கே.வி.மகாதேவனின் இசையில், கவிஞர் வாலியின் கருத்துச்சிறப்பு மிக்க வரிகள், டி.எம்.எஸ்ஸின் குரல், எமஜிஆர்,ஜெயலலிதா மற்றும் சக நடிகர்களின் (சந்திரபாபு, சோ என)  நடிப்பு இப்பாடலை எனக்குப் பிடித்த பாடல்களிலொன்றாக்கி விட்டன. பாடலில் வாத்தியக் கலைஞர்களின் கைவண்ணம், கோரஸ் பாடும் குழுவினரின் திறமை இவற்றையெல்லாம் மிகவும் இரசித்தேன். பாடல் மிகவும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.

பாடலில் வரும் பின்வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை:

"பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை"

"சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே"

"வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?"

"நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்"

"தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு"

ஆக, பாடல் முழுவதுமே எனக்குப் பிடித்த வரிகளால் நிறைந்துள்ளது. குறிப்பாகக் கவிஞர் வாலி எம்ஜிஆர் அக்காலகட்டத்தில் பின்பற்றிய திமுகவின் கொள்கையினை, கொடி வர்ணத்தையெல்லாம் மிகவும் சாமர்த்தியமாக இப்பாடலில் "நீ கடவுளைப் பார்த்தது கிடையாது, அவன் கறுப்பா சிவப்பா தெரியாது. இறைவன் ஒருவன் இருக்கின்றான், இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்" என்னும் வரிகளில் கையாண்டிருக்கின்றார். 'ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்றவர் அண்ணா.  கறுப்பும், சிவப்பும் திமுகவின் கொடியின் நிறங்கள்.

பாடலின் இறுதிக் காட்சிகளில் எம்ஜிஆரின் நடிப்பு, செளந்தராஜனின் உணர்ச்சி மிக்க குரல், அவற்றுக்கு அணி சேர்க்கும் கே.வி.மகாதேவனின் இசை பார்ப்பவரை, கேட்பவரை உணர்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்லும். அதுவரையில் சர்வாதிகாரியின் முன் முகமூடியிட்டு பாடி நிற்கும் எம்ஜிஆர், விலங்கிடப்பட்ட அன்னை பண்டரிபாயைக் கண்டதும், இதற்குப் பிறகும் பயப்பட என்ன இருக்கிறது என்னும் நிலையில், முகமூடியைக் கழற்றியெறிந்து விட்டு,

"தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு"

என்று பாடும் காட்சியில் இரசிகர்கள் உணர்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

பாடல் வரிகளும் , வரிகளை அவை வெளிப்படுத்தும் உணர்வுடன் வெளிப்படுத்தும் இசையும், டி.எம்.எஸ்ஸுன் குரலும், எம்ஜிஆர்  குழுவினரின் நடிப்பும் பாடலின் சிறப்பம்சங்கள். பாடலிலுள்ள நர்த்தகிகள், குழந்தைகள், ஜெயலலிதாவின் நடன அசைவுகள், நடிப்பு எல்லாமே சிறப்பாக  அமைந்திருக்கின்றன. அவற்றுக்குப்பொருத்தமாக இசையும், கோரஸும் அமைந்து இன்பமளிக்கின்றன.

இசை: கே.வி.மகாதேவன்
பாடல் வரிகள்: கவிஞர் வாலி
பாடகர்: டி.எம்.எஸ்
நடிப்பு: எம்ஜிஆர்
படம்: அடிமைப்பெண்
https://www.youtube.com/watch?v=pYwAC5b2pZw