"மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில் தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி கூறும் முதல் தெய்வம் எங்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன். மலையக மக்களின் வரலாறு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுடன் ஆரம்பமாகிறது” என்கிறார் மலையகத்தின் கல்விமான் அமரர் இர.சிவலிங்கம்.

இந்த மாத்தளை மண்ணை தன் சுவாசத்தில், மூச்சில், ரத்தநாளங்களில், சிந்தனையில் ஏற்றிப் பெருமிதம் கொள்பவர் மாத்தளை வடிவேலன். மாத்தளைப் பிராந்தியத்தில் அவர் காலடிகள் படாத இடமேயில்லை. அங்குலம் அங்குலமாக அந்தப்பிரதேசத்தை அளந்து வைத்திருப்பவர் அவர்; தெரிந்து வைத்திருப்பவர்;  வடிவேலன் கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆண்டுகளாக அந்த மண்ணோடு போராடி வந்திருக்கிறார்.அந்த மண்ணில் நடந்து முடிந்த அரசியல் மாற்றங்கள், எழுச்சிகள், புரட்சிகர இயக்கங்கள், அடுத்தடுத்து தொடர்ந்து இடம்பெற்ற இனவன்முறைகள், அவற்றிற்கு எந்த நேரத்திலும் பலியாகும் மக்களாக குறிவைக்கப்பட்ட மலையக மக்கள், உண்ண உணவின்றி தமிழ்த் தொழிலாளர்கள் அந்த மண்ணை விட்டே வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட அவலம், தோட்டங்கள் அரச உடைமை ஆக்கப்பட்டபின், மாத்தளையின் பெருந்தோட்டங்களின்  பொலிவே சிதைந்து போன கோலம், இன சௌஜன்யம் குலைந்து போன கொடுமை -  இத்தனையையும் அவர் கண்கூடாக்கண்டிருக்கிறார். தன் நெஞ்சிலே தணல் கொண்டு திரிந்திருக்கிறார். தோல்வியையும் துயரத்தையும் சுமந்து கொண்டிருக்கிறார். மாத்தளை வீதிகளிலே அணிவகுத்துச் சென்ற ஊர்வலங்களில் அவர் முன்னணியில் நின்றிருக்கிறார். அரசியல் மேடைகளில் அவர் துணிவோடு முழங்கியிருக்கிறார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். தோல்விகளைக் கண்டிருக்கிறார், துவண்டு போனதில்லை. மாத்தளையில் உயிரோட்டம் மிக்க இலக்கியப் பாதையைச் செப்பனிடுவதில் அவர் மூலகாரணராயிருந்திருக்கிறார். மாத்தளையில் கே.முருகேசப்பிள்ளையும் , ஷெய்கு கலைமானுல் காதிரியும் ஏற்றிவைத்த உன்னத இலக்கியச்சுடரை முன்னேந்திச் சென்ற பெருமகனாக மாத்தளை வடிவேலன் திகழ்கிறார்.இர.சிவலிங்கம், எஸ்.திருச்செந்தூரன்,பாரதியின் பேத்தி விஜயபாரதி, அவரது கணவர் சுந்தரராஜன், கு.அழகிரிசாமி ஆகிய இலக்கிய ஆளுமைகளுக்கு மாத்தளையில் செங்கம்பளம் விரித்து சிறப்புச் செய்த நிகழ்வுகளில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட இளைஞராக வடிவேலன் திகழ்ந்திருக்கிறார். மாத்தளை கார்த்திகேசு, மலரன்பன், அல் -அஸ{மத், கதிர்வேல், பூபாலன், சி.கா.முத்து, ஆ .ராஜலிங்கம், பழனிவேல், கே.கோவிந்தராஜ், எச்.எச்.விக்ரமசிங்க, மாத்தளை சோமு என்று பேரணியின் அணைப்புடன் செயற்பட்டவர் வடிவேலன். மாத்தளையின்  இலக்கியப் பாரம்பரியத்தை முன்னெடுத்த முக்கிய ஒரு கண்ணியாக வடிவேலன் இலக்கிய வரலாற்றுக்குரியவராகிறார்.

மாத்தளையின்  ஆத்மீகச் செழுமையின் போஷிப்பிலே  ஊட்டம் பெற்று, நிறைவு காணும் பக்குவம் அவருக்கு வாய்த்திருக்கிறது. மாத்தளையின் புனிதத் திருத்தலமாகக்  கருதப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரகார வெளியில் ஆத்ம லயிப்பில் சுகிப்பவர் அவர். மாத்தளையின் வால்ராசா கோயில், வெட்டரி வால்சாமி, எழு கன்னியம்மன் கோயில், முனியாண்டி, வேட்டைக்கறுப்பன், இடும்பன், வைரவர் கோயில், தொட்டிச்சியம்மன் கோயில், ஊமையன் கோயில் என்று மாத்தளையில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் எல்லாம் அவர் நெஞ்சிலும் குடிகொண்டுள்ளன.


 2                                 
 
மலையக நாட்டுப்புறவியலில் முதன்மை ஆய்வாளராக மாத்தளை வடிவேலன் சிறப்புப் பெறுவதற்கு  அவரது 'மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்' (1997), 'மலையக நாட்டுப்புறவியலில் மாரியம்மன்'(2007),  'மலையக பாரம்பரியக் கலைகள்' (1992) ஆகிய நூல்கள் சாட்சி சொல்லவல்லன.'மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்' என்ற மாத்தளை வடிவேலனின் நூல் 'ஒரு அசாத்திய தீமிதிப்பு' என்று எழுதினார் இர.சிவலிங்கம் அவர்கள். இந்துசமய இராஜாங்க அமைச்சு நடத்திய  நாட்டுப்புற வியல் கருத்தரங்கில் 'காமன் கூத்தும் மலையக மக்களின் சமூக வாழ்வில் அதன் பங்களிப்பும்' என்ற பொருண்மையில் மாத்தளை வடிவேலன் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை அறிஞர்களின் பாராட்டைப்பெற்ற கட்டுரையாகும். தனது ஆய்வுப்பொருளின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், தோட்ட மக்களுடன் அவர் கொண்டுள்ள இடையறாத  தொடர்ந்த நெருக்கமும் கள ஆய்வுகளில் அவருக்குப் பெருந் துணையாய் அமைந்துள்ளன.

-  மாத்தளை பெ. வடிவேலன் -

பதினைந்து ஆண்டு காலம் இந்து சமய, கலாசார அலுவல்கள் அமைச்சில் கலாச்சார உத்தியோகஸ்தராகப் பணியாற்றிய காலப்பகுதியில் மலையகத்தின் ஆலயங்கள்  பற்றிய மிகத் துல்லியமான தவல்களை அவர் சேகரித்துக் கொண்டிருந்தார். தோட்டங்கள், ஆலயங்கள் என்று தொடர்ந்த களப்பணியில் ஈடுபட்டிருந்ததால் மலையகத்தின் தொன்மங்கள், ஐதீகங்கள், தெய்வ வழிபாட்டு முறைகள்,மக்கள் நம்பிக்கைகள் போன்ற அனைத்து வாழ்வியல் கோலங்களோடும்  வடிவேலன் பின்னிப்பிணைந்தவராக மிளிர்ந்தார்.

இளமையில் சகல அமைப்புகளையும் கண்டனத்தோடு நோக்கிய வடிவேலன், பின்னால் அவை அனைத்தோடும் இணைந்து செயற்படுவதன் மூலமே  மலையக மக்களுக்குக் காரிய சாத்தியமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்று நம்பிச் செயற்பட்டார்.

தீவிர சமூகச் செயற்பாட்டாளரான வடிவேலன் 1974இல் காணிச்  சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், நோர்த் மாத்தளையில்  தோட்டங்கள் சுவீகரிக்கப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள் வீதிகளுக்கு வந்த நிலையில் அவர்களின் ஜீவமரணப் போராட்டத்தை கண்கூடாகக் கண்டார்.நாடு என்றும் காணாத உணவு நெருக்கடியில் சிக்கியிருந்தது. ஒரு கட்டத்தில் அரசாங்கத்திடம் இலங்கை மக்களுக்கான உணவுப்பொருட்களின் கையிருப்பு வெறும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. உணவு விநியோகம் ஒவ்வொரு கிழமையையும் எவ்வாறு தாக்குப்பிடிப்பது என்ற அளவிலேயே நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மாத்தளையில் மகாவெலகந்த, மடவெளை 1ஆம், 2ஆம் தோட்டங்களைச் சேர்ந்த 210 குடும்பங்கள் வேலை இழந்து, காசும் இல்லாமல், ஒரு வேளைச் சாப்பாட்டுக்கும் வழியின்றி அல்லலுற்ற நேரத்தில்,அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் உடனடி நடவடிக்கையில் எச்.எச்.விக்ரமசிங்க, மாத்தளை வடிவேலன்,பாக்கியம் செல்லப்பா, கதிர்வேல்,மலரன்பன், கே.வேலாயுதம் சந்தனம் கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து துரித கதியில் செயற்பட்டதை நோர்த் மாத்தளை மக்கள் இன்றும் நினைவு கூர்வர்.

அப்போது உணவு விநியோக ஆணையாளராக இருந்த எஸ்.பத்மநாதன் அவர்களை எச்.எச்.விக்ரமசிங்க  சந்தித்து, நிலைமையை விளக்கி, அவர் உடனடியாகவே இந்த மக்களுக்கு உதவிட முன்வந்தார். அப்போது பிரதி  ஆணையாளராக இருந்த எம்.எல்.எம்.மரைக்கார் பெருங்கருணையுடன் இந்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டார்.இந்தக் குடும்பங்களுக்கு உடனடியாக 2 கொத்து அரிசியும் சீனியும் இலவசமாக விநியோகிக்குமாறு மரைக்கார் அவர்கள் மாத்தளை அரசாங்க அதிபர் சிறில் கமகே அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார். கடந்து போன ஒரு மாதத்திற்குமான உணவும் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்பட்டது. இந்தத் தோட்டங்களிலிருந்த தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்ளவேயில்லை. தனி மனிதர்களாக அத்தருணத்தில்  இவர்கள்  செய்த சமூகப்பணி போற்றத்தக்கது என்பதில் ஐயமில்லை.

அது மட்டுமல்ல, அரசு  மகாவெலகந்த, மடவெளை தோட்டங்களை சுவீகரித்த கையோடு, அத்தோட்டங்களில் இயங்கிக்கொண்டிருந்த தோட்டப்பாடசாலைகளை மூடிவிட்டன. இந்தத் தோட்டப்பாடசாலைகளில் பயின்று கொண்டிருந்த மாணவர்களின் கல்வி இடைநிறுத்தப்பட்டது. இப்பாடசாலைகளை மீண்டும் தொடங்கிட அப்போது தம்புள்ள பாராளுமன்றத் தொகுதியின் பிரதிநிதியாகவும் கலாசார அமைச்சராகவும் இருந்த டி.பி.தென்னக்கோன் அவர்களிடம் மனுவைச் சமர்ப்பித்து, அவர் கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த ரிச்சர்ட் உடுகம அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்து, மீண்டும் தோட்டப்பாடசாலைகள் இயங்க ஆரம்பித்தன. இவற்றிற்கு ஆதாரமாக இருந்து செயற்பட்டவர்கள் எச்.எச்.விக்ரமசிங்கவும் மாத்தளை வடிவேலனுமே ஆவர். அமைச்சர்களாக, அமைச்சின் உயர் பதவியில் அமர்ந்திருப்பவர்களாக  ஆற்றப்பட்ட பணிகள் அல்ல இவை. வெறுஞ் சாமானியர்களாக,  எந்த விசிட்டிங் கார்டும் இல்லாதவர்களாக அதிகார பீடங்களை நாடி, ஏழை எளியவர்களுக்காகப் போராடியவர்கள் இவர்கள்.  அவை இரண்டு கொத்து அரிசி வாங்கிக் கொடுத்ததாக இருக்கட்டும், பதவி உயர்வுக்காக அமைச்சரிடம் மனுக் கொண்டு போவதாக இருக்கட்டும், இம்மாதிரிச் சின்னச்சின்ன வேலைகளை எல்லாம் எடுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்யும் மனம் பெரிது.  

'தினபதி' என்ற இலங்கைத் தினசரி  அறிமுகப்படுத்திய 'தினமொரு சிறுகதை”த் திட்டத்தின் கீழ் திருச்செந்தூரனின் சிபார்சுடன் தனது 'கண்கள் ' (1969) கதை மூலம் சிறுகதைத்துறைக்குள் நுழைந்த மாத்தளை வடிவேலன் வெகு விரைவிலேயே மலையகச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.

வீரகேசரி நடத்திய நான்காவது மலையகச் சிறுகதைப்போட்டியில் 'பிஞ்சு உலகம்' என்ற  தனது சிறுகதைக்காக முதற்பரிசு பெற்ற சாதனை அவருடையது.சிறுகதைப்போட்டிகளில் கலந்து கொள்வதென்பது மாத்தளை வடிவேலனுக்கு எப்போதுமே ஈர்ப்புடையதாகவே இருந்து வந்திருக்கிறது. அவர் கலந்து கொண்ட போட்டிகளில் அவருடைய சிறுகதை ஏதாவதொரு பரிசைத் தட்டிக்கொண்டே வந்திருக்கிறது. அத்தகைய பரிசில்களை வென்ற பதினான்கு  சிறுகதைகளின் தொகுப்பே இது.

மாத்தளை வடிவேலனின் சிறுகதைகள் எப்போதுமே அளவில் பெரியவை. அநேகமான கதைகள் இருபது பக்கங்கள் கொண்டன. 'மலையகப் பரிசுக் கதைகள்' என்ற தொகுதி, 16 கதைகளைக் கொண்டு 110 பக்கங்கள்தான் வருகிறது. வடிவேலனின் இத்தொகுப்பு 14 கதைகளைக் கொண்டு 206 பக்கங்களில் வந்திருக்கிறது.

இந்தக்கதைகள் மாத்தளை வடிவேலன் நேர்த்தியான கதை சொல்லி என்பதைக் கேள்விக்கிடமில்லாமல் நிரூபிக்கின்றன. எழுபதாண்டுக்காலம் அந்த மக்களோடு வாழ்ந்து, உண்டு, சுகித்து, சுகதுக்கங்களில் பங்குகொண்டு, அந்த மக்களின் கூட்டு சொரூபமாய் இக்கதைகளிலே அவர் வெளிவருகிறார். அவருக்குச் சொல்வதற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன. கதைகளின் கிட்டங்கி அவர். சரித்திரம் அவரில் புதையுண்டு கிடக்கிறது. நோர்த் மாத்தளைச் சந்தியில் குடை பிடித்து நிற்கும் ஆலமரம் அவருக்கு மலையக மக்களின் இருநூற்றாண்டு காலக்கதையைச் சொல்லும் ஒரு  Gazetteer மாதிரித்தான். சுந்தர ராமசாமிக்கு ஒரு புளியமரம் போல, மாத்தளை வடிவேலனுக்கு நோர்த் மாத்தளைச் சந்தி ஆலமரம்.

'அட்சய வடம்' கதை இந்த ஆலமரத்தின் கதைதான். அந்த ஆலமரம் சாய்ந்து விட்டது. 'சாய்ந்த கணப்பொழுதுக்குள் அதனை வெட்டி, சிதைத்து, பிளந்து, கூர்கூராக்கி, பாகம் பாகமாக வகிந்து, அங்கம் அங்கமாக அரிந்து அரிந்து, விறகாக்கி' அது இருந்த சுவடே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். ஆனால், அந்த ஆலமரத்திற்கு இலக்கிய உலகில் சிரஞ்சீவித்துவம்  கொடுத்திருக்கிறார் வடிவேலன். வரலாற்றில் ஊறிய, தொன்மங்களின் செழுமையைக் கண்டு கொண்ட ஒரு கலைஞன்தான் இந்தப் பணியைச் சாத்தியமாக்க வல்லவன். இந்தக்கதையில் மட்டுமல்ல, மாத்தளையை மையங் கொண்டுள்ள எல்லாக் கதைகளிலுமே இந்த ஆலமரம் ஒரு கதாபாத்திரமாகவே வந்து போகிறது. சமூகத்தின் இயக்கவியலைப் புரிந்து கொண்ட ஓர் எழுத்தாளனுக்கே இத்தகைய பார்வை சாத்தியப்படும். அது வடிவேலனுக்கு வாய்த்திருக்கிறது.

'தாத்தாவின் ரெங்கு பெட்டி'யும் குறிப்பிடப்பட வேண்டிய கதை. ரெங்குப்பெட்டி மலையக மக்களின் வாழ்வியலில் அழிக்கப்படமுடியாத ஒரு குறியீடு. எம்.வாமதேவனின் Sri Lankan Repatriates in Tamilnadu (1989) என்ற நூலுக்கு முன் அட்டைப்படத்திற்காக, சென்னையில் எங்கேயோ ஒரு ரெங்குப்பெட்டியைத் தேடி எடுத்து, திருவான்மியூரில் ஒரு ஸ்டூடியோவிற்குக் கொண்டு போய், அந்த  ரெங்குப்பெட்டியைப் படம் எடுக்கச் சொன்னபோது, அந்த  ஸ்டூடியோக்காரர் என்னை ஒருவிதமாகப் பார்த்தார்.

'தாத்தாவின் ரெங்குப்பெட்டி' கதையின் இறுதிப்பகுதியில், 1922 மார்ச் முதலாம் திகதியிட்டு, லேபர் கமிசனர் எச்.எச்.நிக்கல்சன் வெளியிட்ட 'இலங்கை போக விரும்பும் கூலியாட்களுக்கு விளம்பரம்'  ரெங்குப்பெட்டியில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அந்த முழுச் சுற்றறிக்கையையும் ஏழு பக்கங்களில் சொல்லியிருக்கவேண்டாம்.

மலையகத்தில் தொடர்ந்து நடைபெற்ற சிங்களக்காடையர்களின்  இனவெறியாட்டத்தில்  தோட்டத் தொழிலாளர்கள் துயருறுவதைக் காணச்சகியாத நெஞ்சக் குமுறல்களாகவே (ஓரிரு கதைகளைத் தவிர) அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன.

சிங்களவர்களுக்கும் மலையகத் தொழிலாளர்களுக்குமிடையேயான கசப்புணர்வு கோப்பிக்காலத்திலிருந்தே உருப்பெற்று வந்துள்ளது. 1848ஆம் ஆண்டு மாத்தளையில் நிகழ்ந்த கிளர்ச்சியின் போது,  தோட்டத்துரைமார்களின் பங்களாக்களும் கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டபோது, அந்த பங்களாக்களைப் பாதுகாப்பதற்காக தோட்டத்தொழிலாளர்களே கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடியுள்ளனர். அவர்கள் நம்பிக்கைக்குரிய விசுவாசிகள் என்றும் கிளர்ச்சியாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் காணிகளில், மாத்தளை, குருநாகல் போன்ற இடங்களில் தோட்டத்தொழிலாளர்களைக் குடியமர்த்த வேண்டும் என்றும் பிரிட்டிஷ்  கொள்கை வகுப்பாளர்கள் கருதியிருந்தனர்.

இதனைவிட, பிரிட்டிஷ்  அரசு அமுல்படுத்திய சாலைகள் கட்டளைச் சட்டமானது, சாலைகள் போடுவதற்கு கண்டி விவசாயிகள் கட்டாய ஊழியம் வழங்க வேண்டுமென்றும், அவ்வாறு வழங்க முடியாது போனால் அதற்கீடாக மூன்று சிலிங் பணமாக அறவிடப்படுமென்றும், தண்டப்பணத்தைச் செலுத்த முடியாதவர்கள் கசையடியோடு ஆறு நாட்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருந்தது. சாதாரண ஏழை விவசாயிகளுக்கு இவ்வளவு கடுமையான வரி நடைமுறைகள்இருந்தபோது , இந்தச் சாலைகள் கட்டளைச் சட்டத்திலிருந்து தோட்டத்தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தமை கண்டிய விவசாயிகளுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.வேலைதேடி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் அந்நியர்களான இவர்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டது மட்டுமல்ல, பொதுப்பணத்திலிருந்து அவர்களுக்கு மருத்துவ வசதிகள் வேறு செய்து கொடுக்கப்படுகிறது என்றும் அவர்களுக்கு ஆதங்கம் இருந்தது.

கண்டிய  விவசாயிகள் தோட்டங்களில்  வேலை செய்து,  பணம் பெற்று சம்பாதிக்க பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆயிரம் ஆயிரம் மலபார் கூலிகள் தோட்டங்களில் உழைத்து நல்ல பணத்துடன் ஒவ்வோராண்டும் தங்கள் தாய் நாட்டிற்குத் திரும்புவதை எரிச்சலோடு அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒவ்வோராண்டும் 50,000 இலிருந்து 60,000 கூலிகள் வரை ஒவ்வொருவரும் பத்திலிருந்து பன்னிரண்டு சிலிங் வரை உழைத்துக்கொண்டு போவதை, தோட்டத்துரைமாரிடமிருந்து ஒரு சிலிங் கூடச் சம்பளமாக வாங்க மாட்டோம் என்று சோம்பேறித்தனமாக நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று டெனன்ட் போன்றோர் குறித்துள்ளனர். (Arjuna Parakrama, Language and Rebellion: Discursive Unities and the Possibility of Protest, Katha Publishers, London, 1990)

தங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை உணரும்போது இந்தியத்தொழிலாளர்களுக்கு எதிரான விரோத நிலைப்பாட்டில் அவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன், காசு சேர்த்துக் கொண்டு ஊர் திரும்பும்போது செல்லும் வழியில் சிங்களவர்கள் சு10ழ்ந்து அவர்களின் பணத்தை வழிப்பறி செய்து கொண்டுவிடும் நிலைமைகளும் கோப்பி யுகத்தில் சாதாரணமாக நடந்தேறியுள்ளன. கோப்பிக் காலத்திலிருந்தே இந்திய விரோத உணர்வு கண்டிச் சிங்களவர்களிடம் நிலவவே செய்தது.இது சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. சன்சோனி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த 22 மலையகத் தோட்டங்களின் பிரதிநிதிகள் தாங்கள் இனவன்முறைகளுக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளனர். ஏறத்தாழ 500 மலையகத்தமிழர்கள் கொல்லப்பட்டதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. 1983 இனக்கலவரத்தின்போது பதுளையில் மட்டும் 141 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
                  
மாத்தளை வடிவேலனின் இச்சிறுகதைத் தொகுப்பில் 'தாத்தாவின் ரெங்கு பெட்டி', 'அட்சய வடம்',  'அக்கினி', 'உச்சிமீது வானிடிந்து', 'இராமு தீபாவளிக்கு தனது  தோட்டத்திற்கு வருகின்றான்', 'வல்லமை தாராயோ?',  'தர்மத்தின் வாழ்வுதனை” ஆகிய கதைகள் மலையகத்தின் இனவன்மைக் குரூரங்களைச் சித்திரிக்கின்றன. இந்த வன்முறைகள் நிகழ்ந்தபோதெல்லாம் வடிவேலன் அந்த மக்களோடு நின்றிருக்கிறார்.அவர் பார்வையாளன் இல்லை. பங்காளி. அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவன்.

1958, 1977, 1983 என்று நேரம் தேர்ந்து, இடம் தேர்ந்து,ஆட்களைத் தேர்ந்து, அரச படைகளின் ஆசியோடு,அரசியல்வாதிகளின் அனுசரனையுடன் காடையர்கள் நடத்தும் இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்கு இலக்காகி, உயிரிழந்து, உடமை இழந்து, நிர்க்கதியாய், வாழ்விடம் துறந்து, பாதுகாப்புத் தேடி, அங்கும் அல்லலுற்று, மீண்டும் விட்டு வந்த இடம்தேடி,அங்கும் அயலவர்கள் அத்துமீறித் தம் குடில்களை ஆக்ரமித்து நிற்பதைத் தட்டிக் கேட்க வலுவின்றி வாயில்லாப்பூச்சிகளாய், நூறாண்டுகள் கடந்தும் அவலமுறும் நிலைமை மாத்தளை வடிவேலனின் நெஞ்சில் வேல் பாய்ச்சி நிற்கிறது.சில சந்தர்ப்பங்களில் வன்முறையை எதிர்கொள்ளத்துணிகிறார்கள்.சில இடங்களில் அது சாத்தியமற்றுப் போகிறது. இந்த வன்முறைகள் குறித்து பெரும்பான்மை இனம் வெட்கப்படுவதில்லை. ஆட்சியாளர்கள் வெட்கப்படுவதில்லை. மாறாக வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மாத்தளை வடிவேலன் தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று அமைதி காண்கிறார்.அது அவர் அவாவும் லட்சியம்; உன்னத நெறி. ஆனால் அப்படி ஒரு விதி இல்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவினால் கௌவியதுதான். பின்னால் தர்மம் வென்றதாக நாம் கண்டதில்லை. அநியாயங்கள் நிகழும்போது எதுவும் செய்துகொள்ளும் வழி தெரியாதபோது நாம் நமக்குள் அமைதி காணச் செய்து கொள்ளும் ஏற்பாடுதான் இது.

‘வதைப்படலம்’ மிக அழகாக எழுதப்பட்ட கதை. அந்தக் கதை முடிகிறபோது நெஞ்சம் அதிர்கிறது. பிஞ்சு உலகம்’ சிறுவனின் மன ஓடையின் நினைவுச் சிதறலாகத் திறனோடு எழுதப்பட்டுள்ளது. தெளிவத்தை ஜோசப்பின் ‘சோதனை’ கதையை நினைவுக்குக் கொண்டு வருகிறது. தோட்டப் பாடசாலைகள் நடத்தப்பட்ட விதத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் கதை.

மலையகத்தின் நாட்டார் வழக்காறுகளில் அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாடும் அறிவும் ‘நாடு கடந்த நதிகள்’ கதையில் பூரணமாக வெளிப்படுகிறது. இந்தக் கதையை  வேறு யாரும் இவ்வளவு இறுக்கமாக எழுதியிருக்க முடியாது.

வடிவேலன் நீண்ட வசனங்களில் எழுதுபவர். சில வசனங்கள் அரைப்பக்கத்தையும் எடுத்துக் கொண்டு விடுகிறது.மிகப் பல ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனியில் ஒரு நண்பருடன் வடிவேலனின் “தலைக்கொரு கூரை” என்ற சிறுகதையை ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்க்க அமர்ந்தேன்.அந்தக் கதையின் முதல் வசனத்தை வாசித்தேன். ஐந்து வரிகளில் அந்த வசனம். ‘கஷ்டம் நித்தி, இதை என்னால் மொழிபெயர்க்க முடியாது’ என்று விட்டார்.

வடிவேலனின் கதைகள் மொழிபெயர்ப்புக்கு சவால் விடுபவை. எனினும் அவரது கதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மலையகச் சிறுகதை இலக்கியத்தின் சில உச்சங்களை அவரது கதைகள் தொட்டிருக்கின்றன.சமூக அநீதிகள் கண்டு குமுறும் அவரது ஆவேசத்தை அவரின் எல்லாக் கதைகளிலுமே காணமுடிகிறது. தன்னைச் சு10ழ கண்ணீரையும் அவலத்தையும் பாரபட்சத்தையும் அநீதியையும் நாளும் ஒரு கலைஞன் எதிர் கொள்ளும்போது அவன் எழுத்தில் கிளர்ச்சியும் எழுச்சியும் மிளிரவே செய்யும். மாத்தளை வடிவேலனின் அனைத்து எழுத்துகளும் தொகுக்கப்பட்டு நூலுருப் பெறவேண்டியது அவசியம்.

மலையக இலக்கியத்திற்கு வளம்  சேர்த்த  மாத்தளை மண்ணின் மைந்தன் - 'அசல் மைந்தன்'- மாத்தளை வடிவேலன் மலையகத்தின் எரிநட்சத்திரம் ஆவார்.


- எச்.எச்.விக்கிரமசிங்க -

- மாத்தளை பெ.வடிவேலனின் 'வல்லமை தாராயோ' சிறுகதைத்தொகுப்புக்கான கலை, இலக்கியத் திறனாய்வாளர்  மு.நித்தியானந்தனின் முன்னுரை. 'பதிவுக'ளுக்கு அனுப்பியவர் -  எச்.எச்.விக்கிரமசிங்க -  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -