'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தில் இடம் பெறும் இப்பாடல் எனக்குப் பிடித்த  பாடகர் ஜெயச்சந்திரனின் இன்னுமொரு பாடல்.  மெல்லிசை மன்னரின் இசையில் , எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடும் இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலியோ, கவிஞர் கண்ணதாசனோ அல்லர். எனக்கு அறிமுகமில்லாத கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம். இப்பாடலை அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் அந்திப்பொழுதுகளில் எண்பதுகளில் கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன். ஆறு மணியுடன் தமிழ்ச்சேவையை நிறுத்தி விடும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அப்பொழுதுதான் அதனை இரவு பத்து மணி வரையென்று நினைக்கின்றேன் நீடித்திருந்தது.   'பொக்கற் சைஸ் டிரான்சிஸ்டர் ரேடியோ'வில் அச்சேவையில்  ஒலிக்கும் பாடல்களை எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருந்த காலகட்டம். இப்பாடலை எழுதிய கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் வேறு ஏதாவது பாடல்கள் எழுதியிருக்கின்றாரா?

அந்த  'பொக்கற் சைஸ் டிரான்சிஸ்டர் ரேடியோவை வாங்கியது சுவையானதோர் அனுபவம். நானும் நண்பர்களிருவரும் ஆளுக்கு 100 நூறு ரூபா போட்டு ஒவ்வொரு மாதமும் ஆளுக்கு  ஒன்றாக ஒரு 'பொக்கற் சைஸ் டிரான்சிஸ்டர் ரேடியோ வாங்கிக்கொண்டோம். அதன் விலை ரூபா 300.  இவ்விதம் ரூபா 300 போட்டு ஒருவருக்கு ஒரு மாதம் வேண்டிக்கொடுத்தால் அடுத்த மாதம் அடுத்தவருக்கு வேண்டிக்கொடுத்தோம். அதில் அதிகமாக கேட்ட பாடல் இந்தப் பாடல்தான்.

பாக்கியராஜ் & அம்பிகா நடிப்பில் ஒலிக்கும் இப்பாடல் ஜெயச்சந்திரன் & எஸ்.ஜானகி  குரலில் ஒலிக்கும் சிறந்த பாடல்களிலொன்று. சந்தத்துக்குச் சிறப்பாக எழுதப்பட்ட பாடல்களிலொன்று -  https://www.youtube.com/watch?v=XMrst0sFsaY