இந்தக் காதல் மானுடரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது.   காதலை, குறிப்பாக ஒருதலைக் காதலை மையமாகக்கொண்டு எழுபதுகளில் வெளியான 'ஒரு தலை ராகம்'   அக்காலக் கல்லூரி மாணவர்களையெல்லாம்  உலுக்கி எடுத்த படம்.  இப்படம் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. படைத்தை முடித்ததும் தயாரிப்பாளர்  E.M..இப்ராஹிம் அவர்களால் படத்தை விற்க முடியவில்லை.  விநியோகத்தர்கள் எவரும் வாங்க முன் வரவில்லை.  புதுமுகங்கள் நடிக்க, புதுமுகங்கள் எடுத்த படமென்பதால் தயங்கினார்கள் போலும். இப்ராஹிமே படத்தை விநியோகித்தார். ஆரம்பத்தில் படத்துக்கு வரவேற்பு பெரிதாக இருக்கவில்லை. ஆனால் விரைவிலேயே படத்துக்கான ஆதரவு அதிகரித்து பெரு வசூல் பெற்று வெற்றியடைந்தது. 360 நாட்களைக் கடந்து பல இடங்களில் ஓடியதாக அறியப்படுகின்றது.

இப்படத்தின் ஏனைய சாதனைகள்:  நாயகன் ஷங்கர் , நாயகி ரூபா, தியாகு, ரவீந்திர், ராஜேந்தர், உஷா எல்லோருமே இப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர்கள்.  டி.ராஜேந்தரே திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல் வரிகள் என் அனைத்தையும் செய்திருந்தார். ஆனால் படம் வெளியானபோது இயக்குநராகத் தயாரிப்பாளர் இப்ராஹிமின் பெயரிருந்தது. பாடல்கள் அனைத்துக்கும்  இசையமைத்த ராஜேந்தரே பின்னணி இசையினையும் செய்திருந்தார். ஆனால் படம் வெளியானபோது பின்னணி இசை A.A.ராஜா என்று போட்டிருந்தார்கள். பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் டி.ராஜேந்தரே.  நடிகர் சந்திரசேகரும் இப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

இத்திரைப்படம் பற்றிய இன்னுமொரு முக்கிய தகவல்: படத்தின் பெரும்பாலான பகுதிகள் ராஜேந்தர் படித்த மயிலாடுதுறையிலிருந்த AVC கல்லூரியிலேயே எடுக்கப்பட்டது. படத்தின் ஒளிப்பதிவை ரொபேர்ட் - ராஜசேகர் என்னும் இருவர் செய்திருந்தார்கள்.

பாடலைக் கேட்க:  https://www.youtube.com/watch?v=W4wcK2MbTho

இவ்விதமாகப் பல சாதனைகளைப் புரிந்த புதுமுகங்களின் நடிப்பில் புதுமுகங்களால் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெகு அரிது.  இத்திரைப்படத்தின் நாயகன் ஷங்கரின் காதல் நிறைவேறாது போனாலும், இப்படத்தின் சூத்திரதாரியான டி.ராஜேந்தரின் காதல் இப்படத்தின் வாயிலாக வெற்றி பெற்றதும் இன்னுமொரு முக்கியமான விடயம். இப்படத்தில் நடித்த உஷாவையே காதலித்துத் திருமணமும் செய்து கொண்டார் ராஜேந்தர். இவர்களின் புத்திரனே நடிகர் சிம்பு எனப்படும் சிலம்பரசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'ஒரு தலை ராகம்' திரைப்படத்தைப் பார்க்க - https://www.youtube.com/watch?v=nJ8U2FOh7ac