இளைஞனொருவன் தன் நெஞ்சுக்கினியவளை நினைத்துப்  பாடுவதாக அமைந்துள்ள பாடலின் வரிகள் அனைத்தையுமே நெஞ்சில் நிலைத்து நிற்க வைக்கும் வகையில் எழுதியுள்ளார் கவிஞர் வாலி. முதலிரண்டு வரிகள் போதும் இப்பாடலை நிலைத்து நிற்க வைப்பதற்கு. எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "காற்று வாங்கப் போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன்." இவ்வரிகளைக் கேட்கையில் இயற்கையின் அழகில் மெய்ம்மறந்தபடி , காற்று வாங்கப் போகையில் ஏற்படும் அமைதி கலந்த இனிமை எம்மை வருடிச் செல்லும்.

முதன் முதலில் இப்பாடலைக் கேட்ட பால்யப் பருவத்தில் அடுத்து வரும் வரிகளை உணரும் பக்குவமில்லை. ஆனால் இவ்வரிகளைக் கேட்ட உடனேயே பிடித்து விட்டது. அத்துடன் வாத்தியாரின் வசீகரமும், டி.எம்.எஸ்ஸின் இளங்குரலின் இனிமையும் அத்தருணத்திலேயே நெஞ்சின் ஆழத்தில் சென்று குடியேறி விட்டன. இன்று வரையில் அவை நிலைத்து நிற்கின்றன.

பதின்ம வயதுகளில், உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்குள்ளாகியிருந்த தருணங்களில் அடுத்து வரும் வரிகளில் பொதிந்து கிடந்த உணர்வுகளை விளங்கி, இரசிக்க முடிந்தது. மானுட வாழ்வின் வளர்ச்சிப்படிகளில் காதல் உணர்வுகள் முக்கியமானவை. மானுட வாழ்வின் வேறொரு பக்கத்தை அவை உணர்த்தி வைப்பவை. சங்கத்தமிழ் இலக்கியங்கள் இவ்விடயத்தில் முதலிடத்திலிருப்பவை. காதலர்களின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இலக்கியப்படைப்புகள் அவை. அவனோ அவனது காதலுக்குரிவள் பற்றிய நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றான். அவனால் அவளை மறக்க முடியவில்லை.

விழித்திருக்கும் நிலவும் கூட , அமைதியான இரவில், அதன் தண்ணொளியில் தூங்குவதைப்போல் அவனுக்குத் தென்படுகின்றது. ஆரவாரமற்ற இரவின் தனிமையும் , அவ்வமைதிக்கு இனிமை சேர்க்கும் நிலவின் தண்ணொளியுமே அவனுக்கு நிலவும் தூங்குவதைப்போல் உணர வைக்கின்றன. ஆனால் அவனுக்கோ அவள் பற்றிய நினைவுகளை விட்டு விலகியோட முடியவில்லை. நிலவு கூடத் தூங்கும். ஆனால் அவள் பற்றிய நினைவுகள் தூங்கவில்லை. நினைவுகள் தூங்கவில்லை என்பது அற்புதமான படிமம். நிலவு தூங்கும். ஆனால் நினைவு தூங்காதுள்ளது. இங்கு மறைமுகமாகக் கவிஞர் நினைவை நிலவாக உருவகிப்பதாகவே நான் கருதுகின்றேன். அந்த நிலவு தூங்குகின்றது. ஆனால் இந்த நினைவுநிலா தூங்கவில்லை. நினைவுகளை நிலவுக்கு உருவகிக்கும் சிறப்பு மிகு படிமமிது. நிலவைப்போல் அவளைப்பற்றிய நினைவுகளும் தண்மையானவை. ஆனால் அத்தண்மையான நினைவுகளுக்குரியவள் கொஞ்ச விலகி நின்றாலும் அவனது இதயத்தால் அப்பிரிவினைத் தாங்க முடியவில்லை.

"நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை"

இவ்விதமாக அவளைப்பற்றிய நினைவுகளில் மூழ்கிக் கிடக்கின்றான் அவன். அவளது நடையின் அழகு கூட அவனை ஆட்டி வைக்கின்றது. அவளது  நடையைப்பற்றிக் குறிப்பிடும் கவிஞர் அதனை தென்றலுடன் ஒப்பிடுவது இப்பாடலின் இன்னுமொரு சிறப்பம்சம்.

தென்றல் மென்மையானது. அது வீசுகையில் நாம் அடையும் இன்பமே தனி. ஆனால் இங்கோ அவள் நடந்து செல்கின்றாள்.  இங்கு அவள் நடக்கையில் அவளைச்சுற்றி வீசும் காற்றும் அசையுமல்லவா. அவ்விதம் அசையும் காற்றினையே , அவனை வருடிச் செல்லும் தென்றலாகக் கவிஞர் காண்கின்றார். இவ்விதம் அவள்  நடந்து செல்கையில் உருவாகும் தென்றல் கண்டு , வீசும் மென் தென்றல் கூட வெட்கித்து ஓடி ஒளிகின்றது. வீசும் தென்றல் கூடத்  தென்றலாக அவள் நடை பயில்கையில் அதற்கு முன்னால் நிற்க முடியாமல் , ஓடி ஒளிந்து விடுகின்றது. அந்த அழகு  அவனது நெஞ்சை அள்ளிச் செல்கின்றது.

"நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்"

அடுத்து வரும் வரிகளும் கவிஞரின் கவித்துவத்தை விளக்கி நிற்பவை.

அவனது உள்ளத்தை ஊஞ்சலாக்கி அவள் நினைவுகளாக அதில் ஆடிக்கொண்டிருக்கின்றாள். அவளது எழில்கொட்டிக் கிடக்கும் இளம்பருவத்து வனப்போ அவனது பார்வை நீந்தும் ஓடை.  படைப்புச் சிறப்பு மிக்க கற்பனை!

"என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை"

எளிமையான, சிறிய சீர்களைக்கொண்ட வரிகள். ஆனால் அவை மானுடக் காதல் அனுபவம் தோய்ந்த வரிகள். கவிஞர் வாலியின் சிறந்த காதற்பாடல்களிலொன்று இப்பாடல். காதலைப்பற்றிப்பாடும் சங்கத்தமிழ்ப்பாடல்களைப்போல் எக்காலமும் நிலைத்து நிற்கக்கூடிய இக்காலப்பாடல்களிலொன்று இப்பாடல்.

பாடலைக் கேட்டு, பார்த்து இரசிக்க: https://www.youtube.com/watch?v=FRYbKdvQsoY


படம்: கலங்கரை விளக்கம்.
வரிகள்: கவிஞர் வாலி.
இசை: எம்.எஸ்.வி.
நடிப்பு: எம்ஜிஆர் &  சரோஜாதேவி.

பாடல் முழுமையாக:

நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்(நான் காற்று)

நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்(நான் காற்று)

என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்