மனித வாழ்வின் ஒரு கூற்றை, யாரேனும் ஒருவரின் பண்பை அல்லது செயலை, ஏதேனும் ஒன்றன் இயக்கத்தை அல்லது செயற்பாட்டை எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியத்தைக் கலைச்சுவை சிறிதும் குன்றா வண்ணம் வெளிப்படுத்துவதே சிறுகதையின் நோக்கம் எனலாம். இந்தச்சிறுகதைத் தொகுப்பின் சிறப்பம்சம் என்னவெனில்; இதில் இடம்பெற்ற பல கதைகள் மனிதவாழ்வில் நம்பிக்கை ஔி ஏற்றுவனவாக அமைந்துள்ளன. கதாபாத்திரங்கள் வாழ்க்கை எனும் பாதையில் செல்லும் வழியில் எதிர்ப்படும் தடைகளான  பூட்டிய கதவு,  எழும்பி நிற்கும் சுவர்,  தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சாளரத்தையும் சாத்திவிடும் உள்நுழையும்  பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்றோ கடந்து செல்வதாக பல கதைகள் முடிவு பெறுகின்றன.

அடுத்தது, இக்கதைகளின் ஓட்டம் எந்த இடத்திலும் தங்கு தடையின்றி போகிறது. இக்கதைகள் முறையாக எடுத்துத் தொடுத்து முடிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பக்கபலமாக அவருடைய எளிய சொல்லாடல்கள் வசன அமைப்புகள் அமைந்தமை சிறப்பு; வாசகன் எந்தச் சிரமமும் இன்றி கதாசிரியர் சொல்ல வந்ததைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற பல கதைகள் "நம்பிக்கைதான் வாழ்க்கை" என்பதை வலியுறுத்தி நிற்கின்றன. இந்த நம்பிக்கை வாழ்வில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மற்றும் துயரங்களை கடந்து செல்ல உதவுவதுடன் எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும், வாழ்க்கையை முன்னேற்றிச் செல்ல தேவையான நம்பிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.  இந்த நம்பிக்கை, ஒரு நபரை செயலில் இறங்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், இறுதியில் வெற்றியை அடையவும் தூண்டுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த உந்துதல் சக்தியாக இங்கு வெளிப்படுகிறது.

இவரின் அநேகமான கதைகளில் "காசேதான் இன்றைய உலகில் கடவுள்" என்ற கருத்து நேரடியாகவும் மறைமுகமாகவும் புலனாகிறது. பொருள் வசதி இல்லாதபோது உறவினர்கள் உங்களைப் புறக்கணிக்கலாம் அல்லது அவமதிக்கலாம். கையில் பணம் இல்லாவிட்டால், பிள்ளைகள் அல்லது மற்றவர்கள் உங்களிடம் மரியாதை காட்ட மாட்டார்கள் என்றும், பணம் இருக்கும் வரை மட்டுமே உங்களுக்கு மதிப்பு இருக்கும் என்பதை இவர் பல இடங்களில் சொல்லாமல் சொல்லுகிறார்.

இவரின் கதைகளை வாசிக்கும்போது பணத்தை வைத்து தான் உறவுகள் தொடர்கிறது என்றால் அப்படிப்பட்ட உறவுகள் வாழ்வில் இருக்கத் தான் வேண்டுமா? அவைகள் இன்றி வாழ்வை இறுதி வரை கடக்க முடியாதா? போன்ற கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன. இதுதான் நமது சமுதாயத்தின் இன்றையநிலை. இந்தக்கதைகள் எமது சமூகத்தின் கண்ணாடியாக இருந்த போதும்; இதை வாசிக்கும் போது ஒருவகையான அச்சம் மனதில் எழச்செய்கிறது. இப்படியே போனால் எமது சமூகத்தில் மனிதநேயமே அற்றுப்போய்விடுமா என்று முதலில் வரும் கதைகளை வாசிக்கும் போது எண்ணத் தோன்றியது, ஆனால் பின்னால் வரும் கதைகளில் வரும் சில கதாபாத்திரங்கள் அந்த எண்ணங்களைச் சீர்செய்தன.

பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்றுகூறுவார்கள். எமது சமூகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தப் பிறகு, அவர்களது மனம் பாசத்தில் மூழ்கி, ஒருவித வெறித்தனமான அன்புடன் அவர்களை கவனித்துக்கொள்வார்கள். இதனால் அவர்கள் பிள்ளைகளின் தவறான செயல்களைக்கூட பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். ஆனால், பிள்ளைகள் தங்கள் மனம் கல்லின் கடினத்தன்மையைப் போல, உணர்ச்சியற்றதன்மை கொண்டோ அல்லது பெற்றோரின் தியாகத்தை உணர்ந்து கொள்ளாமலோ இருப்பார்கள். அவர்கள் பெற்றோரின் பாசத்தை ஒரு பொருட்டாகக் கருத மாட்டார்கள்.

இங்கேயுள்ள "தீதும் நன்றும்" என்றகதையில் ஒரு தாய். இவள் தன் ஒரேயொரு மகனைப் பார்த்துப் பார்த்து பொத்திப் பொத்தி வளர்த்திருக்கிறாள். அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுக்கிறாள். நல்ல பெண்ணாகப் பார்த்து ஊர் மெச்சும்படி திருமணம் செய்து வைக்கிறாள். மகனும் மருமகளும் சொகரியமாக இருப்பதற்கு வீட்டில் வசதிசெய்து கொடுக்கப்படுகிறது. ஆனால் திருமணம் முடிந்து சிலகாலங்களில் அவர்கள் வெளிநாடு செல்ல முடிவெடுத்தபோது தாய் உடைந்து போகிறாள்.

" விதியோடும் மதியோடும்" என்ற இன்னுமொரு கதையில் எவ்வளவோ கஷ்டப்பட்டு வளர்த்த மகன் வெளிநாடு சென்றபின் தாயுடன் எந்தத்தொடர்பும் இல்லாமல் இருக்கிறான். பல ஆண்டுகளின் பின் சொத்துக்காக தாயைப் பார்க்க வருகிறான். கதையின் முடிவில் வரும் தாயின் ஏக்கம் வாசகரை நிலைகுலைய வைக்கிறது.

"தூறல்கள் மழையாகலாம்" என்ற கதை தன் மகனையும் குழந்தையையும் இழந்த மருமகளின் மறுமணத்தில் அக்கறை கொள்ளும் மாமியை மிக அழகாகச் சித்தரித்து நிற்கிறது.

இளம் விதவைகளின் மறுமணம் அவசியம் என்பதற்குப் பல சமூக, நீதி மற்றும் வாழ்வாதாரக் காரணங்கள் உள்ளன. இது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, சமூகத்தின் பாரபட்சமான பழக்கவழக்கங்களை எதிர்த்து நிற்கவும் உதவுகிறது. பண்டைய காலங்களில் விதவைகளுக்கு மறுமணம் தடை செய்யப்படிருந்தாலும், தற்காலத்தில் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பல சமூகங்கள் இதைப் பலப்படுத்துகின்றன. 

விதவைகள் மறுமணம் செய்ய தடை விதிப்பது பாரபட்சமானது. ஆண்கள் மறுமணம் செய்ய அனுமதிக்கும் போது, பெண்கள் மறுமணம் செய்ய தடைசெய்வது சமத்துவமானதல்ல. அத்துடன் ஆணின் தவிப்பு அடங்கிவிடுவது , பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடுவது. விதவைகள் மறுமணம் செய்யாமல் இருப்பது அவர்கள் துன்பத்தில் வாழவும், சமூகச் சீர்கேடுகளால் மாயவும் காரணமாகிறது. மறுமணம் அவர்களுக்குப் புது வாழ்வு அளிக்கிறது.   திருமணமான ஒரு பெண் தன் இணையை இழக்கும் போது, வாழ்வதற்கும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும், மறுமணம் செய்வதற்கும் அவளுக்கு முழு உரிமை உண்டு. 

இளம் விதவைகள் மறுமணம் என்பது தனிப்பட்டவர்களின் வாழ்வையும், சமூகத்தின் முன்னேற்றத்தையும் மேம்படுத்தும் ஒரு முக்கியமான அம்சமாகும். இந்தக் கதையில் வரும் மாமியார் பாத்திரம் மறுமணம் பற்றி மிகவும் முற்போக்குச் சிந்தனையுடன் அமைந்திருப்பது சிறப்பு.

இந்தச் சிறுகதைத்தொகுப்பின் கதாசிரியர் கதாபாத்திரங்களின் உணர்வுகளை விபரிப்பதை விட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது எனது கருத்து. சிறுகதைகளில் உணர்வுகள் கதையின் மையக் கருவாக அமையும் தனிமனித உணர்ச்சிப் போராட்டங்கள், உளவியல் சிக்கல்கள், சமூகக் கட்டுப்பாடுகள், மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளின் மூலம் வெளிப்படும் மனநிலைகளாகும். ஒரு சிறுகதை, வாசகர்கள் கதையின் கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், தங்கள் சொந்த அனுபவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் உதவுகிறது. 

உணர்வுகள் கதையின் பாத்திரங்களுடன் வாசகர்களை ஒன்றிணைக்கின்றன, கதையைப் படிக்கும்போது வாசகர்கள் அந்தக் கதாபாத்திரங்களின் நிலையில் இருந்து உணர்வுகளை உணர உதவுகிறது. 

வெறும் நிகழ்வுகளை மட்டும் விவரிப்பதற்குப் பதிலாக, கதாபாத்திரங்களின் உணர்வுகளின் மூலம் கதையின் கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்க உதவுகிறது. 

சிறுகதையில் காட்சிகள், படிமங்கள், உவமைகள் மிகவும் அவசியமானவை, ஏனெனில் அவை கதையின் உள்ளடக்கத்தை வாசகரின் மனதில் ஆழமாகப் பதியச் செய்ய உதவுகின்றன. படிமங்கள், சொற்களின் வெளிப்படையான பொருளைத் தாண்டி, வாசகரின் கற்பனைக்குச் சவால் விட்டு, பல அர்த்தங்களை உருவாக்கவும், கதையின் உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை அதிகரிக்கவும் துணைபுரிகின்றன என்பது எனது கருத்து.  நான் சுருக்கமாகக் கூறவருவது என்னவென்றால்: கதாசிரியர் காய்ச்சிய கூழ் சுவையாகத்தான் உள்ளது. இன்னும் சிறிதளவு உப்புச் சேர்த்தால் இன்னும் நல்ல சுவையாக இருக்கும் என்பதைத்தான்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இக்கதைகளில் கதாசிரியர் எடுத்துக்கொண்ட நோக்கங்களை சரியான பாத்திரங்களின் உதவியுடன் நகர்த்தி கதைகளைச் செம்மையாகப் புனைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இக்கதைகள் எமது சமூகத்தின் கிழிசல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. பல கதைகள் நேர்மறைச் சிந்தனைகளை வாசகர்கள் மனதில் விதைப்பதில் வெற்றிபெற்றுள்ளன. இவர் இன்னும் பல அருமையான படைப்புகளை தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்து உச்சம் பெறவேண்டும் எனக் கூறி கதாசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

'டிஜிட்டல்'  ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி:VNG