கண்டியில் உள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை ஈழத் தமிழ் நாடக இலக்கியத்திற்கு தொடர்ந்து தனது பங்கினை ஆற்றிவருகிறது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த்துறை பேராசிரியரான சுவாமி விபுலானந்த அடிகள் ஒரு நாடக ஆசிரியரும் ஆவார்.' மதங்க சூளாமணி' என்கிற நாடக இலக்கண நூலை எழுதிய முன்னோடி இவர். மகாகவி பாரதி பற்றிய முதல் ஆய்வினையும் நடத்தியவர் என்பது நாம் அறிந்த செய்தி. பின்னர் வந்த தமிழ்த் துறை தலைவர்களான பேராசிரியர்கள் கணபதிப் பிள்ளை, வித்தியானந்தன், தில்லைநாதன், துரை மனோகரன், தற்போதைய தமிழ்த்துறை தலைவர் பிரசாந்தன் வரை அனைவரும் நாடக ஆசிரியர்கள் . சிங்கள நாடக முன்னெடுப்புகளும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்விப் புலத்தால் பெரிதும் அரவணைக்கப்பட்ட ஒன்று . இத்தகைய பாரம்பரிய பின்புலத்துடன் பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஈழத்தமிழ் நாடக இலக்கியத்தை மையப் பொருளாக்கி ஐந்தாவது தமிழியல் மாநாட்டை கொரோனா பெருந்தொற்றின் போது 2020 ஆம் ஆண்டில் நடத்தியது. இதற்கான கட்டுரைகள் துறைசார்ந்தவர்களிடமிருந்து பெறப்பட்டன.தமிழ்நாட்டு நாடகத்திற்கும் ஈழத் தமிழ் நாடகத்திற்கு இடையேயான பிணைப்பினை நினைவு கூறும் வகையில் தமிழகத்து நாடகச் செயற்பாட்டாளர்களான வெளி ரங்கராஜன், பிரஸன்னா ராமஸ்வாமி, பிரளயன் கி.பார்த்திபராஜா, ஆர். ராஜு ஆகியோர் ஜூம் வாயிலாக அரங்கத் தலைமை உரையை அழைப்பின் பேரில் நிகழ்த்தினர். நாடக ஆர்வலனாக நானும் ஒரு சிற்றுரையை நிகழ்த்தினேன். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட கலாநிதி செல்லத்துரை சுதர்சன் ,திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அவை அனைத்தையும் ஹஈழத்தில் தமிழ்நாடக இலக்கியம்’ என்கிற நூலாக தொகுத்துள்ளனர்.
ஈழ நாடக அரங்கினதும் கல்விப்புலத்தினதுமான முக்கிய அடையாளமாக விளங்கும் பேராசிரியர் சி.மௌனகுரு இம்மாநாட்டின் துவக்க உரையை நிகழ்த்தியுள்ளார். ஈழ நாடகம் மட்டுமின்றி தமிழ்நாட்டு நாடகம் பற்றியும் அவர் வரலாற்றுப் பார்வையுடன் சுருக்கமாகவும் செறிவுடனும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளார். நாடகம் பிரதானமாக ஆற்றுகை வடிவம் என்றாலும் அது இலக்கியப் பிரதியாகவும் பெற்றுள்ள முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்த இலக்கியப் பாரம்பரியம் நம்மிடையே இருந்தபோதிலும் நாடகம் பற்றிய நல்லெண்ணங்கள் வளராததன் காரணமாகவே அதன் வரலாறும் பிரதிகளும் தொலைந்து போனதை குறிப்பிடுகிறார். செவ்விலக்கியங்கள் நாடகப் பிரதிகளை தம்முள் கொண்டுள்ளன என்பதை தெரிவிக்கும் அவர் நாடகமாகவே இலக்கிய கர்த்தாக்கள் அவற்றை எழுத முன்வராதது பற்றிய தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். “ அது கம்பராமாயணம் அன்று. அது ஓர் கம்ப நாடகமே. கம்பன் நாடகம் எழுதியிருப்பின் தமிழருக்கு காளிதாசன் போல ஒரு நாடக ஆசிரியன் கிடைத்திருப்பான்” என்கிறார். கூத்துப் பனுவல்களாக பள்ளு, குறவஞ்சி நூல்கள் 16, 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே நம்மை தொடர்வன என்பதைக் கூறிவிட்டு பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் நவீன தமிழ் நாடக இலக்கியத்தின் தோற்றுவாய் என்று குறிப்பிடுகிறார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, சுவாமி விபுலானந்தர் ஆகியோரைத் தொடர்ந்து சீர்திருத்த கருத்துகளை உள்ளடக்கிய வசனங்கள் புனைகதை எழுத்தாளர்கள் எழுதிய நாடகங்கள், இந்திரா பார்த்தசாரதி, பேராசிரியர் ராமானுஜம், நா.முத்துசாமி, மு.ராமசாமி, இன்குலாப் ஆகியோர் நாடகப் பிரக்ஞையுடன் எழுதிய நாடகங்கள் ஆகியவற்றையும் நாடக இலக்கியத்தின் தொடர்ச்சியாகக் கருதுகிறார். இப்போக்குகளுக்கு இணையாக ஈழத்தமிழ் நாடக இலக்கியங்களின் வளர்ச்சி பற்றியும் எழுதியுள்ளார். பேச்சோசை நாடகங்கள், கவிதை நாடகங்கள், அபத்த வாத நாடகங்கள், சிறார் நாடகங்கள், பெண்ணிய நாடகங்கள் என்று பலதரப்பட்ட போக்குகளையும் இதில் அறிமுகம் செய்கிறார். மேலைத் தேய மரபுகளின் வழிவந்த சிந்தனைகளின்பாற்பட்டவற்றை நாம் கண்மூடித்தனமாக அணுகாது விமர்சனப் பார்வையுடன் நமக்கானவற்றை அடைய வேண்டும் என்கிற அறிவுறுத்தலுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் மௌனகுரு.
அரங்குகளில் படிக்கப்பட்ட கட்டுரைகளில் முன்னேற்பாட்டின்படி ஈழ நாடகங்களின் இலக்கியத்தன்மை குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளன. நாடகப் பனுவல்கள் எவ்வாறு காலனி ஆதிக்கத்தையும் பின் காலனித்துவ இலங்கையையும் எதிர்கொண்டன என்பதை நவதர்ஷினி கருணாகரன் தனது கட்டுரையின் கருப்பொருளாகக் கொண்டுள்ளார். நாடகத்தின் அரசியல் ஒரு எதிர்ப்புக் குரலாக வெளிப்படுவதை அவர் அடையாளம் காட்டுகிறார். காலனி ஆதிக்கத்தின்போது அயலவர்களின் ஆட்சிக்கு எதிரானதாயும் இலங்கை சுதந்திரம் பெற்றபின் இன முரண்பாடுகளை களைவதற்கு ஆர்வம் காட்டியதையும் சங்கிலி பூதத்தம்பி ஆகியோரை பற்றிய நாடகங்கள் கொண்ட மாறுதல்களை அவர் அவற்றிற்கான வரலாற்றுப் பின்னணியுடன் சுட்டிக்காட்டுகிறார். இரண்டு நாடகங்களும் பலமுறை எழுதப்பட்டதால் ஒரே பனுவல் அவற்றிற்கு இல்லை. சங்கிலி அரசன் பற்றி எஸ். தம்பி முத்து பிள்ளை பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய பனுவல்களையும் பூதத்தம்பி பற்றி
நல்லையா பிள்ளை, த.சண்முக சுந்தரம் ஆகியோர் எழுதிய பனுவல்களையும் ஆய்வுக்குள்ளாக்கிறார். சங்கிலி அரசன் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவனாக காலணி ஆதிக்கத்தின்போது படைக்கப்படுகிறான். ஆனால் சுதந்திர இலங்கையில் அவனது வரலாறு நாடகமாக்கப்படும்போது அவன் இனமுரண்களற்றவன் ஆகிறான். இவ்வாறு இரு வேறு காலகட்டங்களிலும் சங்கிலியும் பூதத்தம்பியும் பண்பாட்டின் தேவை பொறுத்து எதிர்ப்பு குரலால் மாறுதல் அடைவதை நாடகங்கள் சித்தரிக்கின்றன. ஈழ நாடகத்தின் மேலோங்கிய பண்பாக எதிர்ப்புக் குரலை இனம் காண்கிறார் நவதர்ஷினி.
இந்த எதிர்ப்புக் குரல் எதிர்ப்பு பண்பாடு அரசியல் பொருளாக நாடகங்களில் வெளிப்படும் போது நாடகங்களின் உருவம் உள்ளடக்கம் நெறியாள்கை ஆகியவற்றிலும் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை காணமுடிகிறது. இந்நூலில் இடம் பெற்றுள்ள நாடகப் பனுவல்களில் முக்கியமாக கந்தன் கருணை, மண் சுமந்த மேனியர், அபசுரம், இராவணேசன் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். இவற்றில் பழமை வாதம், மக்களை ஏமாற்றும் எத்தனம், மூடநம்பிக்கைகள் சுயலாப அரசியல் ஆகியவை பல்வேறு கோணங்களில் பார்க்கப்பட்டுள்ளன.
ஈழ நாடகம் கூத்தினை ஆதாரமாகக் கொண்டுள்ளது. அநேக நாடகர்கள் முறையாக கூத்து பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். ராமாயணம் , மகாபாரதம் கதைகளை கூத்து பாணியில் நிகழ்த்தினாலும் அவற்றில் சமகால அரசியல் முக்கியத்துவம் கொள்கிறது. பழமையான எண்ணங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது. ஜாதிக்கு எதிரான நிலையில் பெண் சுதந்திரத்தை பேணுவனவாயும் தமிழின விடுதலையை முதன்மைப்படுத்துவனவாயும் அவை உள்ளன. இளைய பத்மநாபனின் (பத்தண்ணா) நாடகங்களை அவற்றிற்கு உதாரணமாகக் காட்டலாம். துரோணர் ஏகலைவனிடம் விரலை காணிக்கையாக பெறுவது ஆளும் வர்க்கத்தினர் ஆளப்படும் வர்க்கத்தினரை வலிமையற்றவர்களாக வைத்திருக்கும் தந்திரமாகும். இதுவே அவரது ஏகலைவன் நாடகத்தின் கரு. செஞ்சோற்று கடன், மீண்டும் ராமாயணம் மீண்டும் பாரதம் போன்ற அவரது நாடகங்களிலும் இக்கருத்து கிளைகள் விரித்துள்ளது.
கே.ரகுநாதானின் ஓரங்க நாடகமான கந்தன் கருணை நெல்லியடி அம்பலத்தாடிகள், கொழும்பு நடிகர் ஒன்றியம் ஆகியவர்களால் முழு நீள நாடகமாகப்பட்டு நடிக்கப்பட்டது. இராவணேசன் நாடகம் போல இதன் ஆக்கத்திலும் ஈழத்து நாடக ஆளுமைகள் பலரும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடகம் புராண சரடுகளைக் கொண்டு முழுக்க முழுக்க சமகால தீண்டாமை பிரச்சனையை விமர்சித்துள்ளது. முருகன், நாரதர் ஆகியோர் மானுடர்களாக வந்து யாழ்ப்பாணத்து ஜாதிப் பிரச்சனைகளைக் கண்டு அதிர்ந்து போகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் ஆலயப் பிரவேசம் தமிழகத்தில் நடந்தது போன்றே இலங்கையிலும் நடந்திருப்பதை நாடகம் காட்டுகிறது.புராணத்தில் ஒரு சூரன் தீய சக்தியாக வருகிறான். ஆனால் பல சூரர்கள் உள்ளனர். அவர்களை கடவுளால் அல்ல மக்கள் சக்தியால்தான் அழிக்க முடியும். சமூக அநீதிக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும் என்பது கந்தன் கருணை தரும் பாடம்.
மண் சுமந்த மேனியர் நாடகம் பற்றி கலாச்சார அரசியல் பார்வையுடன் தேவகுமாரி சுந்தரராஜனும் அதன் போர்க்கால வாழ்க்கை சூழல் குறித்தான பார்வையுடன் வைதேகி செல்வர் எமிலும் எழுதியுள்ள கட்டுரைகள் மூலம் ஈழ அரங்கில் மண் சுமந்த மேனியர் பெற்றுள்ள கூடுதல் முக்கியத்துவத்தை நாம் அறிகிறோம். இதை எழுதியவர் குழந்தை ம. சண்முகலிங்கம். நாடகத்தின் பல்வேறு அங்கங்களிலும் திறன் கொண்டவர். நடிகர் நாடகாசிரியர் என்பது மட்டுமின்றி நாடகத்தை போதிக்கும் யாழ் நாடக கல்லூரியை முதன் முதலாக நிறுவி மக்கள் மத்தியில் அக்கலை பற்றிய உயர்வான எண்ணத்தை ஊட்டியவர். அவரது அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும், மண் சுமந்த மேனியர் ஆகியன இலங்கை இனஅழிப்பு போரினை பலவாறாயும் எதிர்கொள்கிற நாடகங்களில் முக்கியமானவை. பாத்திரப் படைப்புகளாலும் கவனம் பெறுபவை. யாழ் மக்களின் பேச்சு மொழி, பழமொழிகள், சொலவடைகள் ஆகியவற்றை நாடகங்களில் தந்துள்ளார். இவை நாடகப் பனுவல்களில் இடம்பெறும் மொழி சார்ந்த இலக்கியக் கூறுகளாகும். உழவர் குடும்பத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் மண் மீது மனிதர்கள் கொண்ட சொந்தம் அதன் மாண்புகள் ஆகியவற்றை இதில் இயல்பாகவும் அவற்றின் மீது தொடுக்கப்படும் போர்கள் மூலம் கூடுதல் அழுத்தத்துடனும் உணரமுடிகிறது. ராணுவ நடவடிக்கைகளால் மக்கள் அச்சமுற்றிருந்த சமயங்களில் இவரது நாடகங்கள் மக்களுக்கு இன அரசியலைக் குறித்த விழிப்புணர்வைத் தந்தன. குழந்தை ம.சண்முகலிங்கத்தின் மனத்தவம் நாடகத்தை பிரக்ட்டின் அழகியல் பார்வையுடன் ஒப்புநோக்கி சண்முக சர்மா ஜெயப்ரகாஷ் எழுதியுள்ள கட்டுரை இதில் இடம்பெற்றுள்ளது. அந்நியமாதல் உத்திகள் மனத்தவம் நாடகத்தில் எவ்வாறு பயன்படுதப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.
இராவணேசன் நாடகம் காலனி ஆதிக்கம் விடுபட்ட காலத்தில் தமிழ் தேசிய இனவாத அரசியலை முன் வைக்கும் பனுவலாக து.கௌரீஸ்வரன் பார்க்கிறார். பலரின் பங்களிப்புகள் இதற்கு காலப்போக்கில் வந்தடைந்தன. எனவே ஒருவர் மட்டுமே இப்பிரதிக்கு உரிமை கோரவியலாது. இது ஒரு கூட்டுப் படைப்பு என்று கூறியதன் மூலம் இப்பனுவலுக்கு வளம் சேர்த்தவர்களின் ஒருவரான சி. மௌனகுரு இந்த விவாதத்தை ஒரு சுமுகமான முடிவிற்கு கொண்டு வந்தார்.
நாடக இலக்கிய உருவத்தில் அபத்த வாத நாடகம் என்பது ஒரு முக்கிய பிரிவு. நவீன ஐரோப்பிய நாடக ஆசிரியர்கள் சாமுவேல் பெக்கெட், யுஜின் அயனெஸ்கோ, ஆல்பெர் காம்யு, ழான் ஜெனே,எட்வர்ட் ஆல்பி போன்றவர்களின் படைப்புகள் அதற்கு பெரும் முக்கியத்துவத்தை கொணர்ந்தன. தமிழில் ந.முத்துசாமியின் காலம் காலமாக, நாற்காலிக்காரர், சுவரொட்டிகள் ஆகியன தமிழின் முன்னோடியான அபத்தவாத நாடகங்களாகும். ந.சுந்தரலிங்கத்தின் அபசுரம் பற்றி வி.கிருபானந்தம் எழுதியுள்ளார். அபத்தவாத நாடகம் நடிப்பு, மேடையமைப்பு, நெறியாள்கை ஆகியவற்றையும் மாற்றங்களுக்கு உட்படுத்துகின்றது. இதில் பொதுவர் என்கிற பாத்திரம் பொது மக்கள் என்கிற உருவகமாகிறது. பொதுவரின் அப்பாவித்தனத்தின் மூலம் அரசியல் களத்தில் நடக்கும் ஏமாற்றுகள் விமர்சனமாக வைக்கப்படுகின்றன. போலித்தனத்தில் திளைக்கும் கல்வியாளர்கள், சாமியார்கள் அரசியல்வாதிகள் ஆகியோரை இந்நாடகம் இனங்காட்டுகிறது. இதை அபத்தவாத சாயல் கொண்ட நாடகம் என்கிறார் கட்டுரையாளர் .
இலங்கைத் தமிழர்களில் தொழிலாளி வர்க்கமாக வாழ்கிறவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களின் இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக சென்றார்கள். நல்ல வருமானம் தருவதாக ஆசை காட்டி அவர்களை அழைத்து செல்லப்பட்டவர்கள். மலையகத் தமிழர்கள் பற்றிய முழுமையான வரலாறு இன்னமும் கூட எழுதப்படவில்லை. தமிழர்களான கங்காணிகளாலேயே அவர்களுக்கு நிறைய இன்னல்கள் ஏற்பட்டன. அவர்களது இன வரைவியலை முதன்முதலாக நாடகப் பனுவலாக்கிய பெருமை கோ.நடேசையர் என்கிற இலங்கை மலைநாட்டவருக்கு உண்டு. 1937 அவர் எழுதிய ஹஇலங்கை தோட்ட இந்திய தொழிலாளர் அந்தர பிழைப்பு’ நாடகத்தைப் பற்றிய ரா.பிரியதர்ஷினியின் கட்டுரை பல அரிய தகவல்கள் கொண்டுள்ளது.தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளிகள் பட்ட இன்னல்கள் பெண்கள் கடின உழைப்பினாலும் காமக் கொடுமைகளாலும் அடைந்த துயரங்கள் ஆகியவற்றை நாடகம் துணிந்து சொல்கிறது. ஜாதி எதிர்ப்பினையும் இன ஒழிப்பினையும் சித்தரிக்கும் நாடகங்களுக்கிடையே நடேசையரின் நாடகம் அதுவரை பேசப்படாத தமிழ் உழைக்கும் வர்க்கம் அடைந்த சீரழிவினை மேடைக்கு கொண்டு வந்தது. ஆனால் அது நிகழ்த்தப்பட்டதாக தகவல்கள் இல்லை என்று கட்டுரையாளர் தெரிவிக்கிறார். அவர்கள் மீதான அடக்குமுறைகள் இன்றளவும் நீடிப்பதாகவும் அவர் கூறுகிறார் ஆனால் இதிகாச நாட்டார் வழக்கு கதைகளை நிகழ்த்த மலையக மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை ‘மலையக சமுதாயக் கட்டமைப்பும் காமன் கூத்தும்’ என்கிற சோ.இந்துஜானி கட்டுரையின் மூலம் அறிகிறோம். காமன் கூத்தில் மக்களின் போராட்டம் பேசப்படவில்லை என்பது ஒரு முக்கிய காரணம்.அவர்களது பல தெய்வீக நம்பிக்கைகள் அதில் பேணப்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்யுள் நடையில் எழுதப்பட்ட மஹாகவியின் மேடைப்பா நாடகங்கள் பற்றி நீண்டுதொரு கட்டுரையை மருதூரினி பொன்னுத்துரை எழுதியுள்ளார். வானொலிக்காக எழுத ஆரம்பித்த மஹாகவி பின்னர் மேடை நாடகங்களை எழுதினார். வசனங்களையும் ஒலிக்குறிப்புகளையும் கொண்ட வானொலி நாடகங்களைத் தாண்டி மேடை நாடகங்களுக்குரிய காட்சி அமைப்பு, ஒளி அமைப்பு, மேடைப் பொருட்கள், உடை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தந்து எழுதினார். சமுதாய எதார்த்தத்தை பல நாடகங்களில் படைத்தவர்களில் முதன்மையானவர் மஹாகவி என்று பாராட்டுகிறார் கட்டுரையாளர். திருச்செந்தூரனின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு வானொலி நாடகம் பற்றிய வித்தியாசமான கட்டுரையும் இதில் இடம்பெற்றுள்ளது. அதன் இயங்குதளம் பார்வயாளர்களின் கற்பனையில் உள்ளது என்கிறார் கட்டுரையாளர் வி.விமலாதித்தன்.பிற ஊடகங்களுடன் வானொலியை ஒப்பிடுவதில் ஊடகங்கள் பற்றிய தீவிரமான பார்வை இதில் வெளிப்படுகிறது.
கத்தோலிக்க நாடகங்கள் ஈழ நாடகங்களில் முக்கிய இடம்பெறுகின்றன. காலனிய ஆதிக்கத்தை நிலை நாட்ட வந்த போர்த்துக்கீசியர்கள் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக ஏற்கனவே மதம் மாறிய தமிழர்களைக் கொண்டு தமிழ் நாடக வடிவங்களை நாடினர். அவற்றில் ஒன்றான ஞான சௌந்தரி நாடகம் பற்றிய கட்டுரையை யோ.யோண்சன் ராஜ்குமார் எழுதியுள்ளார். அது வழமையான கத்தோலிக்க நாடகங்களைப் போலில்லாது மத எல்லைகளைத் தாண்டிய படைப்பாக உருவானது என்கிறது கட்டுரை. வடக்கு பாஸ்கா நாடக இலக்கியம் வியாகூல பிரசங்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாட்டிலும் சில இடங்களில் இரவு நேரங்களில் பாஸ்கா நாடகங்கள் விமரிசையாக நிகழ்த்தப்படுகின்றன. டச்சு மிஷினரிகளால் தோற்றுவிக்கப்பட்ட அதன் சடங்குகள், புராணக் கதைகள் ஆகியன பற்றிய விரிவான கட்டுரையை அழகையா விமலராஜ் எழுதியுள்ளார். நீ.மரிய நிறோமினியின் ‘இறையியல் நோக்கில் திருப்பாடுகளின் காட்சி ‘ கட்டுரையில் நீ.மரியசேவியர் ஐரோப்பாவில் தோன்றிய திருப்பாடுகளின் காட்சி மரபை தமிழுக்குரிய காட்சி மரபுகளுடன் இணைத்ததை குறிப்பிட்டு எழுதுகிறார். சைவ சித்தாந்த கருத்தினை விளக்குவதுடன் மேடையில் நடிப்பதற்கென்றே உருவாக்கிய பனுவல் சோமசுந்தரப் புலவரின் உயிரிளங்குமரன் நாடகம் என்கிறார் கட்டுரையாளர் ஈஸ்வரநாத பிள்ளை குமரன்.
‘பெண்ணிலைவாத நோக்கில் கூத்து மீளுருவாக்கப் பனுவல்’ கட்டுரையில் கலாவதி கலைமகள் கூத்தின் அதிகாரப் பண்புகள் எவ்வாறு மீறப்பட்டும் மாற்றி அமைக்கப்பட்டும் உள்ளன என்பதை சான்றுகளுடன் விளக்குகிறார். அல்லி கூத்து, சீதைத்துயர் ஆகியன ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. ச.பத்மநாபனின் மிருச்ச கடிகம், துளசி வந்தனா உதயசங்கரின் கண்ணாடி வார்ப்புகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு நாடகங்களின் வீச்சுகள் பற்றி விரிவாக ஆராய்கின்றன.
ரா.கணகேஸ்வரியின் கட்டுரை ‘வேர்களும் விழுதுகளும்’ நாடகப் பிரதியில் கனடா வாழ் துறையூரான் எழுதிய நாடகத்தையொட்டி புலம் பெயர்ந்தோரின் வாழ்க்கைப் பிரச்சனைகளை எடுத்தியம்புகிறது. புலம்பெயர் படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. புலம்பெயர் நாடுகள் தமிழர் வாழ்வில் ஆறாம் திணையாகியுள்ளன. பெரிதாக அது பற்றி பேச வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். நாடக இலக்கியம் நாடகப் பயிற்சி நாடக ஆற்றுகை ஆகிய அனைத்திலும் தேர்ந்தவர்களாய் இலங்கையில் இருந்து சென்ற நாடகர்கள் உள்ளனர். நாடக ஆசிரியர், இயக்குநர் க. பாலேந்திரா லண்டனில் தமிழ் அவைக்காற்று கழகத்தை நிறுவி உலகப் புகழ் பெற்ற பல மொழி நாடகங்களுடன் சுயமாக எழுதிய நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். நவீன நாடக மரபினரான இவர் தனது துணைவியார் ஆனந்த ராணி இராஜரட்ணத்துடன் இணைந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறார். இலங்கைத் தமிழ் நாடக அரங்கில் குறிப்பிடப்பட வேண்டிய நடிகை ஆனந்தராணி. பெண்கள் ஏற்கத் தயங்கிய பாத்திரங்களை துணிவுடன் ஏற்று பரிமளித்தவர். இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’ நாடகத்தில் அவர் நிர்மலா பாத்திரம் ஏற்று “ஐ நீட் எ மேன்.ஒருவேளை அது நீங்களாக இருக்கலாம்” என்று வசனம் பேசிய போது சம்பிரதாய தமிழரங்குகள் அதிர்ந்தன. ஏ.சீ. தாசீசியஸ் அன்ரன் பொன்ராசா ஆகிய இருவரும் ஒன்றிணைந்தும் தனியாகவும் நாடக செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க பணிகள் செய்துள்ளனர். ஈழக்கூத்தன் என்று அறியப்படும் தாசீசியஸ் இலங்கையிலிருந்து வெளியேறியபின் லண்டன் களரியைத் துவங்கி நாடகங்கள் நிகழ்த்தினார். பின்னர் அன்ரனின் அழைப்பை ஏற்று ஸ்விஸ் நாட்டில் அங்குள்ள புலம் பெயந்த தமிழர் குழுவுடனும் சுவிஸ் கலைஞர்களுடனும் பணியாற்றினார். தொடர்ந்து நாடக பயிற்சிகளை அளித்து வருகிறார். கூத்தினை கண்டம் விட்டு கண்டம் கொண்டு சென்ற சிறப்பிற்குரியவர்.அன்ரன் பொன்ராசா ஈழ மண்ணிற்கு அந்நிய சுவிஸ் மண்ணில் தனது நாடகங்கள் மூலம் அங்கீகாரத்தை பெற்றுத் தந்த முன்னோடி நாடகக் கலைஞர். அவரது சுவிஸ் தமிழ்நாடகக் கல்லூரி நாடகர்களுக்கு முறையான நாடகக் கல்வியை அளித்து பட்டையப் படிப்பு சான்றிதழ்களை வழங்குகிறது.
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடுகளை தொடர்ந்து நடத்துவதுடன் அவற்றில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளையும் நூல்களாக வெளியிட்டு அதன் பயன் பலரையும் சென்றடையுமாறு செய்வது பாராட்டிற்குரியது.
ஈழத்தில் தமிழ் நாடக இலக்கியம் | பதிப்பாசிரியர்கள்: கலாநிதி செல்லத்துரை சுதர்சன் & திருமதி ஆன் யாழினி சதீஸ்வரன்
வெளியீடு: தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக் கழகம், இலங்கை. | பக்கங்கள் 590.
* பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பியவர் - - கலாநிதி செல்லத்துரை சுதர்சன் -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.