காலத்தால் அழியாத கானங்கள்: "ஒரு வருசம் காத்திருந்தா கையிலொரு பாப்பா"

பட்டிக்காட்டுப் பொன்னையா வந்தது தெரியாமல் போன எம்ஜிஆர் திரைப்படங்களிலொன்று. இலங்கையில் திரையிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் இப்பாடலை யு டியூப்பில் கேட்டபோது உடனடியாகவே பிடித்துப்போனது.. முதற் காரணம் டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலினிமை. அடுத்தது கே.வி.மகாதேவனின் இசை. அடுத்த காரணம் ஒன்றுமுண்டு. அது எம்ஜிஆர் & ஜெயலலிதாவின் நடிப்பு. பாடலுக்கேற்ப பாடலைச் சுவையாக்குவதில் இருவரின் பங்கும் முக்கியமானது. பாட,ல் வரிகளைப்பொறுத்தவரை குறிப்பிடத்தக்கதாக எவையுமில்லை, சந்தத்துக்கு எழுதியவை என்பதைத்தவிர.

பாடலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டமாக "நித்திரையை நீ மறக்க!" என்று வாத்தியார் (டி.எம்.எஸ்) கூற ஜெயலலிதா "ம்ஹூ' (சுசீலா) என்பார். தொடர்ந்து 'நீல விழி தான் சிவக்க' என வாத்தியார் கூற , ஜெயலலிதா 'ஓஹோ' என்பார். மீண்டும் வாத்தியார் "நித்திரையை நீ மறக்க!" என்று கூற, ஜெயலலிதா 'ஆகா' என்பார். மீண்டும் "'நீல விழி தான் சிவக்க" என்று வாத்தியார் தொடர, ஜெயலலிதா 'ம்ஹூ' என்பார். மேலும் டி.எம்.எஸ் 'முத்திரையை நான் பதிக்க!' என்று தொடர்ந்து 'முந்நூறு நாள் நடக்க!; என்று முடிக்க, ஜெயலலிதா சிரிப்பார். சிரித்தது ஜெயலலிதாவா சுசீலாவா என்பதில் எனக்கொரு சந்தேகமுண்டு. தொடர்ந்து ஜெயலலிதா "உன் முகம் போலே" என்பார். பதிலுக்கு வாத்தியார் 'ஆகா" என்பார். மேலும் ஜெயலலிதா ' என் மடி மேலே" என்பார். வாத்தியார் ஓகோ' என்பார். பாடலின் இப்பகுதியை நடிகர்களுக்காகவும்,. பாடகர்களுக்காகவும் மிகவும் இரசித்தேன். நீங்களுமொரு தடவை அப்பகுதியைக் கேட்டுப்பாருங்கள். மயங்கி விடுவீர்கள்.

எவ்வித விரசமுமில்லாத காதலர் இருவருக்கிடையிலான உணர்வுகளை , கனவுகளை வெளிப்படுத்தும் பாடலிப்பாடல்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திரையில் இணைந்து நடித்த கடைசித்திரைப்படம் 'பட்டிக்காட்டுப்பொன்னையா'. பின்னர் சிறிது காலம் பிரிந்திருந்தாலும், மீண்டும் அரசியலில் இணைந்து பின் இன்றும் மெரீனாவில் நிரந்தரமாக இணைந்திருக்கின்றார்கள் என்பதும் இப்பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வந்தது.

https://www.youtube.com/watch?v=6LQxkixodb8