கத்யானா அமரசிங்ஹவின் மூன்றாவது சிங்கள நாவலான ‘தரணி’, எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக சென்றவாண்டு (2020) வெளிவந்திருக்கிறது.

சாருலதா அபயசேகர தேவரதந்திரியின் ‘Stories’ போன்ற வலு வீச்சானவை இலங்கை ஆங்கில நாவலுலகில் படைப்பாகிக்கொண்டிருக்கும் தருணத்தில், தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ள சிங்கள மொழி நாவலான ‘தரணி’ ஒரு வாசகனின் வாசிப்பார்வத்தை இயல்பாகவே கிளர்த்துவதாகும். எனது பிரவேசமும் அத்தகைய ஆர்வம் காரணமாகவே ஏற்பட்டது.

‘தரணி’யை விமர்சிப்பதில் ஒரு சிக்கலான நிலைமையை இயல்பாகவே எதிர்கொள்ள நேரும். மொழிபெயர்ப்புபற்றி பல்வேறு வகையானதும் புதிது புதிதானதுமான கருத்துக்கள் கூறப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கான கவிதைப் பெயர்ப்பு கவிஞனுக்கான ஒரு துரோகமென்றுகூட சொல்லப்பட்டுள்ளது. நாவல்கள் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு, தழுவல் என்கிற பிரச்னைகளைத் தாண்டி அவ்வாறான கடுமையான கருத்துக்கள் பகரப்படவில்லையெனினும், ஒரு விஷயத்தை இங்கே அச்சொட்டாகப் பதிந்துகொண்டு மேலே செல்வது சிலாக்கியமானது.

ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு ஒரு நாவல் மொழிபெயர்க்கப்படுகையில், உதாரணமாக ‘தரணி’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதை எடுத்துக்கொள்கையில், மூலமொழியன்றி பெயர்ப்பு மொழிமட்டும் அறிந்த வாசகன் ஒருவன் முற்றுமுழுதாக மொழிபெயர்ப்பாளனையே சார்ந்திருக்கவேண்டியவன் ஆகின்றான். கத்யானாவின் கதையை ரிஷான் ஷெரீப் சரியாகவே மொழிபெயர்த்திருக்கக் கூடும். ஆனால் அதன் சொல்லாட்சி, நடை ஆதியன சரியாக வெளிப்படுதல் நாவல் மொழிபெயர்ப்பில் முக்கியமான அம்சம். கத்யானா அமரசிங்ஹவின் ‘தரணி’ நாவலை எம்.ரிஷான் ஷெரீபின் கண்களூடாகவே தரிசிக்க வாசகன் விதிக்கப்பட்டிருக்கிறான். சொல்லாட்சி, நடை, கட்டுமானமாகிய இத்தகு விஷயங்களின் பூரண விபரமும் தெளிவுமின்றி ‘தரணி’யை அதை அதுவாகவே விமர்சித்துவிட முடியாது.

ஆயினும் ரிஷான் ஷெரீபின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளிவந்த சிங்கள நாவலான ‘அம்மாவின் ரகசியம்’ தொடங்கி, அண்மையில் வெளிவந்த சிங்கள சிறுகதைத் தொகுப்புகளான தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மற்றும் இஸுரு சாமர சோமவீரவின் ‘திருமதி பெரேரா’ ஆகியன அவரது பணியின் சிறப்புகள்பற்றி நிறைய அறியத்தருக்கின்றன. ‘தரணி’ நாவல் உட்பட இம் மூன்று நூல்களுமே படைப்பாளிகளின் தனித்தனியான நடை விசேஷம் சொல்லாட்சிகள் புலனாகும்படியான மொழிபெயர்ப்பைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறாக படைப்பாளியின் நடையினைச் சிக்கென பற்றி அதன் வழி கொண்டுவரும் மொழிபெயர்ப்பானது பெரும்பாலும் படைப்பாளியின் அடையாளத்தைத் தவறவிடுவதில்லை. அத்தகைய அவதானம் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் பதிவாவது சிறப்பு. படைப்பாளியின் பிரதியாக அவற்றினுள் வாசகன் நுழைந்து பயணத்தைத் தொடர இது வாய்ப்பாக அமைந்துபோகிறது. மொழிபெயர்ப்பு நூல்களின் தன்மைபற்றி சொல்லவரும் இந்த இடத்தில் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வாசகன் கொள்ளக்கூடிய இந்த நம்பிக்கைக்காக அவரைப் பாராட்டுவது தக்கது.

‘தரணி’பற்றி பேச நிறைய விஷயங்கள் உள்ளனவெனினும் பாத்திர வார்ப்பு கருத்தாடல்களில் நாவல் சில இடங்களில் நலிவுபெற்றுள்ளதையும், அந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுந்து தன்னை அது ஸ்தாபித்த விந்தையையும் முக்கியமாகப் பதிவாக்கவேண்டும். வேறு சில குறிப்பிடக்கூடிய அம்சங்களையும் இம் மதிப்புரை அவதானப்படுத்தும்.

1) நிகழ்வுகளின் பின்னோட்ட உத்தியில் கட்டுமானமாகியிருக்கிறது ‘தரணி’. தேவதைக் கதையில் ஈர்ப்பாகும் குழந்தை துலன்யாவுக்கு, பொம்மையொன்றுடன் தேவதையான பாவனையில் உண்டாகும் அத்யந்த சிநேகிதம், அக்காவினதும் தாயாரினதும் எதிர்ப்புளினூடாகத் தடுமாறி, இறுதியில் தாயாரினால் பொம்மை எரியூட்டப்படுவதோடு பேதலிப்பாகிவிடுகிறது. குழந்தையின் வெளி நடத்தைகளில் பெரிதான மாற்றங்ககள் தென்படாவிடினும் அதன் மனத்தில் இழப்பின் வடு ஆழமாகப் பதிந்துவிடும் சாத்தியத்தை நாவல் நயமாகவே எடுத்துரைக்கிறது. மனோவியல்ரீதியான பார்வையிலும் இந்தப் புள்ளி சரியான அணுகுமுறையாகவே தென்படுகிறது.

ஆனால் வளர்ந்த பின்னால் துலன்யாவின் இழப்பின் தேடல் வாழ்நிலையின் தளம்மீறிய இலட்சியப்பாடாக ஆவதும், அதன் பிடிவாதமான முன்னெடுப்பில் அவை மனநிலைப் பேதலிப்பின் அறிகுறிகளாக வேண்டப்பட்டவர்களால் கருதப்படுவதும், அவர்கள் அவளை மாந்திரீக வைத்தியரொருவரிடம் அழைத்துச் செல்வதும்பற்றி யோசிக்கிறவள், தன் நிலை உண்மையில் அவ்வாறுதானா எனத் தீர்மானிக்கும் பொறுப்பை வாசகருக்களித்துவிட்டு தன் கதையை விரிப்பது நாவலின் போக்கையும் கதையோட்டத்தையும் முன்னனுமானிக்கும்படியாக வாசகருக்கான புதிர்க் கதவுகளைத் திறந்தே விட்டுவிடுகிறது. இது நாவல் கட்டியெழுப்பும் கதையோட்டத்திற்கும் சரி, உணர்வோட்டத்திற்கும் சரி எந்த நன்மையையும் செய்துவிடுவதில்லை. நாவலுக்கான செல்திசையைக் காட்டிவிட்டு தொடரும் நாவல்களின் உத்தி பிரதிகூலமான விளைவுகளையே விளைத்திருக்கின்றது.

2) பெரியண்ணன், ரவீந்திரன், வர்ணிக, ரஞ்சித் அண்ணன், ஜெயகாந்தன், ராஜினி ஆகிய பாத்திரங்களூடாக கதை விரிவது, பெரும்பாலான ஆரம்ப கால நாவல்களின் போக்கினை நினைவூட்டுகின்றது. கதை நகர்ச்சி தடங்கலின்றி முன்னெடுக்கப்பட்டாலும், தெளிவை உருவாக்குகிற அளவுக்கு ஆர்வத்தின் விசைகொண்ட சிக்கலை உருவாக்கவில்லை. சிக்கலென நான் குறிப்பிடுவது, வாசக மனம் பின்தொடரக்கூடிய ஒரு மறைபொருள் நாவலில் இருப்பதையே. இது மர்ம மற்றும் துப்பறியும் நாவல்களில் இருப்பதுபோன்ற மறைபொருளல்ல என்பது கவனிக்கப்படவேண்டும். சமகால நாவல்களில் இந்த மறைபொருட் தன்மை வாசகர்களாலும், திறனாய்வாளராலும் விதந்து சொல்லப்பட்டே வந்திருக்கிறது. உதாரணமாக மார்க்கரெட் அற்வுட்டின் ‘Alias Grace’ நாவலில் வரும் அதன் முடிச்சுகள்பற்றிய விமர்சனங்களைக் கூறலாம். அதனாலேயே ‘தரணி’ ஆரம்பகால தமிழ் நாவல்கள்போல் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி மெதுவாக நடந்துசெல்கிறது.

3) துலன்யாவின் மனோரீதியான பாதிப்பு உள்ளார்ந்தது என்பதில் சந்தேகமில்லை. நடவடிக்கைகள் அவளை ஓர் இலட்சிய வழியில் இட்டுச்செல்கையில், மனோரீதியான பாதிப்பின் அம்சம் தூக்கலற்று ஒரு பிடிவாதத்தின் சாயலே மேலெழுந்து தென்படுகிறது. இந்த மயக்க நிலையை ஒப்புக்கொள்ள முடியுமாயினும், அது நாவலின் எல்லையை அடைவதில் பெரும் பிரயத்தனத்தைத் தேவையாக்கிவிடுகிறது.

4) தனியே வாழும் அம்மாவின் தற்கொலை மிரட்டலும், கணவனைவிட்டு தனியாக வந்துவிட்ட அக்காவின் நிலையும் குடும்பரீதியான பிரக்ஞையை உருவாக்குவதில் துலன்யாவின் லட்சியவாதம் இறுதியில் அவளைக் கைவிட்டுப்போகிறது. ஒரு சாதாரண பெண்ணாக துலன்யா மீளவதாரம் எடுக்கிறாள். துலன்யாவினால் இந்த நிலைமையைத் தவிர்த்திருக்கமுடியாதென்பது வெளிப்படை. ஓரவலமாய் இது வாசகனை கவ்வவும் செய்கிறது. இதுதான் உலகம் (தரணி) என்று சொல்லவரும் கத்யானாவிடமிருந்து புதிதான எதையும் கண்டுவிட முடியவில்லை என்றாலும், எதார்த்தத்தை அழித்துவிடாத இந்தப் பதிவு நாவலின் அழகாக மிளிர்கிறது. அதனால் தோற்றங்கள் பிழைத்துப்போனாலும், நோக்கங்கள் பிழைத்துபோகவில்லை.

5) இலட்சிய வாத நாவலாக விரிவதால் அறிவார்த்தமாகப் பேச பாத்திரங்கள் முயல்கையில் அவற்றின் மொழிப் பாவனை இயல்பை மீறிய தன்மை அடைந்துவிடுகிறது. அதனாலேயே துலன்யா யாழ்ப்பாணத்தில் சந்திக்கும் சிவத்தம்பி பேச்சுமொழியின் தன்மை கடந்து உரைமொழியின் வடிவத்தில் உரையாடுகிறார். யாழ்ப்பாண பேச்சு வழக்கு சுத்தமாக நாவலில் சோடை போவதற்கு ரிஷான் ஷெரீப்தான் பதில் சொல்லவேண்டும்.

6) துலன்யாவின் குழந்தைக் கால மனப் பாதிப்பு அவளை ஓர் ஆழமான அன்பை, காதலைத் தேடி ஏங்கவைக்கிறதென கருத முடியும். ஆனால் ரவீந்திரன்மீது உண்டாகும் வளரிளம் பருவத்து ஈர்ப்புப்போல, இன்னும் வளர்ந்த துலன்யாவுக்கு ஜெயகாந்தன்மீது ஏற்படும் உணர்வு, அன்பு காதல் என்கிற வகைமைகளைமீறி சாதாரண காமத்தின் கூறுகளை உள்ளடக்கிவிடுகிறது.

நாவலின் சில வரிகளும் காமத்தை எற்றும் உடற்கூறுகளில் அவள் கவனமாவதை தெளிவாகவே காட்டிவிடுகின்றன. (உ+ம்: ‘வாகனத்தின் சுக்கானத்தின் மீதிருக்கும் அவரது பலம் மிக்க கைகளின்மீதும், அகன்ற தோள்களின்மீதும் எனது பார்வை பதிந்திருந்ததோடு. இடைக்கிடையே புன்முறுவல் பூக்கும் அவரது இரு உதடுகளும், மனம் கவரும் இரு விழிகளும்கூட என்னை ஈர்த்துக்கொண்டிருந்தன.’ – பக்: 80-81) காமத்தை கல்யாணமாகாத ஒரு முதிர்கன்னியின் உடலிச்சையின்பாற்படும் இடர்ப்பாடாகவே இந்த உணர்வைக் கொள்ள முடிகிறது.

7) ‘கனவு காண்பவள்’ என்ற இறுதிப் பகுதியானது தன் எல்லையை அடைய இழுபட்டுக்கொண்டிருந்த நாவலை, அந்தப் புள்ளியிலிருந்து ஒரு விசையில்போல் மேலே நகர்த்திவிடுகிறது. அந்தத் தீவிரம் வாசகனை நிச்சயம் பரவசம் கொள்ளவே வைக்கும். அது பேசுகிற மொழி, அதுவரையான மொழி, நடைகளைவிட வலிமையானது; இலக்கியார்த்தமானது.

மேலும் இங்கேதான் துலன்யாவின் நடத்தைகள் மனோவயமான பாதிப்பாக வெளிப்படுகின்றன. மட்டுமன்றி, ராஜினியுடனும் ஜெயகாந்தனுடனும் தொடர்புபடும் பல சம்பவங்கள் அவளது மனநிலையின் விளைவான கற்பிதங்களேயென்பது உண்மையில் திகைக்கவைக்காவிட்டாலும், அவளது மனோநிலைப் பாதிப்பை ஒத்துக்கொள்ள வைக்கிறது. இதுதான் இந்த நாவலின் விசேஷமுமாகும். அது தன் அடிமட்டத்திலிருந்து ஒரு தாவலாக மேலேறுகிற இந்த இடம் சமீபத்திய நாவல்களில் நான் அனுபவித்திராதது.

8) கதைக் களத்தில் வரும் அரசியல் பின்னணிகள், வலிந்த பதிவுகளாகவன்றி இயல்பாக இடம்பெறுவது நாவலுக்கு வலிமை சேர்க்கின்றன. 83 ஆடி இனக் கலவரத்தினதும், பின்னால் இரண்டாம் ஜே.வி.பி. எழுச்சியின்போதும் நடைபெற்ற மக்களின் கொடூரமான பாதிப்புகள் விசுவாசமான மொழியில் விவரிக்கப்பட்டுள்ளன. தனக்கான ஓர் அரசியல் கத்யானாவுக்கு இருக்கமுடியுமெனினும் நியாயத்தின் வழிநின்று இனம் மொழி வர்க்கம் கடந்த இந்தப் புலப்படுத்துகை ஒரு படைப்பாளியின் முக்கியமான அடையாளமாகும். அதை கத்யானா தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

இது பரிசுகள் பெற்ற நாவலெனப்பட்டது. அவை காரணமின்றி வழங்கப்படவில்லையென்ற முடிவை இந்த ‘கனவு காண்பவள்’ என்ற பகுதிமட்டுமே உருவாக்கியிருக்க முடியும்.

நன்றி: கதாகாலம் வலைப்பதிவு.