அவுஸ்திரேலியாவிலிருந்து  கடந்த 36 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு  நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதி அனுசரணையில்,  மட்டக்களப்பு -  அம்பாறை மாவட்டங்களில் வதியும்  ஆதரவற்ற மாணவர்களுக்கான நிதி உதவி வழங்கல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை  பாண்டிருப்பில் நடைபெற்றது.

கல்வி நிதியத்தின் கிழக்கு மாகாண தொடர்பாளர் அமைப்பான ஆதரவற்ற மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர்  முன்னாள் அதிபர் திரு. ந. கமலநாதன் தலைமையில்  இந்நிகழ்வு நடைபெற்றது.

இலங்கையில் வாழ்க்கைச்செலவு அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டிருப்பதனால், இவ்வாண்டு ( 2024 ) முதல் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தைமாரை இழந்து வறுமைக்கோட்டின் கீழ் வதியும் தமிழ் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மாதாந்தம் நான்காயிரம் ரூபா வீதம், முதல் காலாண்டுக்கான நிதிக்கொடுப்பனவு தற்போது வழங்கப்பட்டது.

இந்நிதி உதவியானது கடந்த காலங்களில் ஏற்பட்ட  இயற்கை அனர்த்தம், உள்நாட்டுப்போர், மற்றும் காரணங்களால் தந்தையை இழந்து ஆதரவற்ற நிலையில் தமது பாடசாலைக் கல்வியை தொடர சிரமப்படுகின்ற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தமது பாடசாலைக் கல்வியை பூரணப்படுத்தும் வரை ( தரம்- 1 முதல் க.பொ.த உயர்தரம் வரை ) தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

 

அம்பாறை மாவட்டத்தில் பதிமூன்றாவது வருடமாக தொடரும் இந்நிகழ்வில் இவ்வாண்டின் முதற் காலாண்டுக்கான நிதி உதவியை பதினேழு பாடசாலை மாணவர்களுடன் ஒரு தொழில் நுட்பக் கல்லூரி மாணவியும் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் ஆதரவற்ற மாணவர் கல்வி அபிவிருத்தி நிறுவகத்தின்  பொருளாளர் திரு. த.ரவிச்சந்திரன் (ஆசிரிய ஆலோசகர் ) செயற்குழு உறுப்பினர்களான திரு. மு. சுபைந்திர ராஜா (ஓய்வுநிலை அதிபர்), திரு. சி. புனிதன் (ஓய்வுநிலை அதிபர்) திருமதி. புஸ்பாவதி நவரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர்)  , திரு. வி. நகுலேஸ்வரன் (ஆசிரியர்), திருமதி.தியாகராணி சிவகுமார், செல்வி.ஞா.தர்மிகா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான நிதி உதவியினை வழங்கினர்.

அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் அன்பர்களின் ஆதரவுடன் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்,  வடக்கு, கிழக்கு, மேற்கிலங்கை உட்பட மலையக மாணவர்கள் பலருக்கும் கடந்த 36 வருடங்களாக உதவி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

கடந்த காலங்களில் இந்நிதியத்தின் உதவி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள், பல்கலைக்கழக கல்வி உட்பட உயர்கல்வியை  தொடர்ந்து   தொழில் வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.



இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.