பதிவுகள் இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு  வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில்  நன்றி.

இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன்  பார்வைகளை  வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆளுமையின் மறு பக்கத்தை பேராசிரியரின் உரையாடல்களூடு எடுத்துக் காட்டுகின்றார். வாதப்பிரதிவாதங்களை எழுப்பக்கூடிய விபரிப்புகள். 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு, ஜெயமோகனின் ரப்பர் நாவல்களைப் பற்றிய இவரது விமர்சனங்கள் ஆழமான தர்க்கங்களை வேண்டி நிற்கின்றன.

                          - 'நந்தலாலா' ஜோதிகுமார் -

நூலிலுள்ள  ஓடை 1, ஓடை 2 மற்றும் ஒரு காதல் கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் அவற்றை வாசித்தபோது  சிறந்த  இலக்கியப்படைப்பொன்றினை  வாசித்த அனுபவம் ஏற்பட்டது. ஆளுமைகள் பற்றிய  விபரிப்புகளும், சூழலின் மண் வாசனை மிக்க விபரிப்புகளும் நெஞ்சை ஈர்த்தன. விடுதலைப் போராளி ஒருவரின் இருப்பு எப்படியெல்லாம் காற்றிலகப்பட்ட இலை போல் அலைகக்ழிக்கப்பட்டுள்ளது என்பதை விபரிக்கின்றது ஓடை 1.

இலக்கியவாதி என்பதால்  ஜோதிகுமாரின் மொழி சிறப்பானது. இயற்கை பற்றிய விபரிப்புகள்  நெஞ்சை ஈர்க்கின்றன. ஆளுமைகளைப் பற்றிய விபரிப்புகளும் வித்தியாசமானவை. அவனை வாசிப்பைத் தூண்டுவன. ஆளுமைகளை அவர்கள்தம் உரையாடல்களூடு, அவை பற்றிய  ஆழம் மிகு சிந்தனைகளூடு  சிறப்பான மொழி நடையில் வெளிப்படுத்துகின்றார் ஜோதிகுமார்.

ஜோதிகுமாரின் எழுத்துப் பற்றிச் சிறப்பாக எடுத்துரைக்கும், நூல் தாங்கி நிற்கும்  பேராசிரியர் சின்னையா  மெளனகுருவின் 'பேராசிரியர் கா.சிவத்தம்பி' பற்றிய  பின்வரும் கூற்று இந்நூல் பற்றிய சிறப்பானதொரு விமர்சனமே:

"வழக்கத்தை விட உங்களின் இந்த எழுத்து வித்தியாசமாக இருக்கிறது.அவரது வார்த்தைகளினூடாக அவரின் உள்ளத்தைக்  காண முயன்றிருக்கின்றீர்கள். சிவத்தம்பியை நான் என்னளவில் உள்ளும் புறமும் அறிவேன்.அவர் இழப்பு என் அளவில் ஒரு தந்தையின் இழப்பு. பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்ட  கட்டுரை. கட்டுரையா?  இல்லை ஒரு சொற் சித்திரம். கொலாஜ் சித்திரம் வரையும் ஓவியர்கள்  அங்கொரு இங்கொரு  கோடு போடுவார்களாம். மேலோட்டமாகப் பார்த்தால்  அவை கோடுகள். முழுமையாக இணைத்துப் பார்த்தால் அதன் உள் பொருள் தெரியும். எனக்கு இச்சொற் சித்திரமும் அவ்வாறே தோன்றுகின்றது."

இந்நூலிலுள்ள அனைத்துக் கட்டுரைகளுக்கும் பேராசிரியரின் இக்கூற்று  பொருந்தும். ஆம்!  வெறும் கட்டுரைகள்  மட்டுமல்ல. சொற் சித்திரங்கள்தாம்.

வெளியீடு:

நந்தலா (இலங்கை)

சவுத் விஷன் புக்ஸ்,  
491 - B, G2 - ஒமேகா பிளாட்ஸ்,  தரைத்தளம்,
நான்காம் இணைப்புச்சாலை,, சதாசிவ நகர்,
 மடிப்பாக்கம், சென்னை - 600 091

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தொலைபேசி: 94453 18520