சமுத்திரனின் 'சமுத்திரன் எழுத்துகள் தொகுதி -03 - கலை இலக்கியம் சமூகம் அரசியல் -விமர்சனப் பார்வை' நூல் பார்வைக்குக் கிட்டியது. சமுத்திரன் எழுத்துகள் என்ற நான்கு நூல்களின் தொகுப்பாக சமூக-இயல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூற்தொகுதி ஒன்றின் மூன்றாவது நூலாக இது வெளி வந்திருக்கின்றது. 4 தொகுப்புக்களாக இந்த நூல்கள் வெளிவந்திருந்த போதிலும், கடந்த காலங்களில் எனக்கு கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் பயணிப்பதற்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த படியினால் இந்த மூன்றாவது நூலே எனது தெரிவில் முதலாவதாக விளங்கியது.

சமுத்திரன் எழுத்துக்கள் சிறு வயது முதலே எனக்கு அறிமுகமாயிருந்தது. ஆயினும் எனக்குள் அவை அதிக பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஆனால் பிறிதொரு சமயம், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஏ.ஜே.கனகரட்னாவின் 'மார்க்சியமும் இலக்கியமும்' நூல் எனது கைக்குக் கிடைத்தது. அதில் ரெஜி சிறிவர்த்தனவின் 'உருவம், உள்ளடக்கம், மார்க்சிய விமர்சனம்' என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது. இது 'லங்கா கார்டியன்' இல் சமுத்திரன் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு எதிர்வினையாக எழுதிய கட்டுரையாகும். அந்தக் காட்டமான கட்டுரையை வாசித்தபோது அந்த விவாதத்தினை கிளப்பிய சமுத்திரனின் கட்டுரையினை வாசிக்கும் ஆர்வம் மேலிட்டது. ஆனால் இதுவரை அந்தக் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ரெஜி சிறிவர்த்தனவின் எதிர்வினைக்கு சமுத்திரன் எழுதிய பதிலாக அன்றைய 'சமர்' இதழ் ஒன்றில் 'கலை இலக்கியத்தில் உள்ளடக்க உருவ உறவும் மார்க்சீய விமர்சனமும்' என்ற கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது. அந்தக் கட்டுரையின் கனதியில் இருந்தும், படைப்புக்களில் உருவ உள்ளடக்கம் குறித்து தர்க்க ரீதியாக அவர் வெளிப்படுத்திய கருத்துக்களில் இருந்தும் அவருடைய ஆளுமையின் வீச்சினை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பின்பு என் பார்வைக்குக் கிட்டிய அவரது கட்டுரைகள் எதனையும் நான் தவறவிட்டிருக்கவில்லை.

இன்று இவரது எழுத்துக்களில் பெரும்பாலானவை தொகுக்கப்பட்டு 4 நூல்களாக வெளிவருவது உண்மையில் ஒரு பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது. இதில் நான் முதலில் வாசிப்புக்குட்படுத்திய 'சமுத்திரன் எழுத்துக்கள் தொகுதி -௦3 கலை இலக்கியம் சமூகம் அரசியல் -விமர்சனப் பார்வை' என்ற நூல் குறித்த எனது அவதானிப்புக்களை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்நூலின் முதலாவது கட்டுரையாக 1976 ம் ஆண்டு கொழும்பு நாடக மன்றத்தினால் நெறியாள்கை செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் குறித்ததான கட்டுரை இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையானது பாலேந்திரா, ஆனந்தராணியின் 'மழை' மற்றும் 'ஓலங்கள்' 'வழிகாட்டி' முதலான நாடகங்கள் மீதான விமர்சனக் குறிப்புக்களாக அமைந்துள்ளது. அது ஈழ விடுதலைப் போர் உக்கிரங் கொள்ளாத ஒரு கால கட்டம். எனவே அந்தக் கட்டுரையும் உக்கிரம் ஏதுமின்றி சாதரணமாக அன்றைய சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் கூடவே நாடகத்தின் அழகியல் அம்சங்களையும் அலசி இருந்தது.

இரண்டாவது கட்டுரை மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு' நாவல் மீதான விமர்சனப் பார்வையாக அமைந்துள்ளது. மு.த.வினால் 1960 களில் எழுதப்பட்ட இந்நாவலானது சமுத்திரன் பார்வைக்கு 1985 களிலேயே வருகின்றது. 'ஒரு தனி வீடு' எமது இனப்பிரச்சினை குறித்து தீவிர இலக்கியத் தளத்தில் எழுதப்பட்ட முதல் நாவல் எனக் கொள்ளலாம். இந்நாவலில் மு.தளையசிங்கம் சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள்ளாகப்படும் எமது இனத்திற்குரிய ஒரே வழி பிரிந்து போதல் மட்டுமே என்று கருத்தினை முன் வைக்கிறார். எமது அரசியல் போராட்ட வடிவங்கள் குறித்து மு.த. வைக்கும் கருத்துகளிற்கு மிகக் கடுமையான எதிர்வினைகளை சமுத்திரன் ஆற்றுகின்றார். இடதுசாரிகளை பிற்போக்குவாதிகள் என குற்றம் சாட்டும் மு.தவின் மீது நீங்கள் சார்ந்துள்ள தமிழரசுக் கட்சியின் நேர்மைத் தன்மை என்ன என்ற கேள்வியுடன் அக்கட்சியின் பிற்போக்குத்தனங்களை கடுமையாகச் சாடுகின்றார். இக்கட்டுரையின் இறுதியில் எமது விடுதலை இயக்கங்கள் இடது சாரி இயக்கங்களாக மாற்றமுறும் என்ற கருத்தினை முன் வைக்கின்றார். ஆனால் இப்போது இவர் இக்கருத்தினை, ஒரு அதீத நம்பிக்கையின் ஊடாக தான் வைத்த ஒரு தவறான கருத்து என்பதினை ஏற்றுக் கொள்கின்றார்.

ஈழப்போரின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக தமிழ் மக்களின் மேற்குலகம் நோக்கிய இடப்பெயர்வும் அமைகின்றது. புலம் பெயர் எழுத்தாளர்கள் உருவாகின்றனர். பெருவாரியான புலம் பெயர் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியச் சந்திப்புக்கள் நிகழ்கின்றன. இத்தருணத்தில் மேற்குலகிற்கு புலம் பெயர்ந்த சமுத்திரனும் இது குறித்து பல கட்டுரைகளை பல்வேறு இதழ்களிலும் எழுதுகின்றார். அப்படி அவர் எழுதிய பல கட்டுரைகளில் இருந்து அவர் 1989 இல் எழுதிய 'ஈழத்தமிழர் போராட்டத்தில் புலம்பெயர் எழுத்தாளரின் பங்கு' கட்டுரையும் 2001 இல் எழுதிய 'புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றிச் சிலகேள்விகள்' என்ற இரு முக்கியமான கட்டுரைகளும் இந்நூலில் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளன.

மேலும் கலாசாதனா கலைக்கூடம் நிகழ்த்திய 'அரங்கம் 2018 ' நிகழ்வு குறித்த தனது அனுபவப் பகிர்வுகளை எழுதியிருக்கின்றார். அத்துடன் மௌனகுருவின் 'கூத்தயாத்திரை' எம்.வாமதேவனின் 'குன்றிலிருந்து கோட்டைக்கு' எஸ்.வி.ராஜதுரையின் 'இந்து, இந்தி, இந்தியா' சரவணின் 'தலித்தின் குறிப்புக்கள், இந்துசாதனம் திருஞனசம்பந்தபிள்ளையின் 'உலகம் பலவிதம்' போன்ற நூல்களுக்கு இவர் எழுதிய விமர்சனக் குறிப்புக்களும் கௌரியின் 'அகதி' என்ற நெடுக்கவிதைக்கு இவர் எழுதிய முன்னுரையும் கட்டுரைகளாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

'பல வருடங்களுக்கு முன் பேராசிரியர் தமிழவன் தனது சிற்றேடு இதழில் பேராசிரியர் சிவத்தம்பி பற்றி குறிப்பிடும்போது 'முன்னுரை எழுதுவதற்காக மட்டுமே இலக்கியப் பிரதிகளை வாசிப்பவர். அதற்கு மேல் அவருக்கும் இலக்கியத்திற்கும் இடையே எந்தவித பரிச்சயமும் இல்லை' என எழுதியிருந்தார். அதிர்ச்சியளிக்கும் இந்த வாசகம் எமக்குள் கோபத்தினை ஏறபடுத்தி இருந்தாலும் சில வேளைகளில் அது உண்மையாக இருந்ததினையும் எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. கல்வியலாலர்களும், , ஆய்வாளர்களும், துறைசார் வல்லுனர்களும் இலக்கியப் பிரதிகளை அணுகும்போது அவர்களுக்கு ஏற்படுகின்ற தடுமாற்றங்கள் இவை. இவற்றினை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. "எனது தொழில், எனது அரசியல் ஈடுபாடு இவைகளின் காரணங்களினால் நான் சமூக விஞ்ஞான உலகிலேயே அதிகம் சஞ்சரிக்கின்றேன் " - இவ்வாறு கூறுகின்ற சமுத்திரனிடமும் இதே தடுமாற்றங்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

"ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான நமது கலை,இலக்கிய,அரசியல் பார்வைகள் போக்குகளையொட்டிய தொகுதியே இது" - இவ்வாறு தனது பதிப்புரையில் எம்.பௌசர் குறிப்பிடுகின்றார். உண்மை 50 வருடங்களுக்கும் மேலாக போரும் மரணமும் புலம் பெயர்வுகளுமாக வாழ்ந்த ஒரு சமூகத்தின் துயர வாழ்வும் அந்த வாழ்வின் பிரதிபலிப்பாக விளங்கும் இலக்கியப் போக்குகள் குறித்ததுமான ஒரு சமூகப் பார்வை இது. ஆயினும் இந்தப் பார்வையில் இடையிடையே மாபெரும் வெற்றிடங்கள் நிரம்பி இருப்பது எமக்கு பலத்த ஏமாற்றத்தினை அளிக்கின்றது. ஈழ விடுதலைப் போரின் முடிவிற்குப் பின்பாக, போரிற்குப் பிந்திய பிரதிகளாக வெளிவந்து ஒரு பாய்ச்சலை நிகழ்த்திய படைப்புக்கள் குறித்ததான தகவல்கள் இங்கு எந்த ஒரு கட்டுரையிலும் முன் வைக்கப்படவில்லை. புலம் பெயர் இலக்கியங்கள் குறித்தும் புலம் பெயர் எழுத்தாளர்களின் பணிகள் குறித்தும் 1989 இலும் 2001 இலும் கருத்துத் தெரிவித்திருந்த அவர் இறுதிப் போரிற்கு பின்பாக இங்கு செயலூக்கம் பெற்று வரும் இலக்கியப் போக்குகள் குறித்து எதுவும் பேசியிருக்கவில்லை.

இங்கு ஐரோப்பாவில் 40 இற்கு மேற்பட்ட இலக்கியச் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்த போதும் அவர் 2 இலக்கியச் சந்திப்புகளில் மட்டும் கலந்து கொண்டதாக தெரிவிக்கின்றார். இந்த இலக்கிய சந்திப்புக்கள் குறித்தும், ஒரு ஜனநாயக வெளியினை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப் பட்ட அந்த அமைப்பிற்குள் இடம் பெற்றிருந்த அராஜகப் போக்குகள், உரிமை மறுப்புக்கள் குறித்ததுமான சமுத்திரனின் கருத்துக்கள் என்ன என்பதினையும் இந்நூலின் மூலமாக எம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. கூடவே இலண்டன் 40வது இலக்கியச் சந்திப்பின் ஊடாக இலக்கியச் சந்திப்பானது மகிந்த ஆதரவு கோஷ்டிகளினால் மிகவும் தந்திரமாக தாயகத்திற்கு கடத்தப் பட்ட நாம் அறிந்த செய்திகள் குறித்ததான சமுத்திரனின் நிலைப்பாடுகளையும் எம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

சரவணனின் 'தலித்தின் குறிப்புக்கள்' நூல் குறித்தும் தனது ஆழமான பார்வையினை சமுத்திரன் முன் வைக்கின்றார். "தலித்தியம் பேசுவதென்பது அவ்வளவு இலகுவானதுமில்லை; இன்பமானதுமில்லை. உயர்த்தப்பட்டவர்கள் பேசும்போது அவர்களுக்கு ஒரு மதிப்பும் கிடைத்து விடுகின்றது. ஒடுக்கப்பட்டவர்கள் பேசும்போது அவர்களின் அடையாளம் வெளிப்பட்டு அவமானப் பார்வைக்கு உள்ளாக்கப்பட்டு விடுகின்றார்கள் " - இது சரவணன் தனது நூலில் முன் வைக்கும் குறிப்பொன்று. சமுத்திரன் இது குறித்தும் தனது பார்வையினை முன் வைக்கின்றார். தலித்தியம் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அவமானங்களை தெளிவுறுத்துகின்றார். ஆனால் தமக்கு ஒரு மதிப்பு உண்டாக வேண்டுமென்ற காரணத்திற்காக தலித்தியம் பேசும் ஆதிக்க சாதியினர் குறித்து அவர் ஒன்றும் பேசவில்லை. இன்று அனேகமாக புரட்டஸ்தாந்து மேட்டுக் குடிகளினாலும் அவர் சார்ந்த குடும்ப உறவினர்களினாலும் பேசப்படும் தலித்தியம் குறித்து நாம் அதிகம் பேச வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இந்த மேட்டுக் குடிகள் பிறப்பின் காரணமாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்து 'நீங்கள் சாதி வெறியர்' என்று வைக்கின்ற நகை முரணான விடயங்கள் குறித்தும் நாம் இன்று அவசியம் பேசியே ஆக வேண்டும்.

இந்துசாதனம் ம.வே.திருஞனசம்பந்தபிள்ளையின் 'உலகம் பலவிதம்' நூல் குறித்த 'மாற்றமும் மரபு பேணலும்' என்ற கட்டுரை இந்நூலின் மிகப் பெரிய கட்டுரையாகச் சுமார் 40 பக்கங்களிற்கும் மேலாக இடம் பிடித்துள்ளது. இந்நூல் குறித்தும் ம.வே.திருஞனசம்பந்தபிள்ளையின் கருத்துக்கள் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை சமுத்திரன் மிகக் காட்டமாக முன் வைக்கின்றார். ஆயினுமோர்  இடதுசாரிப் பின் புலத்தில் இருந்து கொண்டு, ஆறுமுக நாவலரின் சைவாசிரிய மரபில் வந்த ஒரு சாதியபிமானமும் சமய ஆச்சாரங்களும் கொண்ட ஒருவரின் நூல் குறித்து ஒரு குறிப்பினை எழுத வேண்டிய அவசியமும் நெருக்கடியும் சமுத்திரனிற்கு எப்படி உருவாகியது என்ற கேள்வியும் எம்மிடையே உருவாவதினைத் தவிர்க்க முடியவில்லை.

சமுத்திரன் எழுத்துக்கள் தொகுதி 1,2,3 இணையும் மேலோட்டமாக நோட்டமிட்டேன். அதில் தொகுதி 1 இல் இணைக்கப்பட்டுள்ள 'ஏ.ஜே. ஒரு விவாதம் தந்த உறவு' 'சபாலிங்கம் ஒரு காலந் தாழ்த்திய அஞ்சலி' 'நுஃமான் மாமா இல்லாத தமிழீழம் வேண்டுமா ?' 'அ.சிவானந்தன் - ஒரு ஆளுமையின் மறைவு' போன்ற கட்டுரைகள் உண்மையில் இந்த 3வது தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவை மற்றைய நூல்களுடன் இணைக்கப்பட்டிருப்பது கொஞ்சம் நெருடலாகவே அமைந்துள்ளது. தொகுப்பாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்களாக ! அத்துடன் 'கலை இலக்கியத்தில் உருவம் உள்ளடக்கம்' குறித்து சமுத்திரனும் ரெஜி சிறிவர்த்தனவும் தொடர்ந்த விவாதத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் காத்திரமானவை. அவை இந்நூலில் இணைக்கப்படாமையும் கொஞ்சம் ஏமாற்றத்தினை அளிக்கின்றது. கட்டுரைகள் எழுதப்பட்ட ஆண்டுகள் மிகத் தெளிவாக அடிக்கோடிடப் படுகின்றன. ஆனால் எந்த இதழ்களில் வெளிவந்தவை என்ற தகவல்கள் சரியான முறையில் இணைக்கப்படவில்லை. இத்தகைய ஆய்வு நூல்களிற்கு இது போன்ற தரவுகளும் மிகவும் அவசியமானவைகளாகும். இதே வேளை இது போன்ற நூல்களை வெளியிடும் சமூக இயல் பதிப்பகத்தின் இந்தக் கடினமான பணிகளையும் நாம் கருத்திற் கொள்கின்றோம்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் இந்நூலானது உண்மையிலேயே ஒரு சமூகத்தின் 50 வருட கால கலை, இலக்கியச் செயற்பாடுகளையும் அதன் சிந்தனைப் போக்குகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றன என்பதில் எம்மிடையே மாற்றுக்கருத்துக்கள் இல்லை. இங்கு பல விடுபடல்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது. போதாமைகள் புலப்படுகின்றன. சில புள்ளிகளில் நாம் முரண்படவும் செய்கின்றோம். ஆயினும் இன்று கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கும் எமது அடுத்த சந்ததியினருக்கும் இந்நூலானது ஒரு முக்கியமான வரலாற்று ஆவணமாக விளங்கும் என்று கூறுவதில் எமக்கு எந்தவிதத் தயக்கமுமில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.