- கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், விமர்சகர், மணற்கேணி - போதி - தலித்  ஆகிய  இதழ்களின் ஆசிரியர், அரசியல் - சமூகச் செயற்பாட்டாளர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், கலாநிதி து.ரவிக்குமார் அவர்களின் 'வணங்கா மண் - முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான ஈழம்' என்ற நூலுக்கு,  பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் எழுதிய நூன்முகக் குறிப்பு. -


01

இந்து சமுத்திரக் கப்பற் பாதையின் மத்தியில் அமையும் தீவாகவும், தென்மேல் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலங்களில் கப்பல்களைப் பாதுகாப்பாக நிறுத்திவைக்கக்கூடிய திருகோணமலைத் துறைமுகம் முதலாய இயற்கைத் துறைமுகங்கள் கொண்டதாகவும் அமையும் பல அம்சங்கள் இலங்கையின் கேந்திரநிலையின் முதன்மையைப் புலப்படுத்தும்.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகிய வட மாகாணமானது, கிழக்கு மாகாணம் போலவே, தமிழர்களின் பூர்வீக வாழிடம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கொண்டது வட மாகாணம். இவற்றுள், யாழ்ப்பாணம் நீங்கிய ஏனைய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நிலப்பகுதியே, வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. மூன்று பக்கம் நீராற் சூழப்பட்டதும், இலங்கைத் தீவின் வடமுனையில் உள்ளதுமான நிலப்பகுதி. மூன்று பக்கமும் நீர் சூழ்ந்திருப்பதால் ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ (The Jaffna Peninsula) எனப்படுகிறது.

வெளிநாட்டார் பயணக் குறிப்புகளில் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தீபகற்பம் என்றே அது குறிப்பிடப்படுகிறது. இலங்கைத்தீவு, ‘யாழ்ப்பாணத் தீபகற்பம்’ எனும் தனது தலையை இந்து சமுத்திரத்தில் வைத்துப் படுத்திருப்பதுபோல் காட்சியளிக்கும். யாழில் வல்ல ஒரு பாணனுக்குப் பரிசாக வழங்கப்பெற்றமையால் யாழ்ப்பாணம் எனப் பெயர் சூடியது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தை, இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுடன் தொடுக்கும் நிலப்பகுதியாக விளங்குவது, ஆனையிறவு. இத்தகைய புவியியல் அமைவு காரணமாக, யாழ்ப்பாணம் தனித்த பல சிறப்பியல்புகளை வரலாற்று ரீதியாகப் பெற்றிருந்தது.

யாழ்ப்பாணத்திற்கு, இலங்கையின் ஏனைய பிரதேசங்களுடனான ஊடாட்டத்தினை விடவும், இந்தியாவுடனான அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டுடனான ஊடாட்டம் நெருக்கமானது. வரலாற்றுத் தொடர்ச்சியுடையது. ஆங்கிலேயக் காலனிய ஆட்சியில் யாழ்ப்பாணத் தீபகற்பம் இந்தியாவின் மதறாஸ் மாகாணத்தின்கீழ் (Madras Presidency) அமைந்திருந்தது.

புவியியல் வரைபடத்தில் இலங்கைக்குத் தலையாக அமையும் யாழ்ப்பாணம், பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சூழலில் சென்னைக்கு மூளையாகத் திகழ்ந்தது. ‘நாவலர் காலத்திலும் அவரது மறைவிற்குப் பின்னரான ஏறத்தாழ மூன்று தசாப்த காலங்களிலும் சென்னை எழுத்தறிவுச் சூழலில் யாழ்ப்பாணக் குழுமமே ஆதிக்கம் செலுத்தியது’ என்பார், க.கைலாசபதி.

                                  - கலாநிதி து.ரவிக்குமார் -

யாழ்ப்பாணத் தீபகற்பத்தில், காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜம்புகோளப் பட்டினம் (மாதகல் - சம்பில்துறை) போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க துறைமுகங்களும் துறைமுகப் பட்டினங்களும் அமைந்துள்ளன.

ஜம்புகோளப் பட்டினம் என்பது மகிந்ததேரரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக் கிளையுடன் பௌத்தத்தை நாட்டிவைக்க வந்திறங்கிய துறைமுகம். இலங்கையில், பௌத்தம் முதன்முதலில் கால்பதித்த இடம் இதுதான். இதனால் இலங்கையின் முதல் பௌத்தம் தமிழ்ப் பௌத்தமாக அமைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்துதான் தென்னிலங்கைக்குப் பௌத்தம் நடந்து சென்றது.

கடல் சூழ் இலங்கைத் தீவில், கடலில் தவழும் கப்பல்கள் மனித வாழ்வையும் சுமந்து, தள்ளாடித் தவழ்வதும் ஒரு வரலாறுதான். ஏறத்தாழ, சென்ற அரை நூற்றாண்டு ஈழத் தமிழர் வாழ்வுக்கும் அப்படி ஒரு வரலாறு இருக்கிறது.

ஆனையிறவுத் தரைவழிப் பாதையை மூடிவிட்டால், துண்டிக்கப்படுவது போக்குவரத்து மட்டுமல்ல, யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதற்கு வெளியிலும் வாழும் வட பகுதித் தமிழரின் வாழ்வுப் பாதையுந்தான். சரக்குக் கப்பல்களும் பயணிகள் கப்பல்களும் தொண்ணூறுகளில் மக்கள் மத்தியில் மனித உறவுகளுக்குச் சமனான மதிப்பைப் பெற்றிருந்தன. இத்தகைய ஒரு காலத்தில் புகழ் சூடியதுதான், ‘லங்கா முடித’ கப்பல். இதைக் ‘காணாத கண்ணென்ன கண்ணே’ என்று, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத் தமிழர்கள் ஏங்கித் தவித்தார்கள்.

அந்தளவுக்கு அது ஒன்றும் கடற் பேரழகி அல்ல. பாரிய சரக்குக் கப்பல்தான். இன்னும் சொன்னால், சரக்குகளோடு சரக்குகளாக மக்களையும் அடுக்கி, அரச கடற்படையின் பாதுகாப்போடு, இந்து சமுத்திரத்தில் வலம் வந்த கப்பல் அது.

ஓடித்திரியும் பெருச்சாளிகளுக்கு மத்தியில், நாற்றத்தால் வாந்தியெடுத்துச் சோர்ந்த தமிழர்களையும் சுமந்த இக்கப்பல், திருகோணமலையிலிருந்து புறப்பட்டு, குடாநாட்டுக்கு வருவதும், பின்னர் குடாநாட்டிலிருந்து போவதுமான செய்திகள் எல்லாம் போர்ச் செய்திகளுக்குரிய முதன்மையோடு குடாநாட்டுப் பத்திரிகைகளில் முதற் பக்கத்தில் பிரசுரமாகின.

பத்திரிகைகளில் பயணத்துக்காகப் பதிவு செய்த தங்களது பெயர்கள் வருகின்றனவா என்று, அரச ஊழியர்களும் மாணவர்களும் நோயாளிகளுமான பயணிகள் பலரும் ஓடிஓடிப் பத்திரிகை வாங்கிப்படித்த காலம் அது.

கப்பலின் வருகையால் வயிறு ஓரளவாவது நிறையும் என்று நம்புகின்ற இக்காலத்தில், கூட்டுறவுச் சங்கக் கடைகளின் முன்னும் பேக்கரிகளின் அருகிலும் நீளும் மக்கள் வரிசை, கப்பல் வந்துவிட்டதை, பத்திரிகையின்றியே அறிவித்து நிற்கும்.

அத்தியாவசியப் பொருட்களுடன் வரும் இக்கப்பல், தபால் பொதிகளையும் அவசியமான சில மருந்துப் பொதிகளையும் சுமந்து வரும். பரிசோதனைக்காக உறைகள் கிழிக்கப்பட்ட, மாவும் பருப்பும் சீனியும் ஒட்டிய தபால்களை, ‘கடல் தண்ணி பட்டுக் கிழிந்துவிட்டன’ என்று கூறி, தபாற்காரர்கள் விநியோகிக்கும் நிலையும் இக்காலத்தில் இருந்தது.

ஒருபோது, திருகோணமலைக் கடற்பரப்பில் இது தரித்து நிற்கையில் தாக்குதலுக்குள்ளானது. தமக்கும் தாக்குதலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று புலிகளின் அறிக்கைகூட வெளிவந்திருந்தது. கப்பல் ஓட்டும் செலவைவிடவும், நங்கூரமிடும் செலவு அதிகம் எனப் பேரெடுத்த இக்கப்பல், பின்னர் திருத்தச் செலவு அதிகம் என்பதால் திருத்தப்படாமலே போனது. யாழ்ப்பாணத் தமிழர்களுக்காக ஓடிக் களைத்துக் கிழமாகிப்போன இக்கப்பலை, துறைமுக அமைச்சு இரும்புக்கு விற்க முடிவெடுத்தது வேறுகதை.

‘ஐரிஷ் மோனா’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்காக ஓடிய சரக்குக் கப்பல். அதனைப் புலிகள் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் வைத்து மடக்கி, நாகர் கோயில் கடற்கரைக்குச் கொண்டு சென்றனர். அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், ‘ஐரிஷ் மோனாவை உடனே மீட்டெடுங்கள், அல்லது தாக்கி அழியுங்கள்’ என்று படையினருக்கு உத்தரவிட்டதாக உலவிய கதையும் ஒன்று உள்ளது. இதுபோலவே சிற்றி ஒவ் ரிங்கோ, கிரீன் ஓசன், நறோமா போன்ற பயணிகள் கப்பல்களுக்கான கதைகளும் பல உள்ளன.

இலங்கைக் கப்பற் கூட்டுத்தாபனத்தின் முதலாவது கப்பல் என்று பேரெடுத்த ‘லங்கா ராணி’தான் அருளர் எழுதிய ‘லங்கா ராணி’ நாவலின் பெயராகியது. 1977, 78 இல் தென்னிலங்கையில், இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு லங்கா ராணி மூலம் அனுப்பிவைக்கப்படுகின்றனர். இந்தப் பயணத்தில் நடக்கும் உண்மை நிகழ்வுகள்தான் நாவலின் கதை. கொழும்பிலிருந்து கப்பல் புறப்படுவதுடன் ஆரம்பிக்கும் கதை, அது இலங்கைத் தீவைச் சுற்றி வந்து, இலங்கையின் இன்னொரு முனையான பருத்தித்துறையை அடைவதோடு முடிவடைகிறது. இரு நாள் கப்பல் பயணிப்பு இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைப் பேசியவாறே நிகழ்கிறது.

தொண்ணூறுகள், அயல் நாட்டுப் போர் விமானங்கள் உணவுப் பொதிகளை வீசிச் செல்ல, மக்கள் அதை எடுத்து உண்ண அஞ்சித் தவிர்க்குமொரு காலம். அப்போர் விமானங்கள் தமது நாட்டிலிருந்து உணவுப் பொருட்கள் வரும் செய்தி சுமந்த துண்டுப் பிரசுரங்களை, பறந்தவாறே வீச, அச்செய்திப் பறவைகளின் பெருங் கூட்டம் காற்றில் மெதுமெதுவாகக் கலைந்து பரந்து, ஒன்றிரண்டு தவிர, ஏனையவை கடலில் வீழ்ந்துவிடும். மீன்கள் துண்டுப் பிரசுரங்களை வாசிக்கா என்பது போர் விமானங்களுக்குத் தெரியா. ‘ஒப்புக்குக் போர்த்திய அமைதித் திரையின் ஓரங்கள் பற்றி எரிந்தபோது’ அயல்நாட்டுக் கப்பல்கள் அச்சத்திற்கு உரியவையாகின. ‘அரிசி வந்த படகில் தமிழர் குருதி கொண்டு போன’ நிகழ்வுகளும் பல உள்ளதல்லவா!

( தொடரும் )

அனுப்பியவர் - முருகபூபதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.