நகர வடிவமைப்பில் முக்கியமானதோர் அம்சம் போக்குவரத்தால் திணறிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகும். அந்த வகையில்  Kottawa நகரில் அமைந்துள்ள  மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Hub (MMC) முக்கியமானதொரு சாதனை. இவ்வகையில் மேனாடுகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கையாளப்படும் செயற்பாடுகளையெல்லாம் உள்வாங்கி (உதாரணத்துக்கு Park and Ride) , இலங்கையின் காலநிலைக்கேற்ப, மக்களின் பாவனையை மனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறந்ததொரு கட்டடமாக இதனைக் கருதலாம். இதனை வடிவமைத்த  கட்டடக்கலை நிறுவனம் கட்டடக்கலைஞர் முடித ஜெயக்கொடியின் 'Muditha Jayakody Associates (MJA)' நிறுவனமாகும். 

ஶ்ரீலங்காவின் சமகாலக்கட்டடக்கலையில் முக்கியமானதொரு கட்டடமாக  மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையத்தை கட்டடக்கலைத் திறனாய்வாளார்கள் கருதுவர்.  MMC இன் வடிவமைப்பு  இயற்கையான ஒளி, காற்றோட்டம் மற்றும் சுற்றுச்சூழலுடனான  ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.  இது வெப்பமண்டல நவீனத்துவக் கட்டடக்கலைக் கோட்பாட்டினைப் பிரதிபலிப்பது. அவ்வகையில் MMC சமகால வெப்பமண்டலக் கட்டடக்கலைக்கு நல்லதோர் உதாரணமாக அமையும் கட்டடம். அத்துடன் முடித ஜெயக்கொடி கட்டடக்கலை நிறுவனத்தின், சமகாலக் கட்டட்டக்கலைக்கான  முக்கியமானதொரு பங்களிப்பாகவும் கருதப்படும்.

மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையத்தின் முக்கியத்துவமும் , நகர வடிவமைப்புச் சிந்தனைகளும்!

                - கட்டடச்கலைஞர் முடித ஜெயக்கொடி -

இலங்கையைப் பொறுத்தவரையில் காலத்துக்குக் காலம் நகரங்களின் நெரிசலைத்  தவிர்ப்பதை மனத்தில் கொண்டு உட்கட்டுமானத்திட்டங்கள் பல அவ்வப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வகையில் மிகச் சிறந்த உதாரணம் மகாவலிகங்கை நதித்திட்டமாகும்,. இது தொழில் வாய்ப்புகளுக்காக , நகர் நோக்கிப் படையெடுக்கும் மக்களைத்  தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெற்ற ஒரு திட்டமாகும். அது போல் மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையத்தின் முக்கியமான நோக்கங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:

 கொழும்பு நோக்கிய  போக்குவரத்து நேரிசலைக் கட்டுப்படுத்தி, பிரயாணிகளுக்கு பயனுள்ள, இலகுவான, அனுபவித்து மகிழக்கூடிய வசதிகளைக் கொண்ட பயணத்தைத் தரும்  திட்டமொன்றினைஉருவாக்குவது. அதே சமயம் அது நாட்டின் காலநிலைக்கேற்ப அமைந்திருப்பதோடு, சுற்றச்சூழலைப்பேணுவதாகவும் அமைந்திருக்க வேண்டும். அத்துடன் கலை என்னும் வகையில் மனத்துக்கு இன்பமளிக்கும் வனப்பு மிக்கதாகவும் அமைந்திருக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது இக்கட்டடம் அதன் நோக்கங்களைச் சிறப்பாகவே அடைந்திருக்கின்றது என்றுதான் தோன்றுகின்றது. 

மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையத்தின் முக்கிய  பயன்பாடுகள்
 

கொழும்ப்புக்கு அன்றாடம் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது. இவ்விதம் பெரு நகர் நோக்கிப்படையெடுக்கும் வாகனங்களினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் பயனுள்ள உழைப்புக்கான நேரம் வீணாக்கப்படுகின்றது. இது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது.  அதிகரிக்கும் போக்குவரத்து சூழலை மேலும் மாசு படுத்துகின்றது. பயணிகளின் பயணத்தை மகிழ்ச்சியற்ற பயணமாக்குக்கின்றது. இவற்றைத்  தடுப்பதைப் பிரதானமான நோக்காகக் கொண்டு மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம்  வடிவமைப்பட்டுள்ளது.

மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் கொழும்புக்கான புகையிரத சேவை, தெற்குக்கான, கட்டுநாயக்க சர்வதேச விமானக் கடுகதிப் பாதைகள், இவற்றை இணைக்கும் நகரைச் சுற்றியுள்ள கடுகதிப்பாதை, பஸ் சேவை, டாக்ஸி போன்ற வாடகைக்கார்ச் சேவை போன்ற பல போக்குவரத்துச் சேவைகளை இணைக்கும் மையைப்புள்ளியாகவும் அமைந்துள்ளது. இம்மையத்தில் பயணிகள் தம் வாகனங்களை நிறுத்தி விட்டு, கொழும்புக்கு அல்லது பிற இடங்களுக்குச் செல்ல முடியும். இவ்விதமான Park and Ride சேவை மேனாடுகளில் சர்வசாதாரணம். ஆனால் , இலங்கையில் இது போன்ற சேவையினை மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையமே அறிமுகப்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. அது மட்டுமல்ல இவ்வகையான பன்முகப் போக்குவரத்துச் சேவைகளை ஒன்றிணைக்கும் மையம் என்ற வகையிலும் மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையமே இலங்கைக்கு முன் மாதிரியாகத்திகழ்கின்றது. 

இவை தவிர் பயணிகள் தம் பயண அனுபவங்களைப் பயனுள்ளதாக்கும் வகையில், மகிழ்ச்சிக்குரியதாக்கும் வகையில் பல வசதிகளை  இம் மையம் வழங்குகின்றது. உதாரணங்களாக, பேருந்து அட்டவணைகளுக்கான டிஜிட்டல் தகவல் திரைகள், வங்கி வசதிகள், உணவகங்கள், எரிபொருள் நிலையம், உடற் பயிற்சிக்கான  நடை பாதைகள் ஆகியவற்றைக்குறிப்பிடலாம். அத்துடன் அழகான சூழல்ம் கால்நிலைக்குகந்த நவீன வடிவமைப்பு மேலும் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவன.

எதிர்காலத்தில் மேலும் நாட்டின் பிரதான பொருளாதார வளர்ச்சியில், ஏற்படப்போகும் சவால்களைச் சமாளிப்பதற்குரிய முன்மாதிரி வடிவமைப்பாக இந்த மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் திகழ்கின்றது. வாகன நெரிசலைத்  தடுத்தல், நாட்டின் பொருளாதாரத்தை உ யர்த்தல், பயணங்களை இலகுவாக்கல், சூழல் மாசு படுவதைத் தடுத்தல், போக்குவரத்து நெரிசலைத்  தவிர்த்தல் , பயணங்களை விரைவாக்கல் இவற்றுடன்  காலநிலையினையும் உள் வாங்கி , வனப்பு மிக்கதொரு கட்டடமாக உருவாக்கப்பட்டுள்ள மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம்  சமகால இலங்கைக் கட்டடக்கலையின் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும், அதற்காக முடித ஜெயக்கொடி கட்டடக்கலை நிறுவனத்தைப் (MJA) பாராட்டலாம்.