இந்தியத் திரைப் படஉலகம் மட்டுமின்றி அகில உலக் திரைப் பட உலகிலேயே மிகவும் பெருமையாகப் பாராட்டப் படுபவர் திரு சத்யஜித் றேய் அவர்கள். அத்துடன்; வங்காளத் திரைப் படத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியத் திரைப் படத் துறையில் ஒரு பெரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்; திரு சத்யஜித் ராய்.

இந்திய நடிகரில் ஒருவரான சித்தார்த் சத்யஜித் ராயைப் பற்றிக் குறிப்பிடும்போது,’ அவரின் படம் மேற்கு நாடுகளில் வெளிவந்ததும்,திரைப்பட ஆர்வமுள்ள மக்கள் திரண்டு வந்து வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி ஏன் இல்லை’ என்று கேட்டார். அதற்குப் பதில் இக்கட்டுரையிலுள்ளது என்று நினைக்கிறேன்.

நாங்கள் உலக அமைதிக்கும் சமாதானத்திற்குமான தியானக் களத்தில் இருப்பவர்கள். அதே கோட்பாடுகளைத் தழுவிய தனது அறிவு, ஆற்றல்,அத்துடன் முழுவாழ்க்கையையுமே ஒட்டு மொத்த மக்களின் சிறந்த சிந்தனை மாற்றத்திற்காக அர்ப்பணித்த திரு சத்தியத் ராய் அவர்களைப் பற்றிக்; கொஞ்சமாவது தெரிந்து கொள்வது எமது அதிர்ஷடம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வுலகின் பெரும்பாலான இடங்களில் ஒரு மனிதன் பிறக்கும்போது ஒரு கலைஞனாகவோ வைத்தியராகவோ அல்லது வேறு எந்தத் தொழிலையும் செய்யவேண்டும் என்ற உள்ளுணர்வுடன்; பிறப்பதில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் பெருமபாலானவர்களின் குலத் தொழில் அல்லது குடும்பத் தொழில் அவர்களின் எதிர்காலத்துடன் இணைக்கப் பட்டு விடுகிறது. ஓன்றிரண்டு மனிதர்கள் தங்களின் வாழ்க்கைப்; பிரயாணத்தில் கண்ட அனுபவங்களின் உள்ளுணர்வின் உந்துதலால் தற்செயலாக அவர்களுக்கு அறி முகமில்லாத துறைகளில் தங்களையிணைத்துக் கொண்டு உலகம் வியக்கும் வகையில் பெருமையான மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

அவர்களில் ஒருத்தர் சத்யஜித் ராயே என்ற இந்திய திரைப்படத் துறை நிபுணர். திரைப்பட எழுத்தாளா,சினிமா டிரக்டர்.பத்திரிகை ஆசிரியர், பாடலாசிரியர் , எடிட்டர், இசை அமைப்பாளர் கலி கிராபர், இலஸ்ரெட்டர் என்று பல திறமைகளைக் கொண்டவராக வாழ்ந்தவர்.

இவரின் வாழ் காலம்; 1921ம் தொடக்கம் 1992 வரைக்குமாகும். வங்காள மாகாணத்தின் தலைநகரான கல்கத்தாவில் பிறந்தவர்.இவரின் தகப்பன் சுகுமார் றேய். தாயார் பெயர் சுப்ரபா.இவரின் தகப்பனாரும்,பாட்டனார் உபேந்திர கிஷேர் றேய் சௌத்திரி அவர்களும் எழுத்து. புத்திரிகை, சித்திரம் வரைவது போன்றவற்றில் சிறந்து விளங்கினர். சத்தியத் றேயின் தகப்பன் சுகுமார் றேய் அவர்கள் படிக்கும்போதே ‘நொன்ஸென்ஸ் கிளப் என்று ஒன்று நடத்தினாரம் அத்துடன் இராமயணத்தில் இராம -இராவண யுத்தத்தை ஒரு காமடி நாடகமாகவும் மேடையேற்றினாராம்.’ தேர்ட்டி டூ அன்ட் கால்வ்’ என்ற கதையையும் எழுதினாராம்.

சத்யஜித் றேயின் தந்தையார் சுகுமார் 1911ல் லண்டனுக்குப் படிக்க அனுப்பப் பட்டார். லண்டனிலிருந்தபோது; சுகுமார் றேய் அவர்கள் அப்போது இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்த்ர நாத தாகூர் பற்றிய கட்டுரையை லண்டனில் பிசுரித்து தாகூரின் பெருமையை உலகறியச் செய்தார்.

1913ல் இந்தியா திரும்பியதும் ‘ஷண்டேஷ்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்தாh.இவரது பத்திரிகைத் தொழில் என்பதற்கப்பால்.இவர் குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதில் பெயர் பெற்றவர். அதிலொன்றைத் தழுவித்தான் ‘ அலிஸன் அன்ட் வொண்டர் லாண்ட்;’ கதை ஆங்கிலத்தில் எழுதப் பட்டதாகச் சொல்லப் படுகிறது.அவர் தனது முப்பத்தி மூன்றாவது வயதில்1923ல் இறந்தார்.

சத்யயித் றேய் குழந்தை வயதில் அவரின் தந்தையை இழந்தபோது, எழுத்தாளரும் சித்திரக் கலை நிபுணருமான பாட்டனார் உபேந்ர கிஷோர் றேய் சௌத்திரியினதும் அவரது தாய் சுப்ரபாவின் பராமரிப்பில் வளர்ந்தவர். அவரின்,பாட்டனும் தகப்பனும் மாதிரியே சத்யத்ஜித் றேய் அவர்களும் இளமையிலேயே பல்துறைகளைத் தேடிப் படிப்பதில் ஆர்வம் காட்டினார்.

ஆரம்பக் கல்வி வங்காள மொழியிற் தொடங்கியது. அதன் பின் ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்து இருமொழிகளிலும் வல்லமை பெற்றார். எக்கொனமியில் பி.ஏ பட்டமும் பெற்றார். அப்போது கல்கத்தாவிலுந்த அமெரிக்க கடற்படை வீரர்களுடன் தொடர்பு கிடைத்தது. சார்ளி சாப்ளினின் படம் தொடக்கம் பல அமெரிக்க படங்களைப் பார்த்திருக்கிறார். மேற்கத்திய இசையில் மிகவும் ஆர்வமாகவிருந்தார்.அத்துடன் அங்கிருந்து ஃபிலிம் சொசைட்டியுடனும் பழகியிருக்கிறார்.

சத்யஜித் ராய் அவர்கள 1943ல் அவருக்கு இருபத்து இரண்டு வயதில் கல்கத்தாவில் ஆங்கில விளம்பரநிறுவனத்தில் வேலை கிடைத்தது. புத்தகங்களின் அட்டைப் படங்கள் செய்வது. கதைகளுக்கு ஓவியம் வரைவது போன்ற வேலைகளைச் செய்தார். அப்போது, பாண்டியோபதி என்ற வங்காள எழுதாளரின் ‘பதர் பாஞ்சாலி’ என்ற புத்தகத்திற்கும் ஓவியங்கள் வரைந்தார்.

இந்தக் கதை. அழகான ஒரு யதார்த்தமான கதை. ஒரு கிராமத்தில் வாழும் ஒரு பிராமணக் குடும்பத்தைப் பற்றிய கதை. அக்கதையின் கதையமைப்பு, வர்ணனைகள் என்பன, தனது பொழுது போக்காக அடிக்கடி படம் பார்த்த சத்யத் றேயின் திரைப் பட ஆர்வத்தை,யதார்த்மான இந்தியக் குடும்பக் கதைகளைப் படமாக்கவேண்டும் என்று தூண்டியிருக்கலாம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

1949ம் ஆண்டு இவரின் இருபத்தி எட்டாவது வயதில் ரவிந்திரநாத் தாகூரின் ‘சாந்தி நிநேதன்’ நிலையத்தில் தாயின் வேண்டுகோளுக்கிணைந்து படித்தார்.இவரைப் பற்றிய ஆய்வுகளைச் செய்தபோது ‘சாந்தி நிகேதனில் இவரின் அனுபவம்,சத்யத் றேயின் சிந்தனையில் எத்தனை மாற்றத்திற்கு அடித்தளமாகவிருந்தது என்பது புரியும். தாகூர் போன்ற பெரியார்கள் சமுதாயத்திற்காகப் போலியாக வாழாமல் மக்களின் மேம்பாட்டுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தவர்கள்.’சாந்தி நினேதன்’ நிலையம் பல கலைகளையம் கற்பிற்கும் நிலையமாகவிருந்தது. அவ்விடத்தில் கிழக்குலக-மேற்குலக இலக்கியம்,இசை பற்றிய பல அற்புத அனுபவங்களைப் பெற்றார்.

1949ம் ஆண்டு,கல்கத்தாவிற்கு ‘றிவர்’ என்ற திரைப் பட விடயமாக ஜீன் றெனேய் என்ற ப்ரன்சிய திரைப்பட தயரிப்பாளர்; வந்திருந்தார்.அவருடன் சத்யஜித் அவர்களுக்குத் தொடர்பு கிடைத்தது.

‘றிவர்’ என்ற படம் இந்தியப்பெரு நதிகளிலிலொன்றான கங்கை நதிக்கரையில் வாழ்ந்த ஒரு ஆங்கிலேயக் குடும்பத்தின் ஒரு இளம் பெண்ணின் காதல் உணர்வுகள் பற்றிய கதையென்றாலும், இந்திய மக்கள் கங்கை நதியைப் புனிதமாக நினைப்பவர்கள் என்பதையும் இருவித்தில் சித்தரிக்கிறது. அந்த நதியை அடுத்து வாழும் மக்களின் சமயச் சடங்குகள் தொடக்கம்,அந்நதியில் அன்றாடம் படகில் பிரயாணம் செய்யும பிரயாணிகள் அத்துடன்;அன்றாட வாழ்க்கை;கு மீன் பிடித்து வாழும் இந்திய மக்களின் வாழ்க்கை,அந்த புனித நதிக்கரையில் தவம் செய்யும் சமய பக்தர்கள்,விளையாட்டுப் பொருட்களை நாடாமல் இயற்கையுடன் விளையாடும் குழந்தைகள் போன்ற பன்முகத் தன்மையில் அந்த நதி எப்படி இந்திய மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை அந்தப் படம் மூலம் றெனேய் அவர்கள் சொல்கிறார்.

ஜீன் றெனெய் அவர்கள் அக்காலத்தில் திரைப் படத் துறையில்,நியோ றியலிசம்’ என்ற பார்வையில் ;மாற்றங்களைக் கொண்டு வந்த ‘புதிய சினிமா’ (நியு சினிமா) என்ற கோட்பாடுகளைக் கொண்டவராக இருந்தார். அன்றிலிருந்து இன்று வரை பேசப்படும் உலகத்தின் பிரபலமான படங்களில் ‘’லா க்ராணெ;ட்; இலுஸன்’’ (1937) (மிகப்பிரமாண்டமான கற்பனை) போன்ற ப்ரன்ஷ் படங்களை எடுத்தவர் ஜீன் றெனேய் என்பவர். கல்கத்தாவில் அவர் ‘றிவர்’ படம் எடுத்த கால கட்டத்தில சத்தித் ராய் அவர்கள் அந்தப் படப்பிடிப்புக்கு இடங்கள் தெரிவு செய்யும் அதாவது, செலக்சனனுக்கு றெனேய்க்கு உதவி செய்தார்.

’றிவர்’ படம் எடுக்கப் பட்டபோது படத்தயாரிப்பில் பல விடயங்களைச் சத்யத்ஜித் ராய், ‘நியோ றியலிச’ அமைப்பில் படம் தயாரிக்கும் பன் முகத் தனமைகளையும் கிரகித்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அப்போது சத்யஜித் ராய் அவர்கள் றெனேயிடம் ‘பதர் பாஞ்சாலி’ கதையைப் படமாக்கும் தனது விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார். அதற்கு றெனேய் அவர்களும் உற்சாகம் கொடுத்திருக்கிறார்.

1949ம் ஆண்டு றேய் அவர்கள்,அவரின் மாமானார் ஷாரு சந்திர தாஸின் மகளான பியோயாவைத் திருமணம் செய்தார். அவர்களின் இளவயதில் சந்தித்துக்கொண்டதால் தொடர்ந்த காதல்த் திருமணம் அது.அவர்கள் சந்தித்தபோது அவருக்குப் பத்து வயதும் மனைவிக்குப் 14 வயது. அவரின் மனைவி பியோயாவும்,‘ஷெஸே றக்ஷா’என்ற திரைப்படத்தில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவுமிருந்திருக்கிறார் இவர்கள் மகன் சண்டிப் றேய் அவரும் ஒரு திரைப்பட நெறியாளர்-டிரக்கர்.

1950ம் ஆண்டில் லண்டனுக்கு மேற்படிப்புக்காக வந்த சத்யத் ராய் அவர்கள் ஏராளமான மேற்குலகத் திரைப்படங்களைப் பார்த்ததாகவும் அதில் அவர் பார்த்த இத்தாலிய தயாரிப்பாளரான விட்டேரியோ டி ஸீக்காஸ் என்பவரின் ;’த பைசிக்கில் தீவ்ஸ்’ என்ற மிகத் திறமையான படைப்பு தன்னை, ‘பதர் பாஞ்சாலி’ படத்தை எடுக்கத் தூண்டியதாகச் சொல்கிறார். 1948ல் வெளிவந்த’ பைசிக்கிள் தீவ்’ என்ற இந்தப் படம், இரண்டாம் உலக யுத்தத்தின்பின் இத்தாலிய மக்களின் வறுமையை வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் யதாhத்தமான முறையில் பிரதிபலிக்கும் படமாகும்.

அக்காலத்தில், பல நூற்றாண்டுகளாக அந்நியாட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவும், அவர்களின் நாடு மூன்றாகத் துண்டிக்கப் பட்ட நிலையில் பல சிக்கல்களை அனுபவத்திக் கொண்டிருக்கிறது. கிராமத்து மக்கள் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஒரு மகளையும் வயிற்றில் ஒரு குழந்தையையும் தாங்கிக் கொண்டு பல் துயர் அனுபவிக்கும் ஒரு பிராமணத் தம்பதிகளைப் பற்றிய படம் ‘பதர் பாஞ்சாலி’.

அந்தப் படம் அது 1955ல் வெளிவந்தது. இந்தப் படத்தைத் தயாரிக்கும்போது தான் தனது உத்தியோகத்தையும் தொடர்ந்து செய்ததாக றேய் அவர்கள் தனது நேர்காணல் ஒன்றிற் சொல்லியிருக்கிறார். அதாவது அவர் எடுக்கும் படத்திற்கான செலவைத் தன் சம்பளத்தின் மூலம் சமாளித்தாh.அவருக்குப் பொருளாதார உதவி செய்ய எந்த பணக்காரரும் முன்வரவில்லை. படத்திற்கான ப்லிம் ரோல்ஸ் போன்ற ஸ்ரொக் வாங்கவும் பணமிருக்கவில்லை.

இந்தப் படத்தை உருவாக்க வேலை செய்த யாரும் எந்தட திரைப்பட அனுபவும் அற்றவர்கள். இந்தப் படம் வெளிவந்ததும் வங்காளத்தில் வெற்றியை ஈட்டியது. அதைத் தொடர்ந்து,’பதர் பாஞ்சாலி; கதையின் முக்கிய பாத்திரமான ‘அப்பு’ என்ற பையைனின் வாழ்க்கையைப் பிரதி பலிக்க இன்னும் இரு படங்கள் எடுத்தார் சத்யஜித் ராய் . 'அப்பாறாஜிரோ’1956ல் வெளியிட்டார்.

இந்தத் திரைப் படம் வெனிசில் நடந்த ‘கான்’ திரைப்பட விழாவில் விருதைப் பெற்றது. அதைத் தெடர்ந்து ‘அப்புர் சான்சார்(1959; எடுக்கப் பட்டன. இப்படத்தில் அவருக்கு மிகவும் பிடித்த சௌமித்ரா சட்டர்ஜியும் ஷர்மிளா தாகூரும் அற்புதமாக நடித்தார்கள்.

ஓரு பிராமணப்பையன் தனது பூர்வீகத் தொழிலான மந்திரங்கள் சொல்லிப் பிழைப்பதை ஏற்றுக் கொள்ளாமல் புதிய பாதையைத் தேடுகிறான்.  எழுத்தாளன் ஒருவனாக வர முயற்சி செய்கிறான்.  அந்த விடயங்களில் அவன் எதிர் நோக்கும் சவால்களும் அவன் வாழ்க்கையின் இழப்புகளும் ஓர்  அழகிய காவியமாக அடுத்த இரு படங்களிலும் காட்டப் படுகின்றன.

அத்துடன் மாறிக் கொண்டு வரும் இந்திய வாழ்க்கைமுறைகள் அப்படியே பிரதிபலிக்கின்றன. சசத்யஜித் ராய் 29 முழுத் திரைப் படங்கள். 5 டாக்குயமென்டரிகள் அத்துடன் குறும் படங்களும் எடுத்திருக்கிறார்.

இவர் ரவீந்திரநாத தாகூர் பற்றி எடுத்திருக்கும் டாக்குயுமென்டரி மிகவும் அபாரமானது. மிக மிக வசதியான குடும்பத்தில் பிறந்த தாகூர் அவர்கள், வசதியான வாழ்க்கைமுறைக்குள் செல்லாமல்.மனித குல மேம்பாட்டுச் சிந்தனைகளால் எழுத்துத் துறையில் கவரப் பட்டு எத்தனை விடயங்களை இந்த உலகுக்குப் படைத்திருக்கிறார் என்பதைப் பார்த்தபோது நம்பமுடியாமலிருந்தது.

சத்யஜித் ராய் எடுத்த இன்னுமொரு குறும்படம் ‘த இன்ன ஐ’’. இது ஒற்றைக்கண் பார்வையுடன் ஓவியம் தீட்ட ஆரம்பித்து ஒட்டுமொத்த பார்வையையும் இழந்த அற்புத ஒவியக்லைஞன் வினோட் புகாரி முகர்ஜி அவர்களைப் பற்றியது. அற்புத பிரபஞ்ச சக்தியின் ஆசிர்வாதத்துடனியங்கிய அவருடைய ஆத்மீகப் பார்வையின் வெளிப்பாடாக நாங்கள் அந்த ஓவியங்களைப்; பார்க்கலாம்.

இப்படியான படைப்புகளைத் தந்த சத்யிஜித் ராயும் பத்திரிகை, எழுத்துத்துறை அத்துடன் சினிமாத் துறையில் தனது வாழ்க்கைச் செலவிட்டிருக்கிறார். அதற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரின் தாத்தா உபேந்த்ரா கிஷோவால் 1913ல் ஆரம்பிக்கப் பட்ட குழந்தைகள் பத்திரிகையில் இவரும் வேலை செய்து வந்த சம்பளத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டு படத்தயாரிப்பாளராக இறக்கும்வரை பணிபுரிந்தார்.அத்துடன் வங்காள மொழியில் துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள் (சயன்ஸ் பிக்ஸன்) எழுதுவதின் முன்னோடியாக இருந்தவர் சத்யத் ராய் .இவர் எழுதிய விஞ்ஞானக் கதையின் தழுவல்தான்’ ஏலியன்’ என்ற பெயரில் அமெரிக்காவில்வெளி வந்த படமும் என்று ஒரு நேர்காணலிற் சொல்லியிருக்கிறார். வாழ்நாள் முழுதும் எழுத்துக்கான விருதுகள் பல இவருக்குக் கிடைத்திருக்கிறது.

இவர் ஆரம்பத்தில் எடுத்த படங்கள் ‘இந்திய வறுமையை உலகுக்குப் பறையடிப்பதாக இருக்கிறது’; என்று ஒரு சிலர் முணுமுணுத்தபோது,’ வணிக மயமான பொழுது போக்குப் படங்கள் பார்ப்பவர்களுக்காக நான் படம் எடுக்கவில்லை. இந்திய வாழ்க்கையின் பன்முகத் தன்மைகளையும் பல கோணங்களிலும் படம் எடுக்கிறேன்’ என்று தனது நேர்காணலிற் சொல்லியிருக்கிறார்.

ரபேந்திர தாகூரின் இலக்கிய ஆளுமையில மிகவும் மதிப்புக் கொண்டவர் சத்யஜித் ராய். தாகூரின் சில கதைகளையும் படமாக்கியிருக்கிறார். தாகூரின் ஒரு கதையான ‘சாருலதா’ என்ற படம்.முக்கோணக் காதலை மையப் படுத்தியது.

அந்தப் படம்; உலகெங்கும் பெருமையாகப் பேசப்பட்டது. ‘சாருலதா’ (லோன்லி வைவ்) என்ற படம் மிக மிக அற்புதமானது. திருமண வாழ்க்கையில் ஏனோதானே என்று காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் ஒரு அழகான, அறிவான மனைவியின் வாசிப்பு,இலக்கியம்,இந்தியாவின் சுதந்திரப்; போராட்டம் என்பதில்; உள்ள ஆர்வம் என்பதை கணவர் உணர்கிறார். அதனால் அவர் தன் மனைவியின் ஆர்வத்திற்கு உதவ அறிமுகம் செய்ய, சுதந்திர போராளியும் கவிஞனுமான அவரின் சினேகிதனை வீட்டுக்கு அழைக்கிறார். அதனால் வரும் முக்கோணக் காதல், அத்துடன் தனது வாழ்க்கை நியதி காரணமாகச் சுதந்திப் போராட்டத்தை ஆதரிக்காத,மிகவும் தனவந்தனான கணவனின் இக்கட்டான நிலை என்பவற்றைப் பிரதி பலிக்கிறது.இப்படம் சத்யத் றேயி அவர்களுக்கு மிகவும் பிடித்த படம் என்று சொல்லப் படுகிறது.

அடுத்ததாகக் குறிப்பிட வேண்டிய,தாகூரின் இன்னொரு கதையை வைத்து எடுத்த படம்’ தேவி’.இப்படம் அதி பக்தி மார்க்க சமயவாதிகளைச் சிந்திக்கப் பண்ணிய படமென்று,அதாவது ‘சர்ச்கைக்குரிய’ படமென்று பெயர் எடுத்த படமிது.

1966ல் சத்தியஜித் ராய் அவர்களால் எழுதிப் படமாக்கப் பட்ட ‘நாயக்- ‘Hero'. இந்தப்படம் பெரும்பான்மையாக ஒரு ஓடும் ட்ரெயினில் படமாக்கப் பட்ட படம். தனக்கு எல்லாம் இருப்பதாகப் பெருமையடன் வாழும் ஒரு திரைப் படக் கதா நாயகன் ட்ரெயினில் காணும் ஒரு பெண் நிருபரின் சந்திப்புக்குப் பின் தன்வாழ்க்கையில் இதுவரை ஒன்றும் பெரிதாகக் கிடைக்கவில்லை என்றுணர்வதாக எடுக்கப் பட்டிருக்கிறுது.

1981ல் இவர் எடுத்த ‘சட்காட்டி’ என்ற படம் பிராமணர்கள் தங்களின் வசதியான வாழ்க்கைக்கு எப்படி இந்திய மக்களை வர்ணரீதியாகப் பிரித்து கொடுமைகள் செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
 
மேற்கத்திய சாயலிலும் சில படங்கள் எடுத்திருக்கிறார். அதில் ஒன்று கென்றிக் இசபென் என்பரின் நாடகத்தைத் தழுவி 1970ல் எடுத்த படம் ‘Days and Nights in the Forest ‘
    
இந்தப் படம் நான்கு இளைஞர்கள் தங்கள் உல்லாசப் பிரயாணத்தில் ஒரு இரவு,அதிக மக்கள் இல்லாத காட்டுப் பகுதியில் தங்கிய அவர்களின் அனுபவம் பற்றியது.

எடுத்த கடைசிப் படம் 1990ல் எடுத்த ‘An Enemy of the People ‘. இந்தப் படம் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள மாசுபட்ட நீரை மக்கள் அருந்தி ஜாண்டிஸ் வந்து துயர்படுவதைப் பற்றியது. விஞ்ஞானக் கருத்துக்களுக்கும் மதரீதியான கருத்துக்களுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தைப் பற்றியது.

இப்படியான அருமையான சத்தியதஜித் ராய் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் பரந்த வித்தில் 24க்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். சாதி, மத. வர்க்க, நிறபேதமின்றி இவர்களின் படங்கள் பல கதைகளைச் சொல்கின்றன. இவரின் சிறந்த படமாக இருபத்தைந்தை ஒரு அமைப்பும் மிகச் சிறந்த படமாகப் பத்துப் படங்களை இன்னொரு அமைப்பும் என்று பல தரப் பட்ட கணிப்புகளின் பெருமைக்கு உரியவர் இவர்.  

இந்தியாவில் பத்ம பூஷன், பத்ம ரத்னா தொடக்கம் 1991ல் சத்யஜித் ராயின் வாழ்நாள் திரைப்பட சேவைக்கு ஒஸ்கார் விருதும் கிடைத்தது.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் AI  வழி வநகி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.