1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 33 வருடங்களாக கனடாவில் இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்தகால சாதனைகளுக்காக ‘பிகைன்ட் மீ இன்ரநாசனல் மீடியாவால்’ 2026 ஆம் ஆண்டுக்கான சாதனை விருதான ‘லெஜன்ட் அன்ட் ஐகோன்’ (டுநுபுநுNனு’ளு ரூ ஐஊழுNளு) விருது கொடுத்துப் பாராட்டப் பெற்றது. இந்த நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமை 20-6-2026 ஆம் ஆண்டு, ரொறன்ரோ மக்னிக்கல் வீதியில் உள்ள பிரைட்டன் மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட சாதனையாளர்கள் சிலரும் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக புற்றுநோய் தடுப்பு சிறப்பு வைத்தியர்கள், இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள் போன்றவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. நிறுவனங்களுக்கான சிறப்பு விருது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு வழங்கப்பெற்றது.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக ஆரம்பகால அங்கத்தவர்களும், முன்னாள் தலைவர்களுமான ஊடகவியலாளர் ஆர். என். லோகேந்திரலிங்கம், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், மற்றும் செயலாளர் முனைவர் வாசுகி நகுலராஜா, நிர்வாகசபை உறுப்பினரும் விரிவுரையாளருமான நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர். தவிர்க்க முடியாத காரணத்தால் இணையத் தலைவர் க. ரவீந்திரநாதன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

கனடிய எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் இணையமாகக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் செயற்பட்டு வருகின்றது. பலவகையான கருத்தரங்குகள், கவியரங்குகள், பிற நாடுகளில் இருந்து வரும் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் வரவேற்றுக் கௌரவிப்பது, தமிழ் எழுத்தாளர்களை வாழும் காலத்தில் கௌரவிப்பது, மறைந்த எழுத்தாளர்களுக்கு இரங்கற் கூட்டம் வைப்பது, நூல்களை அறிமுகம் செய்வது, வெளியிடுவது, வெளியீட்டு விழா வைப்பது, நூல் கண்காட்சி நடத்துவது, சிறுகதை, கவிதைப் போட்டிகள் வைத்து தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, பயிலரங்குகள் நடத்துவது போன்ற பல சேவைகளை எழுத்தாளர் இணையம் தொடர்ந்தும் இந்த மண்ணில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


இலைமறைகாயாக இருந்த கனடா தமிழ் எழுத்தாளர்களில் இதுவரை 48 எழுத்தாளர்களை மெய்நிகர் மூலம் நடக்கும் எழுத்தாளர் அரங்கத்தில் அறிமுகம் செய்து சாதனை படைத்திருக்கின்றது.சர்வதேசச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி ‘சர்வதேச சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும்,’ கனடிய எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘அரும்பு,’ ‘கதைச்சரம்’ என்ற தலைப்பில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கின்றது.

இதைவிட இதுவரை கனடிய தமிழ் சமூகத்தின் வழிகாட்டிகளாகவும், முன்னோடிகளாகவும் இருந்த கவிஞர் திரு. வி. கந்தவனம், திரு. பொ. கனகசபாபதி, திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம், திரு. க.தா. செல்வராசகோபால், திரு. க.செ.நடராசா, வித்துவான் க. செபரத்தினம், பண்டிதர் மா.சே. அலெக்ஸாந்தர், திரு. மொகமட் ஹன்ஸீர், பேராசிரியர் கலாநிதி பாலசுந்தரம் இளையதம்பி, பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன், முனைவர் பால சிவகடாட்சம், முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ், திரு. தங்கராசா சிவபாலு, திரு. சின்னையா சிவநேசன், திரு பாலா குமாரசாமி , சிந்தனைப்பூக்கள் திரு. பத்மநாதன், திரு. தாமோதரம்பிள்ளை சண்முகநாதன், திரு. தெய்வேந்திரன் சண்முகராஜா, பண்டிதர் திரு. ச. வே. பஞ்சாட்சரம், கலாநிதி திருமதி கௌசல்யா சுப்ரமணிய ஐயர், தேசபாரதி திரு. வே. இராசலிங்கம், எழுத்தாளர் திரு. முருகேசு பாக்கியநாதன், பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம், கலைஞர் திரு. வயிரமுத்து திவ்வியராஜன், எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன், திரு. வி. என். மதியழகன், கலாநிதி பார்வதி கந்தசாமி, திரு. நகுலசிகாமணி நடனசிகாமணி, திருமதி நாகரத்தினம் செல்லையா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி இதுவரை கௌரவிக்கப்பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக இதுவரை திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு. சின்னையா சிவநேசன், திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு. சிவபாலு தங்கராசா, திரு. சி. சிவநாயகமூர்த்தி, பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம், திரு. குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு. க. ரவீந்திரநாதன் ஆகியோர் பணியாற்றியிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

வருகைதந்த விருந்தினர்களுக்குத் தொடக்கத்தில் சிறற்றுண்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகியன இடம் பெற்றன. அதன்பின் இரவு உணவும் வழங்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.