மலர்களின் வாசனை  மனதுக்கு உவப்பானது. அனைவரும் அறிந்தது. ஆனால் உயிரின் வாசனையை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே இருப்பர். விலைமதிக்க முடியாத உயிரின் மேன்மையை மனிதன் உணரும் கணங்கள் அநேகமாக மரணத்தை நிகர்த்த துன்பம் தருவனவாகவே அமைந்திருத்தல் கூடும்.அவ்வாறான வலிமிகுந்த தருணங்களை எழுத்தினால் மொழிபெயர்க்கும் வல்லமை கொண்ட படைப்பாளர்கள் அவற்றின் மூலம் வரலாற்றுக்கான தமது தடங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டே செல்கின்றனர்.

தாமரைச்செல்வியின் உயிர்வாசமும் அத்தகைய ஒரு படைப்பு என ஐயமின்றிக் கூறலாம். மனிதஜீவன்களின் அவல வலிகளையும், குருதியின் வாசனையையும் தன் எழுத்தெங்கும் தெளித்துக் கொண்டே செல்லும் இந்தப் படைப்பு கற்பனையல்ல.  தமிழர் வரலாற்றின் உணர்வு பூர்வமான ஆவணமாகவும் கருதப்படும் தகைமை கொண்டது. நேர்மையான எழுத்தாளர்கள் முக்காலத்தினை பிரதிபலிக்கும் பிரதிநிதிகள். அவர்களின் மூலமே  பல வரலாறுகள் இன்றும் உயிர் வாழ்கின்றன.

தாமரைச்செல்வி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகின் அனுபவமும் புகழும் மிகு படைப்பாளி ஆவார். தமது 'பச்சைவயல் கனவு' என்ற நாவலுக்காக இலங்கை அரசின் சாகித்தியவிருது உட்பட பல பெருமைகளை தனதாகக்  கொண்டவர். தமது இலக்கிய வாழ்வில்பொன் விழாவினை அண்மிக்கும் இவர் ஆறு நாவல்களையும், மூன்று குறுநாவல்களையும், இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இலங்கை, இந்திய  பாடநூல்களின் இவரது இருகதைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. பல்கலை இறுதியாண்டு மாணவர்கள் இவரது எழுத்துகளை ஆய்வு செய்திருக்கின்றனர் என்பது மேலதிக பெருமை.

இந்த நாவலில் அவர்  பேசவிழைந்தது யுத்தம் தந்த நெருக்கடிகளினால் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும்,  வாழ்வாதாரத்தை இழந்த தமது உறவுகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், ஆபத்துகள் நிறைந்த படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவை வந்தடைந்த உண்மையான அகதிகள் பற்றியதாகும். போருக்குப் பின்னரான தமிழ்மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறான இந்த அகதிகளின் அவலங்கள்  நியாயமான பார்வையுடன் பார்க்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும், எதிர்கால தலைமுறைக்கு புரிதலை ஏற்படுத்தும் வண்ணம் கடத்தப்பட வேண்டும் என்பதும் இவரது எழுத்தில் முதன்மைப் படுத்தப் படுகின்றன.

கதாசிரியர் தான் எடுத்துக் கொண்ட கருவிலிருந்து எங்கும் சிதறாமல் நேர்கொண்ட பார்வையுடன் பந்தயக் குதிரையென செம்மையான இலக்கினை எய்தியுள்ளார். அதனால் இனப்பிரச்சனையின் தோற்றம், மாற்றம், அகதி என்ற போர்வையில் வெளிநாடுகளில் தஞ்சம் கோரிய போலிப் போராளிகள், ஏமாற்றுக்காரர்கள் பற்றிய விடயங்களில் தனது கவனத்தை ஆசிரியர் சிதற விடவில்லை என்பது கவனத்திற்கு உரியது.

தொடரும் கட்டுரையில் 'படகுமனிதர்கள்' என்ற பதம் சொற்சுருக்கத்துக்காக மட்டுமே அன்றி அந்த அகதிகளை எந்த வகையிலும் கீழ்மைப் படுத்தும் நோக்கத்தில் குறிக்கப்படவில்லை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்  என்பது பணிவான வேண்டுகோள்.

படகு மனிதர்களின் பிரதிநிதியான இளைஞன் ஒருவனின் பின்னோக்கிய நினைவுகளினூடு ஆரம்பிக்கிறது கதை. எண்பதுகளின் இறுதியில் இந்திய இராணுவம் நிலை கொணடிருந்த போது, யுத்த சூழ்நிலையின் அவலங்களுடன் பிறந்தவன் அவன். கடந்தகாலத்தை பற்றிய பசுமையான நிம்மதியான நினைவுகள் அவனுக்கு மிகச் சிலவே. எனினும் குடும்பத்துடன் இணைந்திருந்த பாசமிகுநாட்களை நினைத்து  மகிழ்ந்தும், அவர்களை வாழ்வில் ஒருநிலைப் படுத்த எதிர்காலத்தில் காத்திருக்கும் கடமைகளை எண்ணி தீராத ஏக்கமும் கொண்டு வாழ்பவன் அவன்.பனி இல்லாத காலங்களிலும் விறைக்கும்  சஞ்சலமான மனதுடன், தற்காலிக விசாவில் சிட்னியில் வாழும் அகதியும் ஆவான்.

இளவயதிலிருந்து கூடவே வளர்ந்து, இணைந்தே படகில் வந்த உயிர்நண்பன் காதல் தோல்வியால் நஞ்சருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனுடன் வன்னியில் வாழ்ந்த இனிய நினைவுகள் ஒருபுறம். விடாது துரத்திய யுத்தசூழ்நிலை, இராணுவ கெடுபிடிகள், கைதுகள், இயக்கங்களுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு, பாரிய இடம் பெயர்வுகளால் கல்வியை தொடர முடியாத ஏக்கம், குண்டுகளால் சிதிலமாகிய குடும்ப உறுப்பினர்களின் மரணம், உயிரச்சம் என  இன்னோரன்ன கொடிய அனுபவங்களின் முடிவில்லாத துரத்தல்கள் மறுபுறம். பயங்கரமான படகுப் பயணத்தின் மூலமாக அவுஸ்திரேலியா வந்து சேர்ந்த நினைவுகள், படகில் மரணித்து அநாதரவாய் கடலுள் வீசப்பட்ட குடும்பஸ்தர் பற்றிய ஏக்கங்கள், நிரந்தர விசா கிடைக்குமா, ஒழுங்கான வேலை கிடைக்குமா என நிதமும் இயங்கும் மூளைக்கலங்கள் பரிசளித்த நித்திரையின்மை, பசியின்மை, தலைவலி இன்னொரு புறம்.  இத்தனையும் ஒருங்கே சேர்ந்து வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும் விரக்திநிலை. இவை யாவும் அவனைப் போன்ற அகதிகளுக்கு பொதுவானவை.

அறியாத மனிதர்களே எனினும் கூடவே படகில் வந்து கடலோடு கலந்தவர்கள் பலர். இயக்கத்தில் இருந்ததன் காரணமாக வருடக்கணக்கான காத்திருப்பின் பின் திருப்பி அனுப்பப் பட்டவர்கள் பலர். தூரத்துப் பச்சை என வெளிநாட்டு வாழ்க்கையை எண்ணி நிதமும் வசதிகளையும் பணத்தையும் எதிர்பார்க்கும் நெருங்கிய உறவுகளின் நெருக்குதல்.ஆர்வம் இருந்தும் கல்வியைத் தொடர முடியாதபடி வேலை கிடைக்கும் இடமெல்லாம் தேடித்தேடி அலையும் அவலம். இத்தனை நெருக்குதல்களின் மத்தியில் வாழும் இந்தப் படகு மனிதர்கள் நெஞ்சில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் நஞ்சமல்ல.

அவலமே வாழ்வான இந்த நாவலில் மனதில் ஆழப்பதிந்த சம்பவங்கள் பல உண்டு. போரின் உச்சகட்டத்தில் குண்டுகள் தாக்கி இறந்த அன்புக்கு உரியவர்களை அந்தந்த இடத்திலேயே புதைத்து விட்டு மக்கள் இடம்பெயரும் கோரம். அதை ஒத்ததாக படகில் இறந்த மனிதர்களை வேறுவழியின்றி அநாதைகளாக கடலில் இறக்கி விட்டு பயணத்தை தொடரும் அவலம். இந்தக் காட்சிகளை வாசிப்பதே சிரமமாக இருக்கிறதெனில் உறவுகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்பது பெரும் சோகம்.

இன்னொன்று காதல்... மெல்லுணர்வுகள் பிரவாகிக்கும் இளவயதானாலும், குடும்ப நிலையை  எண்ணி காதலை வெளிப்படுத்தாது தமக்குரிய  பாதைகளைத் தேர்ந்தெடுக்கும் மதி, லோஜி ஆகியோரின் நேசம் மனதைத் தொடுகிறது. சொல்லிய காதலை விட சொல்லாத காதலின் வலி மிகப்பெரியது.

படைப்பாளி வன்னி மண்ணின் வாசனையோடு வளர்ந்தவர். வயல்சூழ் வாழ்வியலின் பசுமைகளை அறிந்தவர். போரின் பின்புலத்தையும், விளைவுகளையும் சொந்த அனுபவமாகவே உள்வாங்கியவர். அதனால் நிலக்காட்சிகள் வளமான மொழிநடையில் சித்தரிக்கப்பட்டு உள்ளன. போர்க்காலத்தில் மக்களின் பயங்கர அனுபவங்களும் இடம்பெயர்வுகளின் அவலமும், உயிரிழப்புகளும் மனதை உருக்கும் வண்ணம் கூறப்பட்டுள்ளன. இயல்பான மொழிநடையும், எளிமையான உரையாடல்களும் இதனை வாசகரின் சொந்த அனுபவமாகவே நினைக்க வழி கோலுகின்றன.

 படகில் புலம்பெயர்ந்த அகதிகள் எதிர்கொள்ளும் இடர்கள் பற்றி ஆழமான விவரிப்புகளை செய்திருக்கும் கதாசிரியர் படகில் புலம்பெயர்ந்தவர் அல்லர். ஆனால் இருபது  நாட்களுக்கும் மேலாக நீளும் படகுப் பயணங்களின் பயங்கரங்களை தத்ரூபமாக எழுதுவதற்கு அவர் எத்தகைய கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனும் மலைப்பே நாவலை வாசித்த போது எழுந்த முதல் நினைவு. நாவலின் முன்னுரையிலும், குவியத்தில்  எழுத்தாளரின் உரையொன்றிலுமாக அவரது  முயற்சிகளை அறிய நேர்ந்தது. தமது இரண்டரை வருடகால உழைப்பு இதுவென்றார். படகு மனிதர்கள் பலரை சந்தித்த அனுபவங்கள், இவர்களுடன் சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்கள், சட்ட வல்லுனர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், மனிதநேயம் நிறைந்த ஆதரவாளர்கள் என பலரிடம் கேட்டறிந்த அனுபவங்களினதும், ஆலோசனைகளினதும் தொகுப்பே தமது எழுத்துகளின் ஆதாரம் எனக் கூறினார். உண்மைக்கு மாறாக எதையும் எழுதி விடக் கூடாது என்ற உன்னத நோக்கு நாவலில் காணக் கிடைக்கிறது. இந்தப் பெருமுயற்சியை  ஏன் செயற்படுத்தினார் என்ற கேள்வி இங்கு பெறுமதி வாய்ந்தது.

படகு அகதிகளை நியாயப் படுத்தும் அதேசமயம்  தமிழர்களது வாழ்வியலும், மனிதம் சார்ந்த பல விடயங்களும் இந்நாவலின் முக்கிய பேசுபொருளாகின்றன. கல்வி, கடும் உழைப்பு, கட்டுப்பாடான வாழ்வு என்பவற்றையே தாரக மந்திரமாகக் கொண்டது தாயகவாழ்வு. இந்த மக்களை புலம்பெயர் வாழ்வை நோக்கித் தள்ளியது போரும் அதன் பின்னணிக் காரணிகளுமே.

 தாயகம், புலம்பெயர் தேசம் என்ற இரு தளங்களில் துன்பத்திலும், வறுமையிலும் ஒருவருக்கு ஒருவர் உதவும் மனிதநேயம் விதந்து உரைக்கப் பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்தவர்களை அரவணைத்து உதவும் எளிய கிராமிய மனங்கள் இதமானவை. முன்னமே புலம்பெயர் தேசத்தில்  நிலைகொண்ட மனிதர்களும், அமைப்புகளும்  கடல்கடந்து வந்த அகதிகள்பால் கொண்ட ஈரநோக்கு  மனதை நெகிழச் செய்யும் விதமாக முன்வைக்கப்பட்டு உள்ளது.

இறுதியுத்தம் நடைபெற்ற நேரத்தில் அந்நிய தேசங்களில் தாயகத்தைச் சேர்ந்த மக்கள் நடத்திய கவனஈர்ப்பு போராட்டங்கள், போரின் அவலங்களை நிறுத்த எதுவுமே செய்யமுடியாமல் போய் விட்டதே என்ற கையாலாகாத்தனம் தந்த வேதனை என்பன சில பாத்திரப் படைப்பினூடாக வெளிக்காட்டப் பட்டுள்ளன.

ஆனால் தாயகத்தில் பதவி பாதுகாப்புடன் இருக்கும் தமிழர்களுக்கு  வெளிநாட்டினரைப் போல ஆர்ப்பாட்டங்கள் செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டதுதான். உயிரைத் துச்சமாக மதித்தால் தான் முடியும். அதனால் வாய்மூடி மௌனிகளாக இங்குள்ளவர்களும்  குற்றஉணர்வுடன் தான் வாழ்கிறார்கள். உதவி செய்ய மனமும் பணமும்இருந்தாலும் யாரை நம்புவது, பிறகு விசாரணை என பிரச்சனை வருமோ என்ற மனப்பயத்திலேயே பலரும் வாழ்கிறார்கள். நீதியும் இங்கு சிறையிடப்பட்டே  ஆயுள்தண்டனையை அனுபவிக்கிறது.

பொதுவாகவே இலக்கியப் படைப்புகளில் நல்ல பண்புகளுடன் மனிதர்களை வெளிக் கொணர்வதாவது இன்னொரு மனிதனை நல்வழிப்படுத்த உதவும் நேர்நிலை எண்ணமாகவே கருதப்பட வேண்டும்.இந்நாவலின்  கதாபாத்திரங்களில் அநேகமானோர் யுத்தநிலைமை காரணமாக உயிரச்சம் கொண்டவர்களாகவும், நேர்மையானவர்களாகவுமே காட்டப் பட்டு உள்ளனர்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே படகுஅகதிகள் மேலான, அங்கிருக்கும் தமிழ் 'மேட்டுக்குடி' மக்களின் ஏளன மனப்பாங்கு வெளிப்படுத்தப் படுகிறது. அதுவும் குறிப்பாக காதல் திருமணங்களினூடே பிள்ளைகளின் நலன்கருதும் பெற்றோரின் விருப்பமற்ற மனநிலையாகவே வெளிப்படுத்தப் படுவதால் அங்கும் ஒரு தர்மத்தைக் காண முடிகிறது.

அத்துடன் பொருளாதார நலனை மட்டுமே முன்னிறுத்தி அகதி அந்தஸ்து கோரும் போலிமுகங்களை இந்நாவல் உள்ளடக்காதது படைப்பாளியின் சீரிய நோக்கத்திற்கு அமைவானதாகவே காணப்படுகிறது. எனினும், எதிர்கால வரலாற்றுத் தடங்களில்  பக்கச் சார்புள்ளதாக நோக்கப்படலாம். ஆசி.கந்தராஜா அவர்களின் 'அசைல்' என்னும் சிறுகதையானது, அகதி எனும் போர்வையில் புலம்பெயரும் பொய்யர்களது வாழ்வினை கூறி நிற்கிறது.

 ஏற்கனவே அங்கு நிலைகொண்ட தமிழ் சமூகத்தினர் படகு அகதிகளின் பிரச்சனையால் தங்கள் மரியாதையும் கெடுவதாகக் குறைகூறும் பிறள் மனநிலையும் மிதமாகவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு வகையில் கல்வி மேதமை கொண்ட மேல்மட்ட தமிழ் பிரஜைகளை 'காட்டிக் கொடுக்கா' மனநிலையாகவும் இருக்கலாம்.

துன்பத்தில் அபமிரிதமாகக் காணப்படும் ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் உதவும் பண்பும், எளிமையான வாழ்வும் இன்பத்திலும் உயர்ச்சியிலும் காணப்படுவதில்லை. போரில் அல்லலுற்று அகதிகளாய் வாழும்போது இருந்த பண்பான மனம் வசதி வாய்புகள் கூடும்பே்ாது இருப்பதில்லை. சுயநலமும், போட்டி பொறாமைகளும் நிறைந்த  மனிதர்களாக உருமாறும் பரிணாம வளர்ச்சி இயல்பாகவே அங்கு தோன்றுகிறது. இதனால் தமிழ்சமூகம் நிலத்தால் மட்டுமன்றி மனத்தாலும் பிளவு பட்டு நிற்கின்றது.

 எண்ணற்ற கதாபாத்திரங்கள் நடமாடும் இப்படைப்பில் சில உணர்வுகள், உரையாடல்கள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருப்பது சில வேளைகளில் ஆயாசத்தை தருகிறது. எமது சமுதாயத்தினர் வகைதொகையின்றி மீண்டும் மீண்டும் அனுபவித்த கொடுமைகளே இந்த எழுத்தின் பின்புலம் என்பது கண்கூடு. இப்புரிதல் வாசகனின் ஆயாசத்தை நிராகரிக்கப் போதுமானது.

தனிமனிதர்களின்  ஆதரவு ஓரளவு சாதகமாகவே இருந்தாலும், இன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் சட்டவிரோதமாகக் கடல்கடந்து வரும் அகதிகளுக்குப் பெரும் பாதகமாகவே அமைந்துள்ளது. நாட்டின் பொருளாதார நலத்தையும், சட்டம் ஒழுங்கை மதிக்கும் கல்வி மேம்பாடுடைய சமூகமொன்றையும் எதி்ர்பார்க்கும் அரசின் போக்கு,  அகதிகளுக்கான நிரந்தர குடியுரிமை பெறுவதில் பெரும் பின்னடைவுகளைத் தருகிறது. அரசின் நோக்கம் நியாயத்தின் பாற்பட்டது. ஆனால்  தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாக அவுஸ்திரேலிய அரசு இலங்கைமீது சில இராஜதந்திர அழுத்தங்களை பிரயோகித்தல் வேண்டப்படும் ஒன்றாகும்.

 புலம்பெயர் தேசத்தில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்படும் நிலையில் அந்த அகதிகள்  நாடு கடத்தப்பட்டு மீண்டும்  இங்கு வரவேண்டிய நிலையானது அவர்களுக்கு பாரதூரமான சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். தாயகத்தின் நிலைமையும்  எதிர்காலத்திற்கான உத்தரவாதம் தருவதாக இல்லை. எனினும் நெஞ்சில் உரம் கொண்டு நேர்மைத் திறனும் கொண்டு தமிழர் சமுதாயம் நம்பிக்கையுடனே காத்திருக்கின்றது. இறுதிப் போரின் உச்சக் கட்ட ஒடுக்குமுறையின்  பின்னும் உயிர்ப்புடனும், வீழ்ந்து விடாத மன ஓர்மையுடனும் விடியலை எதிர்பார்த்திருக்கின்றது.

அனுபவங்களையும் தகவல்களையும் கொண்டு  ஒப்பனைகள் ஏதுமின்றி நிஜத்தை, நிஜமாகவே நெய்யும்  நேர்மையான படைப்புக்கலை  தாமரைச்செல்வி அவர்களுக்கு வரமாக அமைந்திருக்கிறது.  கதைமாந்தரின் உணர்வுகளை எளிமையான எழுத்தால் கட்டமைக்கும்  வல்லமையும் அதீதமாகவே கிடைத்திருக்கிறது. கருக்கொள்வதற்காக  இன்னும் பல உண்மைகள் அவருக்காக காத்திருக்கின்றன. மண்ணோடும், மனிதர்களோடும்  குழைத்த உயிரின் வாசனையை நுகர்வதற்காய் வாசக உள்ளங்களும் ஆவலோடு எதிர் பார்த்திருக்கின்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.