"முற்றாத இரவொன்றில் நான் வாட.. 
முடியாத கதை ஒன்று நீ பேச..
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட.. 
உண்டாகும் சுவையென்று ஒன்று..

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன் 
விழி மட்டும் தனியாக வந்தாலும்..
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று.. 
பெறுகின்ற சுகமென்று ஒன்று"..   - கவிஞர் கண்ணதாசன் -

இவ்விதம் எளிமையான சொற்றொடர்களில் ,  அனுபவத்தில் தோய்ந்த  காதல் போன்ற மானுடர்தம்  உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிறந்தவர் கவிஞர் கண்ணதாசன்.  

'முற்றாத  இரவு' அற்புதமான படிமம். முற்றாத என்னும் சொல்லை நாம் இரு வகைகளில் தமிழில் பாவிக்கின்றோம். ஒரு விடயம் முடிவுக்கு வராத விடயத்தைக்குறிக்கப் பாவிக்கின்றோம். அதே சமயம் முற்றாத கனி என்றும் பாவிக்கின்றோம்.  

இரவு நீண்டிருக்கின்றது. முடிவற்று விரிந்து கிடக்கின்றது. முடிவற்ற கனியாகவும் இருக்கின்றது இரவு. இந்த இரவில் அவனது காதல் உணர்வுகளுக்குத் தீர்வுமில்லை. முடிவுமில்லை. எவ்வளவு சிறப்பாகக் கவிஞர் கண்ணதாசன் முற்றாத இரவு சொற்றொடர் மூலம் காதலால் வாடும் அவனது  உள்ளத்தை, அதே சமயம் கனியாத, முற்றாத அவனது காதலின்  தன்மையை வெளிப்படுத்துகின்றார். கனியாத, முடிவுக்கு வராத அவனது காதலுணர்வுகள் அவனை வாட்டுகின்றன அந்த முற்றாத இரவைப்போல்.  

என்னை மிகவும் கவர்ந்த  கவிஞரின் படிமங்களில் ஒன்று 'முற்றாத இரவு'. இத்தகைய படிமங்கள் மிக்க, கவிஞரின் கவித்துவம் மிக்க மானுட  உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்  தமிழ் இலக்கியத்தில் அவரின் இருப்பிடத்தை நிரந்தரமாக்கிவிட்டன. சங்கக் கவிகளை இன்று நாம் நயப்பதைப்போல் , எதிர்காலச் சந்ததியினர் கவிஞரின் வரிகளையும் சேர்த்தே நயப்பர்.

'குங்குமம்' திரைப்படத்தில் இடம்  பெறும் 'தூங்காத கண்ணொன்று உண்டு' பாடலில் வரும் வரிகள் இவை. திரையில் நடிகர் திலகமும், ஊர்வசி 'சாரதா'வும் நடித்திருப்பார்கள். இசை - கே.வி.மகாதேவன்.  பாடியிருப்பவர்கள் - டி.எம்.எஸ்  & பி.சுசீலா

பாடலைக்கேட்டுக் களிக்க