- பாலமோகன், சுவிஸ் ரவி, பா.ரவி ஆகிய பெயர்களில் எழுதும் எழுத்தாளர் பா.ரவீந்திரனின் முகநூற் குறிப்பிது. - பதிவுகள்.காம் -


கட்டடக்கலை ஒரு அற்புதமான கலை. பின்நவீனத்துவம் தோன்றிய களமும் அதுதான். இப்போ கட்டடக் கலையில் புதிய சகாப்தமொன்றை Vertical Forest (செங்குத்துக் காடு) நிறுவியிருக்கிறது.  செங்குத்து காடு என்றால் என்ன. அதன் கருத்தாக்கம் (concept) என்ன.

மாடிக் குடியிருப்புகளில் மனிதஜீவியை மட்டும் மையப்படுத்தும் வாழ்முறையைத் தவிர்த்து (அதாவது மனித மையநீக்கம் செய்து), சாத்தியப்பாடான அளவு இயற்கையுடனான கூட்டு உறவை மையப்படுத்துவதே இதன் கருத்தாக்கம் ஆகிறது. அதாவது மனிதர்கள், மரம் செடி கொடிகள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்களுடனான கூட்டு உறவை மையப்படுத்துகிற கருத்தாக்கம் கொண்ட கட்டடத் தொகுதியை நகர வாழ்வியலுக்குள் நிர்மாணிப்பதாகும். இதை மரங்களின் இருப்பிடத்தில் மனிதர்கள் வாழ்வதான கருத்தாக்கமாகவும் சிலர் குறிப்பிடுவர். அதாவது செங்குத்துக் காட்டில் மனிதர்கள் வாழ்வதான ஒரு பரிணாமத்தை இக் கருத்தாக்கம் தருகிறது.

இங்குள்ள இந்த இரட்டை கட்டடத் தொகுதி மிலான் (இத்தாலி) இல் 2014 நிர்மாணிக்கப்பட்ட 27 மாடிகள் கொண்ட செங்குத்துக் காடு ஆகும். உலகப் பிரசித்தி பெற்ற இத்தாலிய கட்டடக் கலைஞர்களில் ஒருவரான Stefano Boeri அவர்கள் உலகின் இந்த முதல் செங்குத்துக் காட்டின் சிற்பியாவார்.

 - இத்தாலிய கட்டடக் கலைஞர் Stefano Boeri -

அருகருகான இரண்டு கோபுரங்களைக் கொண்ட தொகுதி இது. ஒன்று 80 மீற்றர் உயரமும் மற்றையது 112 மீற்றரும் கொண்டது. மூன்று மீற்றர் வரை வெளித்தள்ளிக் கொண்டிருக்கும் Terrasse  ஒவ்வொரு குடியிருப்புக்கும் உள்ளது. இக் கட்டடத் தொகுதியில் 800 உயரமான மரங்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. இந்த மரங்கள் மூன்று மாடி உயரத்துக்கு வளரக்கூடியன. அத்தோடு 300 சிறிய ரக மரங்கள் இருக்கின்றன. பருவகாலங்களுக்கு வளர்ந்து பூச்சொரியும் செடிகள் அல்லது நிலம் படரும் செடிகள் 15000 குடிகொண்டிருக்கின்றன. அத்தோடு தேசிக்காய் மரம் அல்லது பல வடிவங்களில் கத்தரித்து விடப்படுகிற, அடித் தண்டு தடித்ததும், கட்டையாக வளர்ந்து நிற்கக்கூடியதுமான செடிகள் 5000 நாட்டப்பட்டுள்ளன.

கட்டடங்களை வெளித் தோற்றத்தில் மேய்ந்து கொண்டிருக்கிற இந்தப் பசுமை மரங்கள் வீட்டுக்கு பச்சை ஆடையை போர்த்துகின்றன. சூரிய ஒளியை அவை இயற்கையான வடிகட்டலினூடாக வீட்டுக்குள் அனுப்புகின்றன. அத்தோடு சூழவுள்ள காற்றின் ஈரப்பதனை ஒழுங்காக பேணுகின்றன. காபனீரொக்சைட்டை உறிஞ்சி ஒட்சிசனை வழங்குகின்றன. தூசியை தடுக்கின்றன. இதன்மூலம் வீட்டுக்குள் மாசுபடலை தவிர்க்கின்றன.

2010 இலிருந்து 2014 வரை நிர்மாணிக்கப்பட்ட இத் தொகுதி கட்டடங்களின் வெளிப்புற பசுமைக்குள் இப்போ பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் போன்ற 1600 வகையான உயிரினங்கள் வாழ்கின்றன அல்லது வந்து போகின்றன. இக் காட்டுக்கான மையப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம், பராமரிப்புக் குழு (Flying Gardeners), மின்னணுவியல் முறையிலான கண்காணிப்புகள் என இதன் முகாமைத்துவம் பேணப்படுகிறது.
2014 இல் பிராங்போர்ட் இல்  High Rise Award  இனையும், 2015 இல் கலிபோர்னியாவில் The best Tall building in the world  என்ற CTBUH விருதையும் வென்றிருக்கிறது.

மாசுபடலில் மூச்சுத் திணறும் இன்றைய பெருநகரங்களின் எதிர்கால கட்டடக் கலையின் திறப்பை இந்த Vertical Forest அமைப்பு உருவாக்கித் தந்திருக்கிறது. அதன் சிற்பி Stefano Boeri.  இப்போ பீக்கிங் நகரிலும் இவ்வகை கட்டடத் தொகுதிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கொச்சியிலும் (கேரளா) ஓரளவுக்கு இதையொத்த ஒரு மாடிக் கட்டடத்தை கண்டேன். உலக பெருநகரங்களில் இதன் பயன்பாடு எதிர்காலத்தில் இன்னும் செழுமைப்படுத்தப்பட வாய்ப்பு உண்டு.

info : webuildvalue, acadamy art
Thanks for image : blog.academyart.edu

நன்றி: பா.ரவீந்திரன் முகநூல் பக்கம்