
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையினரின் (FeTNA) மாநாடு, ரொறன்ரோவில் நிகழ்ந்திருந்தபோது, அதில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. அதற்காக மொழிபெயர்ப்பு வேலைக்கூடாக என் சினேகிதிகளில் ஒருவராக மாறியிருந்த வசந்திக்குத்தான் நன்றி கூறவேண்டும். அது நிகழ்ந்து, 13 வருடங்களுக்குப் பின்னர், இப்போது நியூஜேர்சியில் நிகழ்ந்திருந்த அவர்களின் 39வது மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. வழமைபோல இந்த மாநாடும் ஜூலை இரண்டாம், மூன்றாம், நான்காம் திகதிகளில் நிகழ்ந்திருந்தது.
மறைமலை அடிகள் அவர்களையும், இராஜராஜ சோழனையும் முதன்மைப்படுத்தியிருந்த நிகழ்ந்த இம்மாநாட்டில், ‘சமகாலத் தமிழ் இலக்கியம் - துவக்கமும், திசைகளும், போக்குகளும்’ என்ற நிகழ்ச்சியுடன் என் முதல் நாள் ஆரம்பமானது. (துவக்கமா, தொடக்கமா என்ற ஆய்வுக்குள் செல்வதற்கு நான் விரும்பவில்லை.) நிகழ்ச்சியை ஆரம்பித்துப் பேசிய சுபா காரைக்குடி அவர்களினதும், தொகுத்தளித்திருந்த அருள்ஜோதி சுப்பிரமணியம் அவர்களினதும் தமிழும், சொற்கோர்வைகளும் மிகவும் அழகானவையாக இருந்தன. புதுமைப் பித்தனின் கதைகளைப் பற்றிப் பேசிய பெருந்தேவி அவர்களின் பேச்சு, அந்தக் கதைகளை மீளவும் வாசிக்கவேண்டுமென்ற தூண்டலைத் தரும் சிறப்பான பேச்சாக அமைந்திருந்தது. நகைச்சுவை பற்றிப் பேசிய சாம்ராஜ் அவர்கள் குறிப்பிட்டிருந்த உதாரணங்கள் நகைச்சுவையானவையாக எனக்கிருக்காததால், இலக்கியத் தோட்ட நிகழ்வொன்றில் அவர் பேசிய பேச்சை ரசித்ததுபோல, அதை என்னால் ரசிக்க முடியவில்லை. ஈழத்து எழுத்தாளர்கள் ஏன் போரைப்பற்றி மீளமீள எழுதுகிறார்கள் என்பது பற்றி தமிழ்நதி அவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசினார். (நான் அங்கிருந்ததாலோ அல்லது என் எழுத்துகளை வாசிக்காததாலோ அப்படி எழுதுபவர்களின் பெயர்களில் என் பெயரையும் சேர்த்துக்கொண்டார். போரின் கொடுமையை நேரில் பார்க்காதபடியாலும், வேறு சில காரணங்களாலும் நான் போரைப் பற்றி எழுதுவதில்லை என்பதையும் இதில் சொல்லவேண்டும்.) அத்துடன் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் என்ற பிரிவில், ஈழத்திலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்திருப்பவர்களின் படைப்புகளும் அடங்குவதே சரியானது என்றார். ரொறன்ரோவில் பெற்றுக்கொள்ள முடியாமலிருந்த தமிழ்நதியின் இரு நூல்களை நியூஜேர்சியில் வைத்துப் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த நிகழ்வில், புலம்பெயர் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளையும், கட்டுரைகளையும் கொண்ட தொகுப்பாக யாவரும் பதிப்பகத்தினரின் வெளியீடாக வந்திருக்கும், ‘மேற்றிசை வலசை’ என்ற நூலும் வெளியிடப்பட்டது. அதனை ‘யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி - எல்லைக்கு அப்பாற்பட்ட இசை’ போன்ற ஆவணப்படங்களை இயக்கிய இயக்குநரான அம்ஷன்குமார் அவர்கள் வெளியிட்டு வைத்தார். நிகழ்ச்சி நடக்கும்போதே நான் எழுதிய கதையை வாசித்த பெண் ஒருவர் நல்ல கதையெனப் பாராட்டினார், இன்னொருவர் என் நூலொன்றைக் கேட்டு வாங்கிப் பெற்றுக்கொண்டார். வேறொருவர் FB இல் நண்பரானார். இவை யாவும் இனிய அனுபவங்களாக இருந்தன.
2022 இல், புலம்பெயரும் வாழ்வைப் பிரதிபலிக்கும் வட அமெரிக்கக் கதைகளுக்குப் பணப்பரிசு வழங்கி FeTNA கெளரவித்திருந்தது. பின்னர் அந்தக் கதைகளை, ‘வட அமெரிக்கக் கதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் புலம்பெயர் வாழ்க்கை தொடர்பாக நான் எழுதியிருந்த இரண்டு கதைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், மேற்றிசை வலசையில் இடம்பெற்றிருக்கும் என் கதை புலம்பெயர் வாழ்வு பற்றிய கதையல்ல என்பதில் வருத்தமே. அதை எப்போது அனுப்பினேன் என்பதுகூட எனக்கு நினைவில்லை. சென்ற மாதம் ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, ஒரு நாள் காலையில், நான் எழுதிய கதையொன்று பிரசுரத்துக்காகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி எனக்கு whatsapp இல் கிடைத்திருந்தது. கதையைத் தெரிவுசெய்திருந்த குழுவினர் பரிந்துரைத்திருக்கும் விடயங்களை ஏற்பதா, இல்லையா என்பதை முடிவுசெய்த பின்னர் திருத்திய பிரதியை அன்றிரவே அனுப்பி வைக்கும்படியும் அதில் கேட்கப்பட்டிருந்தது. கூறப்பட்டிருந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகத்தான் இருந்தன. ஆனால், ஐரோப்பாவின் இயற்கையை அணுவணுவாக ரசிப்பதற்காக ஒரு குழுவுடன் இணைந்து hiking போயிருந்த களைப்புடன் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு நாங்கள் சென்றிருந்தபோது இரவு 9 மணிக்கு மேலாகிவிட்டது. போதாதற்கு அடுத்த நாள் காலையில், விமானத்துக்காக 4 மணிக்கு விழித்தெழ வேண்டியிருந்ததால், நித்திரைக்குச் செல்வதற்கு முன்பாக கூறப்பட்டிருந்த அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு வசதி இருக்கவில்லை (இப்போது அந்தக் கதையை முழுமையாக மாற்றிவிட்டேன்). எனவே அதை வாசிப்பவர்கள் மன்னித்துக் கொள்ளுங்கள்.
FeTNA மாநாட்டுக்குப் போவோமா என்ற சிந்தனை அன்றிரவு தோன்றியது, இருப்பினும் நடைமுறைச் சிக்கல்களால், அது தோன்றிய வேகத்திலேயே அகன்றுவிட்டது. ஆனாலும், மாநாட்டை promote பண்ணுவதற்காக தினமும் FeTNA போட்டுக்கொண்டிருந்த புதிய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படியான செய்திகளில் ஒன்றாக, தமிழ் நாட்டின் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களும் மாநாட்டுக்கு வருகிறார் என்ற செய்தியிருந்தது. ராஜ்மோகன் அவர்களின் நற்செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தமையும், அவரின் பேச்சிலிருந்த ஈர்ப்பும், ‘மேற்றிசை வலசை’ வெளியிடப்படலும், சங்கியின் தூண்டலும் முடிவில் பயணத்துக்கு வித்திட்டன. இருப்பினும், மாநாட்டுக்குப் போவதாக எடுத்திருந்த தீர்மானம் சரியா என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அப்படியாக, அந்தக் கேள்விக்குச் சார்பான பதிலைத் தேடிக்கொண்டிருந்த எனக்குச் சமகாலத் தமிழ் இலக்கியம் சற்றுத் திருப்தியைத் தந்தது.
அடுத்ததாக, சிலப்பதிகாரத்தை எப்படி இலகுவாகப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கலாமெனச் சொல்லும் சுட்டிகளின் கதைக்களத்தில் கலந்துகொண்டேன். சிலப்பதிகாரம், சிறுவர்களுக்கு ஏற்ற நூல் அல்ல என்பது என் அபிப்பிராயம். இருந்தாலும், அங்கிருந்த சிறுவர்களின் தமிழ் அறிவு என்னை அதிசயிக்க வைத்தது.
இப்படியாகப் பிடித்திருந்த பிரதான நிகழ்வுகளை அரங்கிலும், இணைநிகழ்வுகளை அறைகளிலுமாக மாறி மாறிக் பார்த்துக்கொண்டிருந்த பின்னர், மதிய உணவுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது அலுப்பைத் தந்தது. முடிவில், TamilER எனப்படும் அவசரகால உதவிக்குழுவினரின் நிகழ்வில் கலந்துகொண்டேன். உலகம்பூராவும் உள்ளவர்களுக்கு அவர்கள் வழங்கும் மனித நேயம் மிக்க 24 மணி நேரச் சேவைபற்றி அறிந்துகொண்டபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், தன்னை மேலானவராகக் காட்டுவதிலும், ரசிகர்களைத் தாழ்த்துவதிலும், கவனம்செலுத்திப் பதிலளித்துக் கொண்டிருந்த இயக்குநர் தங்கர்பச்சான் அவர்களின் பேட்டி நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்க முடியவில்லை.
அடுத்ததாக, இசைக்கவி ரமணன் அவர்களின் ‘மகாகவி பாரதி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ஆர்வத்துடன், அது எங்கு நிகழ்கிறதெனத் தேடிக் கொண்டிருந்தபோது, அவரே பிரசன்னமானார். மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று அந்த நிகழ்ச்சி பற்றி அவரிடம் வினவினேன். அதற்கவர். முதல் நாளே கண்ணதாசனைப் பற்றிப் பேசிவிட்டேனே என்றார். கண்ணதாசன் பற்றிய அவரின் பேச்சினை ரொறன்ரோவில் கேட்டு ரசித்திருக்கிறேன். அப்படிப் பாரதி பற்றிய நிகழ்வும் இருக்குமென நினைத்த எனக்கு ஏமாற்றமே எஞ்சியது.
மாலையில் நடிகர் விதார்த் கலந்துகொண்ட திரை நட்சத்திர நேரமோ, அண்ணாமலை போன்ற சிறப்பு விருந்தினர்கள் பங்குகொண்ட நிகழ்ச்சிகளோ, இரவுச் சாப்பாடோ என்னைக் கவரவில்லை என்பதாலும், நேரம் 10 மணியாகிக் கொண்டிருந்ததாலும், ‘கடாரம் வென்ற சோழப் பேரரசன் — இராசேந்திர சோழன்’ என்ற தெருக்கூத்தைப் பார்க்காமலேயே அங்கிருந்து விலகவேண்டியிருந்தது.
இரண்டாம் நாள், காலையிலும் உணவளித்தார்கள். ஆனால், ஒன்பது மணியிலிருந்து பரிசளிப்பு மட்டுமே நிகழ்ந்துகொண்டிருந்தது. 11 மணியாகிறதே என அலுத்துக்கொண்டிருந்தபோது, ‘வான்புகழ் வள்ளுவர்" என்ற ஆவணப்பட வெளியீடு ஆரம்பமானது. அதனை வெளியிட்டு வைத்துப் பேசிய தமிழ் நாட்டின் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் பேச்சு அற்புதமாக இருந்தது. கல்வி அமைச்சுக்கு மிகப் பொருத்தமான ஒருவரைத்தான் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தெரிந்தெடுத்திருக்கிறார் என்றிருந்தது. ஆற்றொழுக்காக வந்த அவரின் தமிழும், சொற்கோர்வைகளும் மாநாட்டுக்குப் போனதற்குப் பயன்கிடைத்தது போன்ற திருப்தியையும், மகிழ்ச்சியையும் எனக்கு அளித்தன. பிடித்திருந்தால் ஓடிச்சென்று பாராட்டுவது என் வழமை. அப்படியே முடிவில் ஓடிச்சென்று “ஆயிரம் பேரின் பாராட்டுகளைக் கேட்டிருப்பீர்கள், என் திருப்திக்காக நானும் பாராட்டவேண்டும் போலிருக்கிறது, என்ன பேச்சு” என்பது போல ஏதோ சொல்லிப் பாராட்டினேன். “மகிழ்ச்சி, நீங்கள் பேசுவது என் மனைவி பேசுவது போலிருக்கிறது, மிக்க நன்றி” என்றார், அவர். அருகிலிருந்தவர்கள் அவரின் மனைவி ஈழத்தவர் என்றும், அவரின் பேச்சு எப்போதும் அப்படித்தான் சிறப்பாக இருக்கும் என்றும் சொன்னார்கள். அந்த மாநாட்டின் குறிப்பிடத்தக்க அம்சமாக அந்தப் பேச்சிருந்தது.
மதிய உணவின் பின்னர் ‘ஈழத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு; எங்கு நிகழ்கிறதென தேடிக் களைத்து, அரங்கிலிருந்த பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரசாந்தன் அவர்களிடம் அது பற்றிக் கேட்டேன். அதற்காகத்தான் தானும் காத்திருப்பதாக அவர் சொன்னார். முடிவில் அதன் நேரம் மாற்றப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதுவும் நல்லதுதான், பிற்போடப்பட்டிருந்த விவாதத்தைப் பார்க்கலாமென ஆறுதலாக இருந்தது. தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், புகழ்பெற்ற மேடை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் அவர்களின் தலைமையில் அது நிகழ்ந்தது. தலைமுறை மாற்றம்: புலம்பெயர் வாழ்வில் தமிழருக்கு ஏற்றமா, இறக்கமா என்ற தொனியில் வழமைக்கு மாறாக 16 பேர் பங்குபற்றியிருந்த விவாதம் பெரிதாகச் சூடு பிடிக்கவில்லை,
அதன் பின்னர், ஈழத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு ஆரம்பமானது. தலைப்புக்கும் நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. தமிழ் மரபுரிமை மாதம் போன்ற ரொறன்ரோவில் நிகழும் நிகழ்ச்சிகள் பற்றி அழைக்கப்பட்டிருந்த நீதன் சானும், குமரன் நடேசனும் ஆங்கிலத்தில் பேசினார்கள். இன்னொருவர் இலங்கையின் வரலாறு பற்றித் தான் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் நூல்கள் பற்றிச் சொன்னார். அந்த நிகழ்ச்சி மாணவர்களுக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாம் என்றனர். ஆனால், தன் போர்க்கால அனுபவங்கள் தொடர்பாகப் பேசியிருந்த பேராசிரியர் பிரசாந்தன் அவர்களின் பேச்சு மனதைத் தொடும்வகையில் அமைந்திருந்தது. மொழி அழியாமல் இருப்பதற்குத் தொடர்பாடலின் அவசியம் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். அதன்பின், பொங்கல் நூல் பற்றிச் சொல்வதற்கும், அந்த மாணவர்களின் தமிழ் அறிவைப் பாராட்டுவதற்குமான ஒரு சந்தர்ப்பத்தை நான் எடுத்துக்கொண்டேன். இரவுச் சாப்பாட்டுக்காக வரிசையில் நின்றிருந்தபோது அதை எங்கு வாங்கலாமென இருவர் ஆர்வமாகக் கேட்டனர். அடுத்த பொங்கலுக்குக் கிட்டவாக தங்கள் அமைப்பினரின் நிகழ்வில் மெய்நிகர் முறையில் பேசுவதற்கு என்னை அழைக்கலாமா என ஒருவர் கேட்டிருக்கிறார்.
இரவு உணவின் முன்பாக ‘சங்கங்களின் சங்கமம்’ என்ற ஊர்வலம் நிகழ்ந்தது. இந்தியரின் ஒற்றுமையைப் பார்த்தபோது ஆசையாக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் மாகாணங்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மிகுந்த உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் நடனமாடிக் கொண்டிருந்தனர். கரகாட்டம், கும்பி, ஜல்லிக்கட்டு, பறை என அத்தனை கலைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அவர்கள் நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தனர் என்பதும், சிறப்பான கண்காட்சிப் பொருள்களை மாணவர்கள் செய்து வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்த கனடா தமிழ்ச் சங்கமும், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழ்ச் சங்கமும் என்னைத் தங்களுடன் இணையும்படி அழைத்தன. ஆனால், நாள் முழுக்க அங்கிருந்த களைப்பும், எட்டு மணியாகியும் சாப்பாடு கிடையாததால் ஏற்பட்டிருந்த தலையிடியும் என்னை அதற்கு அனுமதிக்கவில்லை.
அடுத்ததாக, ராஜ்மோகன் அவர்களின் சிறப்புரை என அட்டவணைப்படுத்தப்பட்டிருந்ததால் அதனை முன்னுக்கு இருந்து கேட்க வேண்டும், அதனைப் பதிவுசெய்து கொள்ளவேண்டுமென்ற ஆவலில் அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு அரங்குக்கு ஓடிச் சென்றேன். ஆனால், அரவிந்தனின் Mega Tuners இன் இசையில் விஜய் பிரகாஷ் உள்ளடங்கலான பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சிதான் ஆரம்பமானது. ஜி.வி பிரகாஸ் அவர்களும் அதில் கலந்துகொண்டார். சிறப்புரை எங்கே எனத் தேடிய எனக்கு பக்கத்திலிருந்தவர் தான் ராஜ்மோகன் அவர்களைக் கண்டதாகச் சொன்னார். அப்படியெனில் இடைவேளையின்போது ராஜ்மோகன் அவர்கள் பேசுவாராக்குமெனக் காத்திருந்தேன். ஜேசுதாஸ், யுகேந்திரன், பாலசுப்பிரமணியாம் ஆகியோரின் கச்சேரிகளைக் கேட்பது இனிமையான அனுபவமாக இருக்கும். சபையை வசீகரிக்கும் அவர்களின் இயல்பை விஜய் பிரகாஷில் நான் காணாததாலும், பாடியபாடல்கள் முழுமையானவையாக இருக்காததாலும் அந்தக் கச்சேரி என்னை ஈர்க்கவில்லை.
இடைவேளையும் வந்தது, சிறப்புரையைக் காணோம். எழுந்துசென்று இசைக்கான கட்டுப்பாடுகளைச் செய்து கொண்டிருந்தவரிடம் அது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் அது காலையிலேயே முடிந்துவிட்டதென்றார். வெளியில் இடிமுழக்கத்துடன் மழைபெய்து கொண்டிருந்தது. உடனேயே நான் வெளிக்கிட்டு விட்டேன்.
Uber பற்றியும் சொல்லவேண்டும். ரொறன்ரோவில் இருப்பதில் மகிழ்வடையும் விடயங்களில் இப்போது அதுவும் ஒன்றாகிவிட்டது. Uber இல் போகவேண்டுமென்றால் உடனேயே அது இங்கு கிடைக்கும். கொஞ்சம் காசு மிச்சம் பிடிக்க வேண்டுமானால் share என்ற தெரிவும் கிடைக்கும். ஆனால், அங்கே Uber நேரத்துக்கு வராது, அது மட்டுமன்றி wait & save என்ற தெரிவு மட்டும்தான் அங்குள்ளது. ஒரு சாரதியை அவர்கள் தேடிப்பிடிக்க கிட்டத்தட்ட 20 நிமிடமாகும், பின்னர் அது அந்தச் சாரதி வந்துசேர இன்னொரு 15 நிமிடமாவது செல்லும். அதற்குள் சீ என்று போய்விடும். இது நானிருந்த இடத்தில் மட்டும்தானா, அல்லது ஐக்கிய அமெரிக்க முழுவதிலுமா எனத் தெரியவில்லை.
நான் மட்டும்தான் விமானத்துக்கும், இருப்பிடத்துக்கும், போக்குவரத்துக்கும் பணம்செலவழித்து இன்னொரு நாட்டிலிருந்து அந்த மாநாட்டுக்குப் போயிருப்பேன் என நினைக்கிறேன். எனவே, என் எதிர்பார்ப்பும், அனுபவமும் வேறுபட்டதாக இருக்குமென்றாலும் இதைச் சொல்வது அடுத்த முறை நிகழ்ச்சித் திட்டமிடலுக்கு உதவுமென்று நினைத்தே நேரம் செலவழித்து எழுதியுள்ளேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.