அனுபவங்களே சிலரை நம்முன் அறிமுகப்படுத்துகின்றன. சிலரை நண்பராக, சிலரை உறவினராக. சிலரை எழுத்தாளராக, கவிஞராக அறியச்செய்கின்றன. நடேசனை எனக்குத் தந்தது என் ஊர் உறவுமுறைதான். ஆனால், அவரது எழுத்துகள் எனக்குள் ஒரு புதிய உறவைப் பிறக்கச் செய்தன—ஒரு வாசகர்–எழுத்தாளர் உறவு. நடேசனின் பல நாவல்களை நான் வாசித்திருக்கிறேன். ஆனால், இந்த நாவல் தனித்துவம் வாய்ந்தது.

இது நம்மை ஒரு மறக்கப்பட்ட தீவுக்கு அழைத்துச் செல்கிறது. வளங்கள் குறைந்த, உறவுகள் குறைந்த, மக்கள் சத்தமும் கூட மெல்லியதாகத்தான் இருக்கும் ஒரு இனச்சூழலை; ஆனால் அந்த மண்ணின் வாசனை மட்டும் அழியாதது.

தன் பிறந்த ஊருக்கு மனைவியுடன் ஒரு நாள் தங்கிவரும் ஹீரோவின் பயணம் ஒரு கனவுக்குள் நம்மையும் அழைத்து செல்கிறது. கனவா? நினைவா? மர்மமா? – என்பதைத் தீர்மானிப்பது வாசகர் பொறுப்பு.
அந்த சித்தி வீட்டு இருட்டு அறையிலும், சுருட்டு புகையும் காரைப்பற்றை காடும் மறையும் இடத்திலும் நம்மையும் பயமுறுத்தும் நுண்மையை எழுத்தாளர் மிக நன்றாக சித்தரித்திருக்கிறார்.

இணங்காத நிஜங்கள், பின்னிய கனவுகள், உறவுகள் மீதான ஈர்ப்பு, பாசத்தோடு கலந்த சோகங்கள்—எல்லாமே நாவலை மனதுக்குள் குடியமர்த்துகின்றன.

மலைநாட்டில் தேயிலை கொய்வது போல, இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும்போது வாசகருக்குள் ஒரு பசுமை பிறக்கிறது. ஒரு பரவசமும், ஒரு பதற்றமும் உருவாகின்றன.

தாத்தாவின் உடைந்த கண்ணாடி, கசங்கிய பத்திரிகையின் மடியில் கிடக்கும் “கல்கி” இதழ், மொபைல் ஒளியில் வெளிப்படும் முகங்கள்—இவை வாசகனை நேரடியாக அந்த சூழலில் வாழ வைத்துவிடுகின்றன.

யாழ்ப்பாணக் கல்வி பயணங்களும், ஊர்களின் பெயர்களும், உணர்வுகளும் – நாவலின் உண்மைச் சூழலை வலுப்படுத்துகின்றன.

"தாத்தா வீடு" என்ற அத்தியாயம் ஒரு கனவுக்குள் கனவாக உருமாறுகிறது. மனச்சுழற்சி, கனவுப் பயம், பாசத்தின் நீரோட்டம், இழப்பின் வெறுமை – இவை அனைத்தும் வாசகனின் உள்ளத்தையும் அசைக்கின்றன.

இந்த நாவல் எளிய மர்ம கதை அல்ல. இது ஒரு உள்ளார்ந்த உணர்வுப் பயணம்.

பிறப்பிடத்தின் வாசனை காற்றில் கலந்தபோது, நம்முள் எழும் அதீத அனுபவங்கள் தான் இந்த நாவலை வாசிக்க வைக்கும் சக்தியாக உள்ளன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.