சில வாரங்களுக்கு முன்பு வி.சபேசனின் ‘துணை’ குறும்படம் குறித்து ஒரு சிறு குறிப்பொன்றினை இத்தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதன்போது சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்த அருந்ததியின் ‘முகம்’ குறித்தும் ஜீவனின் ‘எச்சில் போர்வைகள்’ குறித்தும் சில குறிப்புக்களைத் தொட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. அப்போதுதான் எனக்கு இந்த நூல் ஞாபகம் வந்தது. இயக்குனர் அருந்ததியும், யமுனா ராஜேந்திரனும் தொகுத்தளித்த ‘புகலிடத் தமிழ் சினிமா’ என்ற இந்த நூலானது இன்றைய சூழ்நிலையிலும் ஒரு முக்கியமான நூலாக எனக்குப்பட்டது. முக்கியமாக அன்று இந்நூலில் கட்டுரையாளர்கள் வெளிப்படுத்திய புகலிட தமிழ் சினிமாவானது எதிர்நோக்கிய அதே சிக்கல்களையும் சவால்களையும் இன்றைய சமகாலத்திலும் எதிர்நோக்குவதினால் இந்நூல் குறித்து சில கருத்துக்களை பகிர்வதும் அவசியம் என நினைக்கிறேன்.

பாரிஸிலிருந்து முகம் பதிப்பகத்தினரால் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதற்கு பின் ‘முகம்’ பதிப்பகத்தினர் ஏதேனும் நூல் வெளியிட்டிருக்கின்றனரா என்ற தகவல் என்னிடம் இல்லை. வெளிவரவில்லையென்றே நினைகின்றேன். அதேபோல் இதுபோன்றதொரு சினிமா குறித்ததொரு நூல் வெளிவந்ததா என்ற கேள்விக்கும் இல்லை என்ற கசப்பான பதிலே விடையாகக் கிடைக்கின்றது.

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனும் இயக்குனர் அருந்ததியும் தொகுத்தளித்த இந்நூலில் மு.புஷ்பராஜன்,அருந்ததி, ஜீவன், அபிநயன், சுவிஸ் ரஞ்சி, கதிர்காமநாதன், அழகு குணசீலன், புவனன், எஸ்.பி.ஜெகாதரன், யமுனா ராஜேந்திரன் ஆகியோர் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

பதிப்புரையில் இயக்குனர் அருந்ததி “சினிமாவின் சாத்தியப்பாடுகள் அதிகம். ஆயினும் இப்புலம்பெயர் சூழலில் ஒரு சினிமாவை உருவாகுவதற்கான சாத்தியபாடுகள் மிக குறைவானவை. எனவே அதன் காரணங்கள் பற்றியும் அதன் கடந்து போதல் பற்றியும் இந்நூல் பேசுகின்றது” என்று பதிவு செய்கிறார். அவர் இதனைக் கூறி இப்போது 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் எமது நிலைமையில் எந்தவித மாற்றமுமில்லை. அந்தக் குறைந்தளவு சாத்தியப்பாடுகளை வைத்துக்கொண்டுதான் நாம் இன்னமும் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.

முன்னுரையில் யமுனா ராஜேந்திரன் “தமிழ் சினிமா ரசிக மனோபாவத்திற்கு எதிரான போராட்டம் என்பது தொடர்ந்த விமர்சனச் செயல்படுகள் மூலமே சாத்தியம்” என்று குறிப்பிடுகிறார். இன்று சினிமா குறித்த விமர்சனச் செயல்பாடுகள் எங்கே இருக்கின்றது ? முன்னர் ஓரளவு காத்திரமாக இருந்தது. அதற்கு உதாரணம் இந்நூல் ஒன்றே போதும்.. இன்று அது கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டது. தனது முன்னுரையின் இறுதில் யமுனா கேட்கிறார் “எம் கலைஞர்களுக்கு கலையே தொழிலாகும் வாய்ப்பு என்று கிட்டும்.? அந்நேரம் தமிழ் மொழி உலக முகடுகளை எட்டும்.”. யமுனாவின் கேள்வி நியாயமானது. அவரது கனவும் நியாயமானதுதான். ஆனால் கலையும் தொழிலும் ஒன்றாகும் வாய்ப்பு தமிழனுக்கா? அது நிரந்தரக் கனவாகவே இருகின்றது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும்.



கவிஞரும் திரைப்பட விமர்சகருமாகிய மு.புஷ்பராஜனின் இரண்டு காத்திரமான கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இரண்டுலுமே அவர் அதிகமாக அருந்ததியின் ‘முகம்’ குறித்தே சிலாகித்து பேசுகிறார். ஓரிடத்தில் அவர் குறிப்பிடுகிறார், “ஈழத்து புலம்பெயர் திரைப்படத்துறையில் முகம் ஒரு புதிய முயற்சியே. நீல்ஆம்ஸ்ரோங் பாணியில் கூறுவதானால் இது ஒரு அடி. ஆனால் ஈழத்து திரைப்பட வரலாற்றில் ஒரு பெரிய பாய்ச்சல். இப்பாய்ச்சல் ஒரு புதிய திசைக்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.”. உண்மை. ஈழ-புகலிட திரைப்பட வரலாற்றில் முகம் ஒரு பாய்ச்சலே. ஆனால் இந்த பாய்ச்சலுக்குப் பின் நிகழ்ந்தது என்ன? 20 வருடங்கள் கழித்து புதியவனின் ‘ஒற்றைப்பனை மரம்’ என்ற ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு படம் காட்டிக் கொண்டிருக்கின்றோம்.

‘புகலிட சினிமாப் பெண்’ என்ற கட்டுரையை சுவிஸ் ரஞ்சி எழுதியுள்ளார். பெண் விடுதலை, பெண்ணுரிமைக் கருத்துக்கள் இன்னும் போதுமான அளவு எமது சினிமாக்களில் போதுமானவையாக இல்லை எனவும், தெரிவிக்கப்படும் கருத்துக்களும் வலிந்து திணிக்கப்படுபவையாக இருக்கின்றன என்றும் குறிப்பிடும் அவர் “புகலிடத்தில் பெண் நடிகைகளுக்கு தட்டுப்பாடுதான். ஆனால் இப்படங்களில் நடிக்க ஏன் பெண்கள் முன் வருகிறார்கள் இல்லை?” என்ற கேள்விக்கான காரணங்களை வரிசைப்படுத்துகிறார். அங்கு அவர் வைத்த காரணங்கள் அனைத்தும் தர்க்க பூர்வமானவைதான். ஆனால் மன்னிக்க வேண்டும் றஞ்சி! 20 வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் கேட்ட கேள்விகளும் அதற்கான காரணங்களும் அப்படியே உறைநிலையில்தான் இருக்கின்றன. மாற்றங்கள் வருவதற்கான எந்தவித அறிகுறியும் எனக்குத் தென்படவில்லை.

இந்நூலில் புகலிடத் தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளுக்கும் அப்பால் ‘பொன்மணி’ வாடைக்காற்று’ ‘குத்து விளக்கு’ போன்ற ஈழத்து தமிழ் சினிமா குறித்தும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் போது உருவாக்கப்பட்ட படங்கள் குறித்தும், பிறமொழி சினிமாக்கள்/ பிறமொழி குழந்தைகள் சினிமாக்கள் குறித்தும் விலாவாரியாகப் பேசப்பட்டுள்ளன. அநேகனமான கட்டுரைகள் ஏற்கனவே மீட்சி, நாழிகை, ஈழமுரசு, கனவு, மௌனம், சக்தி, புன்னகை போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாகி மீள் பதிவுகளாக வந்திருக்கின்றன. விமர்சனங்களும், எதிர்வினைக்களுமாக பல விவாதங்களுக்கு உட்பட்டே வெளிவந்திருக்கும் இக்கட்டுரைகள் அன்றைய ஆரோக்கியமான சூழலினை பிரதிபலித்து நிற்கின்றன. கட்டுரைகள் வெளிவந்த ஆண்டு, பிரசுரிக்கப்பட்ட இதழ்கள் எல்லாம் தெளிவாகவே குறிப்பிடப்படுள்ளன. இப்போதெல்லாம் இதனை யார் செய்கிறார்கள். எழுத்துப்பிழைகள் எதுவுமற்று இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளமையானது, ஒவ்வொரு நூலும் பக்கத்திற்கு நான்கைந்து பிழைகளாக பதிப்பிக்கப்படும் இன்றைய சூழலில் எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நூல் வெளிவந்து 20 வருடங்கள் கடந்தோடி விட்டன. காலம் சடுதியாகக் கடந்து விட்டது. ஆனால் நாம்தான் ஏனோ உறைநிலையில் இருக்கின்றோம். புகலிட தமிழ் சினிமா பயணிக்கின்ற பாதையில் ஏதோ ஒரு தொடர்ச்சி இல்லை என்பதினை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அன்று எதிர்கொள்ளப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகள், சவால்கள் எந்தவித மாற்றமுமின்றி இன்றும் தொடர்கின்றன. இடையிடையே நம்பிக்கையூட்டும்படி ஒன்றிரண்டு படங்கள் வந்து போகின்றன. புதியவன் ‘மண்’ மூலம் ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் பின்நாட்களில் ‘யாவும் வசப்படும்’ ‘ஒற்றைப் பனைமரம்’ போன்ற படங்கள் மூலமாக எமது நம்பிக்கைகளை சிதைத்து விடுகிறார். சுஜித்ஜி தனது ‘The Last Halt – கடைசித்தரிப்பிடம்’ மூலம் எமது நம்பிக்கையை மீண்டும் துளிர்க்க விட்டார். இப்போது காணாமல் போய் விட்டார். லெனின் எம் சிவம் ‘A Gun & a Ring’ மூலம் நம்பிக்கையினை ஏற்படுத்தினார். பின் ‘ரூபா’ மூலம் அதனை இல்லாமல் செய்கிறார். நாமும் வருகின்ற ஒவ்வொரு படங்களுக்கும் இது புகலிட தமிழ் சினிமாவில் ‘ஒரு மைல்கல்’ என்று தவறாது ஒரு பாராட்டுடன் கூடிய விமர்சனத்தை வைக்கிறோம். விம்பம் மற்றும் ஐபிசி தொலைக்காட்சி போன்றவை குறும்பட விழாக்கள் குறும்படப்போட்டி என்று வருடந்தோறும் ஏற்பாடு செய்தவண்ணமே இருக்கின்றன. ஆயினும் இவை யாவும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேரும் பயணங்களாகவே அமைந்து விடுகின்றன. மு.புஷ்பராஜன் கூறியது போல் உண்மையில் நாம் 20 வருடங்களுக்கு முன்பே ஒரு பாரிய பாய்ச்சலை நிகழ்த்தி விட்டோம். ஆனால் அதற்குப் பின்புதான் போகும் வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் எதிர்நோக்கும் இந்த சிக்கல்களுக்கும் சவால்களுக்குமான தீர்வு என்ன?. உண்மையாக எனக்குத் தெரியவில்லை. எனக்குப் புரியவுமில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.