கவிஞர் வேந்தனாரின் மகன் வேந்தனார் இளஞ்சேய். அவரது மகனே இளமைந்தன் இளஞ்சேய். இவர் ஒரு சிறந்த பாடகர். இவரைப்பற்றிய குறிப்பொன்றினை நண்பர் வேந்தனார் இளஞ்சேய் பகிர்ந்துகொண்டிருந்தார். அதனைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.  இளமைந்தன் இளஞ்சேய் தன் இசைப்பயணத்தில் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.


வேந்தனார் இளஞ்சேயின்  இளமைந்தன் இளஞ்சேய் பற்றிய அறிமுகக் குறிப்பு:

அன்பிற்குரியவர்களே,  எனது மூத்த மகன் இளமைந்தன் இளஞ்சேய் - தனது இசையில் உள்ள ஆர்வம் காரணமாக , தனது சொந்த முயற்சியில், இவ்வாறான சிறு காணொளிகளை , தனது ilxnsei என்ற பெயரிலுள்ள youtube channel இல் வெளியிட்டு வருகின்றார். இதனை இன்று முதல்முறையாக எனக்கு அனுப்பி வைத்தார். நான் இசையில் ( ஆங்கில இசையில்) பெரிதும் ஆர்வமற்ற நிலையில் , அவரின் முயற்சிகளை , ஒரு தந்தையாக உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கவில்லை. இக்கவலை என் குடும்ப உறுப்பினர்களுக்கு உண்டு. அண்மைக் காலமாக இது எனக்கு ஒரு குற்ற உணர்வாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் எனது துணைவி, இன்று எனக்கு இளமைந்தனின் சில இசைக் காணொளிகளை ( அவரே எழுதி இசையமைத்துப் பாடியவை) என்னை இருத்திவைத்துப் போட்டுக் காட்டினார். இளமைந்தனின் குரலினிமைமையை உணர்ந்தேன். இசையறிவையும் சற்றுப் புரிந்து கொண்டேன். கடந்த நாற்பது வருடங்களாக , இளையோரைப் பல நிகழ்வுகளில் மேடையேற்றி , உற்சாகப் படுத்தி - ஊக்கப் படுத்தி வருபவன் நான். ஆனால் என்னருகே - என் வீட்டில்- இருந்த என் மகனின் இசை ஆர்வத்தை, நான் ஊக்குவித்து ஆதரவளிக்கவில்லை. மாறாக அவரின் மேற்படிப்புக் காலங்களில், இதற்குத் தடைபோட்டு வந்தேன்.

எது எவ்வாறாயினும் அவரின் ஆர்வம் குறையாமல், அவரும் தனக்குக் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் , தன் நிதி வசதிக்கேற்ப , இவ்வாறு சில பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். அவரின் ஆர்வத்தை , இளையவர்களை ஊக்கப்படுத்தும் நான், இவ்வளவு காலமும் கவனிக்காதது எனது தவறென்றே, நான் கருதுகின்றேன். தந்தையாக அவரை உற்சாகப்படுத்திடல் எனது கடமை என உணர்கின்றேன்.
அவரின் காணொளியை , என்னைத் தெரிந்த உங்களில் சிலருடன் பகிர்கின்றேன். நீங்கள் விரும்பின் , பிடித்திருப்பின் , இவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தி , அவர்களிற்கு அவரின் ilxnsei என்ற youtube channel இனைப் பற்றி தெரியப்படுத்தலாம். அவர்க ள் விரும்புமிடத்து அந்த channel இலுள்ள காணொளிகளைப் பார்த்துப் பிடித்திருப்பின் , அந்த channel இனை subscribe பண்ணி,
இளமைந்தனின் இந்த இசையார்வத்தை ஊக்குவிக்கலாம்.

https://www.youtube.com/watch?v=iPfEwX8F9JI

நன்றி.

அன்புடன்
வேந்தனார் இளஞ்சேய்