வரலாற்றுப் புகழ் வாய்ந்த எத்தனையோ கடிதங்கள் உலகில் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப் படுகின்றன. இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்திய காலிமுகத் திடல் 'அறகலய' எனப்படும் அறப்போராட்டம் நடைபெற்ற தீர்க்கமான காலகட்டம் ஒன்றில்,  வணக்கத்துக்குரிய அருட்தந்தை செபமாலை அன்புராசா அடிகளாரால் எழுதப்பட்ட முப்பது கடிதங்களும் இவ்வாறே முக்கியத்துவம் பெறவேண்டியவை.  2022 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம்  2022 .07. 16ம் திகதிவரை அவரது முகநூலில் 'அன்புள்ள ஆரியசிங்க...' எனும் தலைப்புடன் தமிழில் எழுதப்பட்ட இக் கடிதங்கள் இன்று சிங்கள மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் நூலுருவாகி உள்ளமை மகிழ்ச்சிகுரியது.

இலங்கை இனப்பிரச்சனையின் தோற்றம், வளர்ச்சி, இறுதி யுத்தத்தின் பின்னும் இன்றுவரை தொடரும் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகள் வரலாற்று ஆதாரத்துடன் இங்கு கூறப்பட்டுள்ளன. பெரும்பான்மை இன மக்களை நோக்கிய சில நியாயமான கேள்விகளும் முன்வைக்கப் பட்டு உள்ளன.யாரையும் புண்படுத்தாத ஆனால் கண்ணியமும் வலிமையும் துணிவும் மிக்க வார்த்தைப் பிரயோகங்களுடன் இந்நூல் அமைந்திருப்பது சிறப்பு. தங்குதடையற்ற மொழிஆளுமை அவரது எழுத்துக்கு அணி சேர்க்கிறது.

2022 இன் நாடுதழுவிய பொருளாதார வீழ்ச்சியை மையப்படுத்திய பெரும்பான்மை இன மக்கள் எழுச்சியுடன், தமிழ்மக்கள் கடந்தகாலங்களில் அனுபவித்த ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தி, ஒப்பு நோக்கும் விதமாக இந்நூல் அமைந்திருப்பதன் மூலம், பெரும்பான்மை மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நன்நோக்கும் தெளிவாகிறது . அதே சமயம் தெற்கில் வாழும் மக்களின் துயரில் பங்குகொள்ளும் அன்பும் அரவணைப்பும் தெளிவாகவே இந்நூலில் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

சிறந்த இலக்கிய படைப்பாளியும் இறைபணியாளரும் ஆகிய அருட்தந்தை அவர்கள், நன்மனம் படைத்த சமூக செயற்பாட்டாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தமிழ் மக்களின் இடர்களை அறிந்தவராக மட்டுமல்லாது அனுபவ சாட்சியாகவும் களத்தில் வாழ்ந்தவர். இருபத்தைந்து வருடகால குருத்துவபணியை ஆற்றிய இவர் யாழ்ப்பாணத்திலும், வன்னி பிரதேசத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களிலும் மற்றும் பிரான்சிலும் நான்கு வருடங்கள் பணியாற்றியவர். வைத்திய சாலைகளில் ஆன்ம குருவாகவும் மறையுரைஞராகவும், குருமடம் ஒன்றின் உருவாக்குனராகவும், மாங்குளத்தில் அமைந்திருக்கும் செயற்கையாக அவையவங்களைப் பொருத்தும் ‘அமைதிக்கரங்கள்’ நிலையத்தின் இயக்குநராகவும், முல்லைத்தீவின் ஒட்டுசுட்டானில் மலரும் முல்லை கல்விவள நிலையத்திலும் அறப்பணி ஆற்றியுள்ளார். தற்போது கிளிநொச்சியில் அன்னை இல்லத்தின் கல்விவள நிலையத்தில் பணியாற்றுகிறார்.

'அன்புள்ள ஆரியசிங்க...' என்னும் பிரதி, கடித வடிவிலான ஒரு வரலாற்றுக் கையேடு என்றும் கூறலாம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே கால்கோள் கொண்ட , தமிழ்மக்களின் துயர் சார்ந்த உரிமைப் போராட்டத்தை, அஹிம்சையில் ஆரம்பித்து ஆயுதம் தாங்கிய அதன் வடிவ மாற்றங்களை,  அதற்கான நியாயங்களை,  அரசின் அடக்கு முறைகளை, மூடிமறைப்புகளை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு அறியத் தரும் நோக்கமே இப்படைப்பில் முன்னிலை கொள்கிறது. அதற்கு பொருத்தமான ஒரு சந்தர்ப்பமாக 2022 'அறகலய' அமைந்திருந்தது.

யுத்தபூமியில் வாழ்ந்த மக்கள் அனுபவித்த இடர்கள் பற்றி பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல, தென்னிலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களும் சரிவர அறியாத பல விடயங்களை இக்கடிதங்களில் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

 ஒப்பீட்டளவில் தமிழ்மக்களின் பங்களிப்பு இந்த அறவழிப் போராட்டத்துக்கு குறைவாகவே இருந்ததன் காரணத்தைக் கூட சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் புரிந்து கொள்ளாமல்தான் இருக்கின்றனர். சிறுபான்மையினரின் அபிலாஷைகளைப் புறந்தள்ளி, பெரும்பான்மையின மக்களே மனமுவந்து உருவாக்கிய அரசு இது. எதிர்ப்பைக் காட்ட வேண்டிய முக்கிய பங்கும் அவர்களுக்கே என்பது பாதிக்கப்பட்ட சிறுபான்மையின் நியாயம்.

- அருட்தந்தை செபமாலை அன்புராசா அடிகள் -

இக்கடிதங்களின் பெறுநர் ஆன ஆரியசிங்க என்பவர் யார் ? அவர் புகழ்பூத்த சிங்கள இனத்தின் பொது அடையாளமாக உருவகப்படுத்தப்பட்ட ஒரு கற்பனா கதாபாத்திரம். குறியீடு. ஆரிய வம்சத்தின் வாரிசாகவும் சிங்கத்தின் மைந்தர்களாகவும், தம்மை பெருமையுடன் நினைத்திருக்கும் எமது பெரும்பான்மை சகோதர இனத்தின் நன்மனம் கொண்ட ஒரு நண்பர். கடிதம் எழுதப்பட்ட அக்கால கட்டத்தில் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த 'அறகலய' எனும் அறக்கலகத்தில் பங்குகொண்டு அவர் காலிமுகத் திடலில் நின்றிருந்தார்.

அவரை அங்கு நிற்க வைத்ததற்கு காரணமானவர் யாரென அவர் தன் சுட்டுவிரலை நீட்டினால் , நான்கு விரல்கள் அவர் பக்கமே காட்டி நிற்பதை உணர்வார். ஆம். அது எவ்வாறு என்பதைத்தான் தமது வாழ்வியல் அனுபவங்கள் கொண்டும் வரலாற்றுச் சம்பவங்களின் துணை கொண்டும் இந்நூலின் படைப்பாளர் விளக்க முயல்கின்றார்.

2022 ம் ஆண்டு இலங்கையின் சகல பிரதேசங்களிலும், அடிப்படைத் தேவைக்கான பொருட்களுக்காக மக்கள் வீதிகளில் தவம் கிடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதற்கு முந்திய சில தசாப்த காலங்களை நோக்கினால்....

பெரும்பான்மை இனமக்களில் அதிகமானோர் 'ஒரு சமூகமாக' ஒன்று சேர்ந்து தமது அபரிமிதமான வாக்குகளால் அன்புக்குரிய அரசியல் வாதிகளை குடும்பமாக ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தார்கள். இறுதி யுத்தத்தின் வெற்றி நாயகர்களான அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு அதுவரை செய்த உரிமை மறுப்புகளை கணக்கில் கொள்ளாது வெற்றிக்களிப்பில் மெய்மறந்தார்கள். அவர்களின் அட்டூழியங்களை அரசியல் சாணக்கியம் என்றார்கள். ஊழல்களை 'எங்கும் நிறைந்தது' என சாதாரணமாகப் புறந்தள்ளினார்கள். தமிழ் பிரதேசங்களில் பொதுமக்களின் அழிவுகளை பயங்கரவாத ஒழிப்பு என்ற மாயைக்குள் தள்ளி ரசித்து மகிழ்ந்தார்கள். இறுதியுத்தத்தில் பொதுமக்களின் அழிவுகளையேனும் மனங்கொள்ளாது வீதியெங்கும் பட்டாசு கொளுத்தி பால்சோறு உண்டு களித்தார்கள்.

பல தசாப்தங்களாக தமிழ்மக்களின் அஹிம்சை வழிப் போராட்டங்கள் அரசினால் புறந்தள்ளப்பட்டதை எதிர்க்காமல்,  ஆதரித்தார்கள். அதுவே ஆயுதக் கலாசாரத்துக்குள் தமிழ் இளைஞர்களைத் தள்ளி விட்டது என்பதையும் சிந்திக்க மறந்தார்கள். ஆனால் அவர்கள் போற்றிய அந்த ஆட்சியாளர்களோ தமது கடமைகளை மறந்தார்கள். இந்நாட்டை சீரழித்து இன்று வறுமை கொண்ட நாடாக உலகெங்கினும் கையேந்த வைத்தார்கள். அதமகுணங்கள் கொண்ட அரசியலானது இயற்கை வளம் மிகுந்த ஒரு நாட்டினை எத்துணை கீழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு இலங்கை இன்று உதாரண தேசமாகி நிற்பது காலத்தின் கொடுமை.

 பெரும்பான்மை இன மக்களான தமக்கென இன்னல்கள் தோன்றும்வரை , தாம் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகள் கடந்தகாலங்களில் என்ன செய்தார்கள் என்பதைத் தட்டிக் கேட்க மறந்தார்கள். அல்லது நண்பர் 'ஆரியசிங்க' போலவே அறியாது இருந்தார்கள். இன ஒற்றுமை தங்கள் இருப்பினைக் கேள்விக்கு உரிதாக்கும் என அரசியல்வாதிகள் மறைத்தார்கள் என்பதைக் காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. விரும்பினால் அறிய முடிகின்ற தகவல் தொழில்நுட்ப யுகத்தில் தான் நாம் வாழ்கிறோம்.

இனநல்லுறவு புரிந்துணர்வு மனிதாபிமானம் என்ற தார்மீக சிந்தனைகளை வளர்த்தெடுக்காத அரசு; அதிகார ஆசையும் ஊழலும் மிகுந்த தீர்க்க சிந்தனையற்ற  

அரசியல்வாதிகளின் செயற்பாடுகள்; பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தாத அரசியல் சுரண்டல்கள்; தமது பதவியை நீடிப்பதற்காக இனங்களிடையே ஊக்கி வளர்க்கப்பட்ட வன்ம உணர்வுகள் என்பன ஒரு புறமாக தொடர்ந்து கொண்டிருந்த அதேசமயம், சுதந்திரத்தின் பின் முப்பது வருடகால அகிம்சைப் போராட்டங்கள் தோற்றதால், இழந்து விட்ட தமது உரிமைகளுக்காகவும் உறவுகளுக்காகவும் , ஆயுதப் போராட்டத்துக்கு முன்வந்த தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாக வெளியுலகிற்கு இனம்காட்டப் பட்டார்கள். பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில் மூன்று தசாப்தங்கள் ஆயுதயுத்தத்தாலும் , பொருளாதார மற்றும் போக்குவரத்துத் தடைகளாலும் தமிழ்மக்கள் ஒடுக்கப் பட்டார்கள்.

 இவற்றை எல்லாம் பகுத்தறிந்து கொள்வதற்கு பெரும்பான்மை இனமக்கள் ஏன் மறந்தார்கள் என்ற தர்க்கபூர்வமான கேள்வியை ஆரியசிங்க மூலமாக அம் மக்களிடம் முன்வைத்த அன்புராசா அடிகளார், அரசியலின் அடிப்படையில் எங்கோ பெரும்பிழை இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

1948 இல் சுதந்திரம் பெற்ற இலங்கை 1956 இல் தனிச்சிங்கள சட்டம் கொண்டு வந்ததன் மூலம் இரு மொழிபேசும் மக்களை துருவமயமாக்கிய செயற்பாடு முக்கியமான ஆரம்பப் புள்ளி என தீர்க்கமாக வலியுறுத்திய அன்புராசா அடிகளார் வரலாற்றின் துன்பியல் நிகழ்வுகளையும் பட்டியல் இடுகிறார்.

சுதந்திரம் பெற்றபின் கைச்சாத்தான ஏழிற்கும் அதிகமான முக்கிய ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளின் தோல்வி ( P46)

பத்திற்கும் அதிகமான பாரிய இடம்பெயர்வுகள் (P 57)

இருபதுக்கும் அதிகமான இனக் கலவரங்கள், அழிவுகள்( P 68)

தமிழர்களின் அறிவாலயமாகவும் முதுசொம் ஆகவும் திகழ்ந்த யாழ்நூலக எரிப்பு 1981 (P 74)

பயணப்பாதை இடர்கள்( P87, 108)

1987/88களில் பாதுகாப்பு நடவடிக்கை எனும் பெயரில் இந்திய இராணுவத்தினரால் நடாத்தப்பெற்ற அட்டூழியங்களும் உடல் பரிதோதனைகளின் அவமானங்களும்( P 98)

2009 இறுதிப் போரின் உக்கிரம் (P 126- 134)

இத்தகைய அவல அனுபவங்களால் தமிழ்மக்கள் பெற்ற நன்மை என்னவாக இருந்தது. அதையும் பின்வருமாறு கூறுகிறார் அடிகளார்.

 'தென்பகுதியில் இன்று ( 2022) மக்கள் வாழும் இக்கட்டான சூழ்நிலைகளில், அன்றே தமிழ்மக்கள் வாழப் பழகி இருந்தார்கள். அதற்காக உங்களுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும்.(P 15 ) சிங்கள மக்கள் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளையும், இதைவிட மோசமான பொருளாதாரத் தடைகளையும் போக்குவரத்துக் கஷ்டங்களையும் யுத்த வன்முறைகளையும் 1987 ம் ஆண்டு தொடக்கம் 2009 ம் ஆண்டுவரை இருபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்து இருக்கிறோம். மின்சாரம் இல்லாமல் வீடுகளில் விளக்கு எரிந்தது.பெற்றோல் இல்லாமல் சைக்கிளிலும் கால்நடையாகவும் ஆபத்தான பாதைகளிலும் பயணம் தொடர்ந்தது. போக்குவரத்து தடைப்பட்ட போது கடல்பயணங்களில் ஒல்லித் தேங்காய்களே உயிர்காக்கும் கவசங்கள் ஆயின. காஸ் இல்லாமல் சமையல் நடந்தது.பால்மா,சீனி இல்லாமல் தேநீர் பருகினோம். பதுங்குகுழிகளில் பிரசவங்களை நடந்தினோம். நீங்கள் ஒரு லீற்றர் பெற்றோல் 20 ரூபாவுக்கு வாங்கிய காலங்களில் நாங்கள் 2000 ரூபாவுக்கு வாங்கினோம். எல்லாவற்றிற்கும் மேலாக அவமானங்களையும், சித்ரவதைகளையும், மரணங்களையும் கடந்தோம்' .

'அந்த வகையில் உங்கள் அரசால் எங்களுக்குக் கிடைத்த புண்ணியம் என்னவென்றால் மிகக் கடுமையான பொருளாதார வறுமையிலும் வாழ்தலுக்கான பாடத்தைக் கற்றுக் கொண்டது எனலாம்' என்கிறார்.

2023 ம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவீனமாக வரவுசெலவுத் திட்டத்தில்  முப்பத்தைந்து சதவீதம் ஒதுக்கப்பட்டு உள்ளது.(P22) இனப் பிரச்சனைக்குத்  தீர்வு கண்டிருந்தால் இராணுவ செலவினங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் இதுவரை காலமும் எத்தனையோ பொருளாதார முன்னேற்றங்கள்   எட்டப்பட்டிருக்கும். சமாந்தர நகர்வாக தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் அணுகுமுறைக்காக அரசமரமும் ஆசைகளை வெறுத்து அகிம்சையை போதித்த புத்தமத சிலைகளும் சின்னங்களும் பயன்படுத்தப் படுகின்றன. மதத்துக்கு மதம் பிடிக்கக் கூடாது எனக்கூறி மனம் வருந்துகிறார். (P 23) இவ்வாறு இன்னும் பலபல.....

 இவ்வாறான நூல்களினாலும் அவை வெளிப்படுத்தும் தகவல்களாலும் பயனேதும் உண்டா என்ற கேள்வி இப்போது எமக்குள் எழலாம். அண்மையில் முகநூல் வாயிலாக ஒரு கடிதம் கண்டேன். இந்தப் படைப்பினை வாசித்த பின், ‘மவ்பிம’ பத்திரிகையின் இதழியலாளரான பெரும்பான்மை இனத்தின் அன்புப் புதல்வி Sandarasee Sudusinghe அவர்களால் அக்கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஆரியசிங்கவின் மகள் என தன்னை உருவகம் கொண்ட அவரது  கடிதம், அன்புராசா அடிகளாருக்கு மிகுந்த புரிதல் உணர்வுடனும் மனிதநேயத்துடனும் எழுதப்பட்டு இருந்தது. அதே புரிதல் உணர்வு சமூகமயப்படும் போது நன்மாற்றங்கள் நிகழக் கூடும். இந்நூலுக்கான அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது கொழும்பிலும் பெரும்பான்மை இனத்தின் பிரதிநிதிகளால் நடாத்தப்பட்டதும் ஆதரவு தரப்பட்டதும் நல்ல சமிக்ஞைதான். அதுமட்டுமல்ல கடல்கடந்தும் கனடா ரொறொன்ரோவில் இந்நூல் அறிமுகவிழா எதிா்வரும் ஜுன் மாதம் 16ம் திகதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமூகமாக ஒன்று சேரும் போது இனம்சாா்ந்த கூருணா்வு கொள்ளும் தமிழ் சிங்கள இஸ்லாமிய மக்கள், தனித்தனி மனிதராக வாழும்போது ஒருவருக்கொருவா் பேருதவிகள் புரிந்தும் உயிா்காத்தும் நட்புப்பாராட்டும் பண்பு, அவர்களுள் மறைந்து உறையும் மனிதம் இன்னும் மரித்து விடவில்லை என்பதையே கூறிநிற்கிறது.

இந்த முரண்நிலையை பகுத்தறிவால் வெல்லும் நாளில் வளமானதோர் நாட்டினை உருவாக்கும் ராஜபாட்டை நமக்காக திறந்திருக்கும். அதுவரை உயிர்காக்கும் 'ஒல்லித் தேங்காய்களுடன்' வாழ்க்கைப் பயணத்தைக் கடப்போம். ஆம். அடிகளார் கூறியபடி பாதைகள் மாறினாலும் மாற்றுப் பாதையின் ஊடாகவேனும் பயணங்கள் தொடர வேண்டும். பயணங்கள் மட்டுமல்ல அனைத்து இனங்களினது சமூகப் பார்வைகளும் மாற்றுச் சிந்தனைகளுடன் விரிவு பெற வேண்டும்.

இம்மண்ணை நேசித்தவர்களுக்கும், நேசிப்பவர்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்நூல் அதற்குரிய பலன்களைப் பெற வேண்டும். பெறுமதி மிக்க ஆக்கம் ஒன்றினைத் தந்தமைக்காக அன்புள்ள அருட்தந்தை அன்புராசா அடிகளாருக்கு நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும்.

நலம் சூழ்க!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.