வர்ணம் இசைக்கல்லூரியின் இயக்குநரும் இசைக்கலைஞருமான வர்ணகுலசிங்கம் ராமேஸ்வரன் கோவிட் காரணமாக மறைந்த செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். துயருற்றேன். இவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் இவரது இசை நிகழ்ச்சிகளை யு டியூப் காணொளிகள் மூலம் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். தனது இசைக்கல்லூரி மூலம் இளங்கலைஞர்களை உருவாக்கி வந்துள்ளதை அறிந்திருக்கின்றேன். சந்திக்காமலேயே எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவரது தோற்றம் ஊடகங்கள் வாயிலாக நினைவில் பதிந்துள்ளது. இவர் என் முகநூல் நண்பர்களிலொருவர்.

நண்பரின் எதிர்பாராத மறைவினால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரினை நானும் பகிர்ந்துகொள்கின்றேன். சில மரணங்கள் எதிர்பாராதவை. அதிர்ச்சி தருபவை. இவரது மரணமும் அத்தகையதொன்று. இவரது நினைவாக ஒரு பாடல்: 'மறந்து போகுமோ மண்ணின் வாசனை' (பாடலாசிரியர் - கலைவாணி இராஜகுமாரன்.  இலங்கையில் யுத்தச் சூழல் நிலவிக்கொண்டிருந்த காலத்தில் உருவான பாடல் அக்காலப் புகலிடத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றது. அவ்வகையில் முக்கியமானது). - https://www.youtube.com/watch?v=QbnnJvUrYvk