ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன். என்ன ! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது. நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம் , உலக அளவிலே உக்கிரைன் நாட்டில்ஈடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பாதிப்படைந்திருக்கிறார்கள். அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.

எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் பதவிக்கு வரும்போதே அவர் சராசரியான ஒரு அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ள மாட்டார் எனும் கருத்து அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது அசாதாரணமான பண்புகள், பழக்க வழக்கங்களை அவர் லண்டன் நகர மேயராக 8 வருட காலம் பதவி வகித்தபோதே மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். மக்களின் மனங்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தியை அவர் கொண்டிருந்தார் என்பதுவே உண்மை. அவரது 2019 அறுதிப் பெரும்பன்மை வெற்றி மக்களுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பு என்று வாதிடும் பல அரசியல் அவதானிகள் உண்டு. அதே நேரம் ப்றெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தினிலிருந்து விலகுவது எனும் நிகழ்வு கிளப்பி விட்ட புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிந்துணர்வினை ஊட்டும் வகையில் அவர் நடந்து கொண்டமையே அவரது வெற்றிக்குக் காரணம் எனும் வாதமும் பலமாக எழுந்ததுண்டு. எது எவ்வகை இருப்பினும் அமெரிக்கா ட்ரம்ப் அலையினால் தாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இங்கிலாந்து பொரிஸ் அலையினால் தாக்கப்பட்டது என்பதுவே உண்மை. அப்போதைய அமேரிக்க ஐனாதிபதி ட்ரெம்ப் அவர்கள் பொரிஸ் ஜான்சனை ஆதரித்த தலைவர்களுள் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும். சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை பொரிஸ் ஜான்சனிடம் இருந்தது. கேட்கப்படும் கேள்விகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் சுற்றி வளைத்துப் பதிலளித்துத் தப்பித்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அவரிடமிருந்த ஏதேவொரு வசீகரம் அவரின் மீது ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக அனுதாபம் கொள்ளத் தூண்டியது எனலாம்.

இதுதவிர அவருக்கு அவரது கட்சிக்குள்ளிருந்த செல்வாக்குக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். மிகவும் நெருக்கடியாக சொற்பமான பெரும்பான்மையுடன் வட அயர்லாந்துக் கட்சியின் கூட்டணியின் தயவில் ஊசலாடிக் கொண்டிருந்த அன்றைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தை " ப்ரெக்ஸிட்டை நடைமுறைப் படுத்துவேன் " எனும் சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டு 80 உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்பது முதற்காரணம், அவரை எதிர்க்கக்கூடிய ஆற்றல் மிக்க மற்றொருவர் அக்கட்சியில் இருக்கவில்லை என்பது அடுத்த காரணம்.

சரி இப்போ கேள்வி எழுகிறது. இத்தனை அனுகூலங்களைக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சன் இன்று பெரும்பான்மை வெற்றியீட்டிக் கொடுத்த தலைவர் எனும் நிலையிலிருந்து பதவியை இராஜினாமாச் செய்யும் நிலையை வந்தடைந்தது எப்படி ?

பொரிஸ் ஜான்சனின் வெற்றிக்கும், தோல்விக்கும் கோவிட் 19 ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை எனலாம். எப்படி அது அவருக்கு வெற்றி என்று சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் கோவிட் 19 எனும் உலகம் எதிர்நோக்கிய முன்னேற்போதும் உலகு கண்டிராத நோயினூடாக நாட்டை வழிநடத்த வேண்டிய முதல் பிரதமராக நாட்டினை இழப்புகள் அதிகமின்றி அவ்விருளினைக் கடந்து கூட்டிச் சென்றிருக்கிறார். மேற்குலக நாடுகளிலேயே இந்நோய்க்குத் தேவையான தடுப்பூசிகளை தேவையான அளவு கொள்வனவு செய்து முதன் முதலில் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய நாடு எனும் பெயரைத் தக்க வைத்துக் கொண்டார்.

இனி இந்தக் கோவிட் 19 அவருக்கு எந்த வகையில் தோல்வியைப் பரிசாக்கியது என்று பார்க்கலாமா ?

கோவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக நாட்டினை முடக்கும் தீவிர சட்டங்களை அமுலாக்கிய பொரிஸ் ஜான்சன் அவர்களது முக்கிய ஆலோசகராக இருந்தவர் டொமினிக் கமிங்ஸ் என்பவர் ஆவார். இந்தக் கோவிட் சட்டங்கள அமுலாக்க ஆலோசனை வழங்கிய அவரே அச்சட்டங்களை மீறியது வெளிப்பட்டதே பொரிஸ் ஜான்சன் அவர்களின் சறுக்கலுக்கு ஆரம்பச்சுழி இட்டது என்று சொல்லலாம். சட்டங்களை மீறிய அவரது ஆலோசகரை தண்டிக்காமல் மன்னித்தார் பொரிஸ். அதுவே அவரது தொடர்ந்த தவறான நடத்தைகளின் ஆரம்பம். கருத்து வேற்றுமைகளினால் பொரிஸ் ஜான்சனிடமிருந்து வெளியேறிய டொமினிக் கமிங்ஸ் தன்னுடன் பொரிஸ் ஜான்சனை விழுத்தக்கூடிய பல ஆவண இரகசியங்களோடு வெளியேறி இருக்கலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும். கொஞ்சம் கொஞ்சமாக பொரிஸ் ஜான்சனின் முகச்சாயம் வெளுக்கத் தொடங்கியது. சிரித்து மழுப்பி முரண்பாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொரிஸ் ஜான்சன் அவர்களது அரசியல் அனுபவ வெற்றிடம் மக்களுக்குப் புலப்படத் தொடங்கியது.

தொடர்ந்து கசியத் தொடங்கிய அரசாங்க உள்நடவடிக்கைகள் அவருக்கு வெடி வைத்தன. தம்முடைய இரத்த உறவுகளின் மரணத்தின் போது உடனிருக்க முடியா நிலையிலிருந்த மக்கள் அப்போதைய கால கட்டத்தில் பிரதமரின் அலுவலகத்தில் மது உள்ளடங்கிய ஒன்றுகூடல்கள் நடந்ததை அறிந்தால் சும்மா விடுவார்களா என்ன ?

வெறும் வாய்க்கு எப்போ அவல் கிடைக்கும் என்று காத்துக் கிடந்த எதிர்க்கட்சிகளுக்கு பத்துநாள் பட்டினி கிடந்த நாயின் முன்னால் வீசப்பட்ட மாமிசத் துண்டினைப் போல இந்தக் கசிவுகள் அமையவும். பாராளுமன்றத்தில் உண்டு இல்லை என்று விவாதம் செய்தார்கள். விழித்துக் கொண்ட ஊடகங்களுக்கு மென்று சப்பித் துப்புவதற்கு பிரதமரும், அவரைச் சார்ந்த பலரும் அகப்பட்டுக் கொண்டார்கள். தனக்கு கீழியங்கும் தனது அலுவலகத்தில் கோவிட் 19 சட்டங்களை மீறும் வகையில் எதுவிதமான ஒன்றுகூடல்களும் நடைபெறவேயில்லை என்று ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் உறுதியளித்த பிரதமரின் முகத்தில் கரி பூசப்பட்டது. துடைத்துக் கொண்டே சிரித்தார் பொரிஸ் ஜான்சன். விளைவாக நீண்டதோர் விசாரணையின் பின்பு பொலீசாரினால் கிரிமினல் குற்றத்துக்கான அபராதத்தைச் செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமர் எனும் பெருமையைப் பெற்றார் பொரிஸ் ஜான்சன்.

இதைவிடச் சிறிய குற்றச்சாட்டுகளுக்காகவே பதவி விலகிய பலர் உதாரணமாக இருக்க பதவியை இறுகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பொரிஸ் ஜான்சன் வெறும் மன்னிப்புடன் இந்த அத்தியாயத்தை மூடிவிட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த விடயமும், இவர் மீது மக்கள் கொண்ட அவநம்பிக்கையும் நிறுபூத்த நெருப்பாகத் தகித்துக் கொண்டுதான் இருந்தது.

எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா என்ன ? ஒரு நாயின் கால்களில் கிடைத்த எழும்புத் துண்ட அது சும்மா விட்டு விடுமா என்ன ? மக்கள் மனங்களில் பொரிஸ் ஜான்சன் பற்றிய அவநம்பிக்கை, மற்றும் தயங்காமல் உண்மைகளை மறுக்கும் வல்லமை பெற்றவர் எனும் எரிந்து கொண்டிருந்த அபிப்பிராய நெருப்புக்கு எண்ணேய் ஊற்ற ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் தவறவில்லை. இதன்போது பொரிஸ் ஜான்சனைக் காப்பாற்ற வந்தது போலவே ரஸ்ய அதிபர் பூட்டின் உக்க்ரன் நாட்டின் மீது போர் தொடுத்தார். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சனுக்கு முன்னால் ஒரு மிதக்கும் கட்டையை வீசினார் பூட்டின். விடுவாரா பொரிஸ் ஜான்சன்? எட்டிப் பிடித்துக் கொண்டார். ஒருவாறு கரையேறி விடுவார் என்றுதான் அரசியல் அவதானிகள் கருதினார்கள். அத்துடன் உக்கிரன் போரினால் ஏற்பட்ட எண்ணெய்த் தட்டுப்பாடு, ப்ரெக்ஸிட் மற்றும் உக்கிரைன் போர் முதலியனவற்றின் தாக்கத்தில் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவின் உயர்வு அவைகளும் பொரிஸ் ஜான்சன் மீது விழுந்த கற்களைத் தடுக்கும் கேடயங்களாகின. சரி இவையெல்லாவற்றையும் ஒருவாறு பூசி மெழுகி சமாளித்து விட்டேன் என்று பெருமூச்செறிந்து நடந்த பொரிஸ் ஜான்சன் அவர்களுக்கு மற்றுமோர் பேரிடி காத்திருந்தது. சரி அந்தப் பேரிடி எந்த வடிவில் அவருக்குக் காத்திருந்தது என்று அறிய ஆவலாக இருப்பீர்களே !

பொரிஸ் ஜான்சன் அவர்களால் தனது பாராளுமன்றக் கட்சி உறுப்பினர்களை வழிநடத்தவும், அவர்களின் நடத்தைகளைக் கண்காணிப்பதற்கும் அமர்த்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உப தலைவர் பதவிக்கு சிலகாலங்களின் முன்னால் அமர்த்தப்பட்டவர் கிறிஸ் பின்ச் என்பவர். பிரதமராவதற்கு முன்னால் பிரதமர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் பொரிஸ் ஜான்சன் அவர்கள் வெளிநாட்டு அமைச்சராகவிருக்கும் போது இதே கிறிஸ் பின்ச் அவரின் கீழ் பணிபுரிந்தார். அப்போது அவர் மற்றொரு அலுவலகப் பணியாளருடன் முறைதவறி நடந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு பின்பு மன்னிப்புக் கேட்டதன் பிரகாரம் பொரிஸ் ஜான்சனினால் மன்னிக்கப்பட்டவர்.

சரி இப்போது இதே கிறிஸ் பின்ச் என்ன செய்து விட்ட்டார் தெரியுமோ ? கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் ஒன்றுகூடும் கிளப் ஒன்றிலே இக் கிறிஸ் பின்ச் என்பவர் அதிகமாக மது அருந்தி விட்டு அங்கு இருந்த இரண்டு இளம் கன்சர்வேடிவ் ஆண் உறுப்பினர்களோடு முறை தவறி நடந்திருக்கிறார். இந்தப் பிரச்சனை வெளியே ஊடகங்களில் வருவதறிந்து இக் கிறிஸ் பின்ச் தானே தனது பதவியை இராஜினாமச் செய்தார். ஆனால் இதன் பின்னும் அவரை கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலக்க பொரிஸ் ஜான்சன் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தவிர இவரை இப்பதவிக்கு அமர்த்தும் போது இவர் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் என்று தனக்குத் தெரியாது என்று வேறு ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்திலும் சொல்லி விட்டார். அது தவிர ஊடகங்களில் அதை வலியுறுத்தும்படி தனது அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்களைப் பணித்துள்ளார். அது பொரிஸ் ஜான்சன் நினைத்த பாதையில் செல்லவில்லை. கிறிஸ் பின்ச் அவர்களின் மீதான முந்தைய குற்றச்சாட்டு ஏற்கனவே பொரிஸ் ஜான்சனுக்குத் தெரியும் எனும் உண்மை வெளிவந்தது. “என்னை மன்னித்து விடுங்கள் நான் மறந்து விட்டேன் " என்றார் பொரிஸ் ஜான்சன். மன்னிப்புக்கும் ஒரு எல்லையுண்டு தானே ! இனித்தன் சாயம் மக்களிடம் வெளுக்காது என்றுணர்ந்தும் பதவிக் கட்டிலை விட்டிறங்க மறுத்து விட்டார் என்றால் பாருங்களேன் !

“ இதற்கு மேலும் தாங்காதடா சாமி !” என்று நிதியமைச்சர் ரிஷி சுனாக், மற்றும் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் இருவரும் தமது அமைச்சர் பதவியை இராஜினாமச் செய்தார்கள். பொரிஸ் ஜான்சன் காகித அட்டையில் கட்டிய மாளிகை சரியத் தொடங்கியது . ஒவ்வொன்றாக அரசாங்கத்தில் இருந்த துணை அமைச்சர்கள், காரியதரிசிகள் எனச் சுமார் 54 பேர் ஒன்றன் பின் ஒன்றாக இராஜினாமாச் செய்தார்கள். அவர்கள் அனைவரதும் காரணம் பிரதமர் மீதான அவநம்பிக்கை. வேறு வழியின்றி தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக பொரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகிறது,

“ கெட்டிக்காரனின் பொய்யும் , புளுகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்குத் தாளம் "

இது எட்டு நாளில் இல்லை சுமார் இரண்டு வருடம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சரி இதிலே எங்கே சர்வாதிகாரம் ? எனும் கேள்வி எழுந்திருக்குமே !

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் இராஜினாமாச் செய்து விட்டார். அடுத்த பிரதமரை வெறும் 200000க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களே தெரிவு செய்யப் போகிறார்கள். 8 பேர் பிரதமராவதற்காக கட்சித் தலைவர் பதவிக்கு நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்த போதிலும் அவர்களுள் இருவரை மட்டுமே பாரளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியினர் வாக்களித்துத் தெரிவு செய்து தமது அடிப்படை உறுப்பினர் முன் நிறுத்துவார்கள். சரி வானோலி நிகழ்ச்சி ஒன்றில் நானறிந்து கொண்டது காதைக் கொடுங்கள் சொல்கிறேன். கடைசியாகத் தெரிவு செய்யப்படப் போகும் இருவரில் யார் பிரதமராக வேண்டும் என்று பெரும்பான்மை கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்களோ அவர்களோடு தெரிவு செய்யப்படும் மற்றைய வேட்பாளர் யாராக இருக்க வேண்டும் ? கன்சர்வேடிவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாதவராக இருக்க வேண்டும் என்பதால் அத்தகைய வழியில் தமது சக உறுப்பினர்களையும் வாக்களிக்கும் வகையில் வழி நடத்தி விடுவார்களாம். எப்படி இருக்கிறது ஐனநாயகம் ?

ஓ ! இதுதான் ஐனநாயகச் சர்வாதிகரமோ ?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.