
[ சென்ற ஞாயிறு 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற் முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது பதிவுகள் இணைய இதழில் முழுமையாக இடம் பெறுகின்றது.]
1.
வரலாற்று முக்கியத்துவம்
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் அவரது 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)' என்னும் இந்த நூல் மூலம் சிறந்த வரலாற்று அறிஞர்களில் ஒருவராக முகிழ்த்திருக்கின்றார் என்றுதான் கூற வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் முககிய குறைபாடுகளில் ஒன்று வரலாற்றுத் தெளிவின்மை. இலங்கையின் தொன்மக் குடிகளாக இருந்தும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை கோலோச்சிய யாழ்ப்பாண இராச்சியம் பற்றி, அதன் மன்னர்களைப்பற்றி, இருந்த இராஜதானிகள் பற்றி ஆதாரபூர்வமான, வரலாற்றுச் சான்றுகளுடன் கூடிய வரலாறு இல்லை என்றுதான் கூற வேண்டும். இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பற்றிக் கூறும் யாழ்ப்பாண வைபவமாலை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நூல். அது போல் கைலையாமாலை , வையாபாடல் போன்றவையும் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. இவையெல்லாமே கூறும் வரலாறு இவை எழுதப்பட்ட காலத்திற்கு முற்பட்டவை. எனவே பல கர்ணபரம்பரைக் கதைகள், கேள்வி ஞானத்தகவல்களை உள்ளடக்கியவை. இவற்றை வடி கட்டு , உண்மை பொய் அறிவதற்கு முதலியார் செ.இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் முயற்சி செய்திருக்கின்றார்கள். அவற்றின் விளைவுகளே முதலியார் செ.இராசநாயகத்தின் யாழ்ப்பாணச் சரித்திரமும், சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனமும். மேலும் பலர் யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதியிருந்தாலும், இவை முக்கியமானவை.
மேலும் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுவதில் இலங்கைத் தமிழர் காட்டும் அசிரத்தை. இவ்விடயத்தில் எம்மவருக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று நூலாசிரியர் மயூரநாதன் அண்மைய ஆதித்தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டிருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு அவர் கங்கா சத்திரம் இடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். கங்கா சத்திரம் இருந்ததால்தான் அப்பகுதி சத்திரத்துச் சந்தி என்று அழைக்கப்படுவதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இச்சமயத்தில் எனக்கு ஒரு நினைவு தோன்றுகின்றது. எண்பதுகளில் யாழ் ஈழநாடு பத்திரிகையில் யாழ் நகரில் பழமையின் சின்னங்கள் பேணப்படுவதன் அவசியம் என்றொரு கட்டுரை எழுதினேன். எழுதிய பின்னரே யாழ் மாநகரசபை கங்கா சத்திரத்தை இடித்தது. இவ்விதமிருக்கின்றது எம்மவரின் மரபுரிமைச் சின்னங்களைப் பேணுதல் பற்றிய புரிதல். இந்நிலை மாற வேண்டும். இதற்கு நிச்சயம் இந்நூல் உதவி புரியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அதே நேரம் சிங்களவர்களைப்பொறுத்தவரையில் தம் வரலாற்றினைக் காலத்துக்குக் காலம் ஒழுங்காகப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். தீபவம்சம், அதனை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட மகாவம்சம், தொடர்ந்து எழுதப்பட்ட சூளவம்சம் என அவர்கள் தம் வரலாற்றைப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள். இவ்விதம் இலங்கைத் தமிழரும் செய்து வந்திருந்தால் இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தற்போது எதிர்கொள்ளும் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.
இந்நிலையில்தான் மயூரநாதனின் இந்நூலின் முக்கியத்துவம் உள்ளது. பொது யுகத்தின் பின் 1621 தொடக்கம் 1948 வரையிலான காலகட்டத்தில் , யாழ்ப்பாண நகரம் எப்படியிருந்தது என்பதை ஆதாரபூர்வமாகச் , சான்றுகளுடன் விபரிக்கும் வரலாற்று நூல் 'யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு' நூல். இவ்விதமான வரலாற்று நூல்கள் அதிக அளவில் எதிர்காலத்தில் வரவேண்டும். தமிழ நகரப் பகுதிகளில் நவீனத் தொழில் நுட்பம் கொண்டு , அண்மையில் யாழ் கோட்டைப் பகுதியில் நடத்தியது போல், ட்ரோன்கள், ரேடார் போன்றவற்றின் உதவி கொண்டும் ஆய்வுகள் செய்வதன் மூலம் கடந்த கால வரலாற்றினை இன்னும் தெளிவாக அறிய முடியும். அதே போல் வழக்கமான தொல்லியற் செயற்பாடுகளான அகழாய்வுகள் மூலமும் ஆய்வுகள் தொடர வேண்டும். இவற்றின் அடிப்படையில் மேலும் பல வரலாற்று நூல்கள் உருவாவது காலத்தின் தேவை.
பெளதிகரீதியிலான வரலாற்று நூல்
அடுத்தது மயூரநாதனின் இந்நூலின் முக்கியமான இன்னுமொரு சிறப்பு - இது பெளதிகரீதியில் யாழ்ப்பாண நகரத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளும் நூல் என்பதாகும். பொதுவாக அரச வம்சங்களின் அடிப்படையில் அமையும் வரலாற்று நூல் அல்ல இந்நூல்.
பெளதிகரீதியிலான நகரொன்றின் வளர்ச்சி வரலாறு என்னும்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன பெளதிகரீதியிலான என்பதுதான் அது.
பெளதிகக் கண்ணோட்டம் என்பது ஒரு நகரத்தின் கட்டமைப்பு, புவியியல், சுற்றுச்சூழல் , நில அமைப்பு, நகர அமைப்பு, கட்டடக் கலை, சமூக,அரசியல் தாக்கங்கள் ஏற்படுத்திய நகர மாற்றங்கள், தொழில் நுட்பங்கள் ஏற்படுத்திய விளைவுகள், மக்கள் தொகை அதிகரிப்பு, இவை காரணமாக நகரில் பல்வகைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, மற்றும் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள் இவற்றைப் பற்றிய வரலாறு என்று பொதுவாகக் கூறலாம். குறிப்பாகக் கூறினால் மேலும் விளக்கமாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:
1 .நிலப்பயன்பாடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி - நகரமொன்றின் நிலப்பயன்பாடு எவ்விதமிருந்தது ,காலத்துடன் எவ்விதம் மாறுதலடைந்தது என்பதை வெளிப்படுத்துவது அது பற்றிய வரலாறு.
2. கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு - கட்டிடக்கலைப் பாணிகளின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருட்கள், நுட்பங்கள் மற்றும் அழகியல் கூறுகள் நகரத்தின் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் பெளதிகரீதியிலான வரலாறு.
3 சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் தாக்கங்கள் - ஒரு நகரத்தின் புவியியல் இருப்பிடம் (மலைகள், ஆறுகள், கடல்கள்) அதன் வளர்ச்சிப் போக்கை எவ்வாறு பாதித்தது என்பதை பெளதிக ரீதியிலான வரலாறு வெளிப்படுத்துகிறது.
4. சமூக-பொருளாதாரப் பரிணாமம் - நகரமொன்றின் சமூக மற்றும் பொருளாதாரம் எவ்விதம் நகர அமைப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பெளதிகரீதியிலான வரலாறு எடுத்துரைக்கும்.
5. அழிவு மற்றும் மறுகட்டமைப்பு: போர்கள், இயற்கை சீற்றங்கள் அல்லது அரசியல் மாற்றங்கள் ஒரு நகரத்தின் பெளதிக அமைப்பை எவ்வாறு அழித்தன என்பதையும், பின்னர் அவை எவ்வாறு மறுகட்டமைக்கப்பட்டன என்பதையும் பெளதிக வரலாறு பதிவு செய்கிறது.
6. பழங்குடி அறிவு மற்றும் உள்ளூர் பாரம்பரியம்: ஒரு நகரத்தின் பழமையான பெளதிக கட்டமைப்புகள், அங்கு வாழ்ந்த மக்களின் உள்ளூர் அறிவு, சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் மற்றும் பாரம்பரிய கட்டுமான முறைகளை வெளிப்படுத்தலாம்.
7. எதிர்காலத் திட்டமிடல் மற்றும் சவால்கள்: ஒரு நகரத்தின் பெளதிக வரலாற்றைப் புரிந்துகொள்வது, அதன் எதிர்காலத் திட்டமிடலுக்கு முக்கியமானது. கடந்தகாலத் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமும், வெற்றிகரமான அணுகுமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் நிலையான மற்றும் மீள்திறன் மிக்க நகரங்களை உருவாக்க முடியும். புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை வகுக்கும்போது, வரலாற்றுச் சூழல் மற்றும் பெளதிக அம்சங்களைப் புரிந்துகொள்வது, நகரத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்த உதவும்.
இவை பெளதிகரீதியிலான நகரொன்றின் வரலாறு வழங்கும் ஆரோக்கியமான விளைவுகள். அதே சமயம் மயூரநாதனின் இந்நூல் யாழ்ப்பாண நகரத்தின் அந்நியர் ஆதிக்கத்தின் கீழிருந்த காலத்தின் வரலாறு. இது அந்நியரின் ஆதிக்கத்தின் வரலாறு. இது தேவைதானா என்றும் சிலர் கேட்கக்கூடும். உண்மைதான்.இது அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் யாழ் மண் இருந்தபோது எப்படியிருந்தது என்பதை வெளிப்படுத்தும் வரலாறுதான். அதற்காக இது அந்நியர் பெருமை பேசும் வரலாறு அல்ல. அந்நோக்கத்தில் இந்நூல் எழுதப்படவும் இல்லை. இது யாழ் மண்ணின் வரலாறு. மனிதன் ஒருவனின் வாழ்க்கையில் இன்பப்பக்கங்கள் அல்ல துன்பப்பக்கங்களும் நிச்சயம் இருக்கும், அம்மனிதனின் வரலாறு என்னும்போது அம்மனிதனின் இன்பப்பக்கத்தின் வரலாறு மட்டுமல்ல. துன்பப்பக்கத்தையும் உள்ளடக்கிய வரலாறுதான். அம்மனிதன் சிறையில் இருக்கலாம்,வெளியில் இருக்கலாம்,அம்மனிதனின் வரலாறு சுதந்திரமாக அவன் வெளியில் இருக்கும் வரலாற்றுடன் , சிறையில் அவன் இருந்த காலத்தையும் உள்ளடக்கியதுதான்.
அது போன்றதுதான் நகரமொன்றின் வரலாறும், புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாகப் புகழுடன் விளங்கிய யாழ்ப்பாண நகரம் சில நூற்றாண்டுகள் அந்நியர் ஆதிக்கத்தின் கீழும் இருந்தது. அக்காலகட்டத்தின் வரலாறு யாழ்மண்ணின் வரலாறு. அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு. அதைத்தான் மயூரநாதனின் இந்நூலும் வெளிப்படுத்துகின்றது.அதனால்தான் இந்நூலின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.
வரலாறும் அந்நியர் வரலாறும் பற்றி..
மேலும் அந்நியர் கால ஆட்சியில் ஒரு நகரத்தின் வரலாறு பதிவு செய்யப்படுவது, அது அந்நியரின் வரலாறாக இருந்தாலும், இது வெறும் அந்நியரின் வரலாறு மட்டுமல்ல, நம் மண்ணிலும், நம் மக்களின் வாழ்விலும் அந்நிய ஆட்சி ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களின் வரலாறு. அந்நிய ஆட்சி ஒரு நகரத்தின் பெளதிக, சமூக, பொருளாதார, மற்றும் கலாச்சார அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்களை ஆவணப்படுத்துவது, அந்தத் தாக்கத்தின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள உதவுகிறது. சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், கட்டிடங்கள், பொது நிர்வாகக் கட்டமைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன, அவை யாரால், ஏன் உருவாக்கப்பட்டன, அதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அறிய வழி வகுக்கின்றது.
ஒரு நகரம் அந்நியர் ஆட்சிக்கு முன் எப்படி இருந்தது, அந்நியர் ஆட்சியில் எப்படி மாறியது, ஆட்சிக்குப் பின் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க அந்நியர் காலப் பதிவுகள் அவசியம்.
அந்நியர்கள் தங்கள் தேவைகளுக்காக நகரத்தை எவ்வாறு வடிவமைத்தார்கள், அது உள்ளூர் சமூகத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவு உதவியது அல்லது தடையாக இருந்தது என்பதையும் அறியவும் அக்காலகட்ட வரலாறு உதவுகின்றது.
அந்நியர்கள் தங்கள் நிர்வாக, அறிவியல், மற்றும் தொழில்நுட்ப அறிவை எவ்வாறு உள்ளூர் சூழலில் அறிமுகப்படுத்தினார்கள் என்பதை இந்த வரலாறு பதிவு செய்யும். இவை உள்ளூர் வளர்ச்சிக்கு எவ்வகையில் உதவின என்பதை அறிந்துகொள்ள இவ்வரலாறு துணை செய்யும்.
அதே சமயம், இந்த அறிவையும், உள்ளூர் வளங்களையும் பயன்படுத்தி எவ்வாறு தங்கள் நலன்களுக்காக சுரண்டினார்கள் என்பதையும் வரலாறு அம்பலப்படுத்தக்கூடும்.
அந்நியர் ஆட்சி உள்ளூர் சமூக அமைப்பில், சமூக உறவுகளில், பொருளாதாரப் பிரிவினைகளில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பதிவுசெய்வது முக்கியம். புதிய சட்டங்கள், வரிவிதிப்புகள், நிர்வாக அமைப்புகள் எவ்வாறு சமூக மாற்றங்களைத் தூண்டின என்பதை அறியலாம். இவற்றைப்பற்றி அறிந்து கொள்ள இவ்வகையான அந்நியக் காலகட்டப் பெளதிகரீதியிலான வரலாறு உதவும்.
அதே சமயம் அந்நியர் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், கிளர்ச்சிகள், மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு இயக்கங்கள் பற்றிய பதிவுகளும், அந்நியர் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும், அவற்றின் வீரியத்தையும், பின்னணியையும் புரிந்துகொள்ள அந்நியர் காலகட்ட வரலாறு உதவி செய்யும்.
அந்நியர் வருகை கலாச்சாரக் கலப்புக்கு வழிவகுத்தது. புதிய மொழிகள், கல்வி முறைகள், மதங்கள், கலை வடிவங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டன, அவை உள்ளூர் கலாச்சாரத்துடன் எவ்வாறு இணங்கின அல்லது மோதின என்பதைப் பதிவுசெய்வது ஒரு நகரத்தின் பன்முக கலாச்சாரப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவ்வகையிலும் மயூரநாதனின் பெளதிகரீதியிலான வரலாற்றை எடுத்தியம்பும் இவ்வரலாற்று நூல் இருக்கின்றது.
இவ்வகையில் காலனித்துவக் கால வரலாற்றுப் பதிவுகள் ஒரு நகரத்தின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். அந்நியர் காலப் பதிவுகள் சார்புத்தன்மை கொண்டவையாகவும், ஆதிக்கச் சக்திகளின் பார்வையை மட்டுமே பிரதிபலிப்பவையாகவும் இருக்கலாம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை விமர்சனபூர்வமாக அணுகி, உள்ளூர் மக்களின் குரல்களுடனும், பிற ஆதாரங்களுடனும் இணைத்துப் பார்க்கும்போது, அவை ஒரு நகரத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான, தவிர்க்க முடியாத கூறுகளாக மாறுகின்றன. இவை வெறும் அந்நியரின் வரலாறு அல்ல, அது நம்முடைய, பன்முகத்தன்மை கொண்ட, சவால்கள் நிறைந்த வரலாற்றின் ஒரு முக்கியமான அத்தியாயம்.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.