]

முன்னுரை

நம் பண்பாட்டு‌க் கலாச்சாரத்திற்கும் அமைதி மற்றும் நம்பிக்கையின் சின்னமாகவும் திகழ்வது கோயில்கள். “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற உலகநீதியின் அடிகள் கோயிலின் இன்றியமையை எடுத்துரைக்கிறது. அவ்வகையில் மதுரைக்குத் தென்மேற்காக சுமார் 40 கி.மீ. தொலைவில் தே.கல்லுப்பட்டி (தேவன்குறிச்சி கல்லுப்பட்டி) பேருந்து நிலையத்திலிருந்து வலப்புறமாக உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயிலின் தலவரலாறு, கல்வெட்டுக்கள், கல்வெட்டுக்களின் அமைவிடம் மற்றும் அவற்றில் இடம்பெற்றுள்ள செய்திகளை எடுத்துரைப்பதாக இவ்வாய்வு கட்டுரை அமைகின்றது.

தல வரலாறு

அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில் ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. தே.கல்லுப்பட்டியை அடுத்த ஆவுடையாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தேவர், தனது மாடுகளைத் தினமும் இந்த தேவன்குறிச்சி மலையை ஒட்டிய இடங்களில் மேய்த்து வந்திருக்கிறார். மாடுகள் எல்லாம் சரியான அளவு பால் கொடுத்து வர, ஒரே ஒரு மாடு மட்டும் மிகக் குறைந்த அளவு பால் கொடுத்து வந்தது.

அவர் மாட்டைப் பின் தொடர்ந்து செல்ல அந்த மாடு மலையின் நடுவிலிருக்கும் ஓரிடத்தில் நிற்க, அதன் மடுவிலிருந்து பால் தானாக சுரந்தது. கோபம் கொண்டு அதைச் சத்தம் போட்டு விரட்டி அடித்து விட, மாடு தடுமாறி அங்கிருந்த கல்லின் மீது காலை வைத்து மிதித்துவிட்டு ஓடியது. மாடு பால் சுரந்த இடத்தைப் பார்த்த மாட்டின் உரிமையாளர் திகைத்துப் போனார். அந்தக் கல்லிலிருந்து இரத்தம் வடிந்தது. அந்தக் கல்லைச் சுற்றியுள்ள மண்ணை அகற்றிவிட்டுப் பார்த்தார். அங்கு லிங்க வடிவமாக சிவபெருமான் எழுந்தருள் செய்தார்.

அதை ஒரு அடையாளமிட்டுவிட்டு ஆறுமுகத்தேவர் வீட்டிற்குச் சென்றார். அன்று, அவரது கனவில் சிவபெருமான் வந்து அந்த இடத்தில் தனக்கு ஒரு கோயில் கட்டும்படியும் அக்னீஸ்வரராக அங்கு இருப்பேன் எனவும், இனி தினமும் அவர் வீட்டிலிருந்து வரும் பாலினால் தான் தனக்கு அபிஷேகம் நடக்க வேண்டும் எனவும் சொல்லிச் சென்றார்.

கிராம மக்கள் அனைவரும் இணைந்து இன்றிருக்கும் அக்னீஸ்வரர் ஆலயத்தை அமைத்தனர். இன்று வரை அவரது தலைமுறை வாரிசுகள் தான் அபிஷேகத்திற்குப் பால் தருகின்றனர்.

தொல்லியல் ஆய்வு

தேவன் குறிச்சி மலையானது 6000 ஆண்டுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. அதற்கும் முற்பட்ட காலத்தைச் சார்ந்த சமணச் சிற்பங்கள், கற்படுக்கைகள், கிணறுகள், குளங்கள், கல்வெட்டுகள், நடுகல் ஆகிய சிறப்புகளும் தேவன் குறிச்சி மலைக்கு உண்டு.

தேவன் குறிச்சி மலைப்பகுதியில் 1976 -77 இல் நிகழ்ந்த தொல்லியல் ஆய்விலிருந்து அங்கே 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியேற்றம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்தன. அதாவது, இடைக் கற்காலத்திலிருந்தே மக்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் உருவாக்கிய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன. மேலும் அங்கு இரும்பு மற்றும் செப்புக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதிலிருந்து, இரும்புக்கால மக்களும் செப்புக்கால மக்களும் அங்கு வாழ்ந்தது தெரிகிறது.

பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களும் தேவன் குறிச்சியில் கிடைத்துள்ளன. அவற்றுள் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், கல் மணிகள், கிளிஞ்சில் வளையல்கள், முதுமக்கள் தாழிகள் போன்றவை அடங்கும்.

சிவன் கோயிலும் சமணத் தடயங்களும்

தேவன் குறிச்சியில் அமைந்திருந்த சமணக் கோயில் அழிந்து போயினும், இன்றைய சிவன் கோயில் பகுதியில் சமணச் சிற்பங்கள் உள்ளன. கோயிலின் பின் பகுதியில் மகாவீரர் அமர்ந்த நிலையில் உள்ள சிற்பம் காணப்படுகிறது. அதுபோலவே, உள்பகுதிக் கற்சுவரில் மகாவீரர் நின்று கொண்டிருப்பதாகச் சிற்பம் உள்ளது.

சுற்றுப்புறத் தெய்வங்கள்

மலையை ஒட்டிய பாதை அதன் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பது போலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவது போலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும். அதைத் தாண்டிச் சென்றால் குளத்து விநாயகர் ஆலயம். விநாயகர் கோயிலை ஒட்டி ஒரு திருக்குளம் உள்ளது.

விநாயகர் கோயிலிலிருந்து வெளியே வந்து சிவபெருமானைத் தரிசனம் செய்ய படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அதற்காக தட்சிணாமூர்த்தி சிலைக்கு எதிரில் இருக்கும் பாறையைப் படிகள் போல் செதுக்கியிருந்தனர். படிகள் முடிந்ததும் எதிரே கொடி மரம். வலதுபக்கம் நவகிரகங்கள். அதை ஒட்டிய பீடத்தில் வணங்கிய நிலையில் அனுமார். பழைமையான கல்மண்டபம் அதை அடுத்து இருக்கும். மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். சிவன் சன்னதியை அடுத்து தாயார் கோமதி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. துவார பாலகர் போல பைரவர் அங்கிருக்கிறார். கோமதி அம்மன் சன்னதியை அடுத்து குன்றின் மேல் அமர்ந்த குமரனைக் காணலாம். வள்ளி, தெய்வானையுடன் வேல் முருகனாய்க் காட்சி தருகிறார். அவரது சன்னதியிலிருந்து வலப்பக்கம் பசுமாடு சிவலிங்கத்திற்குப் பால் சொரியும் காட்சியை சிலைவடிவில் வடித்து வைத்திருக்கின்றனர். அடுத்ததாக சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கோயிலை ஒட்டிய மலையின் உச்சியில் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. போகும் வழியில் உள்ள ஆஞ்சநேயர் சிலை பள்ளி கொண்ட பெருமாள் உருவில் இருக்கும் மலைத்தொடரை வணங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறு கடவுள் வழிபாடு

“அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் கோயில்” என்ற வரவேற்பு நுழைவாயிலில் நுழைந்தால் இடது புறம் நடுகல் வழிபாடும், நடைபாதைக்கு நேராக புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது.

மலை ஏற்றத்தின் துவக்கத்தில் அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. சிவன் கோயில் மேற்கு நோக்கி அமைந்திருப்பதிலேயே இக்கோயில் காலத்தால் மிகவும் பழைமையானது என்று புலனாகிறது. மலை ஏற்றத்தில் இடது புறம் சமண தலமும் வடப்புற மலை மீது அனுமன் மற்றும் பெருமாள் கோயில் உள்ளது. இவ்வாறு ஆறு கடவுள் வழிபாடு இத்தலத்தில் செய்யப்படுகிறது.

தலச்சிறப்பு

• அருள்மிகு ஸ்ரீ அக்னிஸ்வரர் ஆலயத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மூன்று சமய வழிபாடு ஒருங்கே அமைந்துள்ளது.

• நடுகல் வழிபாடு அமைந்த தலமாகும். நடுகற்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதாகும் நடுகற்களின் அருகிலுள்ள கல்திட்டைகளின் காலம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும்.

• இத்தலத்திற்கு வந்து இறந்த முன்னோர்களுக்கு ஈமச் சடங்குகள் செய்வது புண்ணியமானதாக அனைவராலும் கருதப்படுகிறது.

• அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயிலின் திருக்குளத்தில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்தால் திருமணத்தடை நீங்கும்.

கல்வெட்டுகள்

நம் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் தொல்லியல் சான்றுகளில் ஒன்று கல்வெட்டுகள் ஆகும். கோயில் சுவர்களிலும், பாறைகள் மீதும் கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைத் தான் கல்வெட்டுகள் என்கிறோம். அத்தகைய கல்வெட்டு எழுத்துகளின் பொருள் அறிந்து விளக்கும் இயலே கல்வெட்டியல் எனப்படும்.

கல்வெட்டு எழுதப்பட்ட பிற பொருட்கள்

கல்லில் மட்டும் இல்லாமல் பிற பொருட்களிலும் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை,

1.களிமண் பலகைகள்

2.உலோகம்

3.தந்தம்

4.சங்கு

5.மட்கலன்கள்

6.சுடுமண் பொம்மைகள்

7.மரம்

8.கோரைத்தாள் ஆகியவற்றின் மீதும் தொன்மைக் காலத்தில் இவை எழுதப்பட்டன.

கல்வெட்டுகளின் முக்கியத்துவம்

கல்வெட்டுகள் காலத்தை வென்று நின்று கற்பனையில்லாத காவியமாக விளங்குகின்றன. பண்டைய அரசர்கள் அள்ளிக்கொடுத்த கொடைகளின் அகச்சான்றுகள் கல்வெட்டுகளாகும்.

மன்னர்களின் கோட்பாடுகள், உடன்படிக்கைகள், அரசர்களின் ஆணைகள், ஆவணங்கள் ஆகியவற்றை விளக்கும் சாசனம்

“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே”  (மூதுரை,பாடல் 2) என்ற‌ ஔவையின் சொற்கள் கல்வெட்டின் சிறப்பினை பறைசாற்றுகிறது.

சாதாரண குடிமக்களின் உணர்வுகள், கூடி வாழும் கொள்கைகள், விழாக்கள், பழக்கவழக்கப் பண்பாடுகள் ஆகியவற்றை விளக்கும் வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும்.

கல்வெட்டின் அமைப்பு

தமிழகத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் அமைப்பை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்;. அவை

1. மங்கலச்சொல்

2. கல்வெட்டின் காலம்

3. கல்வெட்டுச் செய்தி

4. கையெழுத்து

5. ஒப்படைக்கிழவி ஆகியனவாகும்.

கல்வெட்டுகளின் வகைகள்

கல்வெட்டுகள் கூறும் செய்திகள் அனைத்தையும் ஆராய்ந்து அறிஞர்கள் எட்டு வகைகளாக வகைப்படுத்தியுள்ளனர் அவையாவன,

1.இலக்கியக் கல்வெட்டுகள்

2.அரசியல் கல்வெட்டுகள்

3.சமயக் கல்வெட்டுகள்

4.நினைவுக் கல்வெட்டுகள்

5.அரச ஆணைக் கல்வெட்டுகள்

6.பொதுநலக் கல்வெட்டுகள்

7.ஆட்சி நிறைவுக் கல்வெட்டுகள்

8.சமுதாயக் கல்வெட்டுகள் ஆகியனவாகும்.

தமிழியின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழகத்தில் கிடைத்துள்ள மிகவும் தொன்மையான எழுத்துகளே தமிழி எனப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழி எழுத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் ஏறக்குறைய 600 ஆண்டு காலம் வழங்கி வந்துள்ளது. இந்த தமிழி எழுத்திலிருந்து தான் நாளாவட்டத்திலும் வட்டெழுத்தும் இன்றைய தமிழ் எழுத்தும் வளர்ச்சியடைந்தன.

இன்றைக்கு வழக்கில் உள்ள தமிழ் எழுத்தின் பழைய வடிவமே தமிழி ஆகும். ஆய்விற்கு மேற்கொள்ளப்பட்ட அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தமிழி எழுத்தில் எழுதப்பட்டதாகும்.

கோயிலில் உள்ள கல்வெட்டுகள்

அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயிலில் மானியங்கள் வழங்கப்பட்டதை விவரிக்கும் எட்டு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. எட்டு கல்வெட்டுகளில் 6 கல்வெட்டுகள் கோயில் சுவர்களிலும், ஒன்று கோயிலுக்குப் பின்புறமுள்ள கிணற்றுப் பகுதியில் தலைகீழாகவும், மற்றொன்று கோயிலுக்கு எதிர்புறம் உள்ள விநாயகர் சன்னதியை ஒட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சுவற்றிலும்; காணப்படுகின்றன. நடுகல் கல்வெட்டு ஒன்றும் இக்கோயிலில் உள்ளது.

கல்வெட்டுகளின் காலம்

அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் காலம்; பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238) காலத்தைச் சேர்ந்தவை. புலி ஒன்றை வீரன் ஒருவன் குத்திக் கொல்வது போன்று காணப்படுகிறது. வீரனது அருகில் பெண்ணின் உருவம் ஒன்றும் உள்ளது. புலியோடு போராடி இறந்த வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும்.

முதல் கல்வெட்டுச் செய்தி

கோயில் நடைபாதையில் உள்ள குளத்திற்கு அருகிலுள்ள கல்வெட்டில், இக்கோயிலுக்குச் சந்தியாதீபம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் பற்றி கூறுகிறது. இதனை,

மாறபர்மரான திரிபுவன சக்கரவத்திகள் சோணாடு வழங்கியருளிய….
நாயனாற்கு நான் சந்தியா தீபத்துக்கு குடுத்த நீர் பெரியகுளத்தி….
னல்லை புகைபோக்கிக்கு கிளக்கும் வடஎல்லை மேல்…    
வும் சந்திராதித்தவரை யிறையிலியாக விட்டுக்குடுத்தமைக்கு
திருமலை நிலனரை….

இரண்டாம் கல்வெட்டுச் செய்தி    

கோயிலின் மதில் வெளிப்புறமுள்ள கல்வெட்டில் சந்தியா தீபம் எரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலக்கொடை மற்றும் அதன் எல்லைகள் கூறப்பட்டுள்ளன. இதனை,

ஸ்ரீ கோமாறபற்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் சோணாடு….
யனாற்கு சந்தியாதீபம் ஒன்றுக்கும் சந்திராதித்தவரை செல்வ….
தென்பாற் கெல்லை அப்பன் கூத்தர் செய்க்கு வடக்கும் மேல்பால்….
மணர்விலை ஒற்றி சீதனம் உள்ளிட்டு பற்றி முன்னின்றவர் கைக்கொண்….

என்னும் கல்வெட்டுச் செய்தி விளக்குகிறது.

மூன்றாம் கல்வெட்டுச் செய்தி

கோயில் தென்புறக் கோட்டைச் சுவர் மதிலில் உள்ள (நவகிரகங்களுக்கு அருகில்) கல்வெட்டில் திருவற்கீசரமுடைய நாயனார் எனும் பெயரைப் பற்றி மட்டுமே அறியமுடிகிறது. இதனை

ஸ்ரீ ஸ{ஙூ பாண்டிய தேவற்கு யாண்டு யாவது ஸ்ரீ பாண்டி….
ன் இனாயனார் திருவற்க்கீசரமுடைய னாயனார்க்கு நான்….

என்னும் கல்வெட்டுச் செய்தி விளக்குகிறது.

நான்காம் கல்வெட்டுச் செய்தி

கோயில் தென்புறக் கோட்டைச் சுவரில் உள்ள தனிக்கல்லில் கோயிலுக்கு விடப்பட்ட நிலக்கொடை மற்றும் அதன் எல்லைகள் பற்றிக் கூறுகிறது. இதனை,

த்திகள் சோணாடு கொண்டருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவற்கு ….
சந்திராதித்தவரை செல்வதாக இவ்வூர் எழுவன் சிறந்தானான….
லைமேற்படியான்ஞ் செய்க் க்கு வடக்கும் மேல்பால்க் கெல்லை பஞ்ச….
றமமாக கைக் கொண்டு இக்கோயில் சிவ(பி)பிராமணர் விலை….

என்னும் வரிகள் புலப்படுத்துகிறது.

ஐந்தாம் கல்வெட்டு அறிவிக்கும் செய்தி

கோயில் தென்புறக் கோட்டைச் சுவரில் உள்ள கல்வெட்டில் சந்தியா தீபம், நிலக்கொடை மற்றும் நில எல்லைகள் பற்றி மூன்று இடங்களில் கூறப்பட்டுள்ளன. அவை,

மண்டலத்து….
வத்ஸ்ரீ….
சந்தியா தீப….
க்கிவரமுடை….
துவாரச்ச….
ருங்குன்றத்து வெள்ளாளர் செய்க்கு….
முத்துஉ….
கெல்லை உள் நடுவுப்பட்டநிலம் ஓ….

என்ற கல்வெட்டு வரிகளும்,

உதையவள….
க்கு தந்த அச்சுக….
ன இப்படிக்கு இ….
என்னும் வரிகளும் விளக்குகின்றன.

ஆறாவது கல்வெட்டு அறிவுறுத்தும் செய்தி

கோயில் கருவறை தென்சுவரில், நிலக்கொடை அதன் எல்லைகள் கூறப்பட்டுள்ளன. செங்குன்ற நாட்டு பெருங்குன்றத்தூர் எனும் ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை,

யலியாக விட்டுக் குடுத்தமைக்கு இவை
எழுவன் (ன்) சிறந்தானனன்….
தையவளநாட்டு செங்குடி நாட்டு பெருங்குன்றத்….
று சாண் கோலால் நிலம் ஒரு மாவுக்கும் கீழ்பாற் கெல்லை….

என்னும் வரிகள் விளக்குகின்றன.

ஏழாவது கல்வெட்டு எடுத்தியம்புவன

கோயிலுக்குப் பின்புறம் கிணற்றுப் பகுதியில் உள்ள கல்வெட்டில் நிலத்தின் எல்லைகள் பற்றியும் பெருங்குன்றத்தூர் கிழவன் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை,

ஸ்ரீ ஸீஙூ பாண்டிய தே….
ல் புகை போக்கிக்குத் தென்கி….
டியானுக்கு தெக்கு….
ன் பெருங்குன்றத்தூர் கிழவன்….

என்னும் வரிகள் உணர்த்துகிறது.

எட்டாம் கல்வெட்டு எடுத்துரைக்கும் செய்தி

கோயிலுக்கு எதிர்ப்புறம் உள்ள விநாயகர் சன்னதியை ஒட்டிய குளத்தை மீனாட்சிபுரம் சுப்பிரமணியத் தேவர் மகன் கட்டினார் என்ற செய்தியும், கோயில் நில எல்லையையும் குறிக்கின்றது. இதனை

அக்னீஸ்பரர்
கிருபையால்
ந.மீனாட்சிபுரம்
அ.ராம.சுப்ரமண்
யத் தேவர் மக
ன் புண்ணிய
தில் படி வேலை
உபயம்
1931 வரு டிச
ம்பர் மீ 52

என்ற அமைப்பில் கல்வெட்டு அமைந்துள்ளது.

நடுகல் வழிபாடு

நடுகல் வழிபாடு என்பது பண்டைய காலத்தில் போரில் இறந்த வீரர்களின் நினைவாக எடுக்கப்படுவது ஆகும்.

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்என்று

இருமூன்று மரபில் கல்லொடு புணர” (தொல்காப்பியம்,புறத்திணையியல்,5)

என்று தொல்காப்பியர் நடுகல் வழிபாட்டின்‌ அமைப்பினை விளக்குகிறார்.

கோயிலுக்கு உள்ளே நடுகல் ஒன்று வழிபாட்டுத் தெய்வமாக உள்ளது. இதில் புலி ஒன்றை வீரன் ஒருவன் வேல் கம்பினால் குத்திக்கொல்வது போன்று காணப்படுகிறது. வீரனது அருகில் பெண்ணின் உருவம் ஒன்றும் உள்ளது. புலியோடு போராடி இறந்த வீரனின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் ஆகும்.

முடிவுரை

தேவன் குறிச்சி மலையில் இடைக்காலத்தில் இருந்து மக்கள் வாழ்ந்தனர் என்பதை தொல்லியல் ஆய்வு வாயிலாக கிடைத்துள்ள அவர் பயன்படுத்திய நுண்கற்கருவிகள், இரும்பு மற்றும் செப்பு கருவிகள், கல்வெட்டுகள், நடுகல் ஆகியவற்றின் மூலம் அறியலாகின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.