அண்மையில் எழுபதுகளில் யாழ் இந்துவில் கல்வி கற்று , உலகமெங்கும் பரந்து வாழும் மாணவர்களில் சிலர் உருவாக்கிய அமைப்பான 'ஓராயம்' அமைப்பின் ஆதரவில். 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட மெய்நிகர் நிகழ்வினைக் கனடாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் தர்மகுலராஜா ஒருங்கிணைந்து நடத்தினார். இந்நிகழ்வில் கட்டடக்கலைஞர்களான மயூரநாதன் (யாழ்ப்பாணம்), குணசிங்கம் (ஆஸ்திரேலியா) மற்றும் சிவகுமார் (கனடா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்டடக்கலையும் அதன் மீதான பண்பாட்டின் தாக்கமும் பற்றிய நல்லதொரு நிகழ்வு. இதில் முதலில் உரையாற்றிய மயூரநாதன் வீட்டு வடிவ அமைப்பில் பண்பாட்டுக் கூறுகளான உணவுப்பழக்கம், அன்றாடச் செயற்பாடுகள், சிறப்பு நிகழ்வுகள், நம்பிக்கைகள், குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்புகள், வெளியாருடனான தொடர்புகள், தனிமைக்கான தேவை மற்றும் சமூகத்தகுதி வேறுபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி , அவற்றில் குடும்ப உறுப்பினர்கள், வெளியாருடனான தொடர்புகள், சமூகத்தகுதி வேறுபாடுகள் என்பவற்றின் அடிப்படையில் நல்லதோர் உரையினைப் போதிய வரைபடங்கள், புகைப்படங்கள் உதவியுடன் நடத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய கட்டடக்கலைஞர் குணசிங்கம் கட்டடக்கலைஞராகப் பணியாற்றிய தனது சொந்த அனுபவங்கள், தனது இளமைக்காலத்தில் தான் அனுபவித்த யாழ்ப்பாண வீடுகள், மாந்தர்களுடனான தொடர்புகள் பற்றி நனவிடை தோய்ந்து, தன் உள்ளத்தில் சுமைகளாகக் காவிக்கொண்டிருக்கும் தன் இளமைக்கால வீடுகளின் பண்பாட்டுக் கூறுகளைத் எவ்விதம் புதிதாக அவர் வடிவமைக்கும் வீடுகளில் பாவித்தார் என்பதை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய கட்டடக்கலைஞர் சிவகுமார் பண்பாட்டுக் கூறுகள் எவ்விதம் நவீனக் கட்டடக்கலையில் உள்வாங்கப்பட்டுள்ளன என்பதை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினார். அவர் தனது உரையில் 'வெப்பமண்ட நவீனக்கட்டக்கலை'யின் தந்தையென்று கருதப்படும் கட்டடக்கலைஞர் ஜெஃப்ரி பாவா எவ்விதம் நாற்சார அமைப்பினத் தனது வீட்டின் அமைப்பில் உள்வாங்கினார் என்பதைச் சுட்டிக்காட்டினார். கூடவே ஒரு காலத்தில் நாற்சார வீடுகளைக் கட்டிய யாழ்ப்பாணத் தமிழர்கள் இன்று அதனைக் கட்டுவதாகத் தெரியவில்லையென்றும், ஆனால் கொழும்பில் கட்டப்படும் நவீன வீடுகள் பலவற்றில் மிகவும் சிறப்பாக அக்கூறு உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை உதாரணங்களுடன் விளங்கப்படுத்தியும் தனது உரையினை நிகழ்த்தினார்.

நிகழ்வு பற்றிய அறிவித்தலில் கட்டிடக் கலை என்னும் பதம் பயன்படுத்தப்பட்டதையும், நிகழ்வில் சிலர் கட்டிடக்கலை என்று பாவித்ததையும் அவதானித்தேன். உண்மையில் கட்டிடக்கலை என்பது சரியான பதமல்ல. கட்டடக்கலை என்பதே சரியான பதம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கட்டிடக் கலை என்பது கட்டு + இடம் என்பதன் புணர்ச்சி. கட்டுவதற்குரிய இடம். கட்டு + அடம் என்பதன் புணர்ச்சியே கட்டடம். அடம் என்பது அடுக்கு என்று அர்த்தப்படும். அத்திவாரம், அதற்கு மேல் சுவர், மாடம் , கூரை என்று அடுக்கிக் கட்டுவதால் கட்டடம் என்னும் பெயர் உருவானது. எனவே கட்டடக்கலை என்பதே சரியான சொற்பதம்.

நல்லதொரு நிகழ்வினை வழங்கிய ஓராயம் அமைப்பு பாராட்டுக்குரியது.

நிகழ்வுக்கான காணொளி: https://www.youtube.com/watch?v=Wiy_LebjWnU

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.