கனடாவில் உள்ள சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலைச்சங்கமம் - 2026 ஆண்டு விழாவும் மற்றும் இரவு விருந்தும் சென்ற சனிக்கிழமை 2300, ரொறன்ரோ லோறன்ஸ் வீதியில் உள்ள ‘வயிட்சீல்ட் விருந்தினர் மண்டபத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வாசுகிதேவி மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முதலில் நடந்த மங்கள விளக்கேற்றல் நிகழ்வில் மன்றத் தலைவர் திரு. அஜய் மகேந்திரன், திருமதி மகேந்திரன், திருமதி தேவகி ராஜநாதன், பிரதம விருந்தினர் திருமதி வாசுகிதேவி மகாதேவன், டாக்டர் வரகுணன் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன இளம் பாடகி செல்வி. கிஸோரி ராஜ்குமாரினால் பாடப்பெற்றன. அடுத்து அமைதி வணக்கம் இடம் பெற்றது.

அடுத்து திருமதி லாசந்தி ராஜ்குமாரின் இராகாலயா பைன் ஆட்ஸ் மாணவிகளின் இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. வீணை, வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளில் பாடல்கள் இசைக்கப்பெற்றன. இந்த இசை நிகழ்ச்சியில் சரண்யா ராகவன், தர்சனா சக்திதரன், ஹர்சினி ஸ்ரீஸ்கந்தகுமார், விதாரா குலசோதி, ஆரணி மோகனதாஸ், கிஸோரி ராஜ்குமார், ராஜ்பவன் ராஜ்குமார், திவ்ய நரேந்திரன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.

நிர்வாகக் குழுவின் சார்பாக, அமிர்தராஜா தேவதாசனின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஈசா பார்கவி செல்வகுமாரன், வித்தகி சபேசன் ஆகியோரது பரதநாட்டிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. தொடர்ந்து பிரிதம் சுரேசனின் பிரபல பாடல்களின் ட்ரம்பெட் இசைத் தொகுப்பு இடம் பெற்றது. அடுத்து லக்ஸன் கெங்காதரன், மாதங்கி திருஞானசம்பந்தன் ஆகியோரது இசை இடம் பெற்றது. தொடர்ந்து டாக்டர் வரகுணன் மகாதேவனின் ஸ்ராண்டப் மெடிசின் நிகழ்ச்சி இடம் பெற்றது.

அடுத்து மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி திரு. ரவி ராஜேந்திரா அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பாடசாலை மாணவர்களுக்குப் புதிய சீருடைகள் வழங்கியமை, பள்ளி நிர்வாகத்திற்கு கணினி நன்கொடை செய்தமை, பாதுகாப்பு இரவு விளக்குகள் பொருத்தப்பட்டமை, தாய்சாய் நிலையத்தில் கூரைப் பாதுகாப்பு செய்தமை போன்ற மன்றத்தின் சில செயற்பாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டார். தொடர்ந்து பிரதம விருந்தினரை மன்றச் செயலாளர் தயா கௌரவித்தார். தொடர்ந்து பொப் பாடகர் பாபு ஜெயகாந்தனின் பாடல்கள் இடம் பெற்றன. சின்ன வயதில் கேட்ட, நாங்கள் அடிக்கடி முணுமுணுத்த பிரபலமான பொப் பாடல்களை மீண்டும் கனடிய மண்ணில் கேட்டபோது, மனதிற்கு இதமாக இருந்தது. அப்போது சிலர் எழுந்து உடற்பயிற்சியும் செய்தனர்.

எனது தாயார் லட்சுமி சங்கரப்பிள்ளையின் சொந்த ஊர் சண்டிலிப்பாய் என்பதால் நானும் இவர்களின் நிகழ்ச்சியில் வருடந்தோறும் கலந்து கொள்வேன். ஒவ்வொரு முறையும் இளைய தலைமுறையினரை இனங்கண்டு கௌரவிப்பதில் இவர்கள் பின்னிற்பதில்லை. தமிழ் இலக்கியத் துறையில் எனது பங்களிபையும், சாதனைகளையும் பாராட்டி ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் சண்டிலிப்பாய் ஊர் மக்கள் ஒன்றுகூடி எனக்கு மதிப்பளித்திருந்தனர். என்னதான் மாபெரும் சபைகளில் மாலைகள் விழுந்தாலும், பிறந்த ஊர் மக்களும், படித்த கல்லூரியும் மதிப்பளிபது போல, வேறு எதுவும் பெரிதாக இருப்பதில்லை என்பதை நான் அப்போது ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தேன்.

சண்டிலிப்பாயின் இளையதலைமுறையைச் சேர்ந்த அகசியா படத்தயாரிபாளரும் நடிகருமான கஜன் கந்தசாமி அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்.

திரு. கணேஸ்; சண்முகன், இளம் தொகுப்பாளர் செல்வி அபிரா ஆதியன் ஆகியோர் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள். வழமைபோல, நிகழ்ச்சிகளில் இளையோருக்கு முன்னுரிமை கொடுத்த நிர்வாகக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.