க.தணிகாசலத்தின் 'பிரம்படி'. தேசிய கலை இலக்கிய பேரவைக்காக சென்னை புக்ஸ் வெளியிட்ட இச்சிறுகதைத் தொகுதியை நூலகம் இணையத்தளத்தில் கண்டேன். எழுத்தாளர் க.தணிகாசலம் எழுதி , தாயகம் சஞ்சிகையில் வெளியான சிறுகதைகளிவை, இன்னும் முழுமையாக இத்தொகுப்பை நான் வாசிக்கவில்லை. ஆனால் வாசித்த சிறுகதைகளின் அடிப்படையில் இத்தொகுப்பை முக்கியமானதொரு தொகுப்பாக என்னால் உணர முடிகின்றது.

எண்பதுகளில் யாழ் மாவட்டம் போர்ச்சூழலில் மூழ்கிக் கிடந்த காலத்தில் , மரணத்துள் வாழ்ந்துகொண்டிருந்த மக்களின் இருப்பை நெஞ்சை உலுக்கும் வகையில் விபரிக்கும் கதைகள் இவை. போர் முடிவுக்கு வந்து சூழல் முற்றாக மாறிய இன்றுள்ள நிலையில் வைத்து இவற்றை வாசிக்கையில் தோன்றும் முக்கிய உணர்வு இனியொரு போர் இனியும் வேண்டாம் என்பதுதான்.

'நாய்களோ..' என்னும் கதையை வாசித்தபோது தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசிக்க வேண்டுமென்ற உணர்வேற்பட்டது. 'பிரம்படி'யும் இத்தகைய கதைகளிலொன்றே.

படையினரின் ஷெல் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக குடும்பத்தினரைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லுகையில் வயதான தாயாரை உடனே அழைத்துச் செல்ல முடியாத நிலை. மீண்டும் தாயாரைப் பார்க்கச் செல்லுகையில் இருந்த இடமே தாக்குதல்களினால் சிதைக்கப்பட்டிருக்கின்றது. வாசிக்கும் எவர் நெஞ்சையும் உலுக்கும் கதை.

இத்தொகுப்புக் கதைகள் போர்க்கால அனுபவங்களைச் சித்திரிக்கும் கதைகள். அவ்வகையில் முக்கியமான தொகுப்பு. இத்தொகுப்பு க.தணிகாசலத்தை முக்கிய சிறுகதையாசிரியர்களிலொருவராக அடையாளம் காட்டுகின்றது.

நூலை வாசிக்க: https://noolaham.net/project/333/33249/33249.pdf