'நாம் விரும்புகின்றவையும் திட்டமிடுபவையும் எப்போதும் நடந்து விடுவதில்லை .விரும்பாதவையும் எதிர்பாராதவையும் நடந்து விடுகின்றன ' . யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அம்மையாரின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பில் படைப்பாளியின் உரை இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. தத்துவார்த்தமான வசனங்கள் மட்டுமல்ல, சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகவும் இதுவே அமைந்துள்ளது.
யுத்தமும் இடம்பெயர்வுகளும் பேரழிவுகளும் உயிரிழப்புகளும் யாரும் விரும்பிப் பெற்றவை அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அமைந்தவையும் அல்ல. சர்வதேச அரசியல் சதிகளினாலும் மனச்சாட்சியற்ற உள்நாட்டு அரசியல் வாதிகளாலும் திட்டமிட்டே வடிவமைக்கப் பட்டவை. ஆனாலும் அப்பாவிப் பொதுமக்களுக்கு இவை எதிர்பாராதவை. விரும்பத் தகாதவை. பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு, 'நெல்லியடி பரணி அச்சகத்தின்' வெளியீடாகும். தமிழ்ப் பாரம்பரியத்தின் உணர்வு பூர்வமான குறியீடாகவும் முக்கியமான சிறுகதையின் தலைப்புமான 'தாலி' அட்டைப் படத்தினை அலங்கரிக்கிறது.

இனப்பிரச்சனை சார்ந்த வன்முறைகளில், மிகக் குறைந்த அனுபவங்களையே கொண்டிருக்கும் பலரால், இவ்வாறான பயங்கரங்கள் உணரப்படுவதற்கு இலக்கியத்தின் மூலம் பங்களிப்பை நல்கும் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் பணி பெறுமதி மிக்கது.  யுத்த வன்முறைகள் இயல்பு வாழ்வினை பலிவாங்கிய கடந்த காலங்களில், மக்களின் வாழ்வியல் எவ்வாறு அதனை உள்வாங்கியது என்பதே இத்தொகுப்பின் முக்கிய பேசுபொருள். எளிமையான யதார்த்த நடை எழுத்தாளரின் அனுபவச் சிறப்பினை உணர வைக்கின்றது.  எனினும் ஆழ்ந்த கலாசார பாரம்பரிய சிந்தனைகளுக்கும், பெண்ணியம் சார்ந்த மனோதத்துவங்களுக்கும் இடம் கொடுக்கும் இரு முக்கிய கதைகளான 'தாலி`, 'மலை முகடுகள் சரிக்கப்படுகின்றன', ஒப்பீட்டுக்கு உரியவை. இக்கதைகள் பல கேள்விகளை மனதில் எழுப்பவும் தவறவில்லை.

'இன்றும் இன்னும்' சிறுகதை போல, தமது சொந்த மண்ணில் தொடர்ந்து வாழ்பவர்கள் சுமந்த வலிகள் ஒரு வகை. சொந்தவீட்டில் வாழமுடியாது இடம்பெயர்ந்து போனவர்கள்; மானுடப் பிறப்பின் இறுதி மரியாதைகளுக்குக் கூட வழியில்லாது தமது பயணப்பாதை எங்கும் அந்தரத்தில் உலவும் ஆன்மாக்கள்; சொந்தவீட்டில் இறந்தாலும் உடலை மயானத்தில் சிதையேற்றுவதற்கு இராணுவத்தினரின் அனுமதி வேண்டி காத்திருந்த சடலங்கள்; பிள்ளைகளை போராட்டத்துக்காக அர்ப்பணித்து அநாதையான பெற்றோர் ; இவர்களைப் போன்ற பலரின் சாபத்தால் நிறைந்தது இந்நாடு. மனதை ரணமாக்கிய கதை.

             - எழுத்தாளர் யோகேஸ்வரி  சிவப்பிரகாசம் -

வயோதிபர்கள் மட்டுமல்ல, குண்டு வீச்சுகளினால் காயப்பட்ட இளம் சிறார்களும், வைத்திய மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்றி தமது இன்னுயிர் நீத்த சம்பவங்கள் பல. இந்த மண்ணின் அவலங்களாக வரலாற்றில் நிலைபெறக் கூடியவை. நடுக்கடலில், ஆதரவற்ற ஒரு தாய் சுகவீனமுற்ற  தன் குழந்தையின் இறப்பைக் கண்முன்னே எதிர்கொள்ளும் சோகசரித்திரம் 'மயான காண்டம் '. இத்தகைய துன்பியல் உணர்வுகளை தன்னிலையில் நின்று அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே அதன் வலி புரியும்.

குழந்தைப் பருவத்தில் எதிர்கொள்ளும் பயங்கர அனுபவங்களே சிறார்கள் மனதில் இராணுவ சீருடை 'எண்டாலும் எனக்குப் பயம் ' என ஆழ்மனப் பதிவாகி இருக்கின்றது. சிறுவர் உளவியல் கூறும் கதை.

யுத்த சூழ்நிலைகளால் புலம் பெயர்ந்தவர்களின் ஆதங்கங்கள் வேறோர் வகை. உறவுகளைப் பிரிந்து வாழ்வதன் ஏக்கங்கள்; புலத்திலிருந்து சொந்தநிலம் வந்தாலும் தமது பாரம்பரியம் மிக்க கோயில் சார்ந்த வாழ்வியலின் இன்பங்களை அனுபவிக்கக் கொடுத்து வைக்காத பரிதவிப்பு; இராணுவ கெடுபிடிகள் வன்முறைகளால் சூழப்பட்டு நினைத்து ஏங்கும் காரியங்களைச் செய்ய முடியாத தடைக்கற்கள்; இவை அனைத்தும் யுத்தகாலத்தின் வலிகள். அனுபவித்தால்தான் புாியும். 'மறந்து போகுமோ இந்த மண்ணின் வாசனை' என்ற பாடல் வரிகள் ஞாபகத்தில் வருகின்றன.

'தலை 2' சிறுகதை சங்கிலியன் சிலையுடன் தொடர்புடைய அக உணர்வின் நுண்ணலைகளை இனம் காட்டுகிறது. வீரமரபுத் தன்மையை விரும்பும் மனங்கள் சிலை திருத்தப் பட்ட போது , ஏற்பட்ட முகமாறுதல்களை ஏற்க மறுப்பதும், பின் கிடைத்ததை ஏற்றதும் காலத்தின் கட்டாயங்கள்.  இதை ஒத்தே அண்மைய போராட்டங்களும் அதன் வீரத் தலைவர்களின் வரலாறுகளும், உரிமைக்கான பிரகடனங்களும் எதிர்காலத்தில் மக்கள் மனதில் மேலும் மாற்றங்களுக்கு உட்படலாம். தாம் அனுபவித்த இன்னல்களை மறந்தும்  மறவாமலும் இன்னுமோர் வாழ்வினை ஏற்றுக் கொண்டு இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் போல, கிடைப்பதை ஏற்கும் மனநிலைக்கு தள்ளப்படலாம்.

''பொம்பிளைப் பிள்ளை போலை நீ வளர மாட்டாயாம். அதுதான் என்ரை பெரிய கவலை'' இது ஒரு தாயின் ஆதங்கம்.

''பொம்பிளைப் பிள்ளை என்ன மாதிரி வளரும்? என்ன வித்தியாசம் இருக்கும்? ''   இது பாலின சமத்துவத்தை விரும்பும் புதிய தலைமுறை யுவதியின் கேள்வி. அந்த யுவதி, அநீதி கண்டும் பெண்ணின் மீதான பாலின சீண்டல்கள் கண்டும் பொங்கி எழுவாள். ஆண் நண்பர்களுடன் சகஜமாக பழகுவாள். பயத்தினை அறியாள். பாரதி கண்ட புதுமைப் பெண். ஆனால் எதுவரை? திருமணம் வரை.

ஒரு பெண் திருமணத்தின் பின் உளரீதியான பல கட்டுப்பாடுகளுக்கு உட்படுகிறாள். பெரும்பாலான வேளைகளில் அவளது சுயம் சிதைக்கப் படுகிறது. இந்த மனத்தடைகள் பெண்ணில் உருவாக்கும் மாற்றங்களையும், இவ்வாறான பெண்ணிய எண்ணங்களின் சாதக பாதகங்களையும் நியாய தர்க்கங்களையும் சொல்லும் வித்தியாசமான கதை 'மலைமுகடுகள் சரிக்கப் படுகின்றன'. இத்தொகுப்பின் மிகச் சிறந்த கதையாகவும் இனங்காணலாம்.

இத்தகைய மனச்சிறையை பல பெண்களுக்குத் தரும் மணவாழ்வின் முக்கியமான அம்சம் 'தாலி'. தமிழர் வாழ்வியலில், பெண்ணியம் பேசும் பெண்களுக்கும் தாலி உணர்வுமயமான ஒன்றாகவே இன்றும் நிலைத்திருக்கிறது. பாரம்பரிய சமூகக் கற்பிதங்களே இவ்வுணர்வுகளை தோற்றுவித்து நிரந்தரமான ஒன்றாக நிலைத்திருக்க வைக்கின்றன. அதனால் மணமான பெண்ணுக்கு தாலியும் அதனைத் தாங்கியிருக்கும் பொற்கொடியும் கெளரவச் சின்னமாகவும், பொருளாதார சேமிப்பாகவும் அமைந்துள்ளன. கணவர் இருக்கும் போதே அதை இழக்க நேர்வது பெண்களை மனரீதியாகப் பாதிக்கும்.  உணர்வு பூர்வமாக எழுதப்பட்டுள்ள  இக்கதையின் இறுதிவரிகள் தாலியினதும், கொடியினதும் பொருண்மிய பெறுமதி சார்ந்து பெண்ணுக்கு உருவாக்கும் போலி கெளரவத்தினை இல்லாது செய்யும் என்பது உண்மை. எனினும் திருமணத்தின் உன்னதமான குறியீடாகக் கருதப்படும் 'தாலி' தருகின்ற மனவேலிகளை எவ்வகையிலும் இல்லாது ஒழிப்பதற்கு உதவாது என்பதும் நிதர்சனமே. 'மலைமுகடுகள் சரிக்கப்படுவதும்' பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மணவாழ்வின் நியதி ஆகின்றது .

ஈழத்தின் அண்மைய தசாப்தங்களில் வெளிவந்த இலக்கியங்கள் கடந்து போன யுத்தகாலத்தைப் பற்றியே பேசுபவையாக இருப்பதைக் குறைகூறும், மேன்மை மிக்க இலக்கியவாதிகள் சிலர் இருக்கக் கூடும் . யுத்தபூமியில் வாழ்ந்த இந்தத் தலைமுறை மறைந்து போகும்வரை அல்லது சூழ்நிலையின் வடுக்கள் பாதிக்கப் பட்டவர்களின் மனதில் இருந்து மறையும் வரை இந்த எழுத்து வடிவங்கள் தொடரத்தான் போகின்றன.

 இவ்வாறான நினைவுகளை திட்டமிட்டே மறக்கடிப்பதற்கும், மறைப்பதற்குமான மறைமுக நடவடிக்கைகளும் தொடரும் சூழ்நிலையில், இவற்றை இலக்கியத்தால் புதுப்பிப்பதும் வரவேற்புக்குரியது. அனுபவங்கள் புனைவின் வடிவில் வெளிவரும் போதும் அதனை உணர்வுகளால் பகுத்தறிய முடியாதவர்களை வாசகர் புறந்தள்ளலாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.