சென்ற ஞாயிற்றுக்கிழமை 12-4-2026 கனடாவில் ரொறன்ரோவில் உள்ள இஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் பண்டிதர் ம.செ. அலெக்ஸாந்தர் அரங்கில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், கனடா கவிஞர் கழகம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரான கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை குமரகுரு கணபதிப்பிள்ளை, ஜோதி ஜெயகுமார் ஆகியோர் கொண்டு நடத்தினர். முதலில் மங்கல விளக்கேற்றல், கனடாப்பண், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து ‘அகணி விருதுகள்’ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, சயனிகா சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது.

இன்னல் தீர்க்கும் இயற்கை, மரபுக்கவிதை எழுதலாம் வாருங்கள், ஏழிசைப்பூங்கா, சிறுவர்களுக்கான அறநெறிக்கதைகள் போன்ற நூல்களுக்கான உரைகள், வெளியீட்டுரைகள் போன்றவை இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், சுயதரிதை - இலக்கியத்தடம், ஓடும் ரெயிலில் உதிர்த்த சிந்தனைகள், வாழ்க்கைத்தடம் - சுயசரிதை போன்ற மின்நூல்களும் வெளியிடப்பட்டன. அகணி சுரேஸ் எழுதிய பாடல்களுக்கான காணெளி, ஒலி வடிவங்களின் காட்சிப்படுத்தலும், கலை நிகழ்வுகளும் தொடர்ந்து இடம் பெற்று அதில் பங்கு பற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் முதன்மை விருந்தினர் உரை, உதயன் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், மாவிலி மைந்தன் சண்முகராசா, த. சிவபாலு, குரு அரவிந்தன், வி. மதியழகன், ரவி கனகசபை, முனைவர் வாசுகி நகுலராசா, சசிகலா ஜீவானந்தன், கமலவதனா சுந்தா, நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு, மருத்துவர் மேரி கியூரி போல், கலாநிதி கவிதா சிவாகரன் இராஜரட்ணம், கலாநிதி மைதிலி தயாநிதி, மஜந்தா மகிந்தன், இராச்குமார் குணரட்னம், குமரகுரு கணபதிப்பிள்ளை, வாணிஸ்ரீ சிவபாதசுந்தரம், ஜெயதீபா தனபாலசிங்கம், இறாஜினி சுபாகரன், விஜயராணி மதியழகன், ரதி கமலநாதன், போன்றவர்களின் உரைகளைத் தொடர்ந்து விழா நாயகன் அகணி சுரேஸ் அவர்களின் ஏற்புரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும், வருகை தந்தோருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாகத் தனது இலக்கிய முயற்சிக்கு என்றும் ஆதரவுதரும் மனைவி ஜீவநந்தினி, மகள் சயனிகா, கிரிசன் சுரேஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க மறக்கவில்லை.

இந்த நிகழ்ச்சியில் கனடா எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில் ‘இது சாதாரண நூல் வெளியீட்டு விழா அல்ல, புலம்பெயர்ந்த மண்ணில் அகணி அவர்களின் சாதனைகளையும் வெளிக் கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கின்றது. நண்பர் அகணி சுரேஸ் அவர்களின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் பாராட்டப்பட வேண்டியதொன்று. இதுபோன்ற சமூகத்திற்குப் பெறுமதி வாய்ந்த வெளியீடுகள் வெளியிடப்பட்டுக் கனடிய தமிழ் இலக்கியத்திற்கு அணிசேர்க்க வேண்டும். சென்ற மாதம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் நண்பர் கனகசபை ரவீந்திரநாதன் அவர்களும் ‘சலனங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார், கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் மண்ணின் மணமும் மங்கையர் நினைவுகளும் என்ற 62 கனடியத் தமிழ்ப் பெண்கள் எழுதிய ஒரு நூலைக் குரு அரவிந்தன் தொகுத்து வெளியிட்டதன் மூலம் உலக சாதனை படைத்திருந்தனர். இதே பெண்கள் அமைப்பினர் ஏற்கனவே வெளியிட்ட 26 பெண்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் குரு அரவிந்தன் தொகுத்திருந்தார். புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி வருங்காலத்தில் எழும்போது இவைதான் பதிலாக அமையும். இந்த மண்ணில் தமிழ் மொழி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு இவைதான் என்றென்றும் சாட்சியாக நிற்கும். கடந்த 35 வருடங்களாக எங்கள் சமூகத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டோம் என்பதை அடுத்த தலைமுறையினர் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து கொள்ளவேண்டும். எனது பங்களிப்பாகவும் இதுவரை 36 அச்சு நூல்களும், மின்னிதழ்களும் வெளியிட்டு இருக்கின்றேன். நண்பர் அகணி சுரேஸ் அவர்களும் அவரது குடும்பத்தினரும் ஆரோக்கியமாக வாழ்ந்து இதுபோன்ற தமிழ் இலக்கிய முயற்சியில் மேன்மேலும் ஈடுபடவேண்டும் என்று மனதார வாழ்த்தி விடைபெறுகின்றேன். நன்றி.’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணியுடன் நிறைவுற்ற இந்த நிகழ்ச்சி நன்றி உரையுடன் சிறப்பாக முடிவுற்றது. பார்வையாளர்களுக்குச் சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்கப்பட்டது.

அனுப்பியவர் - * குரு அரவிந்தன்