'நைல் நதிக்கரையோரம்' -  நடேசன் | எதிர் வெளியீடு (152 பக்கங்கள்)

உலக வரலாற்றில் பல போர்களையும் பல படையெடுப்புகளையும் எதிர்கொண்ட எகிப்து தேசத்தை பற்றிய சிறிய வரலாற்று முன்னுரையுடன் “நைல் நதிக்கரையோரம்” என்ற பயணக் கட்டுரை மிக அருமையாக தொடங்குகிறது. இந்த புத்தகத்தின் எழுத்தாளர் நடேசன் அவருடைய குடும்பம் மற்றும் நண்பரின் குடும்பத்துடன் எகிப்து பயணம் மேற்கொண்ட குறிப்பு இது.

முதல் கட்டுரை எகிப்தின் தலைநகர் கெய்ரோவை பற்றியது. தற்போதைய எகிப்து இஸ்லாமியத்தையும் இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதால் இஸ்லாமிய மதம் எகிப்திய வருகையிலிருந்து அதன் வரலாற்றை சிறுகுறிப்பாக கொடுத்திருக்கிறார்.

புராதன எகிப்தின் தலைநகரம் மெம்பிஸ், கிரேக்கர் ஆண்டபோது அலெக்ஸாண்டிரா மற்றும் பிற்காலத்தில் கெய்ரோ என எகிப்து நிறைய தலைநகரங்கள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஏ டி 969இல் எகிப்தை கைப்பற்றிய ருசினியர்கள் அல் – கயிரோ என்று பெயரிட்டு அது பின் கெய்ரோவாக திரிபடைந்துள்ளது. இங்கே வாழ்ந்த மக்கள் சுனி இஸ்லாமியர்கள் மற்றும் கொப்ரிக் கிறிஸ்தவர்கள். இவர்கள் எகிப்தை சிலுவை யுத்தம் வரை ஆண்டிருக்கிரார்கள். அதன் பிறகு சுமார் 200 ஆண்டுகள் நிகழ்ந்த சிலுவை போருக்கு பிறகு ஜெருசலத்தை ஐரோப்பியர்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றிய சலாதின் எகிப்தை சிரியாவின் ஒரு மாகாணம் ஆக்கினார். காகேசிய இனத்தை சார்ந்த மாமலுக்கர்கள் சில காலம் ஆண்டிருக்கிறார்கள். அடுத்து பிரான்ஸை சேர்ந்த நெப்போலியன், ஓட்டமான் பேரரசு (துருக்கியர்கள்) என எகிப்தின் வரலாறு சுருக்கமாக விளக்கி இருக்கிறார்.

ஐரோப்பாவிற்கும் ஆசியாவுக்கும்ம் இடையே நடந்த வணிகப்பாதை “சில்க் ரூட்”. பல்வேறு போர்களினால் இந்த பாதை அடைபட்ட போது பெரும்பாலான வாணிகம் எகிப்தின் மூலமாகத் தான் நடந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கெய்ரோவில் அவர் தங்கியிருந்த மாளிகையின் பெயர் “ஜெசிரா பேலஸ்”. பிரான்ஸ் நாட்டின் மகாராணி தங்குவதற்காக உருவாக்கப்பட்ட மாளிகை. இது பிரான்சின் அரசமாளிகையின் பிரதியாக வடிவமைக்கைப்பட்டதாம். அலபஸ்ரர் பள்ளிவாசல் முகம்மதலியின் தனது இறந்த மகனது நினைவாக கட்டப்பட்டது. ஆனாலும் இது மாமலுக்கரர்களின் அடையாளங்களை அழித்து பள்ளிவாசல் உருவாக்கப்பட்டுள்ளது என்ற வரலாற்று செய்தியும் சொல்லி இருக்கிறார். அலபஸ்ரர் என்பதற்கு பளிங்கு கல் என்று அர்த்தம்.

“பொலிஸ் மியூசியம்” முன்னாள் ஜனாதிபதி அன்வார் சதாத்தை கொலை செய்த குற்றவாளிகளின் மறைவிடமாக இருந்துள்ளதாம். 1921 ல் அலேட்சாண்டிரியாவில் விபச்சார விடுதி நடத்திய இராயா, சக்கீனா என்ற சகோதரிகளும் இங்கு மறைந்திருந்து இருக்கிறார்கள். இந்த இரு பெண்களும் இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு கருப்பொருளாக இருந்துள்ளனர்.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த “கான் எல் – கலிலி” (khan el – khalili) என்ற கடைவீதி பற்றி குறிப்பிட்டுள்ளார். அதன் அருகில் அமைந்த எல் ஹுசைன் பள்ளிவாசல் ( el – Hussain mosque) கெய்ரோவின் இஸ்லாமிய பகுதி. இது வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் கூடும் இடமாதலால் இங்கு மூன்று முறை பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

“கீசா பிரமிட்” எகிப்தில் சுமார் ஐந்தாயிரம் வருடங்களாக மனிதன் விவசாயம் செய்தும்,தானியங்களை சேகரித்தும் அவித்தும், மதுபானம் தயாரித்தும் என ஒரு கலாச்சாரமே உருவாகி உள்ளது. இந்த மக்கள் இறந்தவர்களின் உடலை குழி தோண்டி புதை அதனை மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக பிரமிட் கட்டி பாதுகாத்துள்ளனர். இது மனித நாகரீகத்தின் முக்கிய புள்ளியாகும் என்கிறார்.

கீஸா பிரமிட் மிகப்பெரியது. இங்கே அலெக்சாண்டர், ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் போன்றவர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். இப்படி பிரமிடின் உள்ளே சென்றவர்களின் அகால மரணங்கள் காரணமாக பிரமிட்களை புதிராகவும் மர்மமானதாகவும் கருதி பல்வேறு படங்களும் நாவல்களும் உருவாகியுள்ளன என்கிறார்.

இந்த பிரமிட்டை கட்டுவதற்கு சுமார் 90 ஆயிரம் தொழிலாளர்களும் 20 வருட உழைப்பும் தேவைப்பட்டிருக்கிறது. 13.5 ஏக்கர் நிலப்பரப்பை அடிக்கட்டுமானமாக கொண்ட இந்த பிரமிட்டை இயந்திரங்களோ மிருகங்களின் உதவியோ இல்லாத நிலையில் இவ்வளவு பெரிய சாதனை வியக்க வைக்கிறது. எத்தனை மனிதர்கள் அது உடல் மன உழைப்பை உள்வாங்கி ஐம்பதாயிரம் வருடங்களாக வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது கீசா பிரமிட் !

இப்படியான வியக்கத்தக்க மிகப்பெரிய பிரமிடுகளை கட்டுவதற்கு அந்த மனிதர்களை தூண்டியது என்ன? இறந்த அரசன் தன் உடலோடு ஆகாயத்திற்கு செல்கிறான் அதற்கு இந்த உயரமான அமைப்பு பயன்படுகிறது என்ற கருத்தியலே காரணம் என்கிறார். சக்கார்ரா பிரமிட், பெண்ட் பிரமிட், ரெட் பிரமிட், விலை மதிப்புமிக்க டர்க்காய்ஸ் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சினபெரு, ஸ்பிங்ஸ் என்ற புகழ்பெற்ற சிலை போன்றவற்றையும் அவை தொடர்பான புராதான கதைகள், வரலாறுகள் என நிறைய தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

தீபஸ் என்ற லக்ஸர் நகரப்பயணத்தை பற்றிய அடுத்த கட்டுரை. லக்ஸர் கோயில் என்பது பல அரசர்களால் கட்டப்பட்ட பல கோயில்களின் ஒன்றுபட்ட ஸ்தலமாகும். இந்த இடத்தில் இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றும் கட்டப்பட்டிருக்கிறது. லக்சர் கோவிலின் முகப்பில் ஒபிலிக்ஸ் என்ற கருங்களால் செய்யப்பட்ட தூண் இருக்கிறது. இப்படிப்பட்ட தூண்கள் வழிபாட்டிற்கு உரிய புனித சின்னங்களாக இருக்கின்றன. எகிப்தின் முக்கிய அரசர்கள் இதுபோன்ற தூண்களை பல இடங்களில் நிறுவியிருக்கிறார்கள். அதிக எடை கொண்ட இந்த தூண்களை தரையில் நிமிர்த்து வைப்பது என்பது அந்த காலத்தில் எப்படி சாத்தியமானதோ! அப்படி பார்த்தால் நம்மூர் கோவில்களில் உள்ள கற்தூண்கள்? லக்சர் கோவிலில் நிறுவப்பட்டுள்ள இரண்டு பெரிய தூண்கள் நிறுவப்படும் போது எகிப்திய வரலாற்றின் முக்கிய அரசராக கருதப்படும் இராம்சி 2, அந்த வேலையில் ஈடுபட்டவர்கள் நிதானமாகவும் கவனமாகவும் வேலை செய்வதற்காக தனது இரண்டாவது மகனையே அந்த தூணில் கூறிய முனையில் கட்டி வைத்ததாக வரலாறு கூறுகிறது என்கிறார்.

எகிப்தில் அமைந்துள்ள கோயில்கள் அடிப்படையில் இந்து கோயில்களின் அமைப்பைக் கொண்டவை என்கிறார். ராஜ கோபுரத்திற்கு இணையான பைலோன்கள் அதனை தொடர்ந்து திறந்த மைதானம், உள் மண்டபம், கர்ப்ப கிரகம் ஆகியவற்றால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அது உருவாக்கப்பட்ட காலம்,அரசர்கள், தெய்வங்கள், கட்டிடகலை என ஒரு வரலாற்றையே இயற்றியுள்ளார்.

மோசஸ், யோசேப்பு – மேரி இஸ்ரேலிய அரசனுக்கு பயந்து மகன் யேசுவுடன் எகிப்தில் வாழ்ந்தது, மோசஸ் யூதர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு சென்றது இப்படிப்பட்ட நிறைய தகவல்களோடு நிறைந்திருக்கிறது புத்தகம். பைபிளில் கூறியுள்ள முக்கிய விஷயங்களில் எகிப்து சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் அதற்கான காரணங்களையும் சுவைபட கூறி இருக்கிறார்.

இந்துக்களுக்கு காசி, கத்தோலிகர்களுக்கு வாட்டிக்கண், யூதர்களுக்கு ஜெருசலேம் இஸ்லாமியருக்கு மக்கா போன்று எகிப்தியர்களுக்கு புனிதமானது “கர்நாக் கோவில்”. இங்கு மகா இராம்சியின் மிகப்பெரிய உருவச்சிலையும், ராட்சத தூண்களை கொண்ட ஹைபோ ஸ்டைல் ஹால் போன்ற அமைப்பும் கொண்டது. இந்த கோவிலில் உள்ள மதகுருமார்களும் அவரது வாழ்க்கை முறையும் பிராமணர்களை ஒத்து இருப்பதையும், இந்து கோவில்களில் அமைப்பும் ஒத்திருப்பது போன்று என்கிறார். உடைந்த கட்டிடங்களாக காணப்படும் இந்த கோவில் எகிப்திய சரித்திரத்திலிருந்து அழிக்கப்பட்ட ஒரு அரசனின் வரலாற்றை கூறுகிறது என்கிறார். துட்காமனின் அந்த வரலாற்றையும் செய்தியாக கொடுத்துள்ளார்.

எகிப்திய அரசியல் நடைமுறையில் அரசனின் புதல்வன் மட்டுமல்ல அரசனின் புதல்வியை திருமணம் செய்தவரும் எகிப்தை அரசாள முடியும் என்ற விதிமுறை பெண்களுக்கான முக்கியத்துவம் வரலாற்றில் கடந்த 3000 வருடங்களாகவே இருக்கிறது என்பது சான்று என்கிறார். குறிப்பிட்டு சொல்லும் படி ஹட்சிபுட், நெப்பிரிடி, நேபிரட்றி மற்றும் கிளியோபாட்ரா போன்றவர்கள் எகிப்திய வரலாற்றில் பேசப்படுகிறார்கள்.

புராதன எகிப்தியர்கள் எழுதுவதற்கு பயன்படுத்திய பாப்பிரஸ் என்ற புல் வகையை சார்ந்த தாவரத்தின் சுருள்களின் மூலம் எண்ணற்ற வரலாற்று செய்திகள் கிடைத்ததை நூல் நெடுகிலும் இயற்றியுள்ளார். கிரேக்கர்களின் காலத்தில் பாப்பிரஸ் அரசாங்கத்தின் உடமையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதன் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது. பெருமைவாய்ந்த அலெக்சாண்டரியா நூலகத்தில் பாப்பிரஸ் சுருள்களே பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நூலகம் பிற்காலத்தில் எரிந்து போனது எல்லோரும் அறிந்த வரலாற்று தகவல்.

நைல் நதியின் மீது மேற்கொண்ட சுவாரசியமான பயணத்தை பற்றி இயற்றியதுடன் அதுபோன்ற ஒரு பயணம் கிளியோபாட்ரா மற்றும் ஜூலியஸ் சீசரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கிளியோபாட்ரா தனது நாட்டை சுற்றிக் காட்டுவதற்காகவும் தன் பக்கத்து நியாயங்களை விளக்கும் பொருட்டும். நைல் நதியில் உல்லாச பயணத்திற்கு சீசரை அழைத்துச் செல்கிறாள். அதே பயணத்தில் கிளியோபாட்ரா கர்ப்பமாகிறாள். உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வு இந்த நைல் நதியில் நடந்து முடிந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

எட்பு (edfu) கிரேக்கர்களான தலாமிகளின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவில். பல நாடுகளின் வரலாறு கடவுளர்களின் கதைகளில் ஏற்பட்ட நம்பிக்கைகளில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாட்டை உருவாக்குவதறகு மட்டும் அல்ல தொடர்ச்சியாக மக்களை அரசரோடு இணைத்து வைத்திருக்கவும் இது போன்ற கதைகள் உதவுகிறது. அதுபோல எகிப்தின் கதைகளில் முக்கியமான கழுகு முகம் கொண்ட ஹோரஸ் கதையும் ஒன்று. இந்த ஹோரஸ் தனது மாமன் சேத்து என்பவருடன் போர் புரிந்து வெற்றி கொண்ட இடமாக எட்பு கணிக்கப்படுகிறது என்று வரலாற்றையும் சொல்கிறார்.

அடுத்து “அபுசிம்பல் மலைக்கோயில்”. இந்த கோவிலின் முகப்பில் 67 அடி உயரமான நான்கு ராட்சத சிலைகள் உள்ளன இதில் ஒன்று இராம்சியின் சிலை. அவரது காலடியில் எகிப்தின் எதிரிகளாக நூபிர், லிபியர் மற்றும் ஹிற்ரைற் சிலைகள் உள்ளது.

யூதர்கள், கிறித்தவர்கள், இஸ்லாம் என்ற மூன்று மதங்கள் சார்ந்த அரசியல் பின்னலையும், பாலஸ்தீன இஸ்ரேல் முரண்பாடுகள், யாவோவின் 10 கட்டளைகளுக்கு பின்னால் உள்ள வரலாறு என இந்த புத்தகம் கிட்டத்தட்ட இயேசு பிறப்பதற்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் இருந்து எகிப்தை பற்றிய ஒரு வரலாற்று களஞ்சியமாக இருக்கிறது. நான் சாதாரமான ஒரு பயண இலக்கியமாக இருக்கும் என்று வாசிக்க ஆரம்பித்து தெரியாத வரலாற்று நூலை வாசித்து மண்டை கனத்த அனுபவம் கிடைத்தது. அனைவரும் வாசிக்கலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.