இத்தொகுப்புக்குச் சொந்தக்காரர் ஈழத்து எழுத்துப்பரப்பில் கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, மொழியிலாளராக நன்கறியப்பட்ட ஓய்வுநிலை தமிழ் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள். இத்தொகுப்பு 2022 இல் காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட தமிழ்மொழியைப் பேசும், எழுதும் பலருக்கு நுஃமான் அவர்களின் படைப்புக்கள் பரீட்சயமானவை. இதுவரை இவற்றைப் படிப்பதற்கான வாய்ப்புக்கிடைக்காதவர்கள் அவருடைய கவிதைகள், கட்டுரைத்தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கவிதைகள் மற்றும் தமிழ் இலக்கணம் சார்ந்த நூல்களையும் எண்ணிமவடிவில் நூலகத்தில் வாசிக்கலாம்.

கவிதைகளுக்குள் செல்லுமுன்

2022 ஆண்டு மார்கழியில் இத்தொகுப்பை காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் வெளியிட்டுள்ளது. மார்கழி 22 ஆம் ஆண்டு தாளில் அச்சிடப்பட்ட புத்தகம் மாசி மாதத்தில் அமசன் கின்டெல் மூலம் கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி, இந்த மகிழ்ச்சிக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒருபக்கம் புத்தகங்கள் இலகுவில் வாசகர்களை சென்றடையும் அதேவேளை அமசன் கின்டெலுக்கு புத்தகங்கள் செல்வதால் வேலை வாய்ப்பை இழக்கும் தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் தொழிலாளர்கள் என துன்பங்களைக் கொண்டதாகவும் இது அமைந்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

பல நூல்களை வெளியிடும் காலச்சுவடு நிறுவனம் காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் என ஆங்கில உச்சரிப்பை தமிழில் ஏன் எழுதுகின்றது எனக்குத் தெரியவில்லை, அதுவும் தமிழ் பேராசிரியர் ஒருவரின் புத்தகத்தை வெளியிடும் போதாவது இதைக் கவனித்திருக்கலாம். மேலும் இதில் இன்னொரு சிறு தகவலும் கூடவே இருக்கிறது. இது முதல் (குறும்) பதிப்பு எனக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் பெருந்தொகுப்பும் வரலாம் என்பதை கோடிகாட்டி நிற்கிறதோ எனவும் எண்ணத் தோன்றுவதுடன், இன்னொரு தொகுப்புக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

               - பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் -

நுஃமானின் தாத்தாமாரும் பேரர்களும் (1977 ), அழியா நினைவுகள் (1982) மழைவரும் நாட்கள் (1983) ஆகிய தொகுதிகள் வெளிவந்துள்ளன மற்றும் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற பெயரில் வெளிவந்த கவிதைத் தொகுதியை நுஃமானும் அ. யேசுராசா அவர்களும் தொகுத்திருந்தார்கள். இத்தொகுப்பு 1984 இல் (முதல்பதிப்பு- க்ரியா) வெளிவந்திருந்தது, அத்தோடு மரணத்துள் வாழ்வோம் (1985) இல் முதல் பதிப்பு யாழ்ப்பாணத்தில் (பதிப்பாளர் தமிழியல்) வெளிவந்தது. இவ்விரண்டு தொகுப்புக்களிலும் நுஃமானின் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இவற்றைக் குறிப்பிடுவதற்கான காரணம் துப்பாக்கிக்கு மூளை இல்லை என்ற தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் கவிதைகளில் சில மேற்குறிப்பிட்ட தொகுப்புக்களிலும் வெளிவந்திருந்திருந்தன.

நுஃமானின் கவிதைகளில் சிறப்பாக இருப்பவையாக நான் கருதுபவை சோடனையற்ற, செயற்கையாக சேர்க்கப்படாத எதுகை மோனைகள், சாதாரண மக்களால் புரிந்து கொள்ளக்கூடிய உண்மையை உள்ளடக்கிய எளிமையான எழுத்து நடையே. பெரும் திரளான மக்களின் உணர்வுகளை வலிமைமிக்க சொற்களால் இணைத்து நாம் கடந்து வந்த வலிமிகுந்த நாட்களுக்கு கவிதைகள் மூலம் உருவம் கொடுத்துள்ளார்.

அவர் தமிழ்பேராசிரியராக இருந்த போதும் மொழி அகராதியில் சொற்களுக்கு கருத்துக்களைத் தேடும் நிலைமையை வாசகர்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதும் நாளாந்த புழக்கத்தில் இருக்கும் சொற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கவிதைகளை நாம் இங்கு வாசிக்கலாம் என்பதும் மேலும் இக்கவிதைகளைச் சிறப்பானதாக்குகின்றது.

போருக்கும் வன்முறைக்கும் எதிரான கவிதைகளைக் கொண்ட இந்த தொகுப்பை வாசிக்க முற்பட்ட போது ஏற்கனவே அலை, புதுசு சஞ்சிகைகளிலும், கவிதைத் தொகுப்புக்களிலும் வெளிவந்த கவிதைகள் இத்தொகுப்பிலும் இருக்கின்றனவே என சற்று ஏமாற்றம் ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால் துப்பாக்கிக்கு மூளை இல்லை எனும் இந்த தொகுப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வரலாற்று ஆவணமாக அமையலாம். 2009 இல் இறுதியுத்தம் நிகழ்ந்தது பற்றி அறிந்திராத 10 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்ட சமூகமாக இலங்கை மாறிவருகின்ற சூழலில் இவ்வாறான வரலாற்று பதிவுகள் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் இளம் சந்ததியினர் தமது அடையாளத்தை, இலங்கையில் தமது உரிமத்துவத்தை தேடும் போது அவர்களுக்கு பயனுள்ளதாக வலுவூட்டுவதாக அமையலாம்.

1988 இல் பிரசுரிக்கப்பட்ட துப்பாக்கிக்கு மூளை இல்லை என்ற ஒரு கவிதையின் தலைப்பே இத்தொகுப்புக்கு பெயராக சூட்டப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் 1977 இலிருந்து 2010 காலப்பகுதியில் எழுதப்பட்ட கவிதைகளில் தெரிவு செய்யப்பட்ட கருப்பொருளுக்கமைவான கவிதைகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது என நான் கருதுகிறேன்.

நுஃமான் அவர்களின் கவிதைகள் எதுவும் சோடை போனவையல்ல, தாத்தாமாரும் போர்களும் பலராலும் விதந்து பேசப்பட்டது. புத்தரின் படுகொலை என்ற தலைப்பிலான கவிதை எண்பதுக்களிலும் அதையடுத்து வந்த காலப்பகுதியிலும் அடிக்கடி நிகழும் கவிதா நிகழ்வுகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட கவிதைகளில் ஒன்றாக அமைந்திருந்தது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பத்தாண்டு ஆண்டுகளுக்கு மேலாகி, சுமூகமான நிலைமை நீடிப்பதாக கூறப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் கவிதைகள் நாம் கடந்து வந்த வலிசுமந்த வாழ்வை, அக்காலத்தின் நிகழ்வுகளை பதிவு செய்கிறது. இலக்கியம் காலத்தின் சாட்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சாட்சியங்களை மிகவும் கச்சிதமாக கவிதைகளுக்குள் அடக்கியுள்ளார் நுஃமான்.

பிணமலைப் பிரசங்கம் 1991 இல் எழுதப்பட்டிருக்கிறது. இதில் சில வரிகள் இவ்வாறு வருகின்றன.

... உங்கள் கழுத்தில் மிதித்துக் கொண்டு
உங்கள் விடுதலைக்காகப் போரிடுவோரை
நம்பாதீர்கள்

அக் கவிதை இவ்வாறு முடிகிறது.

... அவர் பிரசங்கம் முடியுமுன்
அவரது பிடரியைக் குறிபார்த்து நின்ற
துப்பாக்கி வெடித்தது
பிணமலை இன்னும் ஓர் அடி உயர்ந்தது.

இலங்கையில் நின்று நீடித்திருந்த துப்பாக்கிக் கலாச்சாரத்தை இதைவிட வேறு எப்படி சொல்ல முடியும்?

இன்னுமொரு கவிதை உனது போர் எனப் பெயரிடப்பட்ட இக்கவிதை விடுதலைக்காக புறப்பட்ட சக தோழர்கள் குறிவைக்கப்பட்டதை கூறிச் செல்கிறது.

1997 இல் பதிவானதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் வெண்புறாவின் வருகைக்காக காத்திருந்த போது எனும் இக்கவிதை இலங்கையில் யுத்தம் நிகழ்ந்த காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை, யுத்தநிறுத்தம் போன்றவற்றுக்கான முனைப்புகள் நிகழந்தன என்பதற்கான ஆதாரத்தையும் அவைகள் தொடர்பான எதிர்பார்ப்புக்களையும் பதிவு செய்கிறது.

அவர்களும் நீயும் என்ற கவிதை விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பா பிள்ளைகள் தொடர்பான அவலத்தை முன்னிறுத்துகிறது. இந்த விசாரணையை இலங்கை இராணுவம் மட்டுமல்ல இதர இராணுவங்களும் மேற்கொண்டிருந்தன என்பதை சந்தடியின்றி, சலசலப்பின்றிப் பதிவு செய்கிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கெல்லாம் மகுடமாக அமைவது இரண்டு கவிதைகள். அதில் ஒன்று

இருபது ஆண்டுகள்: நினைவில் ஒழுகும் குருதி எனும் தலைப்பிலான கவிதை. இக்கவிதையில் 26 சிறுகுறிப்புகள் அடங்குகின்றன. இது1997 இல் பதிவு செய்யப்படுகிறது. ஈழப்போராட்டத்தில் அங்கம்வகித்த, அவலத்தை விதைத்த, சந்தேகத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் யாவும் ஹைக்கூ போல சிறுசிறு கவிதைகளாக உணர்த்தப்படுகிறது. இதில் இயக்கங்களுக்கிடையிலான மோதல்கள், ஈழப்போராட்டத்தின் கறைபடிந்த பக்கங்களான அநுராதபுர படுகொலைகள், இளம் சிறார்களை இராணுவத்தில் பலவந்தவாக இணைத்தல், தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்மக்களின் கொடூரக் கொலைகள், பிறந்த மண்ணிலிருந்து காலவரையறை விதித்து வெளியேற்றப்பட்ட முஸ்ஸீம் மக்கள் என விரியும் இச்சிறு கவிதைத் திட்டுக்களில் அமைதிகாக்கும் படையின் அராஜகங்கள், மூளைச்சலவைக்குட்பட்டு நாட்டைக்காக்கும் பணியில் ஈடுபடும் சிப்பாய்கள் பிணப்பெட்டியில் வீடுதிரும்பும் அவலங்கள் வரை பதிவாகிறது.

இரண்டாவது கவிதை

நந்திக் கடல் அருகே எனும் கவிதை. துப்பாக்கிக்கு மூளை இல்லை எனும் இத்தொகுப்பிற்கான முன்னுரையை இக்கவிதையின் சில வரிகளான

வாளேந்திய சிங்கம்,
வாய்திறந்து பாயும் புலி
நடுவே மனிதர்கள்
உயிர்தப்ப ஓடும் ஒரு நாட்டின் புதல்வன் நான்

என்று ஆரம்பிக்கிறார்.

... சேற்றில் கிடந்தது
தலைவனின் சடலம்
தலை பிளந்து கண் திறந்து
முப்பது ஆண்டுக் கொடுங்கனவு
நனைந்து கலைந்தது நந்திக்கடலில்
விமானத்திலிருந்து இறங்கி வந்தார்
அசோகரின் புதல்வர்
மண்டியிட்டு நிலத்தை முத்தமிட்டார்

... சிங்கத்தின் வால் விறைத்து நிமர்ந்தது
பற்கள் நீண்டு கூர்வாளாயிற்கு
கர்ஜனை வானைப் பிளந்தது
குருதியில் பொங்கிப்
பாற்சோறு படைத்தனர்
வெற்றிக் களிப்பில்
விருந்துண்டு மகிழ்ந்தனர்

முட்கம்பி வேலிக்குள் முடங்கினோம் நாங்கள்
முகம் கவிழ்ந்து
கூனிக்
குறுகிப் புதைத்தோம்.

என முடிவடையும் இக்கவிதை 2009 ஆண்டில் பதிவாகியுள்ளது.

சிங்கமும் புலியும் படிமங்களாக சில கவிதைகளில் வருகின்றன. இதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை, இலங்கையில் பிறந்து வளர்ந்த, வளரும் சிறுபான்மையினத்தவர்களுக்கு இவை நன்கு பரீட்சயமானவை. அறிமுகமான, வார்த்தைஜாலங்களற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து சீராக ஓடிக்கொண்டிருக்கும் சிற்றோடையின் நீரோட்டம் போல் அமைந்திருக்கும் மொழிநடை கவிதைகள் சிறப்பாக அமையவும், அவை மனதில் தங்கி பதிவாகிப் போவதற்கும் காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

இத்தொகுப்பில் இன்னுமோர் செய்தியும் ஆரவாரமின்றிப் பதிவாகிறது

... கழுவிவிடு என் இரத்தக்கறைகளை
கழுவுகிறேன் நான் உனதை
... இன்று நாம்
சபதம் செய்து கொள்வோம்
நீ என் எல்லைகளையும்
நான் உன் எல்லைகளையும்
தாண்டுவதில்லை என
எல்லாவற்றையும் மறந்துவிட்டு
இனி நாம் புதிதாக வாழத்தொடங்கலாம்
வா

என இனிப் புதிதாக என்ற இறுதிக் கவிதையுடன் முற்றுப்பெறுகிறது இந்த தொகுப்பு.

வாசித்து முடிந்ததும் மனசு சற்றே கலங்கித் தான் போனது. அன்றைய கடமைகளுக்குள் என்னை அழைத்து வர நான் நீண்ட தூரம் காலாற நடக்க வேண்டியிருந்தது. நுஃமான் அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். ஈழத்து எழுத்துப்பரப்புக்கு கனதியான, அசலான படைப்புக்கள் வலுச் சேர்க்க வேண்டும். ஈழத்தில் வாழும் உங்களாலும் உங்களைப் போன்றவர்களாலும் அது முடியும் தொடர்ந்து எழுதுங்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.