ஏனைய இலக்கியப் படைப்புகளுடன் ஒப்பிடும்போது சிறுகதைக்கு வீரியம் அதிகம்; குறைந்த பக்க எண்ணிக்கைக்குள் ஆழமான மனப் பதிவை ஏற்படுத்தக்கூடியது. ஒரு கதையைப் படிக்கும்முன் இருந்த மனநிலையிலிருந்து அக்கதையைப் படித்து முடித்தப்பின் வேறொரு மனநிலைக்கு மாற்றக்க்கூடியது; கதைக்கும் வாசகனுக்கும் இடையே சொல்லால் சொல்லப்படாத இடைவெளியை விட்டு அவனோடு உறவாடிக்கொண்டே இருப்பது; அமைதியாய் இருக்கும் வாசகனின் சிந்தனையைக் கிளர்ந்தெழச் செய்வது; கிளர்ந்து கிடக்கும் வாசகனின் சிந்தனையை அமைதியுறச் செய்வது. இவ்வாறாக படைக்கப்படும் சிறுகதை பொழுதுபோக்கு அம்சம் குன்றியும் பொதுபுத்தியில் ஊறிக்கிடக்கும் ஒரு சிந்தனைக்கு மாற்றாக இன்னொரு சிந்தனையை விதைக்கும் தன்மை கொண்டது.
சிறுகதை என்பது ஒரு கனமான கலை வடிவம். இதைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்டக் கலை வடிவத்தைக் கைவரப் பெற்றவர் ரஞ்ஜனி சுப்பிரமணியம் அவர்கள் என்று கூறலாம்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பல்வேறுபட்ட வித்தியாசமான கருப் பொருட்களுடன் கதைகள் இடம்பெற்றிருப்பது; வாசகர் மனதில் ஒரு பல்சுவைக் கதம்பமாக இதன் நினைவுகளை மிளிர வைக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள சில கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு கதைசொல்லி நேரடியாக விளக்கம் கொடாது அவர்களின் செயல்களினால் பாத்திரங்களின் தன்மைகளை அழகாகப் படைத்திருப்பது சிறப்பு. இவரின் கதைகளை வாசிக்கும்போது நாமும் உணர்வுத்தொற்றுக்கு உள்ளாகி விடுகிறோம். பல கதைகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சில கதைகள் உரையாடல் வடிவில் அமைந்திருப்பதால் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் நெய்தல்நடை என்ற கதை, மிகவும் அழகாகப் புனையப்பட்ட இன்னொரு தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய கதை. மிகவும் மென்மையான உணர்வுகளால் நெய்யப்பட்ட கதை. இந்தக்கதை குறைந்த பாத்திரங்களுடன் ஒரு செய்தியை விளக்குவதாக அமைந்திருப்பினும் அதிலிருந்து நாம் பலவற்றைக் கற்கக்கூடியதாக உள்ளது. இராணுவப் பயிற்சி முகாமில் விமான இலத்திரனியலும் தொலைத் தொடர்பு குறித்துப் பயிற்சிகளை வழங்குபவர்தான் கதாநாயகன். அவன் திருமணமானவன் எனத் தெரிந்திருந்தும் அவனிடம் மயக்கம் கொள்கின்ற இளம்பெண். இறுதியில் என்னவாகிறது என்பதுதான் கதை. கதை உரையாடல் வடிவில் பல முடிச்சுகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. ஏதோ எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு கதையின் இறுதிப் பகுதி ஓரளவு ஏமாற்றமாகக் கூட இருக்கலாம். ஆனால் வித்தியாசமான கதையை வாசித்த அநுபவம் மனதை நிறைக்கிறது.
இந்தக் கதையின் கதாநாயகன் கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அஞ்சுவுடன் நட்பு ரீதியாக உரையாடுவது: அவள் அன்பு எனும் இழையினால்ப் பின்னப்பட்ட ஒரு கடிவாளத்தைக் கொண்டு அவனை வழிநடத்துவது போல் அமைந்துள்ளது. இந்த வகையில் அஞ்சு என்ற பாத்திரத்தை சிறப்பாகப் படைத்த றஞ்ஜனிக்கு ஒரு பாராட்டுத் தெரிவிக்கத்தான் வேண்டும். இதில் வரும் அஞ்சு என்ற பாத்திரம் நல்லதொரு ஆண்-பெண் நட்பிற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
ஆண்-பெண் நட்பு என்பது, பாலின பேதமின்றி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஆதரவாகப் பழகும் ஒரு உறவாகும். இந்த உறவு, எதிர்பாலினத்தைப் பற்றி சரியான புரிதலை ஏற்படுத்தும். இருப்பினும், பெரும்பாலான சமூகங்களில் ஆண்-பெண் நட்பு என்பது காதலாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையான ஆண்-பெண் நட்பு, காதலுக்கு அப்பாற்பட்ட ஆழமான புரிதலையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது.
ஆண்-பெண் நட்பைப் பற்றி எமது சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பல சமயங்களில், ஆண்-பெண் நட்பு என்பது காதலுக்கான ஒரு துவக்கமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், இது ஒரு தவறான கண்ணோட்டம். ஆண்-பெண் நட்பை ஒரு ஆழமான மற்றும் முதிர்ந்த உறவாகப் பார்ப்பதன் மூலம், ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து, சமூகத்தில் இணக்கமான சூழலை உருவாக்க முடியும். எதிர்பாலினத்தைப் பற்றிய தவறான புரிதல்களைக் களைந்து, அவர்களுக்குள் இருக்கும் இயல்பான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள ஆண்-பெண் நட்பு உதவுகிறது. குறிப்பாக நெருங்கிய நண்பரிடம் கூற முடியாததை கூட ஆண் நண்பர்களிடம் பெண்கள் பகிர்ந்து கொள்வார்கள். எதிர்பாலின நண்பர்கள் மூலம் கிடைக்கும் நேர்மையான கருத்துக்களும், ஆதரவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
/பெண்களின் உயர்ச்சியில் தடைக்கல்லாகும் அந்நிய ஸ்வரம் ஆண்கள்தான் என மனதில் நினைத்தவாறு, அரைகுறை சங்கீத அறிவு பெற்ற குதிரையொன்று சந்தேகம் எழுப்பியது ./என்று "பைரவி கதை சொன்னாள் " என்ற கதையில் றஞ்ஜனி எழுதியிருக்கும் வரிகளை வாசிக்கும்போது: இன்னும்தான் நமது சமுதாயம் மாறவில்லை என்ற எண்ணம்தான் எனது மனதில் தோன்றியது. இந்தக் கதையில் வரும் பைரவியின் பால்ய வயதில் ஏற்பட்ட பாலியல் சுரண்டலால் காயப்பட்ட பைரவியின் மனதில் அந்த அநுபவம் இன்றும் ஒரு வடுவாக இருப்பதை இக்கதை விபரிக்கிறது.
எமது ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஆண்களுக்கு அதிகாரம், சொத்துரிமை, மற்றும் சமூக முன்னுரிமைகள் வழங்குவதோடு, பெண்களைக் நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தி, கட்டுக்குள் வைக்கிறார்கள். இத்தகைய சமூகத்தில், குடும்பம், அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இது பெண்கள் கல்வி, சொத்துரிமை, மற்றும் பல அடிப்படை உரிமைகளில் பின்தங்கியிருக்க வழிவகுக்கும். இங்கே காணப்படும் சமூக மரபுகளும், கலாச்சாரச் சட்டங்களும் ஆணாதிக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. ஆணாதிக்கத்தின் கருவிகளாக வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகள் இன்றும் தலைவிரித்தாடி பெண்களைப் பலவீனப்படுத்துகிறது.
எமது சமுதாயத்தில் இன்றும் பெண்கள் கல்வி கற்பதற்கும், உத்தியோகம் பார்ப்பதற்கும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கும் பல தடைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பெண்கள் மீதான பாலியல் சுரண்டல், பாலியல் மிரட்டல்கள், பாலியல் வன்முறை, துன்புறுத்தல் போன்றவற்றால் அவர்களின் பாலியல் சுதந்திரம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.
"வானவில் போலொரு வாலிபம்" என்ற கதையில்; வானவில்லில் உள்ள வண்ணங்களின் கலவை போல, வாலிபப் பருவத்தின் பலவிதமான உணர்ச்சிகள், கனவுகள், திறன்கள், பால்யத்தின் வெளிப்பாடுகள் உரையாடல்களின் வழியாக வாஞ்சையுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சில கதைகளில் கூறப்பட்டிருக்கும் மேலதிக விளக்கங்கள் கதைப்புனைவிலிருந்து சற்று விலகி கட்டுரைப் பாங்கில் நகர்த்தப்படுவதைத் தவிர்த்திருக்கலாமோ என எண்ணத் தோன்றினாலும் இந்தச் சிறுகதைத் தொகுப்பை ஒட்டுமொத்தமாக உற்று நோக்கும் போது நல்தொரு சிறுகதைத்தொகுப்பை வாசித்த அநுபவத்தை வாசகர்களுக்கு தருகிறது எனலாம். ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பை வாசித்த அனுபவம் என்பது, பலவகைப்பட்ட கதைகளை ஒரே நேரத்தில் வாசித்துப் பலவிதமான மனித அனுபவங்களையும் வாழ்க்கைப் பார்வைகளையும் அறிந்துகொள்வதாகும். கதைகள் வழியாக வெவ்வேறு காலகட்டங்கள், சமூகச் சூழல்கள், மனித உணர்ச்சிகள் ஆகியவற்றை உணர்வதுடன், கற்பனைத் திறனும் சிந்தனைத் திறனும் தூண்டப்பட்டு, இலக்கிய ஆர்வம் தூண்டப்பட்டு சில சமயங்களில் கதைசொல்லியின் தனித்திறன் மற்றும் படைப்புத் திறன் வியக்கவைப்பதுடன், வாசகருக்கு முழுமையான வாசிப்பு அனுபவத்தையும் அளிப்பதாகும். அந்த வகையில் எழுத்தாளர் ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்கள் இதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். அவர் மேலும் பல படைப்புகளை இலக்கிய உலகுக்குத் தரவேண்டும் என அவரை நான் மனமார வாழ்த்துகிறேன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.