கலாச்சாரம், பண்பாடு,சமயக் கட்டுமானங்கள்,பொருளாதார நிலை,ஆணாதிக்கம் என்ற பல காரணிகளால் ஒடுக்கப் பட்டு வாழும் பெரும்பாலான பெண்களின் நிலையைத் தன் கிராமத்தில்; கண்ட கௌரி அவர்களைப்போல் தானும் வாழாமல், தங்கள் பாடசாலைக்குப் படிப்பிக்க வந்த புனிதமலர் ரீச்சர் மாதிரி, அறிவுடன், துணிவுடன், அன்பான உணர்வுடன் மற்றப் பெண்களின் மேப்பாட்டுக்கு உதவும் கல்வி கொடுக்கும் ஆசிரியையாக வாழச் சபதம் கொள்கிறாள். எப்படியும் தனது கல்வியைத்  துணிவாகச் செயற்பட நினைக்கிறாள். 'தில்லையாற்றங் கரை'நாவலில்  துணிவான இலங்கைத் தமிழ்ப் பெண் கௌரியின் கல்விக்கான 'போர்'அந்த'பெரிய பிள்ளையாகும்' விடயத்திற்தான் ஆரம்பமாகிறது.

'அயலி' என்ற பெயர்,அவர்களின் குல தெய்வத்தின் பெயர் என்றும் அந்த அயலித் தெய்வம்,அந்த ஊர்ப் பெண் ஒருத்தி அயலவனைக் காதலித் குற்றத்திற்காகக் கோபமடைந்து அந்த ஊராரை வருத்தியாகதாகவும, அதனால் பல துன்பங்களை அனுபவித்தவர்கள் பல இடமலைந்து, இந்த ஊருக்கு வந்ததும் மிகவும் பயபக்தியுடன் அயலியை வணங்குறார்கள என்றும் , பெண்கள் பருவம் வந்ததும் 'அயலி'குலதெய்வக் கோயிலுக்குள் போக முடியாது. உடனடியாகத் திருமணம் செய்து வைக்கப்படவேண்டும் என்பதுபோன்ற கலாச்சாரத்துடன் வாழ்வதாகவும். அயலி படம் சொல்கிறது.

இந்தக் கதை எனது நாவலில் (ஆங்கில) 139-142 பக்கங்களில் சொல்லப் பட்டிருக்கும் கோளாவில் கிராமத்தில்,பத்தினி அம்மன் கண்ணகி வழிபாடும் ஒழுக்கமும் பற்றிய பாரம்பரிய கதையைத் திருடியதாகும். ஆச்சியின் கதைப்படி, ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன், அதாவது இன்றைக்கு நூற்றி அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், பத்தினியம்மன் ஒருநாள் கோளாவில் கிராமத்தாரில் உள்ள கோபத்தில் ஊரை விட்டுப் போனாதாம். அதற்குக் காரணம் கண்ணகியம்மன் கோயிலுக்குப் பின் புறமுள்ள திருக்கொன்றை மரத்தடியில் இளம் காதலர்கள் ஒழுக்கக் குறைவாக நடந்ததுதான் என்றும் பூசகர் கனவில்  வந்து  கண்ணகியம்மன் சொன்னதாம். அதைத் தொடர்ந்து இளம் தலைமுறையினர் மிகவும் ஒழுங்காக நடந்து கொள்வதாகச் சபதம் செய்து கொண்டாதவும், அதன் நீட்சியாகப் பெண்கள் பெரிய பிள்ளையானதும,; திருமணம் ஆகும் வரை வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டைப் பலர் கடை பிடிக்கிறார்கள். அத்துடன், காட்டிலுள்ள பட்டிமேடு என்னும் இடத்தில் பத்தினியம்மனுக்குக் கோயில் கட்டி மிகவும் பய பக்தியுடனும் பல நாட்கள் பூசை செய்வதாகவும் சொன்னார்கள்.  இக்கதையையின்  திரிபுதான் அயலி.  இக்கதையில்,பெண்கள் பெரிய பிள்ளையானதும், வீட்டோடு அடைக்கப் படுகிறார்கள். அவருடைய கதாநாயகி, தனக்குப் பருவம் வரவில்லை என்று படு பொய் சொல்லிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறாள்.

எனது கதாநாயகி,பழைய கதைகளை நம்பாத பகுத்தறிவுள்ள கௌரி, பருவம் வருகிறதோ இல்லையோ கல்வியைத் தொடரக் கங்கணம் கட்டுகிறாள். போராடுகிறாள். இலங்கைத் தமிழ்ப் பெண்களின் நேர்மை இந்நாவலில் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

கௌரி தன்  இலட்சியமான மேற்கல்விக்கு அவளின் பெரியப்பா மகள் சாரதாவும்,  மைத்துனி மரகதமும் இணையாவிட்டால், குடும்பத்துப்  பெரியவர்களின் அனுமதி கிடைக்காது என்று தெரிந்து கொள்கிறாள்.அதனால், கல்வியில் அக்கறையில்லாமல் தனது மைத்துனரின் காதலே பெரிதென்றிருக்கும் அழகிய சாரதாவையும், பெற்றோர் சொற்படி வாழும்,அதிகம் பேசாத மரகதத்தையும் இணைத்துக் கல்வியைத் தொடர கௌரி படாதபாடு படுகிறாள்.

அந்த முயற்சிக்கு,வழக்கமாக அவர்கள் முகம் கொடுக்கும் ஒடுக்குமுறைகளுடன், இயற்கை அனர்த்தம்,தமிழ்-முஸ்லிம் சண்டை,இனவாதச் சிங்கள இராணுவத்தின் கொடுமை,அலட்சியமான அரச அதிகாரிகளின் போக்கு, என்பன சேர்ந்து அந்த இளம் பெண்களின் எதிர்காலத்தை அவர்களின் பகுத்தறிவு வழிக்குக் கொண்டு செல்லப் பல தடைகளைப் போடுகின்றன. பதவிமோகமும், அதிகார வெறியும் பிடித்த பெரியப்பா, கௌரியின் முறை மாப்பிள்ளை செல்வராசாவின் குடும்பம் போன்றேரின் தன்னலம் சார்ந்த நடவடிக்கைகளால்  இந்தப் பெண்கள் பல குடும்ப சிக்கல்களை எதிர் கொள்கிறார்கள்;.

ஆனால்,அக்காலத்தில் பரவிய  திராவிட முன்னேற்றக் கருத்துக்களால் உந்தப் பட்டு தமிழரசுக் கட்சிக்குள் வரும் கௌரியின் அண்ணா (பெரியப்பாவின் மகன்), புதிதாக வந்த இடதுசாரி ஆசிரியர்,நவகாலச்சிந்தனையுள்ள அவருடைய முற்போக்குத் தம்பி (கௌரியை விரும்புபவன்),  இந்தியப் சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியா சென்று, காந்தி, நேரு, சுபாஸ்சந்தரபோஸ் படங்களுடன் வந்த கௌரியின் அப்பா,கடவுள் தொண்டு செய்யும் இராமலிங்க சுவாமிகள் போன்றவர்கள் கௌரியின் கல்விக்கான இலட்சியத்தை முன்னெடுக்க ஆதரவு கொடுக்கிறார்கள்.

அக்காலத்தில் கிழக்கிலங்கையில் நடந்த கல்விமாற்றம்,சிந்தனை மாற்றங்கள்,திராவிடக் கருத்துக்கள்,தமிழுணர்வுக் கருத்தக்கள்,இடதுசாரிகளின் சமூக மாற்றக்கருத்துக்கள் இந்தச் சிறு கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை. அதன் எதிரொலி இளம் தலைமுறையினர், முக்கியமாகப் பெண்களின் விழிப்புணர்சிகளில் பிரதிபலிக்கின்றது.

கல்வியைத் தொடர்வதற்கான போராட்டங்களுடன் இந்தப் பெண்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது.கௌரி வெற்றிகொள்கிறாளா? என்பதுதான் இந்தக் கதை. கிழக்கிலங்கை மாநிலத்திற்கே உரிய மொழிநடையில். அங்கு நடைமுறையிலிருக்கும் மிகப் பழம் பெருமையான சடங்குகள், கலாச்சாரக் கோட்பாடுகள், பல்லின மக்களுக்குமான உறவு,அதை மாற்றமுனையும் அரசியல்ச் செயற்பாடுகள் என்பதையும் இந்நாவல் விரிவாகச் சொல்கிறது.

இது ஒரு சமூக சரித்திர நாவல் என்று படிப்பவர்கள் பலரால் புகழப் பட்ட நாவல்.அத்துடன் இலங்கைத் தமிழரின் 1948-62 காலவரலாற்றை மட்டுமல்லாமல் அக்கால கட்டத்தில் உலகில் நடக்கும் அரசியல் மாற்றங்கள்,இலங்கை அரசின் பல மாற்றங்கள் என்பதை ஆங்காங்கே ஆவணப் படுத்துகிறது.1958ம் ஆண்டுக்கலவரத்தில் இளம் தமிழ்ப் பெண்கள் அம்பாரைப் பகுதியில் அனுபவித்த பாலியல் வன்முறையைப் பதிவிட்டிருக்கிறது.

கிராமத்தாரின் சில நம்பிக்கைகளும் செயற்பாடுகளும் (கஞ்;சா காப்பி, மோகினிப் பேய் போன்றவை) அத்துடன், ஆச்சி, அவளின் தம்பிக் கிழவன், கோயிலில்,பூசைத்தட்டுகளால் தாக்கி வாழைப்பழங்களில் தடுக்கி விழுந்து ஆண்களால் உண்டாக்கப்பட்ட சண்டையை நிறுத்தவும், நிறை குடம், குத்துவிளக்குகள் பயங்கர ஆயதமாகப் பாவிக்கப் படாமல் செயற்பட்ட ஊர்ப்பெண்களின் ஓர்மம் (துணிவு), என்பன சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்கும் நகைச் சுவையாக எழுதப்பட்டிருக்கிறது.

இந்தக்கதையின் வரலாறு, பாரம்பரிய, பெண்ணியப் போராட்டம், என்பவற்றை என்னிடம் இருந்து தெரிந்து கொண்டு இதை எழுதப் பண்ணியவர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள்.ஆதரவு தந்தவர்கள் கலாநிதி சிவசேகரம், இலக்கிய ஆர்வலர் நேமிநாதன் (மு. தளையசிங்கத்தின் மைத்துனர்). பிரசுப் பணியை மேற் கொண்டவர்கள் கலாநிதி சிறிதரன், சட்டத்தரணி ரெங்கன் என்ற அன்புள்ளங்களாகும்.

தமிழில் முதற்தடவை பாரி பிரசுரமாக 1987ல் வெளிவந்ததும், இக்கதையில் அமைந்துள்ள, சமூக நெறிகள்,வரலாறு,அரசியல்,பெண் ஒடுக்குமுறை என்பற்றின் ஆழமான பிரதிபலிப்புப் பலரைப் படிக்கப் பண்ணியது. தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல உலகப் பெண்கள் அத்தனைபேரும் இந்நாவலைப் படிக்கவேண்டும் என்று,முதற் பதிப்பு வந்தவுடனேயே தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் பேசப் பட்டது.

அதன் எதிரொலியாக.பல தமிழ் இலக்கிய ஆளுமைகளின் வேண்டுகொளால்,லண்டன் ஆர்ட்ஸ் கவுன்சில்'\ இந்நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட நிதியுதவி செய்தார்கள். லண்டன் தமிழ் தகவல் நடுவப் பொறுப்பாளர் திரு.வி.வரதகுமார் அவர்கள் மொழி பெயர்ப்புக்கு உதவினார். தமிழ்ப் பதிவின் இரண்டாம் பதிப்பு,1998ம் ஆண்டு மணிமேகலை பிரசுரத்தால் வெளியிடப் பட்டது. 2000ம் ஆண்டு தமிழகத்தைச் சோந்த பத்து முனைவர்கள் எனது பத்து நூல்களை ஆய்வு செய்து,'பன்னாட்டுத் தமிழரும் பண்பாடும்' என்ற நூலை வெளியிட்டார்கள்.

அதில் எனது நாவலான 'தில்லையாற்றங்கரையை' ஆய்வு செய்த முனைவர் சு.வெங்கடராமன பேராசிரியர்- துறைத்தலைவர்,இக்கால இலக்கியத் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அவர்கள், தனது குறிப்பில்,(பக் 63)' பெண்கள் கல்வி கற்பதையும்,புத்தியறிந்தபெண் வீட்டை விட்டு வெளிச் செல்வதையும்,கல்வி கற்று ஆசிரியையாக தொழில் பார்க்க விரும்புவதையும்கௌரியின் ஆச்சி கடுமையாக எதிர்க்கிறாள். மரபுவாதியான பழைய தலைமுறை பிரதிநிதியான ஆச்சியின் எதிர்ப்பைத் துணிவுடன் எதிர்த்துக்கொண்டு, சமாளித்து தன் நிலைப் பாட்டில் உறுதியுடன் நிற்கிறாள் கௌரி. கல்வி கற்பதன் பயன், துணிவும் எதிர்த்துப் போராடும் குணமும்' என்பதை அவள் செயலில் காட்டுகிறாள்.  இந்நாவல்,இலங்கை சுதந்திர எழுத்தாளர்களால் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது.

2021ம் ஆண்டு 'ஆங்கிலத்தில் 'த பாங்ஸ்  ஒவ் த றிவர் தில்லை' என்ற பெயரில் வந்ததும் இது உலகம் பரந்த பலரால் வாசிக்கப் பட்டது. ஹொலிவுட் படமாக எடுக்கப் படவேண்டியது என்று பல ஆங்கிலேயர்களால் புகழப்பட்டது. 6.2.23ல் இந்த நாவல் பற்றி விமர்சனம் எழுதிய ஆங்கிலேயர்.திரு பீட்டர் சப்மான் என்பவர்,'இது ஒரு வரலாற்றுப் பொக்கிசம் என்கிறார்.அத்துடன்.ஆங்கிலேயரின் நூற்றி ஐம்பது வருட ஆட்சியில் நடக்காதவை 1948-62க்குமிடையில் நடந்தன என்பதைப் பதிவு செய்கிறார். 2021ம் ஆண்டு. கோவிட் கால கட்டத்தில் வெளிவந்த.இந்த ஆங்கில மொழி பெயர்ப்பு நாவல் களவாடப் பட்டிருக்கிறது. என்பதை, கோவிட் காலத்தில் இந்தப் படக்கதை எழுதியவருக்கு வந்த கற்பனையுடன் ஆய்வு செய்யலாம். கோளாவிலுக்குரிய காட்சிகள் அழகாக எனது கதையிலுள்ளன. பாத்திரங்கள் மனதில் நிறைபவர்கள் ஏனென்றால் கதை அன்று வாழ்ந்த மக்களைப் பற்றி எடுத்த சரித்திரக்கதை, கதையமைப்பு, அரசியல வாதங்கள் ஆழமாக உள்ளன. அவற்றையும் திருடி,கதயை,  பாத்திரங்களை மாற்றி இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற வித்தில் படம் எடுத்திருக்கிறார்.

இந்தக் கதையைக் களவாடி 'அயலி' என்ற வெப் சீரிஸ்  எடுத்திருப்பதை ஜேர்மன் இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர் கௌரி சிவபாலன் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். உடனே படம் பார்த்தேன் கதறினேன். இந்தக் களவைத் தட்டிக் கேட்க யாருமேயில்லையா என்று அழுதேன். இலங்கைத் தமிழரின் கதை என்பதை மறைக்க அங்கு நடந்த அரசியல் விடயங்களை மறைத்து விட்டு, அவரின் கதாநாயகியின்; பார்வையில் மட்டும்,எங்கள் ஊரில் கௌரிக்கு, அவளின் அண்ணா, அப்பா,இடதுசாரி ஆசிரியர்,அவளை விரும்பும் நாதன் சொன்ன அறிவுரைகளை,மாற்றியமைத்து பெரியார், அம்பேத்கார் வசனங்களாகப் படத்தில் காட்டப்படுகின்றன. அரசியல் வியாபார காரணங்களுக்காக,பெண்கள் கல்வி,முன்னேற்றம் பற்றி எனது நாவலில் வரும் கருத்துக்கள் உபயோகப் பட்டிருக்கின்றன.

இந்தத் திருட்டு மூலம், இன்று பல கோடிகள் எடுக்கிறார்கள.;பெண் எழுத்தாளரின் கதையைத் திருடி, தான் ஒரு முற்போக்குவாதியாகக் காட்டிப் பணம் சேர்ப்பது கேவலமான விடயம்.இலங்கைத் தமிழரை அவமானம் செய்யும் செயல். இலங்கைத் தமிழராகிய எங்களுக்கு,இப்படியான விடயங்களைத் தட்டிக் கேட்க ஒரு உருப்படியான ஒரு தலைமையோ,அமைப்போ கிடையாது என்ற ஆணவத்தில் இப்படி எங்களை அவமதிக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளின் ஆரம்ப சரித்திரம்,இந்த நாவல் இலங்கையில் எழுத முடியாத பல அரசியல் விடயங்களை,சுதந்திர உணர்வுள்ள ஒரு பிரித்தானிய தமிழ்ப் பெண்ணாக எனது தமிழ் மக்களுக்கும் பரந்த உலகத்திற்கும் என்கதை கதாநாயகி கௌரி வழியாகச் சொல்கிறேன்.

அப்படியான பல தரப்பட்ட வரலாறுகளைக் கொண்டது இந்த நாவல்.இந்தியாவில்,பல கல்லுரிகளில் எனது எழுத்தை மேற்படிப்புக்க எடுத்திருக்கிறார்கள். தனது முனைவர் பட்டத்திற்கு எனது நாவல்களை ஆய்வு செய்த திருமதி. பிரியா அவர்கள், இந்நூல் பற்றிக் குறிப்பிடும்போது,'தில்லையாற்றின் கரையில் வரும் கமலத்தின் (கௌரியின் ஒன்றை விட்ட தமயனை விரும்பும் மைத்துனி முறையான பெண்) தாய்,புஸ்பா ஒருத்தனைக் காதலிக்கிறாள்.அவனால் கருவுறுகிறாள்.அவன் அவளைத் திருமணம் செய்ய மறுத்து விடுகிறான்.இப்படிக் காதலித்தவன் திருமணம் செய்ய மறுக்கின்றபோதும் பெண்கள் சிக்கல்களுக்கம் இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.யாரோ ஒருத்தனை நம்பி ஏமாந்து வயிற்றில் நாலுமாதக் குழந்தையுடன் இருந்தபெண்ணில் பரிதாபப் பட்டுத் திருமணம் செய்தாராம் பெரியப்பாவின் தமயன்'; (பக் 250)'.

இதன் மூலம் அக்காலத்தில்,கிழக்கிலங்கையில் சமூகம் சார்ந்த முன்னேற்றக் கருத்துக்கள் எப்படி,இளம் தலைமுறைப் பெண்கள,; ஆண்களால் செயற்படுத்தப் பட்டன என்பது தெரிகிறது. இலங்கையில் அக்கால கட்டத்தில் முக்கியமாக வடக்கிலும் கிழக்கிலும் ஒரு மாற்று சிந்தனை பேரலை வந்த கால கட்டமாகும். அதன் பிரதி பலிப்பே கௌரி போன்ற,பின் தங்கிய கிராமத்துப் பெண்களின் கல்வி சார்ந்த போராட்டமுமாகும். அதுதான் தில்லையாற்றங்கரை நாவல்,(த பாங்ஸ் ஒவ் த றிவர் தில்லை') பெண்களைச் சிலிர்த்தெழப் பண்ணும் கதை.அதைத் தங்கள். 'இந்தியக்' கதையாக வெட்கமின்றித் திருடியிருக்கிறார்கள்.

தயவு செய்து,தமிழ் இலக்கியவாதிகள் இந்தத் திருட்டுகளைக் கண்டிக்கவும். இல்லையென்றால்,பெண்கள் படைப்புகள் மட்டுமல்ல, நாளைக்கு உங்கள் படைப்புகளும் களவாடப் படும். ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல நல்ல உள்ளம் கொண்ட இலக்கியவாதிகளும் இப்படியான செயல்களுக்குக் கண்டனங்கள் தெரிவித்து இந்தக் கும்பலின் கேவலத்தை உலகறியப் பண்ண வேண்டும்.

இந்தியப் படத்துறையில் இப்படி எத்தனையோ திருட்டுகள் நடப்பதாகச் சொன்னார்கள். இது திருட்டு மட்டுமல்ல இலங்கைத் தமிழரின் இலக்கிய மாண்மையை அவமதிக்கம் ஒரு செயல். எங்கள் சரித்திரத்தைத் திருடிப் பிழைக்கும் கேவலமான வியாபாரத்தைத் தடை செய்ய இலக்கியவாதிகள் மனித உரிமைவாதிகள், அக்கொடுமையைத் தட்டிக்கேட்கும் மனச் சாட்சியுள்ள நல்ல மனிதர்கள் முன்வரவேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.