அரசியல் புனைவுகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. படைப்பாளிகள் கொந்தளிக்கும் சமகால நிகழ்வுகளைப் பேசு பொருளாக்கித் தமது படைப்புக்களின் ஊடாக உடனுக்குடனேயே தமது வாசகர்களுடன் உரையாடும் சூழலொன்று இன்று உருவாகி வந்துள்ளது. இந்த வகையில் கடந்த சில வருடங்களாக பலத்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியிருந்த இஸ்லாமியப் பெண்களின் ஆடைகள் குறித்தும் அந்த ஆடைகளுக்கு எதிரான குரல்கள் குறித்ததுமான சம்பவங்களை மையப்படுத்தி 'பர்தா' எனும் நாவல் 'எதிர்' வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நாவலினை பாத்திமா மாஜிதா எழுதியுள்ளார். கிழக்கிலங்கையில் பிறந்து இப்போது இலண்டனில் வசித்து வரும் இவர் ஏற்கனவே பல சிறுகதைகளை எழுதியிருந்த போதிலும் இது இவர் எழுதிய முதலாவது நாவல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்ற காலப்பகுதியில் வெளிவந்த இந்நாவல் பல்வேறு ஆளுமைகளினாலும் எழுதாளர்களினாலும் சிறந்த ஐந்து புத்தகங்களில் ஒன்றாக பரிந்துரை செய்யப்பட்டதும், இதன் வெளியீட்டாளர் இதனை அதிக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக அறிவித்ததும் நாம் அறிந்த செய்திகள்.

இந்நாவல் மூன்று தலைமுறைகளின் கதையினைப் பேசி நிற்கின்றது. கிழக்கிலங்கையில் உள்ள மாவடி என்ற கிராமத்தைக் களமாகக் கொண்டு கிளைக்கும் நாவல் கிழக்கு இலண்டன் பகுதி வரை நகர்கின்றது. மாவடி கிராமத்தில் அமைதியாகவும் எளிமையாகவும் வாழ்ந்து வரும் அந்த இஸ்லாமியப் பின்னணி கொண்ட சமூகத்தில் மதம் என்ற போர்வையின் கீழ் ஏதோ ஒரு தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள் நுழையும் பர்தா என்னுமோர் அந்நிய ஆடையானது ஏற்படுத்தும் களேபரங்களும் குழப்பங்களும் மாற்றங்களுமே இந்தக் கதையின் மையக்கரு.

சுரையா எனும் பதின்மவயதுச் சிறுமியை மையக் கதாபாத்திரமாகவும், அவள் தாய் பீவி, தந்தை ஹயாத்து லெப்பை, அவர்களது உறவுகள், நட்புக்கள் என்று பல்வேறு வகைப்பட்ட மனிதர்களைக் கதை மாந்தர்களாகவும் கொண்டு கதை நகர்கின்றது. ஹயாத்து லெப்பை ஒரு அன்பான தந்தை. தன் மகள் சுரையாவிற்கு பிரிட்டிஷ் இளவரசி டயானா போல் தலைமுடி இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அவளை தானே சலூனிற்கு கூட்டிச் சென்று ' டயனா கட்' ஸ்டைலில் அவள் தலையை அலங்கரித்து அழகு பார்க்கின்றார். ஆனால் அவரே ஓரிரு வருடங்களின் பின் பர்தா என்னும் ஈரானிய ஆடையினை அவள் அணிய மறுக்கின்றாள் என்ற காரணத்திற்காக கை நிறைய சிவப்பு மிளகாய்களை எடுத்து அவள் கதறக் கதற அவ்வளவற்றையும் அவள் வாயில் போட்டு மெள்ள வைக்கின்றார். அவள் தனது மனதில் இரத்தக் கறைகளால் எழுதி வைத்துக் கொண்ட இந்தக் கோர நிகழ்வைச் செய்யும்படி ஒரு அன்பான தந்தையைத் தூண்டுகின்றது அவர் மனதில் மதத்தின் பெயரால் புதிதாக விதைக்கப்பட்ட ஒரு விஷக் கருத்து. அன்பான தாய் பீவி. அவள் தன் மகள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவளை கொடிய தண்டனைகளுக்கு உட்படுத்துகிறாள். அவள் மீது கொடிய தண்டனைகள் பிரயோகிக்கப்படுவதினை அனுமதிக்கின்றாள்.

 

- நாவலாசிரியர் மாஜிதா -

பல்வேறு மையங்களாக விரியும் நாவல், பர்தா எனும் ஆடை அந்த அமைதியான அழகான கிராமத்தினை எவ்வாறு சிதைக்கின்றது என்பதினை அழகாக விபரித்துச் செல்கின்றது.  அதிபர் ஒருவர் தனது கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியைகள் அனைவரையும் கட்டாயமாக பர்தா அணிய வேண்டுமென்று மிரட்டுகிறார் . திருமண வைபவங்களில் அவர்கள் காலங்காலமாக கடைப்படித்து வந்த கலாச்சார சடங்குகள் புதிதாக வந்த மதக் கட்டளைகளினால் தடை செய்யப்படுகின்றது. சாதாரண மக்கள் தொலைக்காட்சியில் தொடர் நாடகங்கள் பார்ப்பது தடை செய்யப்படுகின்றது. திருக்குர்ஆன் இல் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதினை அறியாத இரு குழுக்கள் பர்தாவினை எப்படி அணியவேண்டுமென்று குறித்து தமக்குள் மோதிக் கொண்டு அடிதடியில் இறங்குகின்றனர். இசையை ரசிப்பது பாவமென்று போதிக்கப் படுகின்றது. நடனமாடுவது முற்றாக தடை செய்யப் படுகின்றது. அவர்கள் மண்ணில் அவர்கள் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வந்த கலாச்சார சடங்குகள், சம்பிரதாயங்கள் மதத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும் சட்டங்களினால் இல்லாமல் ஆக்கப்படுகின்றன.

சுரையா இந்த மாற்றங்களை எல்லாம் அவதானிக்கின்றாள். பர்தா என்னும் ஆடையும் அதை அணிவதற்கு எதிரான அவளது போராட்டமும் அவளைத் தொடர்ந்தும் துரத்தியவாறே இருக்கின்றது. அவளுக்குத் தனது குடும்பத்துடன் இணைந்து வாழ்வது பிடிக்கவில்லை. அவள் பல்கலைக்கழகத்தில் புகுந்து படிக்கின்றாள். அங்கும் அவள் மிரட்டப்படுகின்றாள். இறுதில் அவள் மேற்குலக நாடொன்றில் தஞ்சமடைகின்றாள். இங்கு அவள் பர்தா எனும் ஆடை அணியவேண்டுமென்ற கட்டாயத்தில் இருந்து விடுதலை பெறுகின்றாள். ஆயினும் அவள் பிறந்த மண்ணில் அவளைத் துரத்திய பேய் இங்கும் அவளைத் துரத்துகின்றது. அவள் வாழும் கிழக்கு இலண்டன் பகுதியில் உள்ள மத்ரசா நிர்வாகத்தினர் இங்கும் அவள் மகள் றாபியா மீது பர்தா அணிய வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தினை சுமத்துகின்றது.

உண்மையில் மாஜிதா பர்தா எனும் ஆடையின் கொடூரம் நிறைந்த முகங்களை தெளிவாகப் படம் பிடித்துக் காடுகின்றார். இங்கு கனவுகளுடன் , கற்பனைகளுடனும் வாழும் பதின்ம வயதுப் பெண்களின் அழகிய முகங்கள் ஒரு கோரமான ஆடையின் மூலம் விகாரம் ஆக்கப்படுகின்றன. அவர்களது கற்பனையின் சிறகுகள் ஒரு கூரிய கத்தியால் அரித்தெடுக்கப்படுகின்றன. ஒரு பல்லின மக்கள் வாழும் சமுதாயத்தில் அவர்களுடன் கூடவே தாமும் கல்வி கற்று, உயர்ந்த பதவி பெற்று தலை நிமிர்ந்து வாழலாம் என்ற அவர்களது ஆசைகள், அபிலாசைகள் அனைத்தும் முளையிலேய கிள்ளி எறியப்படுகின்றன. ஒரு மூடுண்ட அறைகளுக்குள்ளே அவர்கள் சிறை வைக்கப்படுகின்றார்கள். பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு ஒப்பான ஒரு கொடிய அடக்குமுறை ஒரு மதத்தின் பெயரால் அவர்கள் மேல் பிரயோகப்படுத்தப் படுகின்றது. இதில் முரண்நகையான விடயம், இத்தனை அடக்கு முறைகளையும் அவர்கள் மேல் பிரயோகித்து விட்டு 'அவர்கள் விரும்பித்தானே இவற்றினை எல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள்' என்ற ஒரு பிரச்சாரம் வேறு முன் வைக்கப்படுவதுதான்.

'அழகை மறைத்தலும் மறைத்தலின் அழகும்', இது ஈரான் தூதுவராலயத்தில் இருந்து வரும் சஞ்சிகை ஒன்றில் தொடராக வெளிவரும் கட்டுரையொன்று தமிழாக்கம் செய்யப்பட்டு மாவடி கிராமத்திற்குள் நுழைகின்றது. அழகை மறைப்பது எப்படி என்றும் அந்த மறைத்தலின் பின் உருவாகும் அழகு எப்படியிருக்கும் என்றும் விபரித்து பர்தாவினை எல்லா பெண்களும் அணிய வேண்டுமென்று அது ஊக்குவித்து பெண்களை வசியம் செய்கின்றது. ஆனால் இந்நாவல் அந்த அழகை மறைத்தலின் பின் உள்ள கொடூரங்களை, கோரங்களை, அதன் விகாரங்களை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

எந்தவிதமான புதிய உத்திகள் ஏதுமின்றி ஒரு நேர்கோட்டுப் பாதையில் ஆற்றொழுக்கான நடையில் நாவல் நகர்கின்றது. ஒரு தேர்ந்த வாசகன் மட்டுமல்ல தடுக்கில் தவழும் குழந்தையும் புரிந்து கொள்ளக் கூடிய எளிமையான மொழி மாஜிதாவினுடையது. ஆயினும் முதல் நாவலிற்கே உரிய தடுமாற்றங்களும் இந்நாவலில் தாரளாமாக உண்டு. 125 பக்கங்களுக்குள் அடங்கும் இந்நாவல் சில தருணங்களில் ஏதோ ஒரு அவசரகதியில் எழுதப்பட்டது போன்றதொரு தோற்றத்தினை எமக்கு அளிக்கின்றது. இன்னமும் மிக விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது.

ஈழ விடுதலைப் போர் உக்கிரம் கொண்டிருந்த காலப்பகுதியில் இக்கதை நகர்கின்றது. ஆயினும் அந்தச் சூழல் குறித்த சித்திரிப்பு இங்கு முற்று முழுதாகத் தவிர்க்கப்பட்டு, போர் குறித்த ஒரேயொரு தகவல் மட்டுமே வந்து போகின்றது. அதற்கு மாறாக இக்காலப்பகுதியினை குறிப்புணர்த்துவதற்கு தமிழகத்தில் வெளி வந்த திரைப்படங்களையும் திரைப்பாடல்களையும் மாஜிதா பயன்படுத்துகின்றார். இத்தகைய வணிகச் சமாச்சாரங்களை தீவிர இலக்கியப் படைப்புக்களில் கோர்ப்பதென்பது அப்படைப்பினை இன்னொரு தளத்திற்கு கீழ் நகர்த்திச் சென்று அதன் அழகினைச் சிதைக்கும் அபாயத்திற்கு இட்டுச் சென்று விடும். அதனை அவர் தவிர்த்திருக்கலாம். நாவலின் ஓரிரு அத்தியாயங்களில் மட்டுமே வரும் புதிய கதைக் களங்களான கொழும்பு நகர், கொழும்பு பல்கலைக்கழக வளாகம், கிழக்கு இலண்டன் பகுதி போன்றவற்றை மாஜிதா மிக அழகாகக் காட்சிப்படுத்துகின்றார் . ஆனால் இந்நாவலின் முக்கிய கதைக் களமான மாவடி கிராமத்தினை எம்முன் காட்சிப் படுத்துவதில் போதுமான கவனத்தைச் செலுத்தத் தவறி விடுகின்றார். சில வேலைகளில் இரு பந்திகளுக்கு இடையில் பெரும் காலப்பகுதியொன்று காணமல் போய் விடுகின்றது. சில பாத்திரங்கள் திடீரென்று வருகின்றன. பின் திடீரென்று இல்லாமல் போகின்றன. இந்நாவலானது சரியான முறையில் மெய்ப்புப் பார்க்கப் படவில்லையென்பதையும் போதுமானவரையில் செம்மையாக்கப் படவில்லை என்பதினையும் வாசிக்கும்போது எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

"கூரான வாளின் மீது நடக்கும் சாகசத்தை முதல் நாவலிலேயே அச்சமின்றி மேற்கொண்டிருக்கின்றார் பாத்திமா மாஜிதா" - இப்படியாக கவிஞர் சுகுமாரன் இந்நூலின் பின் அட்டைக் குறிப்பில் குறிப்பிடுகிறார். உண்மை. பர்தா குறித்து சர்ச்சைகள் எழுந்த ஒவ்வொரு காலப்பகுதியிலும் தான் வெளிபடுத்திய கருத்துக்களுக்காக பலத்த நெருக்கடிகளையும் அவதூறுகளையும் எதிர்கொண்டவர் மாஜிதா. ஆனால் இந்த நெருக்கடிகள் அவர் துணிச்சலினை மழுங்கடித்து விடவில்லை. இந்நாவல் வெளிவந்து ஒரு குறுகிய காலமே ஆகின்றது. இக்குறுகிய காலகட்டத்திற்குள் பல்வேறு வகையான விமர்சனங்களும் அவதூறுகளும் இந்நாவல் மீதும் அவர் மீதும் வைக்கப்படுள்ளன . 'இது ஒரு நாவல் என்ற வடிவத்திற்குள் அடங்கவில்லை' எனவும் ஒரு சில ஆளுமைகள் வியாக்கியானம் செய்துள்ளனர். அதில் ஓரளவு உண்மை உண்டு. ஆனால் எமது பிரச்சினை அதுவல்ல. இங்கு மாஜிதா தனது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பல கொடூரமான, கொடுமையான நிகழ்வுகளுக்கு எதிராக நீதி கேட்டு தனது உரத்த குரலினை எழுப்பியுள்ளார். தனது வலி மிகுந்த நினைவுகளை தனது வலிமையான எழுத்துக்களால் வெளிப்படுத்தி எம்முடன் உரையாட முற்பட்டிருக்கின்றார் . இந்த உரையாடலானது பல்வேறு தளத்திற்கும் நகர்த்திச் செல்லபட்டு ஒரு ஆடையின் பெயரால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் பெண்களின் வாழ்வில் ஒரு சிறிய விடியலையாவது ஏற்படுத்தும் எனபது எமது நம்பிக்கை. அந்த விடியலிற்கான ஒரு நம்பிகை ஒளியினை ஏற்படுத்துவதிற்கான ஒரு உரையாடலினை மேற்கொள்ளவதென்பது சமூகத்தில் உள்ள எங்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமை ஆகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.