இன்று கே.எஸ்.ராஜா நினைவு தினம். எம் தலைமுறையினரின் பதின்ம வயதுப்பருவத்தில் எம்மையெல்லாம் கவர்ந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர்களில் ஒருவர். இவரது குரலும், இவரது தனித்துவம் மிக்க அறிவிப்புப் பாணியும் இவரது பலமான அம்சங்கள். இவரைப் பற்றி எண்ணியதும் முதலில் நினைவுக்கு வருவது: தனது பெயரைக் குறிப்பிடுகையில் சிவாஜியின் ராஜா படப்பாடலொன்றில் வரும் ராஜா என்னும் சொல்லை ஒலிக்கச்செய்வார். அதுதான்.

இது போன்ற சிறு சிறு விடயங்கள் அவரது அறிவிப்புக்கு மெருகூட்டின. இவ்விதமான தனித்துவமான அம்சங்களைத் தனது ஒலிபரப்பில் புகுத்துவதில் வல்லவர் இவர்.

இலங்கையில் , இலண்டனில் பல்கலைக்கழகப் பட்டங்கள் பெற்ற இவர் ஒலிபரப்புத் துறையின் மீதிருந்த ஆர்வத்தால் அத்துறைக்குள் புகுந்து வெற்றியீட்டியவர். ஆனால் போர்ச்சூழல் இவரையும் பலி கொண்டது துயரகரமானது. இவர் நினைவாக இங்கு நான் பதிவிட்டிருக்கும் புகைப்படம் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்களின் பதிவொன்றில் கிடைத்த புகைப்படமொன்றிலிருந்து வெட்டியெடுத்தது. அதற்காக அவருக்கும் என் நன்றி.

இவரை ஒருமுறை நேரில் சந்தித்திருக்கின்றேன். ஆனால் அச்சந்திப்பில் அவருடன் கதைக்கவில்லை. அப்பொழுது ஒரு தடவை யாழ் மெயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலகட்டம். அப்புகைவண்டியில் இவரும் பயணித்துக்கொண்டிருந்தார். இவரைச்சுற்றி, இவரை அறிந்து கொண்ட கூட்டமொன்று கூடியிருந்தது. இவரும் அவர்களுடன் சுவையாக உரையாடிக்கொண்டிருந்தார். இவர்தான் கே.எஸ்.ராஜா என்று யாரோ கூற, அறிந்து இவரைப்பார்த்து அவரா இவர் என்று வியந்து நின்றேன். நினைவிலுள்ளது.

கே.எஸ்.ராஜா நினைவாக அவர் குரல் ஒலிக்கும் இணைய இணைப்பொன்றையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்: https://www.youtube.com/watch?v=SEjrdz-koC0

இவரைப்பற்றிய விரிவான விக்கிபீடியாக் குறிப்பு: https://ta.wikipedia.org/s/ub4