வாழ்நாளில் பெரும்பகுதியை ஆராய்ச்சித் துறைக்கே அர்ப்பணித்துச் சமஸ்கிருதத்துறைக்கும், நுண்கலைத்துறைக்கும் சிறந்த பங்களிப்பு வழங்கியவர் பேராசிரியர் வி.சிவசாமி. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமஸ்கிருதத் துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் வி. சிவசாமி வெளியிட்டுள்ள ஆய்வு நூல்களிலும், வெளியிட்ட கட்டுரைகளிலும், அவரது ஆராய்ச்சித் திறமை நன்கு புலப்படுவதாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தாம் விரும்பிய முறையில் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று பார்க்கின்ற சந்தர்ப்பங்களையும், பெரும் பொருட் செலவுகளோடு கூடியதாக உரிய வாய்ப்புகளையும் பயன்படுத்திப் பல நாடுகளைப் பார்க்கும் சந்தர்ப்பங்களையும் தியாகம் செய்து சமஸ்கிருதத் துறையையும், அதனோடு தொடர்பான கலைகள் குறிப்பாக நுண்கலைகள், வரலாறு ஆகிய துறைகளில் மட்டுமன்றி இசை, பரதநாட்டியம், சிற்பம் முதலிய துறைகளிலும் பெரிதும் அபிமானமுள்ள இவர் நூல்களையும், கட்டுரைகளையும் எழுதித் தமது ஈடுபாட்டினைப் புலப்படுத்தியுள்ளார் எனப் பாராட்டுகள் பெற்றவர்.

பேராசிரியர் சிவசாமி புங்குடுதீவில் 1933 -ம் ஆண்டு சித்த ஆயுர்வேத வைத்தியர் விநாயகமூர்த்தியின் மகனாகப் பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவிலும், உயர்கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்று 1955 -ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகம் புகுந்தார். கல்லூரிக் காலம் முதல் எழுதுவதில் ஆர்வங்கொண்டார். பல்கலைக்கழகச் சஞ்சிகையிலும், தமிழகச் சஞ்சிகையிலும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தபின் இலண்டன் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம், வரலாறு ஆகியன கற்றுப் பட்டம் பெற்றார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதச் சிறப்புத் தேர்வில் சித்தி பெற்றார். 1958 ஆண்டு முதல் 1974 வரை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிப் பட்டதாரிப் பிரிவில் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இடையில் ஒரு சில வருடங்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1974 -ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு விரிவுரையாளராக நியமனம் பெற்றார். சமஸ்கிருதம், வரலாறு, தொல்லியல் விரிவுரையாளராக மாணவர்களது அபிமானம் பெற்றார்.

யாழ்ப்பாணத் தொல்லியல் கழகத்தின் நிறுவனச் செயலாளராக 1971 முதல் பணியாற்றினார். அதற்கென 'பூர்வகலா' என்ற இதழையும் வெளியிட்டார். 1998 -ம் ஆண்டு சமஸ்கிருதத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பல ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார். வெளிநாட்டு ஆங்கிலச் சஞ்சிகைகளுக்கும் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிவந்தார். ஆய்வுப் பணிக்கான பல விருதுகளையும் பெற்றார். இலங்கைச் சாகித்திய மண்டல விருதினையும் பெற்றார். 1996 -ல் பேராசிரியராக உயர்வு பெற்றார். 1999 -ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

சமஸ்கிருதம், வரலாறு, நுண்கலைகள், தமிழ் இந்துப் பண்பாடு எனப் பல்துறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை எழுதினார். ''திராவிடர் - ஆதிவரலாறும் பண்பாடும், தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு, தமிழும் தமிழரும், இந்துப் பண்பாடு அன்றும் இன்றும், தொல்பொருளியல் - ஓர் அறிமுகம், ஞானப்பிரகாசரும் வரலாற்றாராய்ச்சியும், யாழ்ப்பாணக் காசுகள், ஆரியர் ஆதிவரலாறும் பண்பாடும், கலாமஞ்சரி, பரதக் கலை, சமஸ்கிருதம் - தமிழ் சிற்றகராதி, தீவகம் - ஒரு வரலாற்று நோக்கு, சமஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள்" ஆகியன இவரது நூல்களில் குறிப்பிடத்தக்கன. ஆங்கிலத்திலும் குறிப்பிடத்தக்க நான்கு ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.

'

'பல்கலைக்கழகத்தில் இவரது பதவிக்காலம் நிறைவு பெறுகின்ற பொழுதிலுங்கூட, வாளாதிராது தம் ஆராய்ச்சினை மேலும் தொடர்ந்து 'தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் - ஒரு வரலாற்று நோக்கு (South Asian Classical Dances - A Historical Perspective) எனும் தலைப்பிலே நூலொன்றினை வெளியிட்டுள்ளார். இந்நூலில் தென்னாசிய சாஸ்திரிய நடனங்களின் பொது அமிசங்கள், பரதம், கதக்களி, மோகினி ஆட்டம், குச்சுப்பிடி, பாகவதமேளம், யட்சகானம், ஒடிசி, சௌ, கதக், மணிப்புரி, கண்டிய நடனம் ஆகியன பற்றிய பன்னிரண்டு கட்டுரைகள் குறிப்பாக வரலாற்று நோக்கிலே எழுதப்பட்டுள்ளன. இம்முயற்சி பெரிதும் போற்றத்தக்கது. இவரது சமஸ்கிருத அறிவுத் திறமையையும், வரலாற்றுத் துறையில் இவர் பெற்றுள்ள சிறந்த அறிவையும், நுண்கலைகளில் சிறப்பாக நடனக் கலையில் இவர் பெற்றுள்ள ஆழ்ந்த புலமையையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்தியுள்ள இந்நூல் கலை உலகிற்குப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

பேராசிரியர் வி. சிவசாமி அவர்கள் இத்தகைய நூல்களினால் நுண்கலைகளுக்குச் சிறந்த பங்களிப்புகள் ஆற்றியுள்ளமையையிட்டுப் பெருமிதமடைவதோடு அவரைப் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்" என பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் குறிப்பிட்டுள்ளார். இவரது ''சமஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள்" என்ற நூல் பாராட்டுப் பெற்றதாகும். இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினை இந்நூல் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் வாழ்நாள் பேராசிரியர் கௌரவமும் இவருக்கு வழங்கப்பட்டது. பேராசிரியர் சிவசாமி சமயப் பணிகளிலும் ஈடுபாடுடையவர். கோவில்கள் மலிந்த, தனது பிறந்த ஊரான புங்குடுதீவில் தமக்கு உரித்தான கோவில்களின் திருப்பணிகளிலும் பங்களித்து வந்தவர். ஊரிலுள்ள கோவில்களின் திருப்பணி சார்பாக வெளியிடப்பட்ட பல மலர்களிலும் ஊரின் வரலாறு - கோவில்களின் தோற்றம் குறித்த இவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. திருமண பந்தத்தில் இணையாமல், பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்துப் பணிசெய்த பேராசிரியர் வி. சிவசாமி 81 -வது வயதில் (08 - 11 - 2014) யாழ்ப்பாணத்தில் உயிர்நீத்தார். புங்குடுதீவுக் கிராமம் பல கல்விமான்களை - புத்திஜீவிகளை, சட்டத்துறை அறிஞர்களை, எழுத்தாளர்களை, சமூக சேவையாளர்களைப் பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் ஓர் புத்திஜீவியாகத் திகழ்ந்த, எங்கள் குடும்ப விருட்ச விழுதொன்றான பேராசிரியர் வி. சிவசாமி, அவரது பணிகளின் மூலம் மக்கள் மனங்களில் மறக்கப்பட முடியாத மனிதராக என்றும் நிலைத்திருப்பார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.