தமிழகச் சட்ட மன்றத்தேர்தலில் திமுக கூட்டணி இதுவரை வெளியான முடிவுகளின்படி 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் தெரிவாகியிருக்கின்றார். இத்தேர்தலின் மூலம் ஸ்டாலினின் நீண்டநாட் கனவு நனவாகியிருக்கின்றது. தேர்தலில் அ.தி.மு.க தோற்றாலும் ,வலிமையான எதிர்கட்சியாக உருவாகியிருக்கின்றது. அதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தனது தலைமையைத் தப்ப வைத்துள்ளார்.

தற்போதுள்ள சூழலில் திமுகவின் வெற்றி முக்கியமானது. சூழலின் தேவையும் கூட. ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் தலைமையில் அதிமுக தமிழகத்தையே மோடியின் தலையாட்டும் பொம்மையாக மாற்றி வைத்திருந்தது. தமிழகத்தில் மதவாதக் கட்சிகளை மீண்டும் தலையெடுக்க முண்டுகொடுத்துக்கொண்டிருந்தது. இந்நிலையை மாற்றுவதற்கு ஸ்டாலினின் வெற்றி அவசியமாகவிருந்தது. தமிழகத்தின் சுயமரியாதைக்கு இவ்வெற்றி தேவையாகவிருந்தது. அது கிடைத்திருக்கின்றது. வாழ்த்துகள்.

அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பங்களிப்பாக நான் கருதுவது தமிழகத்தில் மதவாத மூட நம்பிக்கைகளுக்கெதிராக, வர்ணக் கோட்பாடுகளுக்கெதிராக, பகுத்தறிவுக்காக அது ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியைத்தான்.

நாற்பதுகளிலிருந்து கலையின் பல்வேறு வடிவங்களினூடும் (சினிமா, நாடகம், இலக்கியம் என)  பகுத்தறிவுக்காக , சமத்துவத்துகாக, சமநீதிக்காக, மதவாதங்களுக்கெதிராக அது குரல் கொடுத்து வந்தது. அதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வை இதுவரை மத்திய அரசியல் கட்சிகளால் அழிக்கவே முடியவில்லை. இதில் தமிழக மக்கள் தெளிவாகவே இருக்கின்றார்கள்.

ஸ்டாலினின் வெற்றி அவரது அரசியல் பாதையில் நீண்ட காலப்பங்களிப்பைக் கொண்டது. நிதானமானது. படிப்படியாக , எவ்வித அவசரமுமற்று, நிதானமாக அடியெடுத்து வைத்து இன்று இந்த வெற்றியைப்பெற்றிருக்கின்றார். இனி நீண்ட காலத்துக்குத் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கமே நிலைத்து நிற்கப்போகின்றது.

தற்போதுள்ள கொரோனாத் தொற்றுச் சூழலில், அரசியற் சூழலில் தமிழக்துக்குத் தேவை மாற்றம். உறுதியான, சுயமரியாதைமிக்க தமிழ்நாடு இந்திய அரசியலுக்குத் தேவை.  அதனை மக்கள் நன்குணர்ந்து வாக்களித்துள்ளார்கள்.  வாழ்த்துகள்.

தமிழகத் தேர்தல் முடிவுகள்:  https://www.hindutamil.in/ec-results-2021/