எழுத்தாளர் ரொய் ரட்னவேல் ( Roy Ratnavel) எழுதிய அவரது வாழ்க்கை அனுபவ நூலான  Prisoner # 1056 (கைதி # 1056) என்னும் நூலை ஏப்ரில் 18, 2023 அன்று வெளியிடுகின்றது உலகப் புகழ்பெற்ற பதிப்பகங்களில் ஒன்றான பென்குயின் பதிப்பகத்தின் கனடாப் பிரிவான பென்குயின் ராண்டம் ஹவுஸ் (Penguin Random House Company) பதிப்பகம்.

இலங்கையில் போர்ச்சூழல் நிலவிய காலத்தில் நூற்றுக்கணக்கில் வடபகுதி இளைஞர்கள் கைது செய்யப்பட்டுப் பூசா முகாமில் அடைக்கப்பட்டார்கள்.  என் மாமா ஒருவரின் (அம்மாவின் தம்பி)  புத்திரர்களும் அவ்விதம் பூசாவில் அடைக்கப்பட்டு, மாமாவின் முயற்சியினால் பூசாவிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கனடா வந்தவர்கள்.  ரொய் ரட்னவேலும் அவ்விதம் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுக் கனடாவுக்குத் தனது பதினேழாவது வயதில் வந்தவர்.  சிறையில் கைதியாக இவர் அடைக்கப்பட்டபோது சித்திரவதை செய்யப்பட்டுத் துன்பத்தினை அனுபவித்திருக்கின்றார். அப்போது கைதியாக அவருக்குக் கொடுக்கப்பட்ட கைதி இலக்கம் 1056.

-  நூலாசிரியர் ரொய் ரட்னவேல் -

கனடா வந்த ரொய்  ரட்னவேல் எல்லாக் குடிவரவாளர்களையும் போல் பல்வேறு வேலைகளையும் செய்து , மேலதிகக் கல்வி கற்று தற்போது சுயாதீனமாக இயங்கும், சொத்துக்களைப் பராமரிக்கும் பிரபல நிதி நிறுவனமான CI Global Asset Management நிறுவனத்தில் உயர் பதவியிலிருக்கின்றார்.

கைதி இலக்கம் 1056 எனும் இந்நூல் இவர் ஆங்கிலத்தில் எழுதிய நூல்.  நூலை வாங்க விரும்புபவர்களுக்கான இணைய இணைப்பு

அண்மைக்காலமாக இலங்கைத் தமிழர்களின் சொந்த அனுபவங்களை வெளிப்படுத்தும் ஆங்கில நூல்கள் பல வெளியாகத்தொடங்கியுள்ளன. அண்மையில் கூட லோகதாசன் தர்மத்துரையின் The Sadness of Geography என்னும் இவ்வகையான அபுனைவு நூல் DUNTURN பதிப்பக வெளியீடாக  வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

அந்த அபுனைவு நூலைத் தான் எப்படி எழுதினேன், எழுதத்தூண்டியவை எவை? தூண்டியவர்கள் எவரெவர்?  நூலை வெளியிடுவதற்காக இலக்கிய முகவரைக் கண்டு பிடித்தது எப்படி? அதில் அடைந்த ஆரம்பத் தோல்விகள் பின்னர் எப்படி வெற்றியடைந்தன? இவற்றுக்காக எடுக்கப்பட்ட காலம் எவ்வளவு? போன்ற விடயங்களை வெளிப்படுத்தும் ஆங்கிலக் கட்டுரையொன்று 'தமிழ்க்கல்ச்சர்.காம்'இணையத் தளத்தில் வெளியாகியுள்ளது. அது இவ்விதம் தமது ஆங்கில நூல்களைப் பதிப்பிக்கப் பதிப்பகங்களை நாடி நிற்கும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் நல்லதொரு கட்டுரை.  அதனால்  அதற்கான இணைய இணைப்பையும் பகிர்ந்துகொள்கின்றேன். -  Why and How I Wrote Prisoner #1056

நூல் பெரு வெற்றியடைய வாழ்த்துகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.