல்காப்பியத்துடன் அல்லது நன்னூலுடன் அல்லது இலக்கணச் சுருக்கத்துடன் எம் இலக்கணம் நின்று விட்டதா? நேமிநாதம், வீர சோழியம், இலக்கணக் கொத்து, வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம், அகத்தியலிங்கம், நு·மான் போன்றோருடைய தற்கால இலக்கண நூல்கள் தோன்றவில்லையா? சண்முகதாஸ், செ.வை. சண்முகம்,  அகத்தியலிங்கம், வரதராசன் போன்ற அறிஞர்களுடைய மொழியியல் அறிவால் தற்கால இலக்கண அறிவு வெளிச்சமடைந்திருக்கிறதே? அவற்றை எல்லாம் கணக்கில் எடுக்கக் கூடாதா?

புதிய இலக்கண நூல்கள் எழுதப்பட்ட காரணங்களே தமிழ் மொழி மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. அதன் தேவைகள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. எமது சமூகம் வளர்ந்து கொண்டிருக்கின்றது என்பதைத்தானே குறிக்கிறது.  எமது மொழி வாழும் மொழி. வளரும் மொழி. ஆகவே, தமிழில் இலக்கணம் மாறிக் கொண்டிருக்க வேண்டும். சொற்களஞ்சியம் மாறிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தானே அதன் அர்த்தம்?   

தனித்தமிழ் இயக்கம் சூரிய நாராயண சாஸ்திரிகள்,  மறைமலை அடிகள் போன்றவர்களால் 40, 50 களில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் சென்று தேய்ந்திறந்த ஒன்று. திராவிடர் கழகங்கள் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று மேடையில் தொண்டை கிழிய கத்தி, தங்கள் பெயர்களை மட்டும் மாற்றியவுடன்  தமிழ் வளர்ந்து விட்டது என்று அமைதிப்பட்டவர்கள். பாலர் பாடசாலை தொடக்கம். பல்கலைக் கழகங்கள் வரை தமிழ் நாட்டில் இன்னும் ஆங்கிலத்திலேயே நடக்கின்றன. அவற்றை மாற்ற முயலாமல் மேம்போக்காக செய்து திருப்தி கண்டார்கள். அதையே, இவர்கள் புதிதாக இங்கு ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதையும், தமிழ் பொ¢தாகத் தெரியாத, பேசுவதற்கும், புரிந்து கொள்வதற்கும், வாசிப்பதற்கும் கஷ்டப்படும் கனேடிய மாணவர்களுக்கு இச்சொற்களை அறிமுகப்படுத்தித்தான், மொழியைச் ‘செம்மைப்படுத்த’ வேண்டும் என்று நினைப்பதைப் போன்ற பைத்தியக்காரத்தனம் எங்குமே இருக்க முடியாது.

இருந்தால், அது தலிபான் ஆட்சியின்போது இருந்த ஆப்கானிஸ்தானில் மட்டுமே இருக்க முடியும். எப்பொழுதுமே குழந்தைகள், மாணவர்கள், பெண்கள் போன்ற ‘குரலற்ற., வஞ்சனையற்ற, தாக்கப்படக் கூடிய’ சமூகம் மீது தான் இத்தகையவர்கள் தங்கள் ஆதிக்க மனோபாவத்தையும், அடக்குமுறையையும், அதிகார வலுவையும் காட்ட முனைவார்கள். அதைத் தான் இங்கும் நடத்த முயலுகிறார்கள், இந்த பயிற்சி நூல்கள் மூலம்.

இந்த சொற் பட்டியலே இப்படியான கருத்தியலுடன் (ideology) தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதைவிட மோசம் இவர்கள் தயாரித்த பயிற்சி நூல்கள். அவற்றை வாசித்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் கொதிக்கிறார்கள். காரணம், தங்களுக்கே உரியாத பழந் தமிழ் சொற்கள், தற்காலத் தமிழில் இல்லாதவை, புழக்கத்தில் இல்லாதவை இப்பயிற்சிப் புத்தகங்களில் திணிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மூலம் படித்தவர்கள், பல தசாப்தங்கள் எழுதியும் பேசியும் வந்த அவர்களுக்கே இப்புத்தகங்களிலுள்ள சொற்கள் உரியாதபோது, தமிழே பேச, வாசிக்க, எழுதத் தெரியாத, தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு எப்படிச் சொல்லிக் கொடுப்பது என்று திண்டாடுகிறார்கள். கொதித்துப் போய் விடுகிறார்கள். பயிற்சி நூல்களை எழுதிய இந்த ‘எழுத்தாளர்களுக்கு’ ஏன் இந்த அடாவடித்தனம்?

இந்நூல்களை எழுத வைத்து, சரியென ஏற்று, மாணவர்களுக்கு விநியோகித்த தமிழ் மேற்பார்வையாளர்களை என்னவென்று சொல்வது? பிழையானவற்றை, தேவையில்லாதவற்றைக் கற்பித்துவிட்டு அவற்றைத் திருப்பிப் பெற்றுக் கொள்ள முடியுமா? ஏன் இந்த விஷப் பரிசோதனை? அதனால், இப் பயிற்சி நூல்களை வீட்டில் சொல்லிக் கொடுக்கும் பெற்றோரும், பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களும் அந்தரித்துப் போயிருக்கிறார்கள்.

மேலே சொல்லப்படாத பல சொற்கள், மொழி பெயர்ப்புச் சொற்கள், தெளிவற்ற, கரடு முரடான, நேரடி மொழிபெயர்ப்பு வாக்கியங்கள், மெய்ப்புப் பார்க்காத சொற்கள், மாணவர் தரத்திற்கு ஏற்காத இலக்கணங்கள், கண்மூடித்தனமாக இலக்கண விதிகளின்படி கற்பிக்கும் முறை, (prescriptive grammar)-அமைப்பியல் முறைப்படியோ, வளர்ச்சி அடைந்த நவீன மொழியியல் அடிப்படையிலோ பயன்பாட்டு இலக்கண (functional grammar) முறையிலோயோ விவரண இலக்கண (descriptive grammar) முறைப்படியோ இல்லாமல்-இப்பயிற்சி நூல்களில் மலிந்து காணப்படுகின்றன. மாணவர்களைக் கவரும் படங்களற்ற, வெறுமையான, ஒளிநகலெடுத்த, அச்சடித்த தாள்களை ஒன்றாகப் ‘பின் பண்ணி’ கட்டிய புத்தகம். இதை வாசிப்பதற்கு பிள்ளைகளுக்கு மனமே வராது. தமிழ் படிக்க ஆர்வமே வராது. வெறுப்புத்தான் வரும்.

சுற்றறிக்கையில் கொடுக்கப்படாத, பயிற்சி நூலில் கொடுக்கப்பட்ட சில சொற்களுக்கான உதாரணங்களை இனிமேல் பார்ப்போம்: சனவரி, சமற்கிருதம், கொக்கி, கலோவீன், நூடில்சு, ஈசுரா;, இறம்ழான், நாயகரா, பிரிட்டிசு கொலம்பியா, உறொக்கி, லோறன்சு, கட்சன், நியூ பிரவுண்சுவிச், இசுக்கொட்லாந்து, செருமனி, பாகிசுத்தான், அவுத்திரேலியா, ரெனிசு, உரோசா, சமிக்கை, இயப்பான், நோவாசியாக்கோசியாசு, எவரெத்து, யக்காத்தியா,   போன்றவை கிரந்த எழுத்துக்கள் வரக்கூடாது என்பதற்காக தமிழ் எழுத்துக்களால் அலங்கோலப்படுத்தப் பட்டு நிரப்பப்பட்டவை. அப்படிக் கிரந்த எழுத்துக்கள் வரக் கூடாது என்று மொழித்தூய்மை பேச முடியாது. எமது வரி வடிவங்களே அசோகன் காலத்திலிருந்த பிராமி வரி வடிவத்தைப் பின்பற்றியதென்றும் பின்னர், பாண்டிய நாட்டில் வழக்கத்திலிருந்த கோலெழுத்து கைவிடப்பட்டு, சோழ ராஜராஜனால் வட்டெழுத்து அல்லது வெட்டெழுத்துப் புகுத்தப்பட்டது என்றும் (தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்)  கருதப்படுகிறது. பின்னர் பலமுறை எழுத்துக்களுக்குப் புள்ளிகளும் கோடுகளும் சுழியும் கொடுக்கப்பட்டதை (வீரமா முனிவர், பெரியார்) பலரும் அறிவர். (ஐராவதம் மகாதேவன்) அப்படி வரி வடிவத்தில் மாற்றமில்லாமல் கிரந்த எழுத்துக்கள் வேண்டாம் என்றால் முஸ்லீம் மக்களுடைய பெயர்களையோ அரபுச் சொற்களையோ தமிழில் எழுத முடியாது. பல ஆங்கில, லத்தீன், கிரேக்க, விஞ்ஞானச் சொற்களைத் தமிழில் எழுத முடியாது. இன்றைய தமிழ்ப் பிள்ளைகளின் பெயர்களை தமிழில் எழுத முடியாது. எழுத்துச் சீர் திருத்தம் நடைபெற்று வரும் இவ்வேளையில், திருமூலர் காலத்தில் இருந்தே -10 ம் நூற்றாண்டு- புழங்கி வரும் ஐந்தே ஐந்து கிரந்த எழுத்துக்களில் ஏன் இந்த வெறுப்பு. xenophobia?   

நெய்க்கழிவு, நடுக்கிழக்கு, அ·கம், ஏதிலியர் (அகதி), உகிர் (நகம்), நோச்சி (விபத்து), சுடுகலன், வெண்சுருட்டு, இலக்கம் -(லட்சம்)மாந்தன் (மனிதன்) பனிக்களி, மென்மயிர் புறச்சட்டை, தளப்பந்து, நல்வாய்ப்புச் சீட்டுக்கள், அன்புலம், ஒப்புரவிலாளன், சாலை போன்றவை தனித்தமிழ்ச் சொற்களும், இவர்கள் செய்த வேடிக்கையான சில மொழிபெயர்ப்புக்களும். பனிக்களி-ஐஸ் கிறீம், நோ;ச்சி-விபத்து, இழைமா-நூடில்ஸ், கல்யானை-காண்டா மிருகம் இன்னும் இப்படியான பல சொற்கள் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளன. கனேடியக் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் பெற்றோரையும் ரொறொன்ரோ கல்விச் சபை நடத்தும் பாடசாலைகளிலிருந்து ஓடச் செய்யும் இலகுவான வழி இது. இதில் ஒருவித சதி இருக்குமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

அமுதசுரபி அமுதசுரவியாக மாற்றம் பெற்றுள்ளது. புட்டும் பிட்டும் சரி என்றே கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கூறுகின்றது. இவர்களுக்கு பிட்டு மட்டும் சரி. இவர்கள் தற்காலத்தவர்கள் அல்லர். கற்காலத்தவர் ஆயிற்றே!

கலாசாரம் மனித வாழ்வுடன் நேரடித் தொடர்புடையது. சமயம், மொழி, கலை, உடை, வீடு, அலங்காரம் போன்ற அனைத்து அம்சங்களுமே அதில் அடங்கியுள்ளன. அவ்வம்சங்களைப் பிரதிநிதிபடுத்தும் ஒலியன்களும், வரி  வடிவங்களும், சொற்களும் அக்கலாசாரத்துக்குரிய தனித்துவம். அதன் மேதைமையுடன் அவை சம்பந்தப்பட்டன. அக்கலாசார அல்லது பண்பாட்டுச் சூழலிலிருந்து அவற்றைப் பிரித்தெடுத்து அவற்றுக்குத் தமிழ்ப் பெயரும் சூட்டி, நீண்ட கூந்தலும் வளர்த்து, தமிழ்க் குஞ்சமும் கட்டி, அழகு பார்க்க முடியாது. அது அசிங்கமாகவே இருக்கும். அப்படிச் செய்ய வெளிக்கிட்ட போது நடந்த கோமாளித்தனம் தான் ஐஸ் கிறீமுக்கு பனிக் களி, அம்புலன்சுக்கு பிணியாளர் ஊர்தி என்பவற்றுடன், அல்பம்-செருகேடு, பாண்- வெதும்பி, எவறெஸ்ட்- எவரெத்து, ஜக் காட்டியே (Jack Cartier)- யக்கட்டியா, ஈஸ்டர்- ஈசுரா;, நொவாஸ் கோஸியா- நோவாசுக் கோசியாசு போன்றவையும் பிறவும். இந்த உச்சரிப்புக்களுடன் கனேடியர்களுடன் எம் மாணவர்கள் கதைத்தால், அல்லது ஆசிரியர்கள், பெற்றோர்கள் கதைத்தால், அவர்கள் கைகொட்டிச் சிரியாரோ? உரியாமல் விழிப்பாரே? என்னே எமது மூடத்தனம்! அதற்கும் ஓர் அளவு கணக்கில்லையா? பெயர்களை அப்படியே உச்சரிக்க முயன்று கொண்டிருக்கும் இக்காலத்தில் தமிழ்ப்படுத்தி உச்சரிப்பதால் நாம் அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போக மாட்டோமா?

தனித்தமிழ், தூய தமிழ்க்காரா;கள், பூரி, லட்டு, சப்பாத்தி. பாண், அல்வா, உரியாணி, கேக், பிஸ்கற், இட்லி. சுஷி, நூடில்ஸ், குறோசோன்ற், டோநட் போன்ற உணவுகளை வாங்கிச் சாப்பிட முடியாமல், சோறும் கறியும் சாப்பிட வேண்டித்தான் வரும். பியர், பிறன்டி, விஸ்கி போன்ற குடிவகைகளைக் குடிக்காமல் கள்ளும் சாராயமும் கசிப்பும்தான் குடிக்க வேண்டி வரும். பென்ரா, நிக்கா போடாமல் கச்சை தான் கட்ட வேணும். லோங்ஸ் போடாமல், சல்வார் கமிஷ் போடாமல், நைற்றி போடாமல் எந்த நேரமும் பாவாடை தாவணியில், சேலையில் தான் வலம் வர வேண்டும். பூட்ஸ், சப்பாத்து, செருப்புப் போடாமல், எல்லாவற்றையும் ஒரே பெயரால் காலணி என்றே அழைத்துக் கொண்டிருக்க வேண்டியது தான். எமது கலாசாரமே மாறிக் கொண்டு வருகிறது. உலகமயமாகிக் கொண்டு வருகிறது. உலகம் சுருங்கி எங்கள் தேவைகளும் பெருகி வருகின்றன. அதற்கு எதிராக சுப்பரை கொல்லைக்குள் மாட்டுத் தொழுவத்துக்குள் எப்படி வாழுவது? மூச்சடங்கி தனிமைப்பட்டு போய் ‘இயற்கை’ எய்தி விடுவோம். அழியும் உயிரினமாகி விடுவோம்.
 
நாலாம் வகுப்புப் பயிற்சிப் புத்தகத்தில் சி.வி.ராமனைப் பற்றிய ஒரு கட்டுரை. அவர் ஒருவரே நோபல் பரிசு வாங்கிய ஒரே ஒரு தமிழர் என்று எழுதப்பட்டுள்ளது. சுப்ரமணியன் சந்திரசேகரன் 1983 இல் இயற்பியலுக்கு நோபல் பரிசு வாங்கியிருக்கிறாரே? எங்கே போய் விட்டார்? அவர் தமிழனில்லையா? இப்படியான தகவல் பிழைகள் மாணவர்கள் பாடப் புத்தகங்களில் வரக்கூடாதே.

பல அச்சுப் பிழைகள், (மந்த குலம், ஆணுக்குண்டு போன்றவை வேடிக்கையானவை) சந்திப் பிழைகள், சொற்களைத் தேவையில்லாமல் புணர்த்தியும் பலவேளைகளில் புணர்த்தாமலும் விடப்பட்டிருக்கின்றமை, வகுப்புக்கேற்ற சொற்களஞ்சியமோ, அமைப்போ  (graded vocabulary and structures)) இல்லை. வாக்கியங்களில் தெளிவின்மை, கவனமின்மை காணப்படுகின்றன, செவ்விந்தியர் போன்ற ‘அரசியல் தவறான’ (politically incorrect) சொற்கள், கவர்ச்சியான படங்கள் இல்லாமை, குறுகிய, மட்டுப்படுத்தப்பட்ட சொற்களஞ்சியம், முதலாம் புத்தகத்திலிருந்து ஏழாம் புத்தகம் வரைக்கும் ஒரே சலிப்புத் தரும் இலக்கணம்-உயிரெழுத்து, மெய்யெழுத்தை வட்டமிடுக. குறில், நெடில் எழுத்துக்களை வட்டமிடுக. வல்லினம், மெல்லினம், இடையினம் கண்டு பிடிக்க. பெயர், வினை, இடைச்சொல். உரிச்சொல் ஆகியவற்றைக் கண்டு பிடித்து எழுதுக. இந்த இலக்கண வகைமைகளுக்கு விளக்கமோ, உதாரணங்களோ பயிற்சிப் புத்தகங்களில் கொடுக்கப்படவில்லை. அத்தனை கவனமின்மை, உதாசீனம். ஏனோதானோ மனப்பான்மை.  திருக்குறளைத் தவிர அற இலக்கியங்கள் தனிப்பாடல்கள் எங்களிடம் இல்லை என்பது போல திருக்குறள் மட்டுமே அதிகாரம், அதிகாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடத்தில், உ.வே.சாமிநாதையர் எழுதிய கதை ஒன்றுதான் என் நினைவில் வருகிறது. கும்பகோணத்தில் ஒரு மடம். தம்பிரானுடன் சேர்ந்து தமிழ், வடமொழி அறிஞர்கள் அளவளாவுவார்கள். முன்புறத்தில் பெரிய கிணறு. மடத்துக்குரிய காளைகளை அங்கே தண்ணீர் கொடுத்து விட்டு, மீண்டும் ஓட்டிப் போவார்கள். மடத் தாழ்வாரத்தில் மாணவர்கள் தமிழ், வடமொழி கற்பார்கள். அப்பொழுது ஒரு மாணவன் ஓடி வந்து, ‘கிணற்றில் ஒரு மிருகம் விழுந்து விட்டது.’ என்று கைகளை உதறிக் கொண்டு சொன்னான். மிரள மிரள விழித்தான். அதைக் கேட்டு, கிணற்றில் காளை விழுந்து விட்டது என்று நினைத்து கிணற்றடிக்கு எல்லோரும் ஓடிப்போய் எட்டிப் பார்த்தார்கள். அதற்குள் காளையின் அடையாளமே இல்லை. கிணறு பெரியது. காளை விழுந்து தண்ணீருக்குள் அமிழ்ந்து போயிருக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்தக் கலவரத்தில் பலர் கூடி விட்டார்கள்.

மிருகம் விழுந்து விட்டதென்று சொன்ன மாணவனிடம், எங்கே விழுந்தது? என்று கேட்டார்கள். அவன், ‘அதோ தெரிகிறது. அதோ தெரிகிறது. பாருங்கள்’ என்றான். அப்பொழுது ஓணான் ஒன்று தத்தித் தத்தி சுவரில் ஏறிக் கொண்டிருந்தது. ‘அங்கே ஓணான் அல்லவா தெரிகிறது.’ என்றார்கள் அவர்கள். அதற்கு அம்மாணவன், ‘ஓணான் மிருகம் அல்லவா? அதைத் தான் நான் சொன்னேன் என்றான். அதைக் கேட்டவர்களுக்குக் கோபம் வந்து விட்டது. ஒருவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மாணவன் ஓடிப்போய் அன்று தான் படித்த, உயிரியல் புத்தகத்தைக் கொண்டு வந்து காட்டி, ‘ஓணான் ஒரு மிருகம்’ என்பதை நிருபிக்க முயன்றான். அவனுக்கு அடித்தவர். ‘படித்து விட்டால் போதுமா? சந்தா;ப்பம் அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டமா? நீ படித்தும் முட்டாள்’ என்றார். (உ.வே.சாமிநாதையர்)

அப்படிப்பட்டது தான்  எமது  கதையும்.  இந்தப் புத்தகங்களை தமிழ்ப் பாடப் பயிற்சி நூல்களாக வைத்திருப்பதால் எமது பிள்ளைகளுக்கு நன்மையிலும் பார்க்க தீமையே அதிகம் செய்கிறோம். அப்படி இந்நூல்களை வைத்திருக்க வேண்டுமானால், இவற்றிலுள்ள பிழைகளைக் களைந்து, இரண்டாம்  மொழியாகத் தமிழ் கற்கும் கனேடிய-தமிழ் மாணவர்களுக்கு உகந்த, இலகுவான, நவீன மொழியியல் கருத்துக்களுக்கு ஏற்றதொன்றாக இவற்றை மாற்ற வேண்டும்.

தமிழ் கற்பிக்கும் பணியில் இங்கு பல மட்டங்களிலும் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் தமிழ்க்  கல்வித் துறையில் அனுபவம், பயிற்சி போன்றவை பெற்ற அறிஞர்கள், மொழியியலாளர்கள், ஆர்வமும் அறிவும் கொண்ட பெற்றோர் எனப் பலவகையினரையும் இதில் பங்குபெறச் செய்து பயிற்சு¢ நூல்கள் எழுதப்பட வேண்டும். அச்சேறு முன் முன்னோடி முறையில் வகுப்பறைகளில் (pilot project and class room situations) அவற்றைப் பரீட்சித்து மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நல்ல நவீன கருத்துக்களைப் உரிந்து கொள்ளும், வரவேற்கும் திறந்த மனம் கொண்டோர் மட்டுமே, (வெறும் அடிப்படை அறிவு, அறிமுகம் மட்டுமே போதாது) இப்பணியில் பொறுப்:பேற்று ஈடுபட வேண்டும்.

அதற்கு, இப்பாட நூல்களால் பாதிக்கப்படும், பாதிக்கப்படப் போகும், மாணவர்களும், ஆசிரியர்களும். பெற்றோரும், தமிழ் பற்றாளர்களும், ரொறொன்ரோ கல்விச் சபை அதிகாரிகளுடன் பேசுங்கள், அவர்களுக்கு எழுதுங்கள்.

கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்களில் சில:

1.கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
2.எம்.ஏ.நு·மான்-அடிப்படைத் தமிழ் இலக்கணம்
3.ச.அகத்தியலிங்கம்-தமிழ் அமைப்பியல்
4.அ.சண்முகதாஸ்-தமிழ் மொழி இலக்கண இயல்புகள்
5.செ.வை.சண்முகம்-மொழியும் எழுத்தும்
6.உ.வே.சாமிநாதயர்-புதியதும் பழையதும்
7.Harold A Schiffman-A Grammar of Spoken Tamil
8.தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் -உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.       

[தொடரும்]