[மூத்த பத்திரிகையாளர் காசிலிங்கம் பற்றிய எழத்தாளர் வி.ரி.இளங்கோவனின் கட்டுரை. பாரிஸில் மே 25, 2025 அன்று அமுத விழா காணவிருக்கும் காசிலிங்கம் அவர்கள் என் எழுத்துலக வாழ்க்கையிலும் முக்கியமானவர், ஈழநாடு மாணவர் மலர் மூலம் என் எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் அவர். காசி என்னும் பெயரில் அப்போது ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் வெளியாகும் மாணவர் மலருக்குப் பொறுப்பாகவிருந்தவர் அவர். என் முதல் ஆக்கத்தை வரவேற்று வாழ்த்தியவர். அதுவே , அந்த ஊக்கமே அவ்வயதில் என்னை மேலும் எழுத்ததூண்டியது. அவருக்கு அமுதவிழா. அனைவருடனும் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன். - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள். -]


அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பு அறிவுலகத்தில் ஒரு பெரும் புரட்சியைச் செய்தது. கருத்துப் பரவலுக்கு நூல்கள் - பத்திரிகைகள் முதன்மைக் கருவிகளாயின. ஈழத்தி;ல் அமெரிக்க மிசனரிமார் முதன்முதலாக 1841 -ல் (07 - 01 - 1841) 'உதயதாரகை" (Morning Star) என்னும் பத்திரிகையை ஆரம்பித்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இது வெளிவந்தது. இதன் ஆசிரியராகக் கரோல் விசுவநாதபிள்ளை விளங்கினார் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1930 -ல் 'யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின்" பகிஸ்கரிப்புக் கோரிக்கைக்கு வலுவூட்டும் அரசியல் கருத்துகளுடன் 'ஈழகேசரி" வெளிவந்ததாக கூறுவதுண்டு. ஈழத்தின் அரசியல், சமூக, பொருளாதார,  இலக்கிய வளர்ச்சியில் மிகக் கவனம் செலுத்திய ஈழகேசரி இருபத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியமான ஆரம்பத்திற்குத் தளமாக ஈழகேசரி அமைந்து படைப்பாளிகளை இனங்காண வைத்தது என்றால் மிகையல்ல.

நாளேடுகளாக 1930 -ல் வீரகேசரியும் 1932 -ல் தினகரனும் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரத் தொடங்கின. வேறு சில நாளேடுகளும் வெளிவரத்தொடங்கி சிறிது காலத்திலேயே அவை நிறுத்தப்பட்டுவிட்டன.

சகோதரர்கள் இருவரின் (கே. சி;. தங்கராஜாஇ கே. சி. சண்முகரத்தினம்) சிந்தனையில் உருவாகியது 'ஈழநாடு" பத்திரிகை. யாழ்ப்பாணத்திலிருந்து இதன் முதல் இதழ் 09 - 02 - 1959 -ல் வெளிவந்தது. வாரப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கிப் பின்னர் 1961 -ல் தினசரியாக மலர்ந்தது. தலைநகர் கொழும்புக்கு வெளியே ஓர் பிராந்தியத் தமிழ்ப் பத்திரிகையாக 'ஈழநாடு" தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. தமிழ்பேசும் சகல மக்களின் நலன்கருதி,  மக்களின் உணர்வுகளை,  வாழ்வுமுறைகளை,  சம்பிரதாயங்களைப் பிரதிபலிக்கும் பத்திரிகையாக ஈழநாடு வெளிவரத் தொடங்கியது. 1961 -ம் ஆண்டு யாழ் கச்சேரி முன்றலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்ட காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் 'ஈழநாடு" செய்தி சொன்னது. பாடசாலை - கல்லூரி ஆசிரியர்கள்இ படைப்பாளிகள் கைகளில் மிதந்தது.

அந்தக் காலத்தில் ஈழநாடு பல பதிப்புகள் (மாலைப் பதிப்பு - பிராந்தியப் பதிப்பு) வெளியாகியதுண்டு. கோகிலாம்பாள் கொலை வழக்கு, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயப் பிரவேசப் போராட்டம்,  பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசப் போராட்டம், 1971 ஏப்ரல் கிளர்ச்சி,  தமிழாராய்ச்சி மாநாடு,  பயங்கரவாதத் தடைச்சட்ட அமுல்இ இளைஞர்கள் கொலை போன்ற நிகழ்வுகளின்போதும் ஈழநாடு மக்கள் கவனத்தை மிகவும் ஈர்த்தது.

1984 -ம் ஆண்டு வெளியிடப்பட்ட 'ஈழநாடு 25 -வது ஆண்டு நிறைவு மலர்" சிறந்த ஆவணப் பதிவாகும். ஈழநாடு பத்திரிகை செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள் எனப் பலவேறு நெருக்கடிகளைக் கண்டது. குண்டுத் தாக்குதலுக்குமுள்ளானது. தீக்குளித்து மீண்ட ஈழநாடு தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தன் இயக்கத்தை நிறுத்த வேண்டியதாயிற்று.

ஈழநாடு ஆசிரிய பீடத்தை அலங்கரித்தவர்களில் கே. பி. ஹரன்,  இராஜ அரியரத்தினம்,  என். சபாரத்தினம்,  எஸ். எம். கோபாலரத்தினம் மற்றும் சசிபாரதி சபாரத்தினம்.  பெருமாள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆசிரிய பீடத்தில் இளந்தலைமுறையினர் பலர் உதவி ஆசிரியர்களாக இணைந்திருந்தனர். அந்தத் தலைமுறையினர் பலர் இன்று ஈழத்திலும் உலக நாடுகள் பலவற்றிலும் ஊடகத்துறையில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களில் ஒருவரான எஸ்;;. கே. காசிலிங்கம் 1967 -ல் ஈழநாடு ஆசிரிய பீடத்திற்குள் இணைந்துகொண்டார்.

அவரை எழுபதுகளின் தொடக்கத்திலிருந்தே யான் நன்கறிவேன். கொழும்புப் பத்திரிகைகளுக்கும்,  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் செய்தியாளராக யான் கடமையாற்றிய காலமது. யாழ் குடாநாட்டுச் செய்திகளை கொழும்புப் பத்திரிகைகள்,  வானொலிக்கேற்றவாறு எழுதி அனுப்ப ஈழநாடு பெரிதும் உதவியதுண்டு. அதிகாலை ஈழநாடு கிடைத்ததும் எமக்கேற்றவாறு சில செய்திகளை அதிலிருந்து திரட்டிக்கொள்வதுமுண்டு. ஈழநாடு ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த பலரையும் யான் நன்கறிவேன். எந்த வேளையிலும் ஈழநாடு கட்டிட மேல்மாடியிலுள்ள அலுவலகத்தினுள் நுழைந்து ஆசிரிய பீடத்திலுள்ளவர்களுடன் உரையாடுவேன். நள்ளிரவு - அதிகாலைப் பொழுதுகளிலுங்கூட அவ்வாறு சென்றதுண்டு. அரசியல் - இலக்கியச் செய்திகளை வழங்கி அழகாகப் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்வேன். மறுநாள் அவ்வாறே அவை பிரசுரமாகி மகிழ்;ச்சியளிக்கும்.

அங்கு பணிபுரிந்த காசி அண்ணர்,  அழகாக உடையணிந்த,  நிமிர்ந்த வேக நடைக்காரர். ஓட்டமும் நடையுமாக போவார். வேகமாகவே கதைப்பார். எழுத்தும் அப்படியே..! பரபரப்பான செய்திகளைத் துணிச்சலுடன் வெளிக்கொணர்வதில்,   அவற்றைச் சூட்டோடு தலைப்பிட்டுப் பிரசுரிப்பதில் வல்லவர். அதனால் சில பிரச்சினைகளைச் - சிரமங்களையும் அவர் எதிர்கொண்டதுண்டு. பத்திரிகைத் துறையிலே - ஊடகத்துறையிலே பணியாற்றுபவர்கள் பலர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார்கள் என்பர். நெருடல்கள் - நெருக்கடிகள் - பரபரப்புகள் - பதற்றங்கள் - சிலவேளை பயமுறுத்தல்கள் மத்தியிலும் அவர்கள் பணியாற்ற வேண்டிய நிலைமைகள் ஏற்படுவதுண்டு..! உண்மைகளை யதார்த்தப் பார்வையோடு வெளிக்கொணரும்போது அவை வரலாற்றுப் பதிவுகளாகின்றன.

அரசியல், சமூக,  பொருளாதார,  கலாசார நடைமுறைப் பிரச்சினைகளைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டுவதற்கு ஊடகங்கள் நம்பிக்கையளிப்பனவாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் பத்திரிகைத்துறையில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பலரை யான் அறிவேன். அவர்களில் ஒருவரான காசி அண்ணர் குறிப்பிடத்தக்கவர்.

1991 -ல் யான் பிரான்ஸ் வந்ததும் காசி அண்ணரை 'பாரிஸ் ஈழநாடு" அலுவலகத்தில் மீண்டும் சந்தித்துக்கொண்டேன். 'வந்துவிட்டாயா... .." என மகிழ்வுடன் கதைத்தார். மூன்று மாத விசாவில் வந்த எனக்கு அகதி அடைக்கலம் கேட்பது குறித்து ஆலோசனைகள் சொன்னார். 'பாரிஸ் ஈழநாடு " பத்திரிகையில் பணியாற்றிய அவர் பின்னர் 'தமிழன்" பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். பத்திரிகையில் இலக்கியப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் படைப்பாளிகளை ஊக்குவித்தார். பாரிஸ் மாநகரில் நடைபெறும் நூல் அறிமுக விழாக்கள்,  சங்கங்களின் ஆண்டு விழாக்கள் பலவற்றுக்கும்; காசிலிங்கம் தலைமை வகித்து நடாத்த அழைக்கப்படுவார். இலண்டன், ஜேர்மனி,  சுவிஸ் ஆதியாம் இடங்களில் நடைபெற்ற விழாக்களிலும் அவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதை யான் அறிவேன். மூத்த பத்திரிகையாளர் - ஆளுமை மிக்கவர் என்ற வகையில் அவருக்கு அந்தக் கௌரவம் வழங்கப்படுவதுண்டு.

தனது நீண்ட காலப் பத்திரிகைத்துறை அனுபவங்கள்,  வரலாற்று ரீதியாக அரசியல்,  புலம்பெயர் வாழ்வியல் என்பனவற்றைப் பதிவுசெய்யும் வகையில் 'என்னுள்... என்னோடு... .." என்ற நூலை 2002 ஆண்டு வெளியிட்டார். இதன் அறிமுக நிகழ்வுகள் ஐரோப்பாவின் பல நகரங்களிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. எனது நூல்களின் வெளியீட்டு விழாக்கள்இ அறிமுக நிகழ்வுகள் பலவற்றுக்கும் அவர் தலைமை வகித்துச் சிறப்பித்துள்ளார்.

ஊரில்; சமூக முன்னேற்றத்தை கவனத்தில்கொண்டு செயற்பட்டவர். அனலைதீவின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு,  பத்திரிகையில் செய்திகளைப் பிரசுரித்து நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்தை ஈர்த்தவர். அதனால் அனலைதீவுப் பாடசாலைகளின் வசதிகள்,  ஆசிரியர் பற்றாக்குறை நீங்க உந்துசக்தியாகச் செயற்பட்டதை யான் அறிவேன். 'பிரான்ஸ் - அனலைதீவு மக்கள் ஒன்றியம்" சிறப்பாகச் செயற்பட ஊக்கமளித்தார். பிறந்த ஊரின் சிறப்புகளை வெளிப்படுத்துவதில் மகிழ்பவர். 2014 -ம் ஆண்டு அனலைதீவு மக்கள் ஒன்றியத்தின் சிறப்பு மலரான 'அனலைத் தென்றல்" மலரைத் தொகுத்துப் பதிப்பிக்கும் பொறுப்பை எனக்களித்தார். அதன் ஆண்டு விழாவும் 'அனலைத் தென்றல்" வெளியீடும் (22 - 06 - 2014) பாரிஸ் மாநகரில் எஸ். கே. காசிலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் எனது சில நூல்களின் அறிமுக நிகழ்வும் நடைபெற காசி அண்ணர் ஊக்கமளித்தார். இந்நிகழ்வில் 'கல்விச் சேவையாளர்" சி. காராளபிள்ளை நூல்கள் குறித்துச் சிறப்புரையாற்றினார். அவர் அன்பாகப் பழகக் கூடிய பண்பாளர். பத்திரிகை , அரசியல்,  இலக்கியம் குறித்து வரலாற்று ரீதியாக அவருடன் உரையாடினால் பல தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம் என நண்பர்கள் சொல்லிக்கொள்வர்.

பிரான்ஸ் நாட்டில் அவ்வாறு பண்போடு உரையாடுவதற்கு ஏற்ற மூத்த ஆளுமை மிக்கவர்களில் அவர் குறிப்பிடத்தக்கவர். அமுத விழா காணும் அன்புள்ளம் மேலும் பல்லாண்டுகள் வளமுடன் வாழ வாழ்த்துவோம்..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.