தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச்சிறந்த நர்த்தகி. அவரது நடனத்திறமையின் காரணமாகத்தான் அவர் நடித்த திரைப்படங்களில் அவர் நடித்திருக்கும் பாடற் காட்சிகளெல்லாம் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அப்பாடற் காட்சிகளிலெல்லாம் அவரது நடனத்திறமையின் கூறுகள் சிலவற்றைத்தான் காண முடியும்.

ஜெயலலிதாவின் நடனத்திறமையினை முழுதாக வெளிப்படுத்தும் வகையில் வெளியான திரைப்படங்கள் வெகு சிலதாம். அவற்றிலொன்று ஆதி பராசக்தி. அப்படத்தில் வரும் இப்பாடற் காட்சியினைப் பாருங்கள் அவரது நடனத்திறமையினை புரிந்துகொள்வீர்கள்.

அறுபதுகளில் அவர் தயாரித்து மேடையேற்றிய நாட்டிய நாடகமான 'காவிரி தந்த கலைச்செல்வி' நாட்டிய நாடகம் மிகவும் புகழ்பெற்றது. கல்கியில் அது பற்றியொரு விமர்சனம் வெளிவந்ததாக நினைவு. நீண்ட நாட்களாக அதனை யு டியூப்பில் தேடிக்கொண்டிருக்கின்றேன். இன்னும் கிடைக்கவில்லை. யாரிடமாவதிருந்தால் பகிர்ந்துகொள்ளூங்கள்.

அந்நாடகத்துக்கு தமிழ்நாட்டு அரசியலைப்பொறுத்தவரையில் அரசியல், வரலாற்று முக்கியத்துவமுண்டு. மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் ஆ.எம்.வீரப்பனின் முயற்சியால் ஜெயலலிதா கலந்துகொண்டு மேடையில் அந்நாடகத்தை மீண்டுமொரு தடவை மேடையேற்றினார்.அது தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றிப்போட்டது என்று அண்மையில் வெளியான 'தலைவி' திரைப்படம் கூறும். அதில் ஜெயலலிதாவாக நடித்த கங்கனா ரனாவத் அந்நாட்டிய நாடகத்துக்காகச் சிறப்பாக நடனமாடியிருப்பார்.

ஜெயலலிதா, பத்மினி, வையந்திமாலா, குமாரி கமலா இவர்களில் யார் முதலிடத்தில் வைப்பீர்கள்  என்று என்னை யாரும் கேட்டால் நான்  குமாரி கமலாவையும்,ஜெயலலிதாவையும்தாம் முதலில் வைப்பேன். காரணம்: அனைவருமே நடனத்திறமையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்றாலும் உணர்வுகளைக்கொட்டி நடிப்பதில், அவற்றை முகபாவங்களில் வெளிப்படுத்துவதில் ஜெயலலிதா, குமாரி கமலா இருவரும் முன்னனி வகிப்பார்கள் என்பேன். இது என் பார்வை. எல்லோர் பார்வைகளாகவும் இருக்க வேண்டியதில்லை.

https://www.youtube.com/watch?v=46NhHtlBuTU